அம்பானியின் 130 கோடி “கச்சா எண்ணெய்” கிணறுகள்

அம்பானியின் 130 கோடிகச்சா எண்ணெய்கிணறுகள்

“சட்டவிரோதமாக தனது(முகநூல்) ஏகபோக சமூக வலைப்பின்னலை வளர்த்து பல ஆண்டுகளாக தொழில் போட்டிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.” என்று முகநூல் நிறுவனம் மீது தொழில் போட்டிகளுக்கு விரோதமாக செயல்படுவதாக அமெரிக்காவின் 46 மாகாணங்கள் இணைந்து வழக்கு தொடுத்துள்ளன.

[தொழில் போட்டியை முடக்குவதாக முகநூல் மீதான வழக்கின் இணையவழி விசாரணை.]

2012ல் சுமார் ரூ.7000 கோடிக்கு புகைப்படம் பகிரும் இன்சிடாகிராம் தளத்தையும், 2014ல் சுமார் ரூ.142,000 கோடிக்கு வாட்சப் என இரண்டு சேவைகளை வாங்கியதையடுத்து தனது போட்டியாளர்களை முகநூல் நிறுவனம் எளிமையாக முழுவதும் முடக்கியது.

தனது 3 சமூக வலைதள செயலிகள் மூலம் மேற்குலகம் மற்றும் சர்வதேச நாடுகளின் சமூக வலைதள பயன்பாட்டாளர்களை முகநூலால் கட்டுப்படுத்த முடிந்தது. வேறு எந்த நிறுவனத்திடம் இல்லாத அளவிற்கு அதனிடம் சர்வதேச அளவில் தனிநபர் தகவல்கள் குவிந்து வருவதும், அதை கொண்டு எல்லையில்லா வணிக லாபம் ஈட்ட முடியும் என்பதையும் முகநூல் நிறுவனம் அறிந்து கொண்டது. தனக்கு போட்டியாளர்கள் உருவாகிவிடுவார்களோ என்ற அச்சத்தில் வளர்ந்து வரும் சிறு மென்பொருள் உருவாக்குநர்களுடன் முகநூல் பயன்பாட்டாளர்கள் தகவல்களை பகிர மறுத்தது.

முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் சர்வதேச சந்தையை இப்படி  ஏகபோகமாக கட்டுப்படுத்துவதன் மூலமாகவே உலகின் 4ம் பெரிய பணக்காரர் என்ற இடத்தை பிடித்தார்.

அமெரிக்காவை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் “தொழில் போட்டியாளர்களை தனது ஏகபோக சந்தை கட்டுப்பாட்டை கொண்டு ஒடுக்குவதாக” பல வழக்குகளை சந்தித்து வரும் முகநூல் ஆசுரேலியாவிலும் இப்படியான அரசு நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறது.

2016ல் அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் அதிபராக வெற்றி பெற உதவியதாக உலகையே திடுக்கிட செய்த தகவல்கள் 2018ல் வெளியான பிறகு முகநூல் மீதான சனநாயக அரசுகளின் நடவடிக்கைகள் துரிதமாகின. அதிபர் டிரம்ப் மற்றும் அவரது தீவிர வலதுசாரி வெள்ளை பேரினவாத ஆதரவாளர்கள் சார்பாக முகநூல் செயல்பட்டு வந்தது. தற்போது, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்ததை தொடர்ந்து முகநூலுக்கு எதிரான 46 அமெரிக்க மாகாணங்களின் இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றி பெற செய்ய ரசியா முகநூலை கொண்டு உதவியதாக 2018ல் வெளியானது. ரசிய அதிபர் புதினின் வல்லாதிக்க அரசு இன்றளவும் தனது சர்வதேச அதிகார சண்டையில் ஆயுதமாக முகநூல் தளத்தை பயன்படுத்தி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் புதினின் ராணுவ பிரிவும் பிரெஞ்சு இராணுவ பிரிவும் ஆப்பிரிக்க மக்களிடையே தங்கள் கருத்தியல் தாக்குதல்களை நடத்தி வருகின்றன என்ற வெளியாகும் செய்திகள் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

CAA, NRC போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடிய மக்களை இந்துத்துவ மோடி அரசு முகநூலை பயன்படுத்தி தேச விரோதிகளாக சித்தரித்தது. இன்று, தலித் மற்றும் சிறுபான்மை இசுலாமியர் மீதான வன்மத்தை உமிழும் தளமாக முகநூல் மாறியுள்ளது. தற்போது போராடி வரும் விவசாயிகளையும் “தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள்” என்று திசை திருப்பும் பொய் பிரச்சாரம் செய்வதை கண்டு வருகிறோம்.

வல்லாதிக்கம் மற்றும் எதேச்சதிகார அரசுகளுக்கு முகநூல் போன்ற மக்கள் கூடும் சமூக வலைத்தளங்கள் ஒரு வலிமையான “கருத்தியல் தாக்குதல்” நடத்தும் ஆயுதமாக வாய்த்துள்ளது.

சமூக வலைத்தளத்தை ஏகபோகமாக கட்டுப்படுத்தியும் தொழில் போட்டிகள் உருவாகுவதை தடுத்தும் சனநாயக விரோத எதேச்சதிகார சக்திகளுக்கு ஆதரவாக செயல்படும் முகநூலின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பணக்கார சனநாயக நாடுகள் இறங்கியுள்ளன. அதன்விளைவாக, முகநூலின் இன்சிடாகிராம் மற்றும் வாட்சாப் தளங்களை பிரித்து தனித்தனி நிறுவனங்களாக மாற்றிடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படி, அரசியல் மற்றும் தொழில் ரீதியாகவும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் முகநூலுக்கு சீனாவில் முன்னதாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளது, வேகமாக வளர்ந்து வரும் உலகின் அதிக இளைஞர் மக்கள் தொகையுடன் பெரிய சந்தையான இந்தியா!

2014ல் பாஜக மோடியின் தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக இந்தியாவின் படித்த இளைய தலைமுறையினரிடம் பரப்பியதில் முகநூலுக்கு பெரும்பங்கு உண்டு. கைமாறாக, இந்திய சந்தையை ஏகபோகமாக கோரியது. புதிதாக வாங்கிய வாட்சப் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வதற்கான உரிமத்தையும் கோரியது.

ஆனால், ஆர்எஸ்எஸ் இந்துத்துவ ஆட்சியின் மூலதன முதலீட்டாளர் மார்வாரி பனியாக்களுக்கு உலகின் மிகப்பெரிய “டிஜிட்டல் சந்தையை” அந்நியர்களுடன் பங்கு போட விருப்பமில்லை. “தனிநபர் தகவல் தான் இன்றைய கச்சா எண்ணெய். 130 கோடி இந்தியர்கள் உருவாக்கிடும் தனிநபர் தகவல்கள் இந்தியாவின் சொத்து. அவை இந்திய (படிக்க, பனியா) நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்” என்று கடந்த 2019ம் ஆண்டு குசராத் முதலீட்டாளர் மாநாட்டில் அம்பானி வெளிப்படையாக பேசினார்.

அதேநேரம், வாட்சப் மூலம் பொய் தகவல்கள் பரப்புவதாக சர்வதேச அளவில் பிரச்சாரம் நடத்தி வாட்சப்பையும் இந்துத்துவ கும்பல் தனது பிடிக்குள் கொண்டு வந்தது. இதையடுத்து, பாஜக இந்துத்துவா மதவெறியர்களின் அதிகாரப்பூர்வ பொய் பிரச்சாரம் மற்றும் செயல் தளமாகவும் வாட்சப் மாற்றப்பட்டது. 2017 முதல் இந்துத்துவ கும்பல் தங்கள் தலித், இசுலாமிய வெறுப்பையும் வன்மத்தையும் வாட்சப் பொய் தகவல்கள் மூலம் பரப்ப தொடங்கியது. இதை, பாஜக தலைவர் அமித்சா பகிரங்கமாக மேடையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

முகநூல், வாட்சப் தளங்கள் இந்துத்துவ அரசியலுக்கு பணிந்து வந்தாலும் இந்திய பெருமுதலாளிகளான பனியாக்கள் இந்தியாவின் தனிநபர் தகவல் சந்தை தங்களுக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாடினர். ஆகவே, சீனாவின் பல்வேறு சமூக தளங்களையும் “பாதுகாப்பு” காரணம் காட்டி தடை விதிக்க செய்தனர்.

இதற்கிடையே, 2016ல் ஜியோவை தொடங்கிய முகேஷ் அம்பானி இந்தியாவின் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு மற்றும் இணைய தொழில்நுட்பத் துறையை தனக்கு மட்டுமே ஏகபோகமாக மாற்றி கொண்டுவிட்டார். தனது பழைய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலில் இருந்து புதிய “கச்சா எண்ணெய்” தனிநபர் தகவல்கள் குவியும் வாடிக்கையாளர் “தொடு-புள்ளிகள்” அனைத்தையும் அம்பானி ஆக்கிரமித்துள்ளார்.

[ஜியோ நிறுவனத்தின் வணிக சேவைகள்.]

அதிவிரைவு இணைய சேவை தொடங்கி, தொலைத்தொடர்பு துறை, திரைப்படங்கள், இசை, செய்தி மற்றும் கேளிக்கை நிகழ்ச்சி, காய்கறி வீட்டிற்கு தேவையான அனைத்தையும் விற்கும் பலசரக்கு கடைகள், காப்பீடு மற்றும் கடன் சேவை, கூடிய விரைவில் வங்கி சேவை என ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் அம்பானியின் ஜியோ நிறுவனம் இணைய வழியாகவும் விநியோகிக்கும். அவற்றை பெறும் வாடிக்கையாளர்களின் “தனிநபர் தகவல்கள்” அனைத்தும் அம்பானியின் ஏகபோக சொத்தாகும். ஏற்கனவே, இந்திய ஒன்றிய குடிமக்களின் ஆதார் அட்டை தகவல்களை ஜியோ நிறுவனத்திற்கு மோடி வழங்கிவிட்டதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக, ஒரு நபரின் அரசு ஆவணங்கள், சமூக பொருளாதார தகவல், எந்த நிறம் பிடிக்கும் எந்த உணவு பிடிக்கும் என்பது வரை அம்பானியின் பிடிக்குள் சென்றுள்ளது.

அரசியல் அதிகாரத்தை கட்டுப்படுத்தி அதன்மூலம் தொழில் போட்டிகளை அழிப்பதில் அம்பானிக்கு ஈடு இல்லை. சட்டங்களை தனக்கு சாதகமாக்கி, ஜியோ அலைபேசி நிறுவனம் சந்தை மதிப்பைவிட குறைந்த கட்டணத்தை வாடிக்கையாளருக்கு வழங்கி 3 ஆண்டுகளில் இந்தியாவின் பெரிய அலைபேசி நிறுவனமாக வளர்ந்துள்ளது. பல பத்தாண்டுகளாக இருந்த போட்டி நிறுவனங்களை கடனாளியாக நிறுத்தியுள்ளது. போட்டியாளர்களை வீழ்த்தும் வரை மலிவாக தென்படும் ஜியோவின் விலை பட்டியல் சந்தையை ஏகபோகமாக கைப்பற்றியவுடன் வாடிக்கையாளர்களை சக்கையாக பிழிந்தெடுக்கும்.

முகேசு அம்பானியை மீறி இந்தியாவில் தங்களுக்கான சந்தைவெளி கிட்டாது என்பதை தாமதமாக உணர்ந்த அமெரிக்க நிறுவனங்கள் 2020 ஏப்ரல் முதல் அம்பானியின் “ஜியோ பிளாட்பாரம்” நிறுவனத்தில் முதலீட்டை கொட்டின. உலகமே கொரோனா ஊரடங்கில் முடங்கி கிடந்த சமயத்தில் அம்பானியின் ஜியோ நிறுவனம் சுமார் ரூ.1.52 லட்சம் கோடியை குவித்தது. இதில், முகநூல் நிறுவனத்தின் ரூ.43,574 கோடியும், கூகுள் நிறுவனத்தின் ரூ.33,737 கோடியும் அடங்கும்.

முகநூல் நிறுவனத்தின் இந்த முதலீட்டை அடுத்து, பல ஆண்டுகளாக அரசு அனுமதி கிடைக்காத, வாட்சப் பேமண்ட் எனப்படும் பணப்பரிவர்த்தனை சேவைக்கு அம்பானியின் சேவகன் மோடி அரசு அனுமதி வழங்கியது கவனிக்கத்தக்கது.

திசம்பர் 15, 16ம் தேதிகளில் “பியுல் பார் இந்தியா”(இந்திய வளர்ச்சிக்கான எரிபொருள்) என்கிற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கில் முகநூல் நிறுவனர் சக்கர்பர்க் மற்றும் அம்பானி உரையாடினார்கள்.

[பியுல் பார் இந்தியா இணையவழி கருத்தரங்கில் சக்கர்பர்க், அம்பானி.]

ஜியோ, முகநூல் மற்றும் வாட்சப் கூடி இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை எவ்வாறு $5 ட்ரில்லியனாக மாற்றப்போகிறார்கள் என்று பேசினர். தனது சில நிமிட உரையில், அம்பானி அவரது சேவகன் மோடிக்கு பல முறை புகழாரம் சூட்ட மறக்கவில்லை. மோடியின் அபார நிர்வாகத்தால் பசி பட்டினி உயிரிழப்புகள் இல்லாமல் இந்தியர்கள் கொரோனா ஊரடங்கை கடந்து வந்துள்ளனர் என்று அம்பானி பச்சையாக புளுகினார்.

 

மோடியின் ஆட்சியை மெச்சிய சக்கர்பர்க் தனது வாட்சப் பேமண்ட் பணப்பரிவர்த்தனை சேவையை குறித்து அழுத்தமாக பேசினார். ஜியோ நிறுவனத்தின் விற்பனை தளமாக முகநூலும், வடிக்கையாளருடனான பண பரிவர்த்தனை வாட்சப் மூலமாகவும் இருக்கும் என்றே சக்கர்பர்கின் பேச்சால் உணர முடிகிறது. ஜியோவின் காப்பீடு, கடன், வங்கி சேவை போன்ற இதர பரிவர்தனைகளும் வாட்சப் செய்யவிருக்குகிறது.

முகநூலுக்கு அடுத்து ஜியோவில் பெரிய முதலீடு செய்துள்ள கூகுள் தனது கைபேசி மற்றும் இணைய தொழில்நுட்ப கட்டமைப்பை ஜியோவுடன் பகிர்வதன் வாயிலாக ஜியோவின் வர்த்தகத்தின் மூலம் சேகரிக்கப்படும் தனிநபர் டிஜிட்டல் தகவல்களை கைப்பற்றும்.

130 கோடி இந்திய ஒன்றிய மக்களின் தகவல் சொத்தை அந்நியர்களுக்கு வழங்க மறுக்கும் முகேசு அம்பானி ஒரு வங்காளி, பஞ்சாபி, கன்னட தொழில் முனைவோருடன் பங்கிட முன் வருவாரா? அதை, இந்திய ஒன்றியத்தின் பிரதமரான மோடி தான் முன் மொழிவாரா?

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்பது மார்வாரி பனியாக்களின் $5 ட்ரில்லியன் சொத்து குவியலுக்கு ஒன்றியத்தின் மற்ற தேசிய இனங்களை எரிபொருளாக எரிப்பதே ஆகும். இந்த எரிபொருளை நயவஞ்சகமாக ஒன்று திரட்டும் கூச்சலே “இந்துக்கள் ஒன்றிணைவோம்” என்பது.

நம் ரத்தபந்தங்களிடம் பகிர தவிர்க்கும் தகவல்களையும் அம்பானியிடம் பகிரும் நாம், அவருக்கான 130 கோடி “கச்சா எண்ணெய்” கிணறுகள். அவ்வளவு தான்!

Translate »