அனுராவின் இடதுசாரி முகத்திற்குள் மறைந்திருக்கும் இனவாத அரசியல் அம்பலம்

இலங்கையில் ‘இடதுசாரி அரசு’ என்று அழைக்கப்படும் அனுர திசநாயக அரசு, முற்றிலும் தமிழர்களே இல்லாமல் 19 சிங்களவர்களைக் கொண்ட தொல்பொருள் ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது. சிங்கள பெளத்த தொல்பொருள் திணைக்களத் துறையினால் ஏராளமான தமிழர் பாரம்பரிய இடங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு சிங்களர் இடமாக மாற்றப்பட்ட சூழலில், அனுரா அரசின் இந்த நியமனம் தமிழர்களுக்கெதிரான இலங்கைப் பேரினவாத அரசின் தன்மையை மீண்டும்  அம்பலப்படுத்தியுள்ளது.

இலங்கையில் தேர்தலின் போது தமிழர் பகுதிகளில் பிரச்சாரம் நடத்த வந்த வேளைகளில், தமிழர் நிலங்களை மீட்டு தமிழர்களுக்கு ஒப்படைப்போம் எனப் பேசியவர் அனுர திசநாயகா. நவம்பர் 10, 2024 அன்று வவுனியாவில் நடந்த கூட்டத்தில், தொல்லியல்  திணைக்களங்களால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுத்து தமிழர்களுக்கு வழங்குவோம் என அவர் வாக்குறுதி அளித்தார்.

நவம்பர் 14, 2024 அன்று யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர்களின் நிலம் அனைத்தும் அவரவருக்கே ஒப்படைக்கப்படும் எனவும்  உறுதியளித்தார். ஆனால் இந்த உறுதிப்பாட்டுக்கு மாறாக தமிழர்கள் ஒருவர் கூட இல்லாத தொல்பொருள் திணைக்கள அறிவுரைக் குழுவிற்கு பெளத்த பிக்குகளையும், சிங்களப் பேராசிரியர்களையும் நியமித்திருக்கிறார்.

இலங்கைத் தொல்லியல் துறை 1998-ம் ஆண்டு பிரிவு 188ன் கீழ் திருத்தப்பட்ட இலங்கைத் தொல்பொருள் சட்டத்தின் கீழ் தமிழர்களின் நிலங்களை பறிப்பதை அதிகாரப் பூர்வமாக்கிக் கொண்டது. இந்த சட்டத்தின் துணை கொண்டு தமிழர்களின் நிலங்கள் வகை தொகையின்றி சிங்களத் தொல்லியல் துறையினால் களவாடப்பட்டன. 2013-ல் தங்கவேலாயுதபுரத்தில் சுமார் 500 தமிழ் குடும்பங்களை வெளியேற்றி சிங்களக் குடியிருப்பு இடம் என அறிவித்தனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தின், சங்கமன்கண்டியில் கிபி 1ம் நூற்றாண்டை சார்ந்த  2000 வருட தமிழ் முருகன் ஆலயத்தின் சுற்றுப்பகுதியை 2013 – 14ல் “சிங்கள பௌத்த குடியிருப்புகள்” என அறிவித்தனர். இதே போல், 2020-ல் சித்தாண்டி முருகன் ஆலயத்தில் “பௌத்த தலம்” என அறிவித்து, தமிழ் வழிபாட்டை தடுத்தனர். அம்பாறை மட்டக்களப்பு பகுதிகளில் உள்ள 99 சதவீத தலங்களை 2021-ல் பெளத்த தலங்கள் என அறிவித்து விட்டனர்.

“தமிழர்களின் நிலப்பறிப்பு” என்பது இன்றல்ல, இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் இருந்தே ஆரம்பிக்கத் தொடங்கி விட்டது. 1948-லிருந்து 2009 – வரை சுமார் 12 லட்சம் ஏக்கர் வரையிலான தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 1949 – ல் கல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம், 1970-ல் ஜெயவர்தனே ஆட்சிக் காலத்தில் இலங்கையின் ‘மகாவெளி நீர்ப்பாசனத் திட்டம்’ என சுமார் 7 லட்சம் வரையிலான தமிழர்களின் வடக்கு – கிழக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. இந்த நிலப்பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் சிங்களக் குடும்பங்கள் (10 லட்சம் சிங்களர்கள்) குடியமர்த்தப்பட்டனர். இது மட்டுமல்ல, அதற்குப் பிறகு இறுதிப்போர் நடந்த 2009-காலகட்டம் வரை சுமார் 5 லட்சம் ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டன. போர் முடிந்த 2009 -க்குப் பின்பும் மீண்டும் 1 லட்சம் ஏக்கர் வரை சிங்கள இனவெறி அரசுகளால் தமிழர்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், மாவீரர் சமாதிகள் என அனைத்தும் களவாடப்பட்டு சிங்களக் குடியேற்றங்களாக, பௌத்த தலங்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சர்வதேச அறிக்கைகளான UNHRC, Oakland institute போன்றவற்றின் அறிக்கைகள் இந்த நிலப்பறிப்புகளை உறுதிப்படுத்துகின்றன.

சிங்கள இனவெறி அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்த 2009 – போருக்குப் பின்பான காலகட்டங்களில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் மீள்குடியேற தங்கள் பகுதிகளுக்கு திரும்பினர். ஆனால் இவர்களுக்குரிய பெரும்பாலான இடங்களை  “தொல்லியல் தலங்கள்” என அடையாளமிட்டு, பாதுகாப்புகளை அமைத்து சிங்கள இனவாத அரசு அவர்களைத் தடுத்தது.

தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் பெளத்த விகாரைகளாகவும், பெளத்த கட்டுமானங்களாகவும் மாறின. இதற்கு தொல்லியல் துறை அதிகாரிகளே முழுக் காரணமாயினர். 2020 ஆண்டு முதல் கோத்தபய ராஜபக்சேவின் ஆட்சியில் “கிழக்கு மாகாண தொல்லியல் பாரம்பரிய மேலாண்மை” செயல்பாட்டுக் குழு மூலம் 600க்கும் மேற்பட்ட தமிழர் கோயில்கள் பௌத்த தலங்களாக மாற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் மட்டும் சுமார் 1500 ஏக்கர் தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டு பௌத்த தலங்கள் நிறுவப்பட்டுள்ளதாக 2024, ஜூலையில் வெளிவந்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ’Oakland’ என்னும் நிறுவனத்தின் அறிக்கை, கிழக்கு மாகாணத்தில் 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழர் தலங்களை பௌத்தப் பாரம்பரியத் தலங்களாக தொல்லியல் திணைக்களம் மாற்றியுள்ளதாகக் குறிப்பிடுகிறது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள   குச்சவேளி பிரிவுச் செயலகத்தில் 41,164 ஏக்கர்கள் “வளர்ச்சி திட்டங்கள்” மற்றும் பௌத்த விகாரைகள் விரிவாக்கத்திற்காக தொல்லியல் திணைக்களத்தால் பறிக்கப்பட்டன. இதில் 3,887 ஏக்கர்களில் 26 பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 67 பௌத்த விகாரைகள் தொல்லியல் துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன,

தமிழ் திராவிட பண்பாட்டுடன் தொடர்புடையவை என அறிஞர்களால் கூறப்படும் தமிழ் மக்கள் வாழும் பகுதியான குருந்தூர் மலையை “பழங்கால சிங்கள பௌத்த குடியிருப்பு” என்று தொல்லியல் துறை அபகரிக்கத் துவங்கியது. இந்த மலையில் 2021லிருந்து இன்று வரை பறிக்கப்பட்ட தமிழ் மக்களின் விவசாய நிலங்கள் சுமார் 600க்கும் மேற்பட்டவை. இவை யாவும் தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டன. அனுர திசநாயக ஆட்சி நடக்கும் 2025 -லும் 341 ஏக்கர் தமிழர் விவசாய நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டது. 2025- மே 15 அன்று புத்த விகாரை கட்டுமானத்தை பௌத்த பிக்குகளும் சிங்கள திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நடத்தினர். 2005-மே 29-ல் இதை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். ஜூன் 24-ல் யாழ்ப்பாண கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையின் தேர்தல் வாக்குறுதியில் தமிழர்களின் நிலங்கள் மீட்கப்பட்டு திருப்பி அளிக்கப்படும் என உறுதியளித்தார் அனுரா திசநாயக. சொற்பமாக சில ஏக்கர் நிலங்கள் மீட்டுக் கொடுக்கப்பட்டதை தமிழர்கள் வரவேற்கவே செய்தனர். ஆனால் சிங்கள அதிகாரிகளும், பெளத்த பிக்குகளும் மட்டுமே தொல்லியல் திணைக்களத்திற்கு நியமனம் செய்யப்பட்டிருக்கும் அனுராவின் இந்த அறிவிப்பு, தமிழர்களின் நிலமீட்பு என்பது வெறும் கண்துடைப்பு என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

தமிழர்களின் வரலாற்றுத் தாயக நிலப்பகுதியைப் பறிக்கும் எண்ணத்தில் செயல்படக்கூடிய சிங்கள இனவெறி அரசின் ஏவல் துறையாக இலங்கைத் தொல்லியல் திணைக்களம் செயல்படுகிறது. இந்தியாவிலிருந்து உலகளாவப் பரவிய பௌத்தத்தின் அடையாளங்கள் இருப்பதைக் கொண்டு, அவற்றை சிங்களப் பகுதிகளாக வரையறுத்து, தமிழர்களின் வரலாற்றுத் தாயக நிலப்பகுதியைக் களவாடும் வேலையை இந்த திணைக்களம் செய்கிறது. தமிழர்கள் மீது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் தொடர்ச்சியாக தமிழர்களின் நிலப் பறிப்பும் தொடர்கிறது.

இடதுசாரி அரசு என்று சொல்லிக் கொள்ளும் அனுரா திசநாயக அரசு பௌத்த மதத்தை வளர்க்கவும், பாதுகாக்கவும் தனது அரசு கடமைப்பட்டுள்ளதாகவும், இனப்படுகொலை செய்த ராணுவத்தை விசாரணை வளையத்திற்குள் உட்படுத்த விடமாட்டேன் என்றும் கூறி ஆட்சி அமைத்தவர். இது சிங்களர்களின் நாடு என்கிற 9 வது சட்டப்பிரிவை பாதுகாப்பேன் என்று பௌத்தப் பிக்குகளுக்கு உறுதி அளித்துள்ளார். இலங்கையில் நிலவும் பௌத்தப் பேரினவாதமே தமிழர்களின் நிலங்களைப் பறித்து பெளத்த விகாரைகளை எழுப்புகிறது. இந்தப் பேரினவாதத்தை அசைக்காமல் தமிழர்களின் நிலப்பறிப்பை நிறுத்த முடியாது என்பதற்கு உதாரணமாகவே சிங்களர்கள் மட்டுமே தொல்லியல் துறையில் நியமனம் செய்ததைப் பார்க்க முடிகிறது. பௌத்தப் பேரினவாதத்தை ஆமோதிக்கும் எந்த சிங்கள அரசும் தமிழர்களுக்கு என்றுமே தீர்வைத் தர முடியாது என்பதற்கு இடதுசாரி அரசு என்று சொல்லிக் கொள்ளும் அனுரா திசநாயக அரசும் விதிவிலக்கல்ல என்பதே திரும்பவும் நிரூபணமாகிறது.

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியைக் கண்டே தமிழீழத் தாயகத்தில் அமைதி வழிப் போராட்டங்கள் துவங்கின. அதுவும் பலனில்லாமல் போகவே ஆயுத வழிப் போராட்டங்கள் வெடித்தன. தமிழர்களின் நில உரிமையை நிலைநாட்டவே விடுதலைப்புலிகள் தம்மையும் ஈந்து போரிட்டனர். விடுதலைப்புலிகளின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் அல்லது மலினப்படுத்தும் கதையாடல்களைக் கொண்டவர்கள், புலிகள் போராடிய நோக்கத்தின் அடிப்படைகளைப் பற்றிப் பேசுவதில்லை. சிங்கள இனவெறி இடதுசாரி போர்வையிலும் இயங்குவதைப் பற்றிய விவாதங்கள் இங்குள்ள இடதுசாரிகளிடமும் எழவில்லை. புலிகளை குற்றம் சுமத்தும் எவரும் இலங்கை இனவெறி அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக இயங்குவதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

ஈழத் தமிழர்களின் போராட்ட நோக்கத்தினையும், விடுதலைப் புலிகளின் தமிழீழ இலக்கையும் உணர்ந்த தமிழர்களாய் மே 17 இயக்கம், இலங்கை இனவெறி அரசுகள் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தும் ஒவ்வொரு செயல்பாட்டையும் அம்பலப்படுத்துகிறது. இடதுசாரி அரசு என்று சொல்லிக் கொண்டு, சிங்களத் தமிழர் பாகுபாட்டை உறுதிப்படுத்தும் விதமாக, தமிழர்களின் எஞ்சிய நிலங்களையும் ஆக்கிரமிக்கும் விதமாக, சிங்களர்களை மட்டுமே தொல்லியல் துறைக்கு அனுரா அரசு நியமனம் செய்திருக்கிறது. இலங்கையில் இடதுசாரி கொள்கை கொண்ட ஆட்சி மலர்ந்திருப்பதாக இங்கு கொண்டாடிய இடது சாரிகளின் நிலைப்பாடு இதற்கு என்ன என்கிற கேள்வி எழுகிறது. அன்றிலிருந்து போலி இடதுசாரி அரசு என்று அனுரா அரசை மே 17 இயக்கம் ஆதாரத்துடன் கூறியவைகளே, இன்று இந்த அறிவிப்பு மூலம் மீண்டும் உறுதியாகி இருக்கின்றன.  

குறிப்பு: ஏராளமான தமிழர் பாரம்பரிய இடங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு சிங்களர் இடமாக மாற்றப்பட்ட சூழலில், அனுர திசநாயக அரசு தமிழர்களே இல்லாமல் 19 சிங்களவர்களைக் கொண்ட தொல்பொருள் ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »