மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்காமநல்லூரில், 1920 -ம் ஆண்டு ஏப்ரல் 3ம் நாள் ஆங்கிலேயரின் அடக்குமுறை சட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் கிளர்ந்து எழுந்தனர். வெள்ளையர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றதால், சுட்டுக் கொல்லப்பட்ட மாயக்காள் உட்பட 17 பேரின் வீரஞ்செறிந்த வரலாற்றைக் கூறும் புத்தகமே ‘பெருங்காமநல்லூர் படுகொலையின் 100 ஆண்டுகள்- ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு’ என்னும் இப்புத்தகம். இப்படுகொலை நடந்து 100 வருடம் கடந்ததை நினைவு கூறும் விதமாக, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். பிரவீன் குமார் அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையை புத்தகமாக ‘நிமிர் பதிப்பகம்’ வெளியிட்டது.
வரலாறு என்பது கடந்த கால வரலாற்றை எண்ணி கண்ணீர் விடுவதோ, நிகழ்ந்தவற்றைச் சொல்லிப் பெருமை பேசுவதோ இல்லை, அந்த தியாகமும், வீரமும் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட வேண்டும் என்பதை முன்னுரையாகக் கொண்டே அறிமுகமாகிறது இப்புத்தகம். பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை குற்றவாளி என வகைப்படுத்திய காலனிய ஆட்சி, அம்மக்களை கண்காணிக்க உருவாக்கியதே குற்றப் பரம்பரைச் சட்டமாகும்.
1824 -ல் இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகளில் கொண்டு வரப்பட்ட ‘லாக்ரன்சி சிஸ்டம்’ என்கிற சட்டத்தின் பிரதிபலிப்பாக குற்றப்பரம்பரை சட்டம் இருக்கிறது. உணவுப் பஞ்சத்திற்கு எதிராக, மக்கள் வீதிக்கு வந்து போராடிய போது அவர்களை அடக்க இக்கொடூர சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. போராடியவர்களை குற்றவாளிகள் என முத்திரை குத்தியும், அவர்களின் உடல் அமைப்பைக் கொண்டு குற்ற நோக்கம் கொண்டவர்கள் எனவும் இச்சட்டம் அடையாளப்படுத்தியது. அந்த அடக்குமுறைச் சட்டமே இங்கும் குற்றப்பரம்பரைச் சட்டமாகி இருப்பதன் பின்னணியை இந்நூல் விவரிக்கிறது.
பிரிட்டிசுக்காரர்கள் இங்கிருந்த பேரரசுகளையும், சிற்றரசுகளையும் வீழ்த்திவிட்டு உள் நுழைந்த போது, இங்கு வாழ்ந்த மக்களையும் வெள்ளையர்கள் ஒடுக்கினர். அரசுகளுக்கு கீழும் கட்டுப்படாமல் தன்னாட்சியுடன் நிர்வாகம் நடத்தி வாழ்ந்த சில குழுக்கள் வெள்ளையர்களை மூர்க்கமாக எதிர்த்து நின்றனர். அவர்கள் அடக்குமுறைக்கு ஆட்படுத்தப்பட்ட போதும், பிரிட்டிசாரின் நிர்வாகச் சட்டங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் அவர்களை அடிபணிய வைக்க கடுமையான சட்டங்களை நிறைவேற்றினர். அதில் ஒன்றே குற்றப்பரம்பரைச் சட்டமாகும். மழைவாழ் மக்கள், சில நாடோடி குழுக்கள், குறிப்பிட்ட சில சாதியினர் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.
ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டல் பொருளாதாரக் கொள்கையினால் சில குழுக்கள் காட்டுப் பகுதிக்கு சென்று வாழ்ந்தனர். அதில் சிலர், வறுமையின் காரணமாக திருட்டுத் தொழிலிலும் ஈடுபட்டனர். ஆனால் அதைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக ஒட்டுமொத்த குழுக்களையும் குற்றப் பரம்பரையாக அறிவித்து வெள்ளையர்கள் சித்திரவதை செய்தனர். இவ்வாறு குற்றப் பரம்பரைச் சட்டம் வந்ததன் மூலக் காரணத்தை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
பிரிட்டிஷார் குற்றப்பரம்பரையாக அறிவித்த குழுக்கள் பற்றிய சில குறிப்புகள்:
1835-50-ம் ஆண்டு வரை வங்காளத்தில் தக்கி இன மக்களை குற்ற பரம்பரையாக அறிவித்து துன்புறுத்தல்கள் தொடர்ந்தது. நாடு கடத்தப்பட்டனர். தூக்கிலிடப்பட்டனர்.
1861-ல் காவல் துறை சட்டத்தை உருவாக்கினர். இதனால் பாரம்பரியமாக காவல் பொறுப்புகளில் இருந்த கள்ளர், மறவர், வலையர் சமூகத்தவர்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டது. அவர்களின் காவல் மானிய நிலங்கள் பறிக்கப்பட்டது. காவல் கூலி நிறுத்தப்பட்டது. இதனால் போராட்டம் நடத்திய அவர்களையும் குற்றப்பரம்பரையினராக பிரிட்டிசார் அடையாளப்படுத்தினர்.
ஆங்கிலேயர்கள் சந்தை வணிகத்தை உருவாக்கினர். இதனால் பண்டமாற்று முறை நடத்தி வந்த நாடோடி வணிகர்கள் பாதிக்கப்பட்டனர். சந்தை வணிகர்களுக்கும் இவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. பாரம்பரிய வணிகர்கள் சந்தை வணிகர்களின் கடைகளை உடைத்து அவற்றை கைப்பற்ற ஆரம்பித்தனர். இதனால் அவர்களையும் குற்றப்பரம்பரையினராக அறிவித்தனர்.
பஞ்சாரக்காரர்கள், குறவர்கள், லம்பாடிகள் போன்ற இனக்குழுக்கள் கால்நடைகளின் மூலமாக உப்பு முதலான தானியங்களை விற்பனை செய்ததை முடக்கியது. ஆங்கிலேய அரசு, உப்பு விற்பனையை தன் வசப்படுத்திக் கொண்டது. இதனால் வறுமைக்கு ஆளாக்கப்பட்ட சிலர் ரயிலில் கொண்டு செல்லும் பொருட்களை திருட ஆரம்பித்தனர். அவர்களும் குற்றப் பரம்பரையினர் ஆக்கப்பட்டனர்.
1880-ல் வனப்பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தனர். இதனால் வனத்தை நம்பி வாழ்ந்தவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வாழ்வாதாரத்திற்காக சில பொருட்களை எடுத்துச் சென்ற மலைவாழ் மக்களும் குற்றப் பரம்பரை ஆக்கப்பட்டனர்.
இவ்வாறு மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிய வெள்ளையர்களால், தங்கள் வறுமைக்காக சிலர் செய்த குற்றங்களைக் கொண்டு அச்சமூக மக்களையே இச்சட்டத்தின் கீழ் பிரிட்டிசு அரசு கொண்டு வந்தது. சென்னை மாகாணத்தில் மட்டும் 14 லட்சம் மக்கள் இதில் கொண்டுவரப்பட்டனர். மொத்தமுள்ள 213 சாதிகளில் தமிழ்நாட்டில் 89 சாதியினர் குற்றப்பரம்பரையாக்கப்பட்டனர். இச்சட்டம் 1911-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி சென்னை மாகாணத்தில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட பழங்குடியினர் பட்டியல் விரிவாக இப்புத்தகத்தில் குறிப்பிடப்படுகிறது.
ஒரு சாதியில் பிறந்ததனால் அனைவரும் குற்றவாளிகள் என்னும் கொடுமை நிகழ்ந்தது. எந்த சாதிப் பிரிவினரைக் குற்றவாளியாக அறிவிக்க மாவட்ட ஆட்சியாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இச்சட்டத்தின் படி, தங்கள் பெயர், முகவரி, கைரேகைகளை 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். இரவு காவல் நிலையத்தில்தான் உறங்க வேண்டும். வேறு எங்கேயும் செல்ல வேண்டுமென்றால் அதிகாரிகளிடம் ராதாரிச் சீட்டு, அனுமதிச் சீட்டு போன்றவை வாங்க வேண்டும் போன்ற அடக்குமுறைகளால் மக்கள் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டனர். இதை மீறுபவர்களுக்கு 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஒவ்வொரு பகுதி தோறும் கைரேகை சட்டம் பதிவு செய்யும் பணி துவங்கியது. மதுரை திருமங்கலம் தாலுகாவில் துவங்கி காளப்பட்டி, போத்தம்பட்டி,பெருங்காமநல்லூர், தும்மக்குண்டு, குமரன் பட்டி போன்ற ஊர்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டன. பெருங்காமநல்லூரில் பதிவு செய்ய வந்த போது அம்மக்கள் கடுமையாக எதிர்த்தனர். குற்றவாளி அப்பாவி என பேதம் இல்லாமல் அனைவரையும் இந்தச் சட்டத்தின் கீழ் கட்டுப்பட முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தனர். நாட்கள் நகர்ந்தது. காவல் துறையினர் முகாமிடுவதும், கள்ளர் சமுதாய மக்கள் எதிர்ப்பதும் தொடர்ந்தது. இறுதியில் மதுரை உரிமையியல் நீதிபதி 1920, ஏப்ரல் 2, 3 தேதிகளில் கைரேகைப் பதிவு செய்ய ஆணையர் முன் ஆஜராக வேண்டும் என ஆணையிட்டார். ஆயுதங்கள் கொண்டு அடிபணிய வைக்க நினைக்கும் வெள்ளையரை எதிர்த்து உயிரை விட மானம் பெரிதென நிற்போம் என முடிவெடுத்ததற்கிணங்க, அம்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களைத் தடுக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
பிரிட்டிசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் 17 பேர் உயிரிழந்தனர். மக்களுக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த மாயக்காள் என்னும் பெண்மணியை தடுத்து, அவரை துப்பாக்கி கத்தி முனையில் காவலர்கள் குத்திக் கொன்றனர்.துப்பாக்கி சூட்டினால் சிதறியோடிய மக்களில் 200 பேரை காலில் சங்கிலி கட்டி ரிமாண்ட் செய்தனர். இவர்களுக்காக வாதாடி விடுதலையை வாங்கிக் கொடுத்தவரே வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப். மலையாளியான அவரை மக்கள் ‘ரோசாப்பூ துரை’ என அன்பாக அழைக்குமளவுக்கு அம்மக்களுக்கான சட்டப் போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டார்.
1920-ம் ஆண்டு ஏப்ரல் – 3 அன்று பெருங்காமநல்லூரில் நடந்த இந்த வீரஞ்செறிந்த போராட்டமும், 17 பேர் படுகொலையும் நூற்றாண்டைக் கடந்து விட்டது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இப்படுகொலை ஆண்டு தோறும் பெருங்காமநல்லூர் படுகொலையாக அனுசரிக்கப்படுகிறது என இப்புத்தகம் விரிவாகப் பேசுகிறது.
இறுதியில், குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்க்கத் தோன்றிய மக்கள் இயக்கங்கள், முத்துராமலிங்கத் தேவர், தோழர். ஜீவா, தோழர். ராமமூர்த்தி, தோழர். ஜானகி அம்மாள் உள்ளிட்ட தலைவர்களின் போராட்டங்கள், அவர்களின் பிரச்சாரங்கள், மாநாடுகள் குறித்தும், இச்சட்டத்தை எதிர்த்த அம்பேத்கர், பெரியார், வரதராஜுலு நாயுடு ஆகியோரின் எதிர்ப்பு பேச்சுகள் போன்றவற்றை இந்நூல் கூறுகிறது. பிரிட்டிசார் படிப்படியாக இந்திய மக்களுக்கு அதிகாரம் அளிக்க முன்வந்ததைப் பற்றியும், இச்சட்டத்தை நீக்க நீதிக்கட்சியின் பங்களிப்புகள் மற்றும் கள்ளர் சமூக மேம்பாட்டிற்காக அக்கட்சி எடுத்த முன்னெடுப்புகள் என அனைத்தையும் விலாவாரியாக விவரிக்கிறார் இந்நூல் ஆசிரியர் பிரவீன் குமார் அவர்கள்.
ஏகாபத்தியத்திற்கு எதிராகத் துணிந்து நின்ற மக்களின் வீரஞ்செறிந்த வரலாற்றினை நினைவு கூறும் விதமாக, ஏப்ரல் 5, அன்று பெருங்காமநல்லூர் ஈகியர்களுக்கு 105 ஆம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் கூட்டத்தை மே 17 இயக்கம் மதுரை கருமாத்தூரில் ஏற்பாடு செய்துள்ளது. அடுத்த தலைமுறையும் குடியானவர்களின் இப்போராட்ட வரலாறு அறிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தில் முன்னெடுக்கும் இப்பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மே 17 இயக்கம் அழைப்பு விடுக்கிறது.