கல்வெட்டுகளையும் களவாட நினைக்கும் ஆரிய திரிபுவாதங்கள்

அண்மையில் சென்னை டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் சிந்து சமவெளி நாகரிகம் குறித்து உரையாற்றிய ஆளுநர் ரவி, வழக்கம்போல் வேதங்கள் மூலம் நாகரிகம் பெற்ற ஞானம் என்றெல்லாம் கூறி, சிந்து சமவெளி நாகரிகத்தை ‘சிந்து சரஸ்வதி நாகரிகம்’ என்று கூற வேண்டும் என்று கூறினார். இதனால் சரஸ்வதி எனும் பெயரில் இந்திய வரைபடத்தில் எந்த ஆறுமே இல்லாதபோது ஏன் இத்தகைய ஆரிய புரட்டுகள் பரப்பப்படுகின்றன என்பதை தமிழ்ச்சமூகம் சிந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

திராவிடத்தின் தொன்மையை மறைக்கும் நோக்கில் இதற்கு முன்னரும் தொல்லியல்துறையிலும் கல்வெட்டுகள் சார்ந்தும் பல புரட்டுகளை ஆரிய வலதுசாரி ஆய்வாளர்கள் பரப்பி இருக்கின்றனர். இதில் முக்கியமாக காளையை குதிரையாக மாற்றி, சிந்து சமவெளியை ஆரிய பண்பாட்டோடு இணைக்கும் முயற்சியைக் குறிப்பிடலாம். (கடந்த ஆண்டு தமிழ்த்தேசிய பெருவிழாவில் இது குறித்து கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம் அவர்கள் விளக்கமாக உரையாற்றி இருந்தார்.)

1902 முதல் 1928 வரை இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் இயக்குனராக இருந்த ஜான் மார்ஷல், தனது ‘மொகஞ்சதாரோ மற்றும் சிந்து நாகரிகம்’ என்ற புத்தகத்தில், சிந்து சமவெளி முத்திரைகளில் கண்டுபிடிக்கப்பட்ட காளையைக் குறித்து எழுதி இருந்தார். கிமு 3300 மற்றும் 1300 க்கு இடையில் இந்தியாவில் செழித்தோங்கிய சிந்து சமவெளி நாகரிகத்தின் போது விவசாயம் மற்றும் வணிகத்தில் முக்கிய பங்காற்றிய கால்நடைகளின் குறியீடாக இந்த காளை உருவம் இருக்கக்கூடும் என்கின்றனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். முதுகில் திமிலும் கழுத்தில் தொங்கும் தோல் மடிப்பும் உள்ள இந்த காளைகளே வலதுசாரி ஆய்வாளர்களால் குதிரையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2000ஆம் ஆண்டில் நட்வர் ஜா, என். எஸ். ராஜாராம் ஆகியோர் ஹரப்பா நாகரிகத்தை வேத நாகரிகம் என்று காட்டுவதற்காக அவர்கள் எழுதிய நூலில் குதிரையின் உருவத்தைப் புனைந்தனர். இந்த வரலாற்றுத் திரிபை கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம் அவர்கள் அறிஞர் அவையத்தில் விளக்கிக் கூறி, அதற்கான மறுப்பையும் ஆதாரங்களோடு விளக்கினார்.

“சிந்து சமவெளி நாகரிகத்தில் காளையை குதிரையாக மாற்றி, அந்த குதிரையை வைத்து ரிக்வேதத்திற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் போட்ட ஒரு முடிச்சுதான் வரலாற்று திரிபுவாதம். இந்தத் திரிபுவாதத்தை அம்பலப்படுத்தியவர்கள் மைக்கேல் விட்சல் மற்றும் ஸ்டீவ் பார்மர்” என்றும் அவர் கூறினார்.

மைக்கேல் விட்ச்சல் மற்றும் ஸ்டீவ் பார்மர் என்கின்ற இரண்டு உலகப் புகழ்பெற்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எழுதிய அந்த கட்டுரை (Horse play in Harappa) ‘பிரண்ட் லைன்’ இதழிலே வெளியாகி இருந்தது. இதில் வரலாற்று ஆய்வாளர்கள் என்ற பெயரில் எவ்வாறு இந்துத்துவவாதிகள் காளையை குதிரையாக மாற்றினர் என்பது விளக்கப்பட்டிருக்கிறது.

(https://safarmer.com/frontline/horseplay.pdf)

இவ்வாறு சிந்து சமவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகத்துடன் இணைக்கும் வேலையை விட்ச்சல் மற்றும் பார்மர் முறியடித்திருக்கின்றனர். இன்றும் பேராசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அறிஞர்கள் சிந்து சமவெளி நாகரிகம் ஒரு ஆரிய நாகரிகம் அல்ல என்றும், சிந்து சமவெளி மக்களின் மொழி சமஸ்கிருத அல்ல என்றும் உறுதிபட கூறுகின்றனர்.  ஆனால் இன்னும் வரலாற்று திரிபுவாதங்களை நிறுத்தாமல் இந்துத்துவாதிகள் நம் பண்பாட்டை ஆக்கிரமிக்கும் வேலையை செய்து கொண்டுதானிருக்கிறார்கள். கல்வெட்டுகளாக, ஓலைச்சுவடிகளாக, செப்புப்பட்டையமாக, ஆவணங்களாக பதியப்பட்ட நம் நீண்டநெடிய வரலாறை அதிகார வர்க்கத்தின் மூலம் மாற்றியமைக்க இந்துத்துவவாதிகள் முயலுகின்றனர்.

இதுவரை வட இந்திய புராணங்களும் இதிகாசங்களும் மக்களின் தொல்லியல் எச்ச பண்பாட்டினை எந்த ஒரு இடத்திலும் குறிப்பிட்டதில்லை. கிட்டத்தட்ட 13 லட்சம் சதுர கிலோமீட்டர் சிந்து சமவெளி நாகரிக நகரங்களை பற்றியும் அம்மக்களின் வாழ்வியல் பற்றியும் எந்த குறிப்புகளும் இதிகாச புராணங்களில் இல்லை. எனவேதான் காளையைக் குதிரையாக மாற்றி இந்த பண்பாட்டை சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள் ஆரிய இந்துத்துவவாதிகள்.

மிகவும் நாகரீகமான பண்பாட்டைக் கொண்ட தமிழர்களின் நாகரீகத்தை அரைப்பழங்குடி இனங்கள் என்று குறிப்பிட்டு வந்த இந்திய தொல்லியல் துறைக்கு சரியான பதிலடியாக கீழடியில் கிடைத்த கட்டிடங்களும் செங்கல் சுவர்களும் இருந்தன.

எனவேதான் கீழடி சர்வதேச அளவில் கவனம் பெற்றபோது, அதை தடுக்கும் நோக்கில், ஒன்றிய அரசு தொல்லியல் அறிஞர் ராமகிருஷ்ணன் அவர்களை வேறு மாநிலத்திற்கு மாற்றியது. அதோடு மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை தாமதம் செய்தது. (இதற்காக பல தமிழறிஞர்களும் அமைப்புகளும் போராட்டங்களை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.)

அறிவியலின் வளர்ச்சியால் தொல்லியல்துறையில் பல முக்கிய பங்களிப்புகள் நிகழ்ந்துள்ளன. தொழில்நுட்பத்தை நுட்பமாகக் கையாளும் வேளையில் இத்தகைய ஆரிய புரட்டுகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். நமது வரலாறு மழுங்கடிக்கப்படும் நோக்கில்தான், சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டறிந்த நூற்றாண்டில் இப்போது ‘சரஸ்வதி ஆறு’ எனும் வடநாட்டு கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்சின் முகமாக அறியப்படும் ஆளுநர் ஒருவரிடமிருந்து இத்தகைய பண்பாட்டு புரட்டுகள் எழுவதை நாம் எதிர்க்காமல் கடந்து விட முடியாது. அறிவியல்பூர்வமாக எந்த புவியியல் சான்றும் இல்லாத ஒரு ஆற்றின் பெயரை கல்லூரி விழாக்களில் முன்மொழியும் ஒருவரிடமிருந்து மாணவர்களையும் இளைஞர்களையும் காக்க வேண்டும். இத்தகைய ஆரிய புரட்டுகளை அம்பலப்படுத்தும் நோக்கிலேயே இந்த ஆண்டு தமிழ்த்தேசிய பெருவிழாவில் ஒரு தனி அமர்வு நடக்க இருக்கிறது. தமிழ்மொழி தழைக்க, தமிழ்நாடு செழிக்க, தமிழர் தலைநிமிர தமிழர்களின் வாழ்வும், வரலாறும் குறித்து அறிய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மே 17 இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தமிழ்த்தேசியப் பெருவிழா, 2025, மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில், சென்னை சைதைப்பேட்டையில் நடைபெறயுள்ளது. இந்த மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வாருங்கள் என உரிமையுடனும், அன்புடனும் அழைக்கிறது மே 17 இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »