
சிங்கள இனவெறி இலங்கை அரசினால் தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக கடந்த 24 மார்ச், 2025 அன்று நான்கு பேருக்குத் தடை விதித்துள்ளது இங்கிலாந்து அரசு. இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூரியா மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா ஆகியோர் மீது இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. (இவர்களுக்கான பயணத்தடை மட்டுமல்லாது பொருளாதார முடக்கத்தையும் இங்கிலாந்து அரசு அறிவித்திருக்கிறது.)
ஈழ இனப்படுகொலையில் பங்கேற்ற முக்கியமான நாடு இங்கிலாந்து. அந்த நாட்டின் பங்களிப்பை மே 17 இயக்கம் தகுந்த ஆவணங்களுடன் நிரூபித்தது. இருப்பினும், இனப்படுகொலை செய்த இலங்கை அதிகாரிகளுக்கு தடை விதித்து, தனது கறையை துடைத்துக் கொள்ள விரும்புவது எதற்காக என்கிற கேள்வியில், சர்வதேச அரசியல் நோக்கமும் அடங்கியிருக்கிறதா என்கிற பார்வையிலும் அலச வேண்டியிருக்கிறது.

ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை திட்டமிட்டு செயல்படுத்திய ராஜபக்ச அரசு மீது சர்வேதச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் கோரிக்கையாக இருக்கிறது. போர் நடந்த காலத்தில் மட்டுமல்ல அதற்கு பின்பும் கூட தமிழர்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. ஆனால் இதுகுறித்து எழும் எதிர்ப்புக்குரலை புறந்தள்ளி அநீதியைத் தொடர்ந்து வருகிறது இலங்கை அரசு. சர்வதேச அமைப்புகள் அறிக்கை சமர்பிப்பதற்கு தடையாக, அந்த புலனாய்வாளர்களுடன் ஒத்துழைக்க மறுத்து வருகிறது.
அதையும் மீறி தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை சில ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்தி உள்ளன. சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் (ITJP) அமைப்பு, மனித உரிமை செயல்பாட்டாளர்களாலும், வழக்கறிஞர்களாலும் துவங்கப்பட்ட ‘மனித உரிமைகள் வளர்ச்சி மையம்’ (CHRD), காணாமல் ஆக்கப்பட்டப்பட்டவர்களின் குடும்பங்கள் (Family of Disappeared) ஆகிய அமைப்புகள் இணைந்து சிங்கள இனவெறியர்கள் நடத்திய அத்துமீறல்களை வெளியுலகிற்கு தெரிவித்து வருகின்றனர்.

ஈழத்தில் கொத்து கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஆதாரமாக கடந்த 2023இல் மனிதப் புதைகுழிகள் கண்டெடுக்கப்பட்டன. முல்லைத்தீவுப் பகுதியில் அடுக்கடுக்காக தமிழர்களின் சடலங்கள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து இலங்கை அரசினால் தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட ‘தடுப்புக் காவல் மற்றும் சித்திரவதை‘ குறித்தான ஆய்வறிக்கையை ITJP அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. (விரிவாக வாசிக்க: https://may17kural.com/wp/eelam-people-tortured-in-srilankan-army-people-report-by-itjp/)
குழந்தைகளை கூட விட்டு வைக்காமல் நெஞ்சைப் பதற வைக்கும் பாலியல் வன்முறைகளை நிகழ்த்திய சிங்கள படை அதிகாரிகளுக்கு இதற்கு முன்னரும் சில நாடுகள் தடை விதித்திருக்கின்றன. 2020ஆம் ஆண்டில் சிங்கள அதிகாரி சில்வா மீது அமெரிக்க வெளியுறவுத்துறை இதேபோன்ற தடையை விதித்தது. 2023ஆம் ஆண்டில், மஹிந்தா மற்றும் கோத்தபய ராஜபக்ஷ ஆகியோருக்கு கனடா தடை விதித்தது. இப்போது இங்கிலாந்து அரசு இலங்கை அதிகாரிகளுக்குத் தடை விதித்திருக்கிறது.
இது போர்க்குற்றங்களுக்காக அறிவிக்கப்பட்ட தடை என்றாலும் ‘தற்போது பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடப்பதற்கு துணை போகும் இங்கிலாந்தால், ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையில் பங்கேற்ற இங்கிலாந்தால், இலங்கை அதிகாரிகள் தமிழர் மீதான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதை வைத்து இனப்படுகொலைக்கு நடவடிக்கை எடுக்குமா?’ எனும் கேள்வியே எழுகிறது.
ரசியா-உக்ரைன் போர் மற்றும் தீவிரமடையும் மேற்காசிய போர்ச்சூழல்களைக் காணும்போது, அமெரிக்காவுடனான உறவில் முக்கியத்துவம் பெறுவதற்காக தற்போது இங்கிலாந்து அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் என்னும் சந்தேகமும் எழுகிறது.
தற்போது பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் பலமில்லாத இங்கிலாந்திடம் இருக்கும் ஒரே பலம் MI6 எனப்படும் உளவுத்துறை மட்டுமே. ரஷியாவுடனான போர் அணு ஆயுதப் போராக மாறக்கூடிய சூழலில் அமெரிக்காவின் கை ஓங்கி இருப்பதை இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகள் உணர்ந்து வருகின்றன. எனவேதான் ரஷிய எதிர்ப்பு மனநிலையில் உள்ள ஐரோப்பிய நாடுகளால் போர் நிறுத்தமோ அமைதி பேச்சுவார்த்தையையோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்களுக்கும் பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் கொடுத்து இணைக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றன.
அமெரிக்காவினுடைய ராணுவ பலத்தை பெரிதும் நம்பியிருக்கும் இந்த ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்காசிய நாடுகளின் எண்ணெய் வளங்கள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பிற நாடுகளின் வளங்களை சுரண்டுவதற்கும் அமெரிக்காவினுடைய ராணுவத்தை இவை பயன்படுத்தின. ஆப்பிரிக்க நாடுகளையும் சுரண்டுவதற்கு அமெரிக்கா உடன் ஐரோப்பிய நாடுகள் கூட்டுச் சேர்ந்தன.
தெற்காசிய நிலப்பரப்பில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்கும், இசுரேலுடன் கூட்டணி அமைத்து ஈரானை எதிர்கொள்வதற்கும் அமெரிக்க சார்பு நிலையையே இந்த ஐரோப்பிய நாடுகள் எடுக்கின்றன. இதற்குத் துணையாக தற்போது மத்திய கிழக்கு பகுதியை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரத் துடிக்கும் அமெரிக்காவிற்கு போர்த்தளங்கள் உருவாக்கிக் கொடுக்கிறது இங்கிலாந்து.
தற்போது இசுரேலின் நேரடியான இனப்படுகொலை கூட்டாளியாக இங்கிலாந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா கொடுக்கும் ஆயுதங்களையும், இங்கிலாந்து கொடுக்கும் உளவுத் தகவல்களையும் கொண்டே அப்பாவி மக்கள் மீது இசுரேல் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு இங்கிலாந்து மேற்காசிய போரில் அமெரிக்காவிற்கு சாதகமான அனைத்து புவிசார் சூழல்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில்தான் (சிங்கள ராணுவ அதிகாரிகள் தடை) நடவடிக்கைகளை இங்கிலாந்து செய்திருக்கிறது.
இதுவரை இங்கிலாந்து செய்த தமிழர் விரோத நடவடிக்கைகளின் பட்டியல் பெரிது. ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீதான தடையைக் கொண்டு வந்தது இங்கிலாந்து. (ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி புலிகளுக்கு எதிரான தடையை உருவாக்கியது.) ‘கீனி மீனி’ எனும் மெர்சனரி கூலிப் படையைக் கொண்டு ஈழத்தில் தமிழர்களைக் கொன்றொழித்தது இங்கிலாந்து. 2018இல் ஸ்விட்சர்லாந்து நீதிமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது இங்கிலாந்து. (ஸ்விட்சர்லாந்து வழக்கில் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வர பல முன்னேற்பாடுகளை மேற்கொண்டவர் சிங்கள இடதுசாரி செயற்பாட்டாளராக இருந்த விராஜ்மண்டிஸ் அவர்கள். இதில் மே 17 இயக்கத்தினுடைய பங்களிப்பும் இருந்தது).
இவ்வாறு தமிழர் விரோத நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்ட வந்த இங்கிலாந்து இதுவரை தனது நிலைப்பாட்டை மாற்றியதில்லை. இப்போது அறிவிக்கப்பட்ட ‘சிங்கள அதிகாரிகள் தடை’ என்பது இலங்கையில் ஏதாவது பேரம் பேசுவதற்கான ஏற்பாடா என்னும் கோணத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் ஏகாதிபத்திய நாடுகள் முதலாளித்துவத்தின் நலனுக்காக இயங்கும் வலதுசாரி கட்டமைப்பு கொண்டவை. எந்த ஒரு ஆதாயமுமில்லாமல் அடுத்த நாட்டை சார்ந்த முக்கியப் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்காது. போலியான காரணங்களால் மேற்பூச்சிட்டு ஆதாயத்திற்காவே அனைத்தையும் செய்யக் கூடியது. அவ்வகையில் இந்தக் கைதினை இங்கிலாந்து நியாயத்தின் பக்கம் நிற்பதால் நடவடிக்கை எடுத்திருக்கிறது எனக் கருத முடியாது.
தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இசுரேலின் நெதன்யாகு மீது வழக்கு தொடுக்கப்பட்டது போல சிங்கள இனவெறி ராஜபக்சே மீதும் வழக்கு தொடுக்கப்பட வேண்டும். இலங்கை செய்த இனப்படுகொலைக்கு ஆதாரங்கள் வெளியாகி இருக்கும் சூழலில் அனைத்து நாடுகளும் இதற்கான தங்கள் எதிர்ப்புக்குரலை பதிவு செய்ய வேண்டும். இப்போது அறிவிக்கப்பட்ட ‘சிங்கள அதிகாரிகள் தடை’ என்பது ராஜபக்சேவை சர்வேதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான முன்னேற்பாடாக இருந்தால் மட்டுமே இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நீதி கிட்டும்.