’மனித குலத்திற்கு (அது தோன்றிய காலத்திலிருந்து) இதுவரையில் ஒரு வரலாறு இருந்திருக்கிறது. (முதலாளியத்தினை வந்தடைந்த பின்) இனி எந்த ஒரு வரலாறும் இருக்காது’, என்றே முதலாளிய அறிஞர்கள் வாதிட்டிருக்கிறார்கள். அவ்வளவு தூரம் வலிமையானதாக, தீர்மானகரமானதாக முதலாளியம் மனித குல வரலாற்றில் நிரந்தர ஆற்றலாக நிற்பதாகவே அவர்கள் பிம்பத்தினை கட்டி எழுப்பியும் இருக்கிறார்கள். முதலாளியம் தோன்றி வளர்ந்த கடந்த சில நூற்றாண்டுகளில் உலக அளவில் மனித குலம் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு தன்னை வடிவமைத்துக் கொண்டது. முதலாளியத்திற்கு முன்பான உலகை அது உடைத்தெறிந்து, மக்களுக்கு சனநாயகத்தை, வளத்தை, புதிய உலகத்தை, கண்டுபிடிப்புகளை என பலவற்றை உருவாக்கியதாக மார்தட்டிக் கொண்டது. இதுவே மனித குலத்தின் இறுதித் தேவை எனவும், இனி வரும் தேவைகளை முதலாளியமே நிறைவேற்றிக் கொடுக்கும் என்பதான மாபெரும் கனவை தொடர்ந்து நம்மிடம் விதைத்துக் கொண்டு வந்திருக்கிறது. இந்த நம்பிக்கையிலேயே உலக மக்களை அது வழிநடத்தவும் செய்கிறது.
இப்படியான இரும்புப் பிடிப்பை நம் மீது கொண்டிருப்பதாக முதலாளியம் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் அது பல்வேறு நெருக்கடிகளையும் நம் கண்முன் சந்தித்தது. கடந்த ஒரு நூற்றாண்டில் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவத்தைம் இன்றைய நிலையையும் பொருத்திப் பார்த்து இனிமேல் வேறெதுவும் வரலாறு தேவையா இல்லையா என்பதை நாம் ஆய்வு செய்யும் காலமிது.
14 ஆம் நூற்றாண்டில் (1346-53) இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் ப்யூபோனிக் ப்ளேக் எனும் தொற்று நோய் பரவியது. வெகுசில மாதங்களுக்குள்ளாகவே கிட்டதட்ட ஐரோப்பாவின் 30-60% மக்கள் தொகை இந்த நோயால் அழிந்தது. இதனால் ஐரோப்பாவில் நிலம் சார்ந்த விவசாயமும், பண்ணைகளும் கடும் நெருக்கடியைச் சந்தித்தன. பல பண்ணைகளும் அதனது பண்ணையார்களும், பிரபுக்களும் கூட இந்நோயினால் அழிந்தனர். அதுவரையில் நிலத்துடன் பிணைக்கப்பட்டு இருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் சார்ந்த விவசாயம் என்பது பயனற்றதாகிப் போனது.
பல்லாயிரம் வருடங்களாக நிலத்தைச் சார்ந்து இயங்கி வந்த சமூகத்தை நாம் நிலவுடமைச் சமூகம் என்போம். இச்சமூகம் கடும் நெருக்கடியை இந்த கொள்ளை நோயால் சந்தித்தது. இந்த நிலவுடமையைச் சார்ந்தே அரச அதிகாரங்கள் இயங்கி வந்த நிலையில் இந்த அழிவானது ஒட்டுமொத்த நிலவுடமை கட்டமைப்பை ஆட்டம் காண வைத்தது. உழவுத் தொழில்களால், பண்ணையார்களால் இனிமேலும் விவசாயக் கூலிகளை அடிமைகளைப் போல நிலத்தோடு பிணைத்து சுரண்ட இயலாது, நிலம் சார்ந்த உற்பத்தி வேலைவாய்ப்பில்லாமல் போனது, அதன் உற்பத்தி லாபம் இல்லாது போனது. மக்கள் தொகையில் கிட்டதட்ட 60 சதவீத மக்கள் இல்லாது போன பின்னர் விவசாய உற்பத்தியானது மக்கள் தொகையைவிட மிகுதியாகவே இருந்தது.
இவ்வாறு மிகுதியான உற்பத்தியும், குறைவான மக்கள் தொகையும், லாபமில்லாத உழவும், காணக் கிடைக்காத தொழிலாளியும் இந்த நிலவுடமைச் சமூகத்திற்கு சாவுமணி அடிக்கக் காரணமாயிருந்தது. இந்தப் பேரழிவிற்கு ‘கருப்பு மரணம்’ என்று அழைத்தார்கள். இந்த மரண நோயின் காரணமாக உழவுத் தொழிலுக்கான தொழிலாளர்கள் குறைந்து போனார்கள். இவ்வாறான நிலையை எதிர்கொண்ட பண்ணையார்கள் (அல்லது பண்ணை நிலத்தின் பிரபுக்கள்) தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
நிலத்திற்குத் தேவைப்படும் உழைப்பாளர்களை விட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உழைப்பாளிகள் இருந்த காரணத்தினால் புதுவித நெருக்கடி உருவானது. அதுவரை, பண்ணையார்களைச் சார்ந்திருந்த தொழிலாளர்கள் அவர்களது கட்டுப்பாட்டிலேயே இயங்கவும், வாழவும் வேண்டியதாயிருந்தது. இந்நிலை தளரத் தொடங்கியது. தொழிலாளர்களை தங்கள் பண்ணையில் வைத்துக் கொள்ள வேண்டுமெனில் கடந்த காலத்தைப் போல அவர்களை அடிமைகளாகவோ, விலங்குகளாகவோ நடத்த இயலாத நிலை பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டது.
இந்த நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்கள் தங்களது சுதந்திரமான தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ள தளைப்பட்டார்கள். பண்ணையாளர்கள் கூலியை ஏற்றிக் கொடுக்க வேண்டிய நிலை உருவானது. தொழிலாளர்கள் தங்கள் உழைப்பிற்கான விலையை பேரம் பேசி உயர்த்திக் கொள்ள இயன்றது. இதனால் அவர்களது பொருளாதார நிலை உயரத் தொடங்கியது. இது பெரும் மாற்றத்தினை பொருளாதாரத்தில் கொண்டு வந்தது. நிலத்தில் பிணைக்கப்பட்ட காலத்தில் அவர்கள் பெற்று வந்த உழைப்பிற்கான கூலி என்பது தற்போது பண வடிவில் கிடைக்கத் துவங்கியது. தொழிலாளர்கள் தங்களது உழைப்புக் கூலியை தங்கள் விருப்பத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப விற்றுக் கொள்ளக் கூடிய சுதந்திரத்தைப் பெற்றார்கள். இதனால் அவர்கள் சுதந்திரத் தொழிலாளர்களானார்கள். அவர்களது உழைப்பு ஒரு பொருளைப் போல விற்பனைக்குரிய விலை பெறக் கூடியதாக மாறியது.
இச்சமயத்தில் விவசாயம் அல்லாத பிற தொழிலை நோக்கி தொழிலாளர்கள் நகரத் தொடங்கினார்கள். இதனால் தொழிற்துறை வளரவும், நகரங்கள் புதிய பொருளாதார வடிவத்திற்குள்ளும் நகர ஆரம்பித்தன. தொழிலாளர்களை இதுவரை அடிமைகளைப் போல பிணைத்து வைத்திருந்த நிலப்பிரபுக்களின் கை பலவீனமானது. எனவே ஒரு புறம் தங்களது உழைப்புச் சுதந்திரத்தை மீட்டெடுக்கவும், மறுபுறம் தங்களை அழுத்திக் கொண்டிருந்த பழைய அரசியல் அமைப்பான பிரபுக்களை உள்ளடக்கிய நிலவுடமை கட்டமைப்பு அரசியலை எதிர்த்து நிற்பதற்குமான வலிமையை இவர்களுக்குக் கொடுத்தது.
1350இல் இந்தத் தொழிலாளர்களுடைய கூலி உயர்வைக் கட்டுப்படுத்தும் சட்டத்தினை இங்கிலாந்து அரசு கொண்டு வந்தது. ஆனால் தொழிலாளர்களின் எழுச்சி இந்த சட்டத்தை எதிர்க்கும் வகையில் நடக்கக் காரணமானது. இவ்வாறான கட்டமைப்பு மாற்றமானது அரசின் அடுக்கில் அதிகாரத்தோடு இருந்த பிரபுக்களின் உயர்நிலையை கேள்விக்குள்ளாக்கியது. நிலம் சார்ந்த விவசாய உற்பத்தியை பெருக்கிக் காட்டினாலேயே தமது அதிகார பலத்தைத் தக்க வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபுக்கள் இந்த உழைப்பாளர்களோடு கூலி உயர்வுக் கோரிக்கையில் சமரசத்திற்குத் தள்ளப்பட்டார்கள். இதனால் பிரபுக்களை நம்பியோ, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான வகையிலோ செயல்பட்டால் மட்டுமே வாழ இயலும் எனும் அரசியல் கட்டுப்பாடுகள் தளர்ந்து அறுந்து போயின. அதுவரை சமூகக் கூட்டமாக தொகுப்பாக பார்க்கப்பட்டு வந்த உழைப்பாளர்கள் இதன் பின்னர் தனித்த நபர்களாக அரசால் பார்க்கப்பட்டனர்.
சமூகத்திற்கான உற்பத்தி என்றோ, சமூகத்திற்கான கூலி என்பதிலிருந்து மாறி, தனிநபருக்கான உற்பத்தி, தனிநபர் கூலி என்பதாக சமூகம் மாற்றம் பெற்றதற்கு இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் ஆதாரமளிக்கின்றன. 1381 ஆம் வருடத்தில் தனிநபருக்கான வரியை விதிக்க ஆரம்பித்தது. (ஒரு ஷில்லிங் ஒரு நபருக்கு எனும் வரிவிதிப்பைக் கொண்டு வந்தார்கள்).
இது போன்ற மாற்றங்களைக் கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து உழைப்பாளிகள் போர்க்கொடி தூக்கினார்கள். இது உழைப்பாளர்களுக்கு ஒரு அதிகாரத்தோடு போராடும் வலிமையை பெற்றுக் கொடுத்தது. இந்த தனிநபர் வரி (போல் வரி Poll Tax)க்கு எதிராக உழைப்பாளர்கள் திரண்டார்கள். கெண்ட், எஸ்ஸெக்ஸ் எனுமிடத்திலிருந்து லண்டன் நோக்கி உழைப்பாளர் படை திரண்டு கிளம்பியது. இப்படையை இங்கிலாந்து அரசரின் படை எதிர்கொண்டு போர் நடத்தியது. இதில் உழைப்பாளர்கள் படை தோற்று பலர் கொல்லப்பட்டனர். இந்த ஏழைக்குடியானவர் புரட்சி வீழ்த்தப்பட்டாலும், அரசு தனது வரிவிதிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆனால் இதன் பின்னர் அரசியலில் தங்களுக்கான இடத்தை மிக அழுத்தமாக உழைக்கும் வர்க்கம் பெற்றுக் கொண்டது.
இதற்கு அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் எழுந்த அறிவியல், தொழிற்புரட்சி இந்த தொழிலாளர்களை மேலும் சுதந்திரம் அடைந்தவர்களாகவும், அரசியல் அதிகாரத்தை கேள்வி எழுப்பும் ஒரு வர்க்கமாகவும் மாற்றி அமைத்தது. நிலம் சார்ந்து அமைந்திருந்த அரசாங்க ஆட்சி அதிகார முறையில் பொருளாதாரம் சார்ந்த ஆட்சி அதிகார முறைக்கு இந்நிலை வழிவிட்டது.
இப்படியாக நில உடமைச் சமூகத்தின் அரசுகளுக்கு ஒரு முடிவுரையை எழுத ப்யூபோனிக் ப்ளேக் நோயும் ஒரு மிகப் பெரும் காரணியாக அமைந்தது.
நிலவுடமை சமூகத்திற்குப் பின்பு புதிய வணிகச் சமூகங்கள் புதிய நாடுகளோடும் புதிய காலனிகளுடனும் வணிகத்தை உருவாக்குகின்றன. இது உள்நாட்டில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகின்றது. அதிக உற்பத்தி, பொருளுக்கான விலை என்பதாக பொருளாதாரக் கட்டமைப்பு வளர்கின்றது. இதன் காரணமாக காலனிகளை உருவாக்குதல், அடிமை வணிகம் என ஏகாதிபத்தியமாக இது விரிகிறது. இவ்வாறான புதிய உற்பத்திக் கேந்திரங்களாக மாறிய நகரங்களுக்கு முன்னர் நிலத்தோடு பிணைக்கப்பட்டிருந்த உழைப்பாளர்கள் வருவதும், தங்களது உழைப்பை விற்பதுமான நிலை உருவாகிறது. இப்படியான போக்கு 17-18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஒரு தொழில் துறை நாடாக மாற்றுகிறது. இந்நிலையிலேயே தொழிற்சாலைகளும், மில்களும் உருவாகின்றன. இந்த கட்டத்திலேயே ஒரு தேசத்தின் பொருளாதாரம் எனும் புதிய போக்கினை கண்டறிகிறார்கள். இதையே தேசங்களின் வளம் அல்லது சொத்து என்பதான கருத்தியலை ஆடம் ஸ்மித் முன்வைக்கிறார். இவரே முதலாளித்துவத்தின் தந்தையாகவும் அறியப்படுகிறார்.
இவர் முன்வைக்கும் கருத்தியலின் அடிப்படையில் முதலாளித்துவ நாடுகள் உருவாகின்றன. அக்கருத்தியலை வளர்த்தெடுக்கின்றன. ஒரு தேசத்தின் வளம் அல்லது செல்வம் என்பது அதனுடைய ஏற்றுமதியில் உருவாகிறது. ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியைக் குறைத்திடல் வேண்டும் என்கிறார். ஒரு தேசத்தின் செல்வம் என்பது அது உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களே என்பது தான் அவரது பிரதான உற்பத்தி சார்ந்த கருத்தியலாக அமைகிறது.
இந்த உற்பத்தியை அரசு தடுத்திடவோ, கட்டுப்படுத்திடவோ கூடாது. ஒரு கட்டற்ற உற்பத்தி வளர்ச்சியை, அதுவும் அரசின் தலையீடற்ற உற்பத்தியையே அவரின் மிக முக்கியமான பொருளாதார கருதுகோளாகிறது. மேலும், ஒரு தேசத்தில் உற்பத்தி என்பது ஒரு புறம் வளர்த்தெடுக்கப்படும் பல பிரிவு தொழிலாளர்களும், மறுபுறம் சேர்க்கப்படும் மூலதனமும் சார்ந்தது என்கிறார். உற்பத்தியை பல சிறு பிரிவுகளாகப் பிரித்து சிறு சிறு சவால்களாக மாற்றி அதற்குரிய சிறப்பு தொழிலாளர் மூலம் உற்பத்தியை வடிவமைப்பதால் உற்பத்தியை பலப்படுத்திடவும் அதிகரித்திடவும் முடியும் என்கிறார். இதனால் உற்பத்தியாளர்கள் அல்லது முதலாளிகள் பெரும் லாபம் அல்லது உபரியை ஈட்ட முடியும். அதுமட்டுமில்லாமல் தொழிலாளர் சார்ந்திருக்காத எந்திரங்களை உருவாக்குவதும் அவசியம் என்கிறார். இதைக் கொண்டு அவர்கள் தங்களது மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள இயலும் என்கிறார்.
இவ்வாறான மூலதன சேர்க்கை மூலமாகவே அரசு அல்லது ஒரு தேசம் தனக்கான எதிர்கால செல்வத்தை உருவாக்கிக் கொள்ள இயலும். இந்த மூலதனத்தை உருவாக்கிக் கொள்வதும், அதை நிர்வகிப்பதும், அதைப் பாதுகாப்பதும் ஒரு தேசத்திற்கு இன்றியமையாதது எனும் ஸ்மித்தின் கருதுகோளே முதலாளித்துவ அரசுகளின் எழுதப்படாத கொள்கைகளாக விளங்கின. இதன் அடிப்படையிலேயே மேற்குலக அரசுகள், ஜப்பான் போன்ற முதலாளித்துவ அரசுகள் தங்களது மூலதனத்தை வளப்படுத்திக் கொள்ள எல்லா வகையான முயற்சிகளை மேற்கொள்வதையும், அதன் ஏற்றுமதி வணிகத்தை பாதுகாப்பதற்கான வழிவகைகளை உருவாக்கிக் கொள்வதையும், அதன் நிறுவனங்களின் நலனைப் பாதுகாப்பதில் முன்நிற்பதையும் கவனிக்க இயலும். ஒவ்வொரு முறையும் இரு தேசத் தலைவர்கள் சந்திக்கும் பொழுதும் வணிக ஒப்பந்தங்கள் குறிப்பாக ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பான ஒப்பந்தங்கள், தங்கள் நாட்டின் நிறுவனங்களுக்கான சலுகைகள் எனும் மூலதனம் தொடர்பான நிகழ்வுகள் மட்டுமே நடப்பதை நாம் கவனிக்க இயலும். மக்கள் சார்ந்த ஒப்பந்தங்களைக் காட்டிலும் இவைகளே பிரதானமானவையாக இருந்தும் வருகின்றன. இரு நாடுகளிடையே கல்வி, மருத்துவம், அறிவியல், சூழலியல் சார்ந்த ஒப்பந்தங்களைக் காட்டிலும் இந்த வணிக ஒப்பந்தங்களையே இவர்கள் முன்னெடுப்பதன் பின்னணியில் இந்த முதலாளியக் கொள்கைகளே இருக்கின்றன.
ஸ்மித் முன்வைக்கும் மிக முக்கியமான கருத்தியல் – “இந்த முதலாளியம் ‘தன்னிச்சையானது’” என்கிறார். அதாவது ஓர் இடத்தில் ஒரு பொருளுக்கான தேவை அதிகமாகவும், அதன் இருப்பு குறைவானதாகவோ அரிதாகவோ இருக்குமெனில், அவ்விடத்திற்கு அப்பொருளை கொண்டு சேர்ப்பது லாபத்தைக் கொடுக்கும். இதனால் முதலாளிகள் அதிக மூலதனத்தை இவ்விடத்திற்குக் கொண்டு சேர்ப்பார்கள் அல்லது முதலீடு செய்வார்கள் (அதாவது அதிக லாபம் ஈட்டுவதற்காக). ஆனால் அதே போல அவ்விடத்தில் அப்பொருளுக்கு மதிப்பும் (விலையும்) அதன் லாபமும் குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த முதலாளிகள் தங்கள் நிறுவனங்களை வேறிடங்களுக்கு மாற்றிக் கொள்வர். இவ்வாறாக ஒரு தேசத்தின் முக்கியத் தேவைகளுக்கு ஏற்ப தன்னிச்சையாக முதலாளியம் தன்னை தகவமைத்துக் கொள்ளும் என்கிறார்.
இவ்வாறு இந்த முதலாளியம் தன்னிச்சையாக இயங்குவதை சாத்தியமாக்க வேண்டுமெனில் அவ்விடத்தில் சுதந்திரமான வணிகமும், அந்த வணிகத்திற்கான போட்டியும் இருக்க வேண்டும். இம்மாதிரியான வணிகத்திற்குள் அரசு கட்டுப்பாடுகளை வரி, கட்டுப்பாடு, விலைக் நிர்ணயம் கொண்டு வரும் பட்சத்தில் அல்லது குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மானியம் கொடுக்கும் பட்சத்தில் இந்த வணிகச் சூழல் சிதைந்து விடும் என்பது ஸ்மித்தின் மிக முக்கியமான கருத்தாக்கம். ஆகவே அரசின் தலையீடோ, வரிவிதிப்போ, விலைக் கட்டுப்பாடு இல்லாத நிலையோ இருந்தால் மட்டுமே இந்த சுதந்திர வர்த்தக முதலாளியம் வளரும் என்கிறார். இதன் அடிப்படை என்பது வணிகத்தில் தலையிடுவது என்பது அரசின் வேலையில்லை என்கிறார். அரசு இதர பணிகளான கல்வி, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு போன்றவற்றை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டுமென்கிறார். இப்படியாக முதலாளியம் தன்னிச்சையாக தம்மை வளர்த்துக் கொள்ளும் என்பது ஸ்மித் உட்பட பல பொருளாதார அறிஞர்களின் கூற்று. இந்த தன்னிச்சையான போக்கிற்கு அடிப்படையாக ஒரு புறத்தில் மூலதனம் சேர்வதும் மறுமுனையில் தொழிலாளர்கள் உருவாக்கமும் அவசியம் என்கிறார் ஸ்மித்.
இந்த கருதுகோளை முதன்முதலாக எதிர்கொண்டு இதன் உள்ளார்ந்த தீங்குகளை அறிவியல் பூர்வமாக உடைத்தவர் கார்ல் மார்க்ஸ். முதலாளியம் தன்னிச்சையாக தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்வது என்பதை மார்க்ஸ் ஏற்றுக் கொண்டே இருந்தார். ஆனால் தேசத்தின் செல்வம் உருவாக்கப்படும் பொழுது ஒரு புறத்தில் ஸ்மித் சொல்வது போல செல்வம் அல்லது மூலதனம் சேர்வதைப் போலவே மறுமுனையில் ஏழைத் தொழிலாளர்களும், தீர்க்க இயலாத வறுமையும் உருவாகும் என்பதை மார்க்ஸ் தீர்க்கமாக வரையறை செய்தார். அதை வரலாறு நிரூபித்தது.
ஸ்மித் இந்த தன்னிச்சையான முதலாளித்துவ வளர்ச்சிக்கு அரசின் தலையீடு இருக்க இயலாது என்றார். ஆனால் அரசின் தலையீடு இல்லாமல் முதலாளியத்தின் தன்னிச்சையான போக்கு நிறைவடையாது என்றார் கார்ல் மார்க்ஸ். அரசும், முதலாளியமும் இணைந்தே முதலாளியக் கட்டுமானம் நிறைவடைகிறது என்றார்.
அரசியல் தலையீடு இல்லாமல் முதலாளியத்தின் அராஜகமான லாபவெறி, உழைப்புச் சுரண்டல், நிதியை-மூலதனத்தை சேகரித்தல் என்பது தொடர்ந்தது. இந்த முதலாளியச் சுரண்டலும், அதனால் முதலாளித்துவ நாடுகளின் ஆதிக்கப் போட்டிகள், அரசியல் முரண்பாடுகளுமே உலகின் முதல் உலகப் போரை உருவாக்கியது. இவ்வாறே உலகில் முதலாளித்துவம் தன்னை வளர்த்துக் கொண்டு தனது மூலதனத்தை குவித்துக் கொண்டிருந்தது. இந்த போக்கு 1929-30ம் வருடத்தில் மிகப் பெரும் நெருக்கடியை சந்தித்தது.
1920ம் வருடத்திலிருந்து அமெரிக்கா மிகப் பெரும் முதலாளிய லாபத்தை ஈட்டத் தொடங்கியிருந்தது. அமெரிக்காவின் போர்ட் நிறுவனம் (உதாரணமாக) சாமானியர்கள் கூட விலைக்கு வாங்கக் கூடிய கார்களை உற்பத்தி செய்தது. இந்தக் கார்களை வாங்குவதற்கான கடன்களை வாரிக் கொடுத்தன அமெரிக்க வங்கிகள். இந்த அபரிமிதமான வளர்ச்சியால் பங்குச் சந்தையில் பெருமளவு லாபத்தை ஈட்டினார்கள். இந்த வளர்ச்சிப் போக்கு 1929ம் வருடத்தில் மிகப் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. முதலாளியம் தனது அபரிமிதமான லாபவெறிக்காக ஆற்றலுக்கு மீறிய செயற்கைத் தேவையை சந்தையில் உருவாக்கி வளர்த்தெடுத்த லாபம் வீழ்ந்தது மட்டுமல்லாமல் உற்பத்தியே நிறுத்தும் நிலையை நோக்கி நகர்ந்தது.
ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பற்ற விகிதம் 25% என எட்டியது. இது மிகப் பெரும் வறுமையை, ஏழ்மையை அடித்தட்டு மக்களிடத்தில் கொண்டு வந்தது. மார்க்ஸ் சொன்னதைப் போல தேசத்தின் செல்வம் எனும் முதலாளிகளின் மூலதனம் ஒரு புறத்தில் குவிந்தது, மறுபுறத்தில் ஏழைகளின் வறுமை அதிகரித்தது. இது சந்தையின் வீழ்ச்சிக்குச் சென்று நிறுத்தியது. இப்படியாக முதலாளியம் தனது மூலதன சேகரிப்பு பேராசையினால் மரணத்தின் வாயிலை வந்தடைந்தது. இந்தக் காலகட்டத்தில் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு இரையாகாத தனித்த வளரும் நாடாக சோவியத் விளங்கியதை முதலாளித்துவ நாடுகளின் பத்திரிக்கைகளே எழுதின. ஏனெனில் அங்கே லாபம் என்பது மக்களுக்கானதாகவும், உற்பத்தி என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவுமே தீர்மானிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது. சோவியத் தனிநபர் மூலதனக் குவிப்பில் ஈடுபடாத காரணத்தினால் இந்த நெருக்கடியை சந்திக்கவில்லை. இவ்வாறாக 1930இல் உருவான உலகப் பொருளாதார நெருக்கடி முதலாளிய பலவீனத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியது.
இச்சமயத்தில் ஆடம் ஸ்மித்தின் கருதுகோளான கட்டற்ற சந்தையைக் கட்டுப்படுத்த அரசு முயற்சிக்கக்கூடாது என்ற நிலை மாற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதைக் கையாள முன்வைக்கப்பட்ட கோட்பாடு ‘கெய்னீசிய பொருளியல்’ கோட்பாடு எனப்பட்டது. இதை உருவாக்கியவர் ஜான் மெய்னார்ட் கெய்னீசியன். இவரது பெயரிலெயே இந்தக் கோட்பாடு அழைக்கப்பட்டது. இவரது கோட்பாடின் படி, ஆடம் ஸ்மித் வழிவகைப்பட்ட தனியார் சந்தைகள் அவ்வப்போது எதிர்கொள்ளும் குறைபாடுகளும், வரம்புகளும் அதை பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன. உதாரணமாக பொருளாதார மந்த நிலை, பொருளாதார வீழ்ச்சி- பின்னடைவு எனத் தொடந்து உருவாகின்றது. இப்படியான நெருக்கடி இயங்குநிலைகளைத் தடுக்கவும், இதனால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்யவும் அரசு விதிமுறைகள், விதிகள், வரி-நிதிக் கொள்கைகளை செய்ய முன்வர வேண்டும் என்றது. அதாவது முதலாளியம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கையாண்டு அதை நிலைநிறுத்தும் ஆற்றலாக அரசு செயல்படும் என்பதே இக்கோட்பாடு.
இந்தக் கோட்பாடும், வீழ்ந்து கொண்டிருந்த முதலாளிய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அமெரிக்கரான ரூஸ்வெல்ட்டின் ‘புதிய ஒப்பந்தமும்’ (New Deal) உருவாகி, அரச முதலாளியம் உருவெடுத்தது. இதன்படி முதலாளியத்தைச் சிக்கலில் இருந்து மீட்க ரூஸ்வெல்ட் அரசு பல்வேறு முதலீடுகளை/உதவிகளைச் செய்தது. இந்த கெய்னீசியக் கொள்கைப்படி ‘தேவையே (Demand)’ பொருளாதார வளர்ச்சியை நிர்ணயம் செய்கிறது.
இந்த ‘தேவை’யின் அடிப்படையிலேயே வளர்ச்சி உருவாகின்றது. உற்பத்தி வளர்ச்சியும், வணிக வளர்ச்சியும், இதர வளர்ச்சியும் இதனாலே கட்டுப்படுத்தப் படுகின்றன எனப்பட்டது. இந்த கெய்னீசியக் கோட்பாடு அரசின் தலையீட்டை ஆமோதிக்கிறது. முதலாளித்துவம் நிலைபெற அரசிற்கும் பொறுப்பு இருக்கிறது. அவ்வகையில் அரசாங்கத்தின் பொதுப்பணிகள் காரணமாக வாய்ப்புகளை ஏற்படுத்துதல் என்பது வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக நுகர்வோரின் வாங்கும் திறனை அதிகரிக்க வருமான நிர்வாகத்தை மேற்கொள்ளும் பணிகள் அரசுடையது. இவரின் முயற்சியாலேயே உலக வங்கி (World Bank), பன்னாட்டு நிதியகம் (International Monetary Fund) உருவானது. இவ்வாறு அரசுத் தலையீட்டின் உதவியோடு இயங்கும் கெய்னீசிய முதலாளியம் அல்லது அரசின் தலையீடு இல்லாத கட்டற்ற சுதந்திரத்தோடு இயங்கும் ஆடம் ஸ்மித் வகையான முதலாளியம் என இருவகைக் கோட்பாட்டிற்குள் முதலாளிய விவாதங்கள் நடந்து வருகின்றன.
1930க்கு பின் ரூஸ்வெல்ட் , மற்றும் கெய்னீசிய முறைகளால் முதலாளியப் பொருளாதாரம் தூக்கி நிறுத்தப்பட்டதும், வேலைவாய்ப்பின்மை குறைக்கப்பட்டதும் நிகழ்ந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பின்பான காலகட்டத்தில் முதலாளியம் மிகப் பெரும் சீரழிவிற்கு வந்தது. ‘தேவை’ சார்ந்த முதலாளியப் பொருளாதாரமோ, கட்டற்ற சுதந்திரமான பொருளாதாரமோ எதுவாகினும் நிலைபெற வேண்டுமெனில் அது தொழிலாளி வர்க்கத்துடன் சமரசம் செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. காலனிய நாடுகளை முதலாளித்துவ நாடுகள் இழந்திருந்தன. ஏகாதிபத்தியக் கட்டமைப்பு அலங்கோலமாகிக் கிடந்தது. இரண்டாம் உலகப் போரை வெற்றிகரமாக்கியது தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட குணமே எனும் பேருண்மை வெட்ட வெளிச்சமாகி இருந்தது.
முதலாளித்துவ நாடுகளின் சீர்கெட்ட பொருளாதாரம், ஆதிக்க வீழ்ச்சி, முதலாளித்துவத்தின் உருக்குலைந்த நிலை ஆகியவற்றை சரி செய்து கொள்ள வேண்டிய தேவை முதலாளியத்திற்கு இருந்தது. மேலும் வளர்ந்து வருகின்ற சோசலிய ஆதிக்கமும் இந்த அச்சத்தை அதிகரித்தது. வேலைவாய்ப்பு அதிகரித்தது. இது ஒரு கட்டத்தில் 4 சதவீதமாகக் குறைந்தது. இதனால் தேவை அதிகரித்திருந்தது, முதலீடும் அதிகரித்திருந்தது. வளர்ச்சிவீதமும் அதிகரித்ததால் 1950, 60களில் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக ஏற்பட்டது. இப்படியான ஒரு வளர்ச்சியை முதலாளியம் அதன் வரலாற்றில் கண்டதில்லை. வேலையின்மை என்பது குறைந்ததால் தொழிலாளர்களின் பேரம் பேசும் வலிமை அதிகரித்திருந்ததால் கூலி உயர்வு ஏற்பட்டிருந்தது. இப்படியான ஒரு வளர்ச்சி நிலையில் இருந்த முதலாளியம் 1970களில் ஏற்பட்ட நெருக்கடியில் மேலும் ஒரு சிக்கலுக்கு உள்ளாகியது.
1970களில் பொருட்களின் விலையில் ஏற்பட்ட சரிவு, வேலைவாய்ப்பின்மையின் அதிகரிப்பு ஆகியவை இந்த வீழ்ச்சிக்குக் காரணமாயின. இந்த நெருக்கடி இன்றளவும் முதலாளியத்தை ஆட்டிப் படைக்கிறது. 1970க்குப் பிறகு சந்தைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது, தனியார்மயம் வர்த்தகத்தையும், அரசியலையும், ஊடகத்தையும், கல்வியையும் இதர துறைகளையும் ஆட்கொண்டன. அதாவது கெய்னீசிய கொள்கையாளர்களை விரட்டிவிட்டு முழுக்கட்டுப்பாடற்ற வர்த்தக சந்தை பொருளாதாரத்திற்குள் முதலாளியம் ஆடம் ஸ்மித் வகையறா கோட்பட்டிற்குள் நகர்ந்தது. இந்த சகாப்தத்தை இவர்கள் நவீன தாராளவாதம் (neo liberalism) என்றார்கள்.
1970க்குப் பின்னர் மனித உழைப்பைக் குறைக்கும் வகையிலான தொழிற்நுட்ப முன்னேற்றங்களில் முதலாளியம் ஈடுபட்டது, கூலியை மட்டுப்படுத்தியது. இச்சமயத்தில் கொண்டு வரப்பட்ட கம்யூட்டர் வகையிலான வேலைத் திட்டங்கள் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைக்கும் உலை வைத்தன. குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள் என்பதால் முதலாளிகள் தங்களது தொழிற்சாலைகளை வேறு நாடுகளுக்கு நகர்த்தினார்கள். இதனால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது. ஒருபுறம் வேலைவாய்ப்பின்மை, மறுபுறம் குறைந்த கூலி எனும் நிலை உழைக்கும் மக்களுக்கு உருவானது. மேலும் இந்தக் காலகட்டத்தில் தொழிலாளி என்பவன் தொழிலாளியாக மட்டுமல்லாமல் அவன் ஒரு நுகர்வாளனாக மாற்றம் செய்யப்பட்டான். முதலாளிகள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை நுகரும் நபராக கட்டமைக்கப்பட்டான். பொருட்களை வாங்கும் திறன் கொண்ட ’நியாயமான கூலி’களுக்குப் பதிலாக கடன்கள் வழங்கப்பட்டன. ஊதியங்கள் சமூகத்தின் வாங்கும் திறனுக்கு ஏற்ப உயர்த்தப்படாமல் நிறுத்தப்பட்டது. மேலும் லாபம் கொழிப்பும் துறைகளில் முதலீடுகள் செய்யப்பட்டன. இதனால் பெரும் லாபத்தை முதலாளிகள் அனுபவித்தார்கள். ஒரு பக்கம் உபரிப் பெருக்கம் ஏற்பட்டு முதலாளிகளின் மூலதனம்/ செல்வம் பெருகியது; மறுபுறம் தொழிலாளர்களின் ஊதியம் வீழ்ந்தது. இப்படியான ஒரு நிலையை இவர்கள் ‘புதிய பொருளாதாரம்’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
சந்தையின் கட்டற்ற தன்மையினால் விலைகுறைவு என்பதெல்லாம் பொய்க்கனவாகிப் போய், நிச்சயமற்ற பொருளாதாரத்தன்மையும், ஊசலாட்டமும் ஏற்பட்டன. இந்நிலையில் ஏற்பட்ட சோவியத்தின் வீழ்ச்சி முதலாளியம் நிலைபெற்ற கோட்பாடாக வெற்றி பெற்றதாக முதலாளிய சிந்தனையாளர்கள் கொண்டாடினார்கள். தொழிற்சங்கங்களின் செல்வாக்குகள் முடக்கப்பட்டன. அரசியல், பொருளாதரம், பண்பாடு ஆகியவை வலதுசாரி திசை நோக்கி திருப்பிவிடப்பட்டன. இப்படியான சூழல் நீண்டு 2000ஆம் ஆண்டின் துவக்கத்தில் பங்கு சந்தை வீழ்ச்சியும், ரியல் எஸ்டெட் துறையின் சரிவு, பணப்புழக்கம் இல்லாத நிலை மற்றும் பொருளாதார பின்னடைவு (recession) என தொடர்ந்து சமமற்ற ஊசலாட்டமான நிலைக்கு முதலாளியம் சென்றது. அதாவது ’ஸ்மித்’ வகையறா பொருளாதாரவாதிகளின் ஆதிக்கத்தால் ஒருபுறம் மூலதனம் குவிந்தாலும் மறுபுறத்தில் வறுமையும், திண்டாட்டமும் அதிகரித்ததானது பொருளாதார சமமற்ற நிலையை வளர்த்தெடுத்தன. குடும்பங்கள் தங்களது தேவைகளுக்காக கடுமையாக உழைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. குறைவான கூலி அல்லது மெய்யான கூலி உயர்வையும் அதை பேரம் பேசி பெற்றுக் கொள்ளும் தொழிற்சங்க அமைப்புகளின் செல்வாக்கு குறைந்த பின்னர் முழுமையான நிதிபாரத்தை குடும்பத்தின் பிற உறுப்பினர்களும் சுமக்கும் படியான நிலை ஏற்பட்டு மூச்சுமுட்ட உழைக்க வேண்டியதாயிற்று.
ஆக இவர்களது அதிக உழைப்பு (அதிகரித்திருந்த உற்பத்தித் திறனும்) குறைந்த கூலியும் முதலாளிகள் பெரும் லாபத்தையும், உபரியையும் ஈட்டும் நிலையை கொடுத்தன. இப்படியான சக்கையாக பிழியப்பட்ட உழைப்பாளர்களின் உழைப்பினால் ’மூலதனக் குவிப்பு’ மறுபுறம் வலிமையானதாக எதேச்சதிகாரப் போக்குடன் வளர்ந்து வந்தது. கடந்த நூற்றாண்டில் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த நிதி மூலதனக் குவிப்பு என்பது மிக வேகமாகவும், அசுரத்தனமாகவும் வளர்ந்து அரசாங்கங்களை நிர்வகிக்கிற, கட்டுப்படுத்துகிற தனிப்பெரும் ஆற்றலாக வளர்ந்து நின்றது. அதே நேரத்தில் பல்வேறு கடன், வீட்டுத் தேவைகள், கல்விக்கான கடன், மருத்துவ தேவைகளுக்கான செலவுகள், மருந்து செலவுகள், உணவு- உடைக்கான செலவுகள் என்று பணத்தின் தேவை அதிகரித்தது மட்டுமல்ல, சொந்தமாக வீடு வாங்குவதனால் ஏற்பட்ட கடனும் மக்களைப் பிழிந்தெடுத்தது.
1975 ஆம் ஆண்டு அளவில் 734 பில்லியன் டாலராக இருந்த வீட்டுக் கடன் தொகை என்பது முப்பது வருடங்களில் அதாவது 2006 ஆம் ஆண்டிற்குள் 12.81 ட்ரில்லியனாக உயர்ந்திருந்தது. கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகரித்தது எனலாம். இப்படியான நிலையில் உழைப்பாளிகளின் குடும்பங்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டன. கல்வி விலை மதிக்க இயலாததாகி இருந்தது. மருத்துவம் எதிர்கொள்ள முடியாத செலவீனமாகியது. குடும்பங்கள் சிதைவுற்றன. உலகிலேயே அதிக மனநோயாளிகளைக் கொண்ட நாடாக அமெரிக்கா மாறியது.
நிதி மூலதனம் தன்னை அசுர வளர்ச்சியிலேயே வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற பேராசை 2008இன் முதலாளிய நெருக்கடிக்கு வழிகோலியது என்பது மிகையல்ல. மேலே சொன்னபடியாக உழைப்பாளர்களை சுரண்டிக் கொழுத்த மூலதனச் செல்வமானதை மீண்டும் பல மடங்கு பெருக்குவதற்கு, அதாவது சுருக்கு வழியில் ஈட்டுவதற்காக ஊக வணிகம் முன்வைக்கப்பட்டது. அதாவது கடன் வாங்கி வீடு வாங்கும் நிலையை ஊக்குவித்தது. இது ஏழை நடுத்தர குடும்பத்தினரை நோக்கி முன்வைக்கப்பட்டது. அதிக வட்டி விகிதங்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டது. இந்தக் கடன்களே ‘சப்-ப்ரைம் ’ கடன்கள் எனப்பட்டன. கடன்களை வாங்கி இம்மக்கள் வீடு வாங்கினார்கள். உண்மையான உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லாத மக்களால் இந்த அதிகப்பட்சக் கடனை திருப்பிச் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. மேலதிகமாக உழைக்கவோ, கடன் வாங்கவோ இயலாத நிலையில் திருப்பிக் கடனை கட்ட இயலாத நிலைக்கு சென்ற இம்மக்கள் கையை விரித்தனர். இவ்வாறு அசுர லாபத்தை ஈட்டும் நோக்கில் முதலாளியம் ஈடுபட்டு ஒரு பெரும் சரிவை 2008இல் சந்தித்தார்கள். பெரும் வங்கிகள், மூலதன நிறுவனங்கள், கார்ப்பரேட் ஜாம்பவான்கள் கடும் நெருக்கடியில் வீழ்ந்து திவாலாகிப் போனார்கள். 1929க்குப் பின்பான மிகப் பெரும் வீழ்ச்சியை முதலாளித்துவம் சந்தித்தது.
இந்த மீள முடியாத நெருக்கடியில் வீழ்ந்த ’கட்டற்ற நியோ லிபரல்’ முதலாலியத்தை மீட்டெடுக்க ஒபாமாவின் தலைமையிலான அமெரிக்க அரசு முன்வந்து மக்களின் பணத்தைக் கொண்டு இந்நிறுவனங்களை மீட்டது. இவ்வாறு பெரும் நிறுவனங்கள் திவாலாகிப் போய்விட, அதை நிர்வகிக்கும் முதலாளிகள், உயர் நிர்வாகிகள் எவ்வித நட்டமுமின்றி வீட்டிற்குச் சென்றுவிட, இந்நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள் எவ்வித இழப்பீடுமின்றி நிலைகுலைந்து போய் அரசினால் கைவிடப்படுகிறார்கள். இவ்வாறான ஏற்ற இறக்கத்துடனேயே முதலாளிய அமைப்பு தனது முரண்களை வளர்த்துக் கொண்டிருக்கிறது.
1929-30இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி நிலையின் பொழுதும், 2008இல் ஏற்பட்ட வீழ்ச்சியின் பொழுதும் கெய்னீசிய கோட்பாட்டின் படி அரசானது முதலாளித்துவத்தின் உறுதித்தன்மைக்கு துணை செய்யும் ஆற்றலாகியது. காரல் மார்க்ஸ் சொன்னதைப் போன்று அரசு என்பது முதலாளித்துவக் கட்டுமானத்தின் மிக முக்கியமான அங்கமான ஒன்று என்பது தொடர்ந்து நிரூபணமானது. முதலாளிய சரிவுகளினால் பாதிக்கப்படும் மக்கள் மீது தனது கரிசனத்தை செலுத்தாமல், முதலாளிய நட்டங்களை இம்மக்கள் மீது திருப்பி விடுவதும், இம்முதலாளிய நிறுவனங்களை, கட்டமைப்புகளைப் பாதுகாக்க அரசு கைகொடுப்பதுமான நிலையையே இதுநாள் வரை முதலாளிய சனநாயகமானது நியாயப்படுத்தி வந்திருக்கிறது. இந்த அரசுகள் முதலாளியத்தின் முரண்களை அல்லது சுரண்டலை மாற்றி அமைக்கும் ஆற்றல் கொண்டவையாக இல்லாமல் அதைப் பாதுகாக்கும் நிறுவனங்களாகவே செயல்பட்டன. நட்டங்கள், வரிகள், கடன்கள் மக்கள் மீதும், லாபங்கள், உபரிகள், மூலதனக் குவிப்புகள் முதலாளிய ஆற்றல்களிடத்திலும் கொண்டு சேர்க்கப்பட்டன. இப்படியாக தொடர் தோல்விகளையே முதலாளியம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
கொரொனோவும், முதலாளியமும்
2008இன் நெருக்கடியிலிருந்து முழுமையாக மீள இயலாத நிலையில் முதலாளியம் கொரொனோவினால் உருவாகி இருக்கும் புதுவிதமான நெருக்கடியை சந்தித்திருக்கிறது. ஏற்கனவே பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்டிருக்கும் முதலாளியம் இந்தப் புதிய நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது, இதன் கூட்டாளியான அரசு எவ்வாறு கை கொடுக்கப் போகிறது என்பதை கவனித்தல் வேண்டும்.
அடுத்து வரும் கட்டுரைகளில் முதலாளியம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை விரிவாகப் பார்க்கலாம். இதுவரை முதலாளியம் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளின் அடிப்படைக் காரணிகளாக சந்தையின் வாங்கும் திறனோ, சந்தையின் ‘தேவை (Demand)’ காரணிகளாகவோ இருந்திருக்கின்றன. உற்பத்தி மற்றும் உற்பத்தியான பொருளை கொண்டு சேர்த்தல் ஆகியவை நெருக்கடிக்குள்ளாகவில்லை. ஆனால் இம்முறை இவை நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றன. இதைப் போல பிரதானக் காரணியாக கவனிக்கத் தக்கவையாக இருப்பது உலக அளவில் பெருகி இருக்கின்ற கடன் சுமை. இந்த நெருக்கடிகளைக் கடந்து ஒவ்வொரு தேசமும் வர்த்தகம் என்பதைக் கடந்து உள்நாட்டு சந்தை நெருக்கடிகளையும் சேர்த்து எதிர்கொள்ளும் நிலை இருக்கிறது. பலவீனமான அரசுகள், தேங்கிப் போய் நிற்கும் பொருளாதார வளர்ச்சி, சந்தைகளில் வாங்கும் திறனற்று இருக்கும் மக்கள், மலைபோல வளர்ந்து நிற்கும் உலகக்கடன் என சூழ்ந்திருக்கும் சூழலில் கொரோனா மூலம் ஏற்பட்ட நெருக்கடிகள் முதலாளியத்தை எவ்விடத்திற்கு கொண்டு சேர்க்கும் என்பதை விவாதிக்கும் காலம் இது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஒரு நிருபர், “நோய்க்கான அறிகுறியே இல்லாதவர்கள் பரிசோதனையை மேற்கொள்ள இயலும் பொழுது, (தேவைப்படுவோர்) பரிசோதனையை எளிதாக செய்ய இயலாமல் வரிசையில் இருக்க நேர்கிறதே, (வசதியான-வாய்ப்புள்ள) உயர்மட்ட தொடர்புடையவர்களால் அவ்வரிசைகளில் முன்னால் செல்ல முடிகிறதே எப்படி?” என்கிறார். இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “இது நடக்கவில்லை எனச் சொல்ல மாட்டேன். ஆனால் வாழ்க்கையின் கதை இப்படியாகத்தான் இருக்கிறது” என்கிறார். நெருக்கடிகளிலும் இதுவே முதலாளியத்தின் அப்பட்டமான முகம்.
2008இல், 1929இல் நடந்த நெருக்கடிகளில் முதலாளியத்தைக் காப்பாற்றிய அரசுத் தலையீடுகள் போதுமானதாக இருக்க இயலுமா அல்லது 1346இல் நடந்ததைப் போன்ற அடிப்படை மாற்றத்தினை உருவாக்கக்கூடிய வழிமுறைகளை இப்பிரச்சனை திறந்து விடுமா என்பதைக் கவனிக்க வேண்டும்.
கட்டற்ற சந்தையும், கட்டுப்பாடற்ற வணிகத்தையும் மூலதனத்தையும் ஈட்டுவதற்கு தனியார்மயம், உலகமயம், தாராளமயம் எனும் பொருளாதார வழிமுறை வழியாக உலகைச் சுரண்டிய இந்த முதலாளியமே இந்த நெருக்கடியின் அடிப்படைக் காரணியாக இருக்கிறது. இந்த கொள்கைகள் காரணமாக மக்கள் சார்ந்த மருத்துவ- போக்குவரத்து – இதர கட்டமைப்புகள் தனியாரின் லாபவெறிக்காக பலியிடப்பட்டதால் மேற்குலக நாடுகளில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சுற்றுப்புறச் சூழலை சிதைத்து, உணவுச் சங்கிலியை தொழிற்மயமாக்கி, மருத்துவத்தை தனியார் மயமாக்கி, மக்கள் சார்ந்த கட்டமைப்புகளை வேட்டையாடிய முதலாளியம் மக்களை கொரோனா தொற்று எனும் நெருக்கடிக்குத் தள்ளி இருக்கிறது.
இந்த நெருக்கடி யாருக்கான மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதையும் கவனிக்க வேண்டும். 1970களில் முதலாளியம் நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு தொழிற்நுட்பங்களைக் கொண்டு வந்து தொழிலாளிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. தற்பொழுதும் கூட ‘ஆட்டோமேசன்’ எனும் தொழிலாளர்களே இல்லாத உற்பத்திக் கட்டமைப்புகளை அது மேலும் முன்னகர்த்தலாம். ஆனால் முதலாளியம் எதிர்முனையில் உருவாக்குகின்ற வறுமையும், வேலையின்மை நிலையும் இதே வாய்ப்புகளை முதலாளியத்திற்கு அனுமதிக்குமா என்பதும் கவனத்தில் எடுக்க வேண்டிய காரணிகள்.
கிழக்கு ஆசிய நாடுகளான தென்கொரியா, வியட்நாம், கம்போடியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் சிறப்பான முறையில் இந்நோய்த் தொற்றை கட்டுப்படுத்தின. அதே நேரத்தில் வளர்ந்த பொருளாதாரங்களான ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்றவை கையாள முடியாமல் திணறியதை உலகம் காண்கிறது. கிழக்கு ஆசிய நாடுகள் தொடர்ந்து இது போன்ற தொற்று நோய்களைக் கையாண்ட அனுபவம் கொண்டவையாக இருப்பதும், மேற்குலகம் இது போன்ற நோய்த்தொற்றை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இல்லாமல் இருப்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால், இந்த நேரத்தில் வேறொரு கேள்வியும் நமக்கு எழுகிறது.
பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் இருக்கும் நாடுகள் இந்த நெருக்கடியைக் கையாளாமல் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கின. இதில் உள்ளார்ந்த ஒரு முதலாளித்துவ நோக்கமும் இருக்கலாம் என நவோமிக்ளீன் போன்றவர்கள் முன்வைக்கும் ‘அதிர்ச்சி அரசியல்’ யுக்தியில், முதலாளியம் தன்னுடைய தோல்வியை மறைக்க இந்த கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி தன்னைப் பாதுகாக்க அரசின் உதவிகளை எதிர்கொள்ளும் என்கிறார். ஆனால் இவை அனைத்திலும் நம் கண்முன்னே தெரிவது, முதலாளியம் மீண்டுமொரு கடுமையான நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது. இந்நெருக்கடியிலிருந்து மீளுமா அல்லது மாற்று பொருளாதார வழிமுறைகளை உலகம் முன்வைக்குமா என்பதை வரலாறு எழுதும். அந்த வரலாற்றுக் கடமை முற்போக்கு செயல்பாட்டாளர்களுக்கானது. முதலாளித்துவ வரலாற்றுக்கு முடிவுரையை எழுதும் வாய்ப்பை உலகம் மீண்டும் பெற்றிருக்கிறது.