
அண்மையில் பிபிசி ஊடகத்தின் ‘ஹார்ட் டாக்’ (Hard talk) நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் நேர்காணல் ஒளிபரப்பானது. இந்த நேர்காணலில் மோடி அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு வளைந்து கொடுப்பதில் தொடங்கி சமூக செயற்பாட்டாளர்களை பாஜக அரசு ஒடுக்குவது வரை பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. மேலும் ஊடகங்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் பலரிடமும் எழும் கேள்விகளான ‘உயர்சாதி (பார்ப்பன) ஆண்கள் மட்டுமே அதிகம் நீதிபதிகளாக நியமிக்கப்படுவது, 370வது பிரிவு நீக்கம், ராமர் கோவில் தீர்ப்பு போன்றவற்றைக் குறித்தும் விவாதிக்கப்பட்டது. (காணொளி பிபிசியின் யூடுப் சேனலில் இருக்கிறது.)
குறிப்பாக சமூக ஆர்வலர்களின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படுவது குறித்து சந்திரசூட் அளித்த பதிலிற்கு பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அண்மையில் ‘ஆர்டிகிள்-14’ இணையதளம் இது குறித்து விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் சமூக ஆர்வலர் உமர் காலித்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மேற்கோள் காட்டி இருக்கிறது ‘ஆர்டிகிள்-14’. இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
(ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவரான உமர் காலித் சனநாயக மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தவர். சிஏஏ குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டங்களுக்காக செப்டம்பர் 2020 ஆண்டில் உமர் காலித் கைது செய்யப்பட்டார். இவர் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் காலித்திற்கு விசாரணை நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுத்துள்ளன. பிப்ரவரி 2024இல் உச்சநீதிமன்றத்தில் இருந்து தனது ஜாமீன் மனுவை திரும்பப் பெற்ற உமர் காலித்தின் மேல்முறையீடு மனு தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ளது.)
உமர் காலித்திற்கு உச்சநீதிமன்றம் எவ்வாறு ஜாமீனை மறுத்தது என்று விளக்கியும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டும் வகையில் பேசிய சந்திரசூட்டின் பதிலை விமர்சித்தும் ‘ஆர்டிகிள்-14’ ஊடகம் வெளியிட்ட கட்டுரையின் தமிழாக்கம் பின்வருமாறு:
சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் குறித்து முன்னாள் தலைமை நீதிபதியின் அவதூறான கருத்துக்கள்:
அண்மையில் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அளித்த பேட்டியில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் உமர் காலித்தின் ஜாமீன் மனு குறித்து குறிப்பிட்டார்.
சந்திரசூட் தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் சமூக ஆர்வலர்களுக்கு அநீதியான, கோழைத்தனமான முறையில் ஜாமீன் மறுக்கப்பட்டது. குறிப்பாக, முறையாக விசாரிக்கப்படாத வழக்கிற்காக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதியாக காலித் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கான ஜாமீன்வழக்கு தன்னிச்சையாகவும் முரண்பாடுகளோடும் நடைபெற்றது.
(பிபிசி நேர்காணலில்) முன்னாள் தலைமை நீதிபதி, “உமர் காலித் வழக்கில் பலரால் மறக்கப்பட்ட ஒரு விடயத்தை நான் சொல்ல வேண்டும். வழக்கு குறைந்தது ஏழு முறை ஒத்திவைக்கப்பட்டது, உமர் காலித் சார்பில் ஆஜரான வழக்கறிஞரால் ஜாமீன் மனு திரும்பப் பெறப்பட்டது. இதற்கு என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்.

மேலும் “ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் இது குறித்து செய்தி வெளியிடப்படுகிறது. நீதிபதிகள் தங்களை நியாப்படுத்த எந்த வழியுமில்லை. நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை நுணுக்கமாகப் பார்த்தால் யதார்த்தம் வேறு வகையில் இருப்பது புலப்படும்” என்றும் சந்திரசூட் கூறி இருக்கிறார்.
உண்மையில், உமர் காலித்தின் வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்க கோரியதற்கும் முன்னாள் தலைமை நீதிபதி கூறிய விளக்கத்திற்கும் சிறிதும் தொடர்பில்லை. நீதிமன்ற விதிகளின்படி, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை பெஞ்சில் (நீதிமன்ற அமர்வில்) உள்ள மூத்த நீதிபதி முன் பட்டியலிட வேண்டும். ஆனால் உமர் காலித் வழக்கை நீதிபதி பெலா திரிவேதிக்கு ஒதுக்கப்படுவதற்கு முன் இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை.
குஜராத் உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்ற முதல் பெண் நீதிபதி பெலா திரிவேதி, 2001 முதல் 2014 வரை நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரின் அரசாங்கத்தில் சட்ட செயலாளராக பணியாற்றியவர். மக்கள் உரிமையும் தனிநபர் சுதந்திரமும் நிலைநிறுத்த வேண்டிய வழக்குகளில் திரிவேதியின் செயல்பாடுகள் ஐயப்பாடுடன் இருந்ததாலேயே உமர் காலித் வழக்கு ஏன் திரிவேதிக்கு ஒதுக்கப்பட்டது என்று வக்கீல்கள் கேள்வி எழுப்பினர்.

அக்டோபர் 2022இல், நீதிபதி பெலா திரிவேதியும் நீதிபதி எம்.ஆர்.ஷாவும் அடங்கிய பெஞ்ச் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவின் ஜாமீனை நிராகரித்தது. (2014 மே மாதம் மாவோயிஸ்ட் தொடர்பு இருப்பதாகக் கூறி யுஏபிஏ வழக்கில் கைது செய்யப்பட்டார் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் சாய்பாபா. சக்கர நாற்காலி மூலமே இயங்கும் நிலையில் இருந்த பேராசிரியர் சாய்பாபா கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்) மார்ச் 2024இல் மற்றொரு நீதிபதிகள் அமர்வு “அரசாங்கத்திற்கு எதிராக அவர் செயல்பட்டதற்கான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” என்று கூறி அவரை விடுவித்தது. ஆனால் விடுவிக்கப்பட்ட ஏழு மாதங்களுக்குள் உடல்நலக் குறைவினால் பேராசிரியர் இயற்கை எய்தினார்.
அண்மையில் கூட திரிவேதி தலைமையிலான பெஞ்ச் பீகார் மணல் சுரங்க வழக்கில் ஜாமீன் மனுவை நிராகரித்தது. அமலாக்க இயக்குநரகம் தொடரும் பணமோசடி வழக்குகளுக்கும் பயங்கரவாத குற்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்குகிறது எனும் கருத்திற்கு முற்றிலும் முரணாகவே இத்தகைய செயல்பாடுகள் இருக்கின்றன.
உமர் காலித்துக்கு நியாயமான விசாரணை கிடைக்காது என்ற நிலை இருந்தது. அவர் வழக்கிற்குப் பொருந்தும் எந்த சட்ட வழிமுறையையும் பின்பற்ற அவருக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் நீதித்துறையில் அதிகாரம் மிக்கவராக, தலைமை நீதிபதி பொறுப்பில் இருக்கும் ஒருவர், பணி ஓய்வுக்குப் பிந்தைய நேர்காணல்களை வழங்கும்போது இவ்வாறு ஜாமீன் மனுதாரரை வம்புக்கு இழுப்பது சரியானதாகத் தெரியவில்லை.
உமர் காலித் விசாரணை நீதிமன்றத்தில் முயற்சிப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் இருந்த தனது ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு, பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஹனி பாபு, திரிவேதி தலைமையிலான அமர்விலிருந்து தனது மனுவை திரும்பப் பெற்றார்.
நேர்காணலில் முன்னாள் தலைமை நீதிபதி அவர்கள் உமர் காலித் எவ்வாறு தன் வழக்கை ஒத்திவைக்க கோரினார் என்பதை கூறியுள்ளார், ஆனால் அரசுத் தரப்பும் ஒத்திவைக்கக் கோரியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நீதிபதி அமர்வில் இருந்து மற்றொரு நீதிபதி அமர்வுக்கு உமர் காலித்தின் ஜாமீன் மனு மாறியபோது, நேரமின்மையைக் காரணமாகக் கூறி நீதிபதிகள் வழக்கை பல முறை ஒத்திவைத்தனர்.
12 ஜூலை 2023 அன்றுஉமர் காலித்தின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரித்தபோது, நீதிபதி ஏ.எஸ் போபண்ணா மற்றும் நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் ஆகியோர் வழக்கு விசாரணை குறித்து “ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களே ஆகும்” என்று கூறிய நிலையில் அரசு தரப்பு பதில் தாக்கல் செய்ய அதிக நேரம் கேட்டது.

13 அக்டோபர் 2023 அன்று, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “காலித்துக்கு எதிராக காவல்துறையிடம் ஆதாரங்கள் இல்லை என்பதை நிரூபிக்க 20 நிமிடங்கள் மட்டுமே தேவை” என்று கூறியபோது, நீதிபதிகள் பெலா திரிவேதி மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் நேரமில்லை என்று கூறி, விசாரணையை நவம்பர் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
யுஏபிஏ வழக்கை எதிர்த்து முறையிட்டபோதுதான் உமர் காலித்தின் ஜாமீன் வழக்கு மிகவும் சிக்கலாக மாறியது. பிற யுஏபிஏ வழக்குகளுடன் உமரின் வழக்கு இணைக்கப்பட்டு திரிவேதி தலைமையிலான அமர்வுக்கு அனுப்பப்பட்டது.
வழக்கு விசாரணை தாமதமாவதை விட அதை ஒத்திவைப்பதை முக்கியமாகக் கூறி சந்திரசூட் பேசியிருப்பது பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது. ஏனெனில் ஒரு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியின் வார்த்தைகளை பலர் கவனிப்பார்கள். அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு இந்த (ஜாமீன் விசாரணை) செயல்முறையே தண்டனையாக மாறுவதும், அரசியல் காரணிகளுக்காக நீதித்துறை எவ்வாறு அடிபணிகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.
ஷர்ஜீல் இமாமின் ஜாமீன் மனு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அரசியலமைப்பு அனுமதிக்கும் வகையிலேயே அவர் பேசியிருந்தாலும், அவ்வாறு பேசியதற்காகவே பல வழக்குகளில் கைது செய்யப்பட்டார். இப்போது ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கின்றார்.

இசுலாமிய ஆர்வலரான காலித் சைஃபி மற்றும் இசுலாமிய பெண் ஆர்வலரான குல்பிஷா பாத்திமா ஆகியோர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளனர். இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரின் வழக்குகள் குறித்து ஊடகங்களில் அரிதாகவே செய்தி வருகிறது. சில சுயாதீன ஊடகங்கள் மட்டுமே இவர்களின் ஜாமீன் மனுக்கள் குறித்த செய்திகளை வெளியிடுகின்றன.
உமர் காலித்தின் வழக்கு விசாரணையில் நீதி அமைப்பின் செயல்முறையில் நடந்த பல விதிமீறல்களைப் பார்க்கும்போது, ‘சமூக ஊடகங்களில் காலித்தின் வழக்கு செய்தியாக்கப்பட்ட விதம்’ குறித்து அவர் (சந்திரசூட்) கூறியதும், “நீதிபதிகள் தங்களை நியாப்படுத்த எந்த வழியுமில்லை” என்ற முன்னாள் தலைமை நீதிபதியின் புகாரும் பண்பாடற்ற புகாராகத் தெரிகிறது.
நீதி அமைப்பின் தோல்வியால் பலபேரின் வாழ்க்கை தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கும்போது, அவர் நியாப்படுத்த நினைப்பது மிகக் குறைவாகவே இருக்கிறது என நிர்வாக ஆசிரியர் பெட்வா சர்மா, ஆர்டிகிள் 14-ல் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு மக்களுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களுக்கு மோடி அரசு அரசியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கொடுக்கும் சிக்கல்களை ஆர்டிகிள்-14 இணையதளத்தின் கட்டுரை உணர்த்துகிறது. இன்றும் பீமா கோரேகோன் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் பலர் விசாரணைக் கைதிகளாக அலைக்கழிக்கப்படுகின்றனர்.

பாசிசத்தை எதிர்க்கும் போராளிகள் பலர் தங்கள் வாழ்வின் பெரும்பான்மை நேரத்தை நீதிமன்றங்களில் செலவிடுகின்றனர். மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மீது 2018இல் யுஏபிஏ வழக்கு உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன. ஆனால் ‘பாசிச எதிர்ப்பு’ எனும் ஒற்றை நோக்கத்துடன் வழக்கு விசாரணைகளின் ஊடாக சமூகப்பணி ஆற்றுவதை இவர்கள் தொடர்கிறார்கள்.