
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியான யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் பல கோடிக்கணக்கான 500 ரூபாய் நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் காணொளி வெளியாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, அவர் வழங்கிய தீர்ப்புகள் குறித்த சந்தேகங்களும் எழுந்துள்ளது. இந்த சம்பவம் நீதித்துறையில் அரசின் தலையீடு, ஊழலின் வெளிப்பாடு, நீதிபதிகளின் நியமனத்தில் உயர்சாதி ஆதிக்கம், போன்ற பல விவாதங்களை எழுப்பியுள்ளது.
கடந்த மார்ச் 14, 2025 அன்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டிலுள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு அதிகாரிகள் தீயை அணைத்தனர். அப்போது ஒரு அறையில் மூட்டை மூட்டையாக எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக இருந்த பணத்தைக் கண்டெடுத்தனர். இதுகுறித்து மார்ச் 15 அன்று தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயாவிடம் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர், இதனை உடனடியாக இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் தெரிவித்தார் நீதிபதி உபாத்யாயா. பிறகு இச்செய்தி ஊடகங்களில் மார்ச் 20 அன்று பகிரங்கமாக வெளியே வந்தது.
இதுகுறித்து நீதிபதி வர்மா எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் வெளியூருக்கு சென்றிருந்து நீதிபதி வர்மா குடும்பத்தினர் நீதிபதி வர்மா வருவதற்கு முன்பே அந்த எரிந்தப் பணம் மற்றும் குப்பைகளை அடுத்த நாளிலே அதிகாரிகள் அப்புறப்படுத்தி விட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது எனவும், தங்கள் ஊழியர்கள் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதிகாரிகள் எரிந்த நோட்டுக்களை கைப்பற்றாமல் அப்புறப்படுத்தியிருக்கின்றனர். சாலையில் துப்புரவு செய்த பணியாளர் எரிந்த 500 ரூபாய் நோட்டுகளைக் கண்ட பின்னரே, அவற்றின் புகைப்படங்களை எடுத்து, மூத்த அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார், அவர்கள் காவல்துறையைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கமளித்துள்ளனர். இந்த செய்தியும் ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில் தான் அந்த காணொளி மார்ச் 22 அன்று உச்ச நீதிமன்றத்தால் பகிரப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதி வர்மா அலகாபாத்திற்கு பணியிட மாற்றம் செய்ய ‘கொலீஜியம்’ மார்ச் 24 அன்று உத்தரவிட்டது. ஆனால் ஊழலில் ஈடுபட்டதற்கு எதிராகவும், வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்தும், எதிர்ப்பு தெரிவித்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தது. மேலும் அப்போராட்டத்தில், அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு குப்பைத் தொட்டியா என்பது போன்ற கடுமையான கேள்வியை எழுப்பினர். நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பணியிட மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்தனர்.
நீதிபதி வர்மாவிற்கு எவ்வித நீதித்துறைப் பணியை தற்போதைக்கு ஒதுக்க வேண்டாம் என அலகாபாத் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளது உச்சநீதிமன்றம். மேலும் இவ்வழக்கை விசாரிக்க மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்து, அதன் விசாரணையையும் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அரசியலமைப்பின் பிரிவு 222(1)இன் கீழ் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை இடமாற்றம் செய்ய குடியரசு தலைவர் முடிவு செய்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவரது அலுவலகத்தை பொறுப்பேற்க உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் 13, 2014 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக வர்மா நியமிக்கப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அக்டோபர் 11, 2021 அன்று, அவர் தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றார். தில்லியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருகும் ஒன்றிய அரசு, அலகாபாத் நீதிபதியாக இருந்த வர்மாவை, தில்லி உயர்நீதி மன்றத்திற்கு நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த கேள்வியும் எழுகிறது.
நீதிபதி வர்மா வழக்கிற்காக மூவர் குழுவின் விசாரணை அறிக்கை தொடர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், நீதிபதிகளின் நியமனம், சமூகப் பின்னணி குறித்தும், கொலீஜியத்தின் செயல்பாடு குறித்தும் பல விவாதங்கள் எழுந்துள்ளன.
நீதிபதிகளின் நியமனங்களில் பாஜக அரசின் தலையிடுகிறது என்பது நீதித்துறை வட்டாரங்களில் பரவலாக பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. இதனை நிரூபிக்கும் வகையில், மோடி அரசு 2015-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட்டம்(NJAC) கொண்டு வந்தது. இது நீதித்துறை அல்லாத உறுப்பினர்கள் மற்றும் சட்ட அமைச்சர்கள் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் நோக்கம் கொண்டது. இது நீதித்துறை சுயாட்சியை மேலும் அரித்து, நீதிபதிகளின் நியமனம் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும் ஆபத்துடையது. இந்த சட்டம் உச்ச நீதிமன்றத்தால் பின்னர் ரத்து செய்யப்பட்டது. அந்த NJAC சட்டத்தை மீண்டும் கொண்டு வரும் வாய்ப்பாக இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொள்ள மோடி அரசு ஆய்ந்து வருவதாக செய்திகள் வெளிப்படுகின்றன.

நீதிபதிகள் சமூகப் பின்னணி குறித்தும் நீண்ட நாட்களாக அரசியல், சமூக மட்டத்தில் விவாதங்கள் உள்ளன. நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதில் சமூக நீதி பின்பற்றப்படுவதில்லை. அரசியலமைப்புச சட்டம் உருவாகி 75 ஆண்டுகளான பின்பும் இட ஒதுக்கீடு பின்பற்றாத துறையாக நீதித்துறை இருக்கிறது. மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளாமல், உயர்சாதியினரின் ஆதிக்கம் நிறைந்த பதவியாக நீதிபதிகள் பதவி இருக்கிறது. தமிழ்நாட்டில் சமூகநீதி பின்பற்றப்படுவதால் ஒவ்வொரு சமூகத்திலும் பரவலான நீதிபதிகள் கீழமை நீதிமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
நீதிபதிகள் சமூகப் பின்னணி குறித்தான மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜீன்ராம் மேக்வால் 2018 முதல் உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட 715 நீதிபதிகளில் 551 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் (உயர்சாதியினர்) என்றும், 715 நீதிபதிகளில் 22 பேர் பட்டியல் சாதி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 16 பேர் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள் என்றும், 89 பேர் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், ஆக 77.06% பேர் உயர்சாதி வகுப்பை சேர்ந்தவர்கள் என கூறினார். உயர்சாதியினரின் வளையமாக இருக்கும் நீதித்துறையில் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என திமுக எம்.பி வில்சன் அவர்கள் தனி நபர் மசோதாவைக் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

’கொலீஜியம்’ என்பது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த நீதிபதிகள் இணைந்து நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் வழிமுறை. உயர்சாதியினர் ஆதிக்கத்தினால் இந்த கொலீஜியம் முறையிலும் தேவைப்பட்டவர்களை பரிந்துரைப்பதும், தேர்ந்தெடுப்பதும் நீடிக்கிறது. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நான்கு பார்ப்பன நீதிகளையே பரிந்துரை செய்துள்ளனர். ஏற்கெனவே 12 நீதிபதிகள் பார்ப்பனர்களே. சமூக நீதி பின்பற்றக்கூடிய தமிழ்நாட்டிலேயே இந்த நிலை என்றால், வட மாநிலங்களில் முழுமையாக உயர்சாதி பார்ப்பனர்களே நீதிபதிகளாக்கப்படும் நிலையே நீடிக்கிறது. நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடும், வெளிப்படைத் தன்மையும் பின்பற்றினால் ஒழிய, இந்நிலை மாறாது என்பதையே பாபர் மசூதி இடிப்புக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிலிருந்து பல தீர்ப்புகள் சான்றாக உள்ளன. தற்போது இந்த நீதிபதி வர்மா வழக்கில் நீதித்துறை மீதான நம்பிக்கையை நிலைநாட்ட, தங்கள் சொத்து விவரங்களை பொது தளத்தில் வெளியிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்துள்ளது.
நீதித்துறை என்பது சுதந்திரமான அமைப்பு என்றே கூறப்படுகிறது. சாமானியனுக்கு நீதி கிடைக்கும் கடைசிப் புகலிடமாக நீதிமன்றமே இருக்கிறது. அங்கும் அரசின் தலையீடு சார்பாக தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதியாக இருந்தால் அரசு செய்யும் குற்றங்களை தட்டி கேட்பவர்களின் குரலுக்கு நீதி கிடைக்காது. இதனால்தான் நீதிபதிகளை தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கும் நீதிபதி நியமன சட்ட மசோதாவை இயற்றியது. அமலாக்கத்துறை தேசிய புலனாய்வுத் துறை போன்று நீதித்துறையையும் அரசின் முடிவுக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளும் ஏற்பாடுகளை செய்கிறார்கள்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தவர்கள், பதவிக்காலம் முடிந்த பின்பு, பாஜக தந்த பதவிகளைப் பெற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினரானார். நீதிபதி சதாசிவம் கேரள கவர்னர் ஆனார். மத்தியப் பிரதேசத்தின் உயர்நீதிமன்ற நீதிபதி ரோகித் ஆர்யா, பிஜேபி மாநிலக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆனார். கல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த அபிஜித் பாஜகவில் இணைந்து வேட்பாளராகவே நின்று வென்றார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சையத் அப்துல் நசீர் ஆந்திர கவர்னர் ஆனார்.
அரசியலமைப்பு சட்டப்படி இல்லாமல் இறைவனின் ஆணையால் தீர்ப்பு சொல்வதாக பாபர் மசூதி இடித்து ராமர் கோயிலை கட்டுவதற்காக நியாயம் கற்பித்தார் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த சந்திரசூட், 1991 – சட்டத்துக்கு பிறகு அனைத்து மதத்தவரின் வழிபாட்டுத் தலங்கள் மாற்று மதத்தவர் உரிமை கோரக் கூடாது என இருந்தும், ஞானவாபி மசூதிக்குள் சென்று சாமி சிலை இருக்கிறதா என ஆராயச் சொன்னார் ஒரு உயர்சாதி நீதிபதி. அனைத்துப் பிரிவு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இட ஒதுக்கீட்டினை எதிர்த்துப் பேசினார் ஒரு உயர்சாதி நீதிபதி. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பெங்களூரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் என்று சர்ச்சையாக பேசினார் ஒரு கர்நாடத்தின் உயர்சாதி நீதிபதியான ஸ்ரீஷானந்தா.

உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த கர்ணன் அவர்களின் உயர்சாதி நீதிபதிகள் குறித்த கூறிய புகார்களும் நினைவு கூர வேண்டும். அவர் மோடிக்கு 20 நீதிபதிகளின் ஊழல் பற்றி கடிதம் எழுதியிருந்தார். அந்த காரணத்திற்காகவே அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்தித்து சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் இப்போது யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டான பணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவர் கூறிய போது சர்ச்சையாக்கியவர்கள் இப்போது அமைதி காக்கிறார்கள். தான் ஒரு பட்டியலை இனத்தவர் என்பதால் தன்னை எந்த நீதிபதியும் மதிப்பதில்லை எனவும், முக்கியத்துவம் இல்லாத வழக்குகளே ஒதுக்கப்பட்டன எனவும் அவர் கூறிய குற்றச்சாட்டையும் நீதிபதிகளின் நியமனத்தில் உள்ள சாதியப் பாகுபாட்டை பொருத்திப் பார்க்க வேண்டி இருக்கிறது.
தமிழ்நாடே ஒருமித்த குரலில் மறுக்கும் நீட் தேர்வு நீதிமன்றங்களால் திணிக்கப்பட்டு விட்டது. இசுலாமியர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசும் இந்துத்துவ சாமியார்கள் மீது நடவடிக்கைகள் இல்லை, மாறாக இசுலாமிய கைதிகள் பல்லாண்டுகளாக விசாரணைக் கைதிகளாகவே இருக்கிறார்கள். சனநாயக ரீதியில் பாஜகவின் கொள்கை முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கல்லூரி மாணவர்கள் (குடியுரிமை சட்டம் எதிர்த்த உமர் காலித்), பத்திரிக்கையாளர்கள் (சித்திக் கப்பான்) சமூக செயல்பாட்டாளர்கள் (சாய்பாபா, ஸ்டேன் சுவாமி), மக்கள் போராளிகளுக்கு பிணை வழங்கப்படுவது நீட்டிக்கப்படுகிறது. காஷ்மீர் மக்களுக்கான (370 வது பிரிவு நீக்கம்) நீதி மறுக்கப்பட்டது. மாநிலக் கட்சிகளை (அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன்) ஒடுக்க, மோடி அரசு புனையும் வழக்குகள் பிணை வழங்கப்படாமல் நீட்டிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீட்டினை காப்பாற்றும் நீதிப் போராட்டங்கள் 75 ஆண்டுகளாக தொடர்கிறது. ஆனால் பொருளாதாரத்தின் பின்தங்கிய உயர்சாதி ஏழைகளுக்கு, ஒரே நாளில் மோடி அரசு கொண்டு வந்த 10% இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இவ்வாறு தொடர்ந்து 90% மேல் இருக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதி மறுக்கப்பட்டு கொண்டு இருக்கும் வேளையில், சுமார் சுமார் 5% க்குள் இருக்கும் உயர்சாதியினருக்கான தீர்ப்புகள் வலுப்பட்டுக் கொண்டிருக்கிறது. தீ விபத்துகள் நடந்தால்தான் இப்படியான ஊழல்கள் வெளிவருமோ என்கிற சந்தேகத்தை யஸ்வந்த் வர்மா வீட்டில் நடந்த சம்பவம் உருவாக்கியிருக்கிறது.
உயர் சாதி மேலாதிக்கத்துக்கும், கற்றைக் கற்றையான பணத்திற்கும் இடையே மக்களின் நலன், மாநில உரிமை, சாமானியர்களுக்கான நீதி என அனைத்தும் நசுக்கப்படுவதையே, நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டினில் கண்டறியப்பட்ட கட்டுக்கட்டுக்கான நோட்டுகள் சொல்லும் செய்தியாக இருக்கிறது.