
தமிழர் வரலாற்றில் பயனற்ற காலகட்டம் என்று ஒன்று உள்ளதென்றால் அது பக்தி இயக்க காலம் தான். கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் சமூகத்தை, அதன் மனித வளத்தை, சுரண்டல் நிலையிலும் பகைமை உணர்விலும் வைத்திருந்தது பக்தி இயக்கம். மத(சமய) உணர்வை மொழியுணர்வின் மூலம் வளர்க்கும் லாவகமான வேலைத்திட்டமாக தான் அதை மதிப்பிட முடியும். தமிழர்களின் மரபு சார்ந்த அறிவும் சிந்தனையும், மொழியுணர்வும் மடைமாற்றம் செய்யப்பட்டு விழலுக்கு (பயனற்ற நிலத்துக்கு) இறைத்த நீர் போல பக்தி இயக்க காலம் மாற்றியது. தமிழ்நாட்டின் அன்றைய சங்கிகள், இன்று மாற்ற துடிக்கும் ஆன்மீக பூமியாகவும், மதத்தில் ஊறி தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்ளும் சமூகமாகவும் தமிழ்நாட்டை மாற்றி வைத்திருந்த காலகட்டம் தான் பக்தி இயக்க காலம்.
கடந்த காலங்களில் தமிழர்கள் தழுவி ஏற்று கடைப்பிடித்து வந்த சமயங்களான சமண மற்றும் பெளத்த சமயம் பார்ப்பனர்களுக்கு எதிராக இருந்தது. அவை வேள்வியில் கால்நடைகளை உயிர் பலியிடும் பார்ப்பன வழக்கங்களுக்கு எதிராகவே புலால் மறுப்பை முன்வைத்தது என்கின்றனர் ஆய்வறிஞர்கள்.
சுரண்டல் தத்துவத்தையே வாழ்வியல் தத்துவமாக கொண்ட பார்ப்பனிய சமூகம் தமக்கு சாதகமான சமூக அமைப்பை உருவாக்கிக் கொள்வதிலும், அதற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதிலும் கைதேர்ந்தது என்பதையே வரலாறு நமக்கு சுட்டி காட்டுகிறது.
தமிழ் சமூகம் சைவ மற்றும் வைணவ சமய நெறிகளை ஏற்று கொள்ள சமண மற்றும் பௌத்த எதிர்ப்பு மனநிலை உருவாக்கப்பட்டது. பேரரசுகளின் எழுச்சியோடு தன்னை இணைத்துக் கொண்டு இந்த மதங்கள் நிறுவனம் மயப்படுத்தப்பட்டன. இதன் மூலமே சமய சண்டையிட்டு தமிழ் சமூகம் தமக்குள்ளே சமயத்தின் பெயரால் கொலை செய்து கொள்வதை ’சிவ தொண்டு/சைவத் தொண்டு’ என்கிற வகையில் நியாயமான ஒன்றாக தமிழ் சமூகம் பார்த்து வந்தது. இதற்கான பெரும் கருவியாக தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதே நாம் மிக நுணுக்கமாக கவனம் கொள்ள வேண்டிய செய்தி. அரசு – மதம் – மொழி என்று தமிழ் சமூகத்தில் இவை நடைபெற்ற போது, குளிர் காய்ந்து பலன் அனுபவித்தது பார்ப்பனியமே!.

ஒருபக்கம் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மொழி, அரச ஆதரவுடன் ‘தெய்வீக பாஷை’ என்று தமிழை ஆதிக்கம் செய்தது போலவே ஆக்கிரமிப்பும் செய்து வந்தது. ஆனால் பார்ப்பனிய மதம் மக்கள் ஆதரவு பெறவில்லை. பின்னர் அது தமிழ் நாட்டில் சைவ சமயத்தை கைக்கொண்டு அதை அரச மதமாக்கி, அதிகாரத்தின் அருகில் இருந்து கொண்டு சமண மற்றும் பௌத்த ஒழிப்பு/ நீக்கம் செய்யும் வேலைகளை செய்து வந்தது. இதில் தமிழ் சாதிய சமூகத்தை ஈடுபடுத்தும் முயற்சியில் இயல்பாக இடைநிலை சாதிகள் அந்த இடத்தை அடைந்தனர். காரணம் காலந்தோறும் பார்ப்பனியம் தனது சமூக நிலையை தக்க வைக்க கண்டுபிடிக்கும் புது உத்திகள் தான்!
புலால் உணவு உண்ணும் பழக்கம் கொண்ட பார்ப்பனர்கள் சமணமும், பெளத்தமும் முன் வைத்த புலால் மறுப்பை தங்களுடையதாக அடையாளப்படுத்தத் தொடங்கினர். இது தங்கள் தனித்தன்மை மூலம் சமூக ஆதிக்க நிலையை தக்கவைத்துக்கொள்ளவதற்கான வழியாக அவர்கள் பார்த்தனர். இந்த தனித்தன்மை சமூகத்தில் கொடுக்கும் உயர்வு நிலையை நோக்கி இடைநிலை சாதிகள் இயல்பாக வந்து சேர்ந்தன.
பார்ப்பனர்கள் நடத்திய சமய சடண்டையில் ஊக்கம் பெற்ற இடைநிலை சாதிகளே பெருமளவில் பக்தி இயக்க நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். தெய்வீக பிரச்சாரங்கள் மூலம் தமிழர் நிலம் பெருந் தெய்வ வழிபாடு நிலமாகவும், ஆத்திக நிலமாகவும் கிட்டத்தட்ட முழுமையாக மாற தொடங்கியது.
பார்ப்பனியத்திற்கு, இந்த நிகழ்வுகளில் பெரிதும் எதிர்பாராமல், விரும்பாமல் நடைபெற்ற ஒன்று இருந்தது என்றால் அது தமிழ் மொழியில் பக்தி இயக்க இலக்கியங்கள் உருவானவை தான்!.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டை சார்ந்த பார்ப்பனரான ’திருஞான சம்பந்தர்’ பக்தி இயக்க காலத்தில் தமிழ் மொழியை கொண்டாடினார் என கருதி அவர் சமூகம்(ஆதி சங்கரர்) அவரை ’திராவிட சிசு’ என்று கூறி சாதிய விலக்கு செய்ததை பண்பாட்டு ஆய்வாளர் ஐயா தொ.பரமசிவன் அவர்கள் குறிப்பிடுவார்.
இதே போல வைணவ சமயம் தமிழ் சமூகத்தை சற்று நெகிழ்வு தன்மையோடு தழுவிக் கொண்டு அதுவும் அதே காலகட்டத்தில் தமிழ் சிவில் சமூகத்தை சண்டையில் ஈடுபடுத்தியது. இதற்கும் தமிழ் மொழி ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னர் இது சைவ மற்றும் வைணவ சமய சண்டைகளாக மாறி மக்களை துண்டாடியதைப் போல, அறிவு தளத்தில் சித்தாந்தங்களாக தங்களுக்குள்ளேயே மோதல் போக்கை கொண்டன.
இதில் நம் மொழி நமக்கு காலம் காலமாக கடத்தி வந்த வேத எதிர்ப்பு உணர்வு, வாழ்வியல் நெறிகள் மங்கி, சித்தாந்த மரபும் வேத மயக்கம் கொண்டு, பக்தியின் பெயரால் ஒரு முழுமையான சுரண்டல் சமூகத்தை தமிழ் சமூகம் ஏற்றுக் கொண்டது. இதனால் தமிழ் மொழி கடவுளாகவும், மதத்தில் கலந்த ஒன்றாகவும் 19 நூற்றாண்டு வரை தமிழ் சமூகத்தில் இருந்தது.
”வரலாற்றில் எந்த சமூகமும் எப்போதும் தன்னை சரிசெய்து கொள்ளும் வாய்ப்பை அந்த சமூகத்தின் இயங்கியல் கொடுக்கும். அப்படி ஆத்திக இயக்கத்தை வீழ்த்த நாத்திக இயக்கம் தமிழ் மண்ணில் தோன்றியது. அதுவே சுயமரியாதை இயக்கமாகும், திராவிடர் இயக்கமாகவும் மாறியது”.

தந்தை பெரியார் “உன் மொழியில் என்ன அறிவியல் இருக்கு? என்றும், பக்தி இயக்க இலக்கிய விரயம் மற்றும் புராண ஆபாசங்களை கண்டித்து தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் தமிழர் சமூகத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். தமிழ் சமூகத்தின் நோயை ஆய்வு செய்யும் ஒரு மருத்துவரை போல மொழி மதம் மையப் படுத்தப்பட்டுள்ளதை கண்டறிந்து அதை நீக்கும் பணியையும் துவங்கினார்.
கம்பராமாயணம், மகாபாரதம் போன்றவற்றின் தரத்தை கேள்வி கேட்டு தமிழ் சமூகத்தில் அவைகளை அம்பலப்படுத்தும் வேலையை ‘குடியரசு’ மூலம் செய்தார். இதற்கு அப்போது மறைமலையடிகள், திரு வி.க போன்ற தமிழ் அறிஞர்கள் ஆதரவு பெரியாருக்கு கிடைத்தது. பின்னர் பெரியார் இவர்கள் தமிழ் அறிஞர்களாக இதை செய்யவில்லை, சைவர்களாக இதை செய்வதை புரிந்து கொண்டு பெரிய புராணம் போன்ற சைவ இலக்கியங்களை அம்பலப்படுத்தினார். தமிழ் அறிஞர்கள் பெரியாரிடம் முரண்பாடு கொண்டது இதனால் தான். பெரியார் தமிழ் மொழியை மதத்தில் இருந்து விடுவிக்க செய்த பணியை அன்று தமிழ் அறிஞர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போனதற்கு அவர்கள் தமிழ் மொழி மதத்தில் சிக்கியிருப்பதை அறியாமல் இருந்ததே காரணம். அல்லது அவர்கள் மொழியுணர்வு பெற்றது மத இலக்கியங்கள் மூலமே என்றும் சொல்லலாம்.
இந்த நடவடிக்கைகளில் பக்தி இயக்க இலக்கியங்களுக்கு மாற்று இலக்கிய மரபை தமிழ்நாடு கண்டு கொள்ள தொடர் விமர்சனங்களை எல்லா இலக்கியங்கள் மீதும் வைக்கிறார். அப்படித்தான் பக்தி இலக்கியத்திற்கு மாற்றாக சங்க இலக்கியம் என்கிற தமிழ் வரலாற்று தொடர்ச்சியை தமிழ் சமூகம் கண்டடைந்தது. அதில் திருக்குறள் தான் சற்று ஏற்றுகொள்ளும் வகையில் உள்ளது என்று அதற்கு மாநாடு நடத்தி தமிழர்கள் திருக்குறளை கொண்டாட தூண்டினார் பெரியார். பின்னர் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் சங்க இலக்கியத்தை, அதில் உள்ள தமிழர் வாழ்வியலை தமிழ் சிவில் சமூகத்தின் நினைவில் மீட்டுருவாக்கம் செய்கிறார்.

பெரியாரை சந்தித்த பின்னர் அவர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் தான் பாரதிதாசனை மாற்றியது. ’பக்தி அந்தாதி’ பாடல்கள் எழுதிவந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தன் வேர் எது என்பதை அறிந்து திகைத்து விழித்துக் கொண்டார். ஆம் தமிழ் சமூகமும் தான்!. அதேபோல் மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார், மயிலை சீனி வேங்கடசாமி போன்றவர்கள் சங்க இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் போக்கு உருவானது.
ஆம், பக்தி இயக்க காலம் துண்டித்து வைத்திருந்த சங்க இலக்கிய கால நினைவுகளை தமிழ் சிவில் சமூகம் தினந்தோறும் தொட்டு பார்க்க தொடங்கியது. பாரதிதாசன் மூலம் வேத எதிர்ப்பு கவிஞர் மரபாக, தமிழ் உணர்வு நிலையில் சங்ககால வாழ்வியலை மீண்டும் தொடர்பு கொள்ளும் தமிழ் உணர்வு கரு கொண்டது. இந்திய நிலப்பரப்பில் இந்திய தேசிய உணர்வு திணிக்கப்பட்ட நிலையில், தமிழ் நாட்டில் பாரதி மூலம் அது அறிமுகமான போதும், இயல்பான தமிழ் தேசிய உணர்வு விதைக்கபட்டே வந்தது.
திராவிடர் இயக்கம், தனித் தமிழ் இயக்கம் மற்றும் அன்றைய திமுகவினர் என மேடை தோறும் சங்க இலக்கிய நினைவுகள் மூலம் ஒரு புது தமிழ் உணர்வு ஊட்டப்பட்டது. மதத்தில் இருந்து மொழி பிரிந்து, தமிழர்களின் உன்னதமான வாழ்வியல் நினைவுகளோடான மொழியுணர்வு உருப்பெற்றது. மத மற்ற, வெறுப்பற்ற , இயற்கையை நேசித்த, காதலை போற்றிய நினைவின் அதிர்வுகள் உன்னத ஆதி தமிழ் உணர்வாக, ஒரு தீயைப் போல தமிழர்களைப் பிடித்து கொண்டது. இதுவே இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்களை ஈடுபடுத்தியது. திராவிட நாடு திராவிடருக்கே என்றும், தமிழ் நாடு தமிழருக்கே என்று முழக்கமிட வைத்தது. மொழி ஆதிக்கத்தை இன்றளவும் நாம் உறுதியோடு எதிர்க்க 20ஆம் நூற்றாண்டில் பெரியார் தமிழை மதத்திலிருந்து பிரிக்கத் துணிந்ததே காரணம். தமிழ் மொழி சார்ந்த சிவில் சமூகம் உணர்வு கொண்ட இந்த காலகட்டமே உலகில் தேசிய இன உணர்வு உருவாகி வளர்ந்த காலக்கட்டம். தனக்கு மொழி அபிமானமோ, தேசாபிமானமோ இல்லை என்று சொன்ன பெரியார் தமிழ் மண்ணில் விதைத்ததெல்லாம் தமிழ் தேசிய உணர்வைத் தவிர வேறென்ன?!.

வரலாற்றை தரவுகள் அடிப்படையிலான வரலாறாக மட்டுமே கற்க முடியாது, வரலாறு பண்பாட்டு பார்வையில் இருந்து, எதிர் மரபுகளின் வழியிலிருந்து, எளிய மக்களின் வாழ்க்கையில் இருந்து பார்க்கப்பட வேண்டும். மே பதினேழு இயக்கம் தன் இடது சாரி தமிழ் தேசியத்தை இந்த தளங்களில் தான் முன்வைத்தது செயலாற்றி வருகிறது. இத்தகைய பார்வையில் தமிழ்நாட்டின் இளைஞர்கள் பயிற்சி பெறும் போதுதான் மதச்சார்பற்ற, முற்போக்கு தமிழ் தேசியம் வளர முடியும். அத்தகைய தமிழ் தேசியத்தை கற்க, சென்னை சைதாப்பேட்டையில் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெறும் தமிழ் தேசிய பெருவிழா ஒரு வரலாற்று வாய்ப்பு!.
வாருங்கள் கற்போம்-தமிழர் வாழ்வியலை, வரலாறை, பண்பாட்டை; உருவாக்குவோம் இடது சாரி தமிழ் தேசியத்தை!.