இந்திய நீரோட்டத்திலிருந்து தமிழர்களை வேறுபடுத்திய தமிழ்த் தேசியக் கவிஞர்

இருபதாம் நூற்றாண்டில், தமிழ், தமிழர், தமிழ்நாடு என்கிற சிந்தனை ஓர்மையைத் தமிழ்ச் சமூகம் அதிர அதிர உருவாக்கியவர்கள் மூவரே!. அரசியல் தளத்தில் நின்று பண்பாட்டு எதிர் மரபைக் கையில் ஏந்தி தமிழ்ச் சமூகத்தின் சிந்தனை முறையையே மாற்றிக் கட்டமைத்தவர் பெரியார் என்றால், அந்த சிந்தனை முறையிலிருந்து புதிய தமிழரசியல் தளத்தைக் கட்டமைத்தவர் பேரறிஞர் அண்ணா. அதே காலகட்டத்தில் பெரியாரின் சிந்தனை முறையிலிருந்து தனக்கான வேரைத் தமிழ் மரபில் கண்டடைந்து புதிய தமிழ் இலக்கிய தளத்தைக் கட்டமைத்தவர் நம் கவிஞர் பாரதிதாசன்.

“நால்வகைச் சாதி இந்

நாட்டினில் நாட்டினீர்”

என்று ஆரிய எதிர்ப்பை நேரடியாக எழுதியவர் சங்ககால புலவர் கபிலர். அவருக்கு பின்னர் ஆரியப் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மேலாதிக்கத்தையும், இனம், மொழியுணர்வு என்கிற போர்வாள் கொண்டு எதிர்க்க நினைத்து அதை தம் கவிதை பட்டறையில் தயாரித்து ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் கையளித்த திராவிட சிந்தனை மரபின் தமிழ்த் தேசியப் பெருங்கவிஞன் புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஒருவரே!.

தலைவர் பெரியார் கண்டெடுத்த ஒரே கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். திராவிட இயக்கம் தமிழ் சமுதாயத்திற்கு அளித்த கொடை பாரதிதாசன்!.

பாரதியாரின் முன்னிலையில் பாடிய சக்தி பாடல் எனும் ‘எங்கெங்கு காணினும்  சக்தியடா –தம்பி; ஏழு கடல் அவள் வண்ணமடா!…’ என்கிற கவிதையே பாரதிதாசன் அவர்களின் முதல் கவிதையாக அறியப்படுகிறது. சுப்பிரமணிய துதி, பக்தி தர்க்க பாடல்கள் என்றும், கதர், இந்தியத் தேசிய உணர்வு என்றும் பாரதியின் தாக்கத்தினால் கவிதை எழுதிக் கொண்டு இருந்தார் பாரதிதாசன். 

பாரதிதாசன் அவர்கள் கவிதை எழுதத் தொடங்கிய காலத்தில் இந்திய நிலப்பரப்பில் இந்தியத் தேசிய உணர்வு கட்டமைக்கப்பட்ட காலகட்டம். அதுவும் வேத மரபு வழிப்பட்டவர்கள் மூலமே அந்த உணர்வு மக்களிடம் விதைக்கப்பட்டது. அன்னி பெசண்ட் அம்மையார், விவேகானந்தர், பால கங்காதர திலகர், அரவிந்தர், காந்தி என்று மிக நீண்ட அந்த வேத மரபின் தமிழ்நாட்டு முகமாகவே பாரதியாரை நாம் மதிப்பிட முடியும். இந்தியத் தேசிய நீரோட்டத்தில் தமிழ்நாட்டை இன்றைக்கும் இணைக்கும் புள்ளியாகப் பாரதியாரே உள்ளார். தேசிய கட்சிகளாக உள்ள காங்கிரஸ் – பாஜக முதல் கம்யூனிஸ்ட்டுகள் வரை இதை நாம் காண முடியும். பாரதி சாதி ஒழிப்பு பேசும் முற்போக்கு தன்மையிலான வேத மரபின் கவிஞர்!.

இந்திய தேசிய உணர்வினர், இந்து மத உணர்வினர், வேதத்தைத் தத்துவமாகக் கொண்டவர்கள் புடை சூழ இருந்த பாரதிதாசன் 1928ஆம் ஆண்டு மாயவரத்தில் பெரியார் கலந்துகொண்ட மாநாட்டில் பெரியார் அவர்களின் பேச்சைக் கேட்டு தன் சிந்தனையில் மாற்றம் பெற்றார். 

அதன் விளைவாக 1933ல் சிங்கார வேலர் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு நாத்திகர் பதிவேட்டில் “நான் ஒரு நிரந்தர நாத்திகன்” என்று எழுதிக் கையெழுத்திடுகிறார். பெரியாரின் கொள்கைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அதை உணர்வு பொங்கும் தன் கவிதைகளில் கொட்டி நிரப்பி பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிராகக் களமாடும் திராவிட படைவீரர்களுக்கு புதுவையிலிருந்து முரசறைந்தார், தன் ‘குயில்’ மூலம் உற்சாக ஒலியெழுப்பினார்.

இரண்டாயிரம் ஆண்டு தமிழ் நினைவுகளைச் சங்க இலக்கியங்களிலிருந்து மீட்டுருவாக்கம் செய்து சங்ககால தமிழர் மாண்பை, வீரத்தை, காதலை தம் கவிதைகளில் காட்டி தற்கால தமிழர்களுக்குச் சுயமரியாதை உணர்வூட்டினார். வேத மரபிலிருந்து முரண்பட்டு தன்னை சங்க இலக்கிய கவிஞர் மரபோடு இணைத்துக் கொண்டார். கருத்து முதலவாத அடிப்படையில் எழுதத் துவங்கிய பாரதிதாசன் தமிழரின் இயற்கையைப் போற்றும் பொருள் முதல்வாத கவிஞராக மாறினார்.

இயற்கை, காதல், வீரம் என்று இவ்வுலக வாழ்க்கைக்கானவற்றை உலகாயத தத்துவங்களோடு மிக எளிய தமிழில் கலந்து தமிழர் நெஞ்சில் ஊன்றினார். தமிழ் இலக்கியம் அதுவரை கண்டிராத புதிய கவிதை வடிவத்தை, கலை மக்களுக்கானது என்கிற கலக மரபை பாரதிதாசன் தொடங்கி வைத்தார். பெரியார் மொழியை மதத்திலிருந்து பிரிப்பதை அடியொற்றி பக்தி இலக்கிய மரபைச் சங்க இலக்கிய மரபாகத் திசைமாற்றி அமைத்தவர் பாரதிதாசன்.

குறிப்பாகச் சொல்வதென்றால் பாரதிதாசன் அவர்களின் இந்த புதிய இலக்கிய சிந்தனை முறையே அண்ணா அவர்களின் அரசியல் தளத்திற்குப் பெரிதும் பயன்பட்டது. 

பழி வேதம் ஒப்போமென்ற

பண்டைத் தமிழர் தம்மைக்

கழுவேற்றிக் கொன்றாரடி-சகியே

கழுவேற்றிக் கொன்றாரடி

ஆரியர் தமை ஒப்பா

ஆதித் திராவிடரைத்

சேரியில் வைத்தாரடி-சகியே

சேரியில் வைத்தாரடி என்று வரலாற்றுப் பார்வையுடன் தமிழில் பாரதிதாசனையே தவிர ஒரு கவிஞன் எழுதியதில்லை.

பெரியாரின் இடதுசாரி தமிழ்த் தேசியத்தை மிகச் சரியாக உள்வாங்கிக் கொண்டு பெரியாரோடு சேர்ந்து ஒரு எதிர்கால லட்சிய சமுதாயத்தை கனவு கண்டவர் அவர். பெரியாரின் தமிழ்த்தேசியம், மொழி இன மேலாதிக்கம் சார்ந்ததா? அல்லது பண்பாடு சார்ந்ததா? முன்னது ஒடுக்குமுறை நிகழ்த்தக் கூடியது, பின்னது ஒடுக்குமுறைக்கு எதிரானது. அந்த வகையில் திராவிடத்தைப் பண்பாட்டு அரசியல் தளத்தில் பயன்படுத்தி வெற்றிப் பெற்றவர் பெரியார்.

இதைப் பற்றிய புரிதல் இல்லாத அந்த (இந்த) கால வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் இருக்கும் பொழுது, தெளிவாக பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்ப்பது, சாதி, மதம், பால், வர்க்க வேறுபாடுகள் கலைந்து அனைத்து மக்களுக்குமான உரிமையைக் கோருவதே  தமிழ்த் தேசியம் என்பதை தம் கவிதைகளில், கட்டுரைகளில் பதிவு செய்கிறார் பாரதிதாசன். 

பெரியார் தனித் தமிழ்நாடு! முழங்கிய போது கவிஞரின் கவிதை அதை அலங்கரித்தது. திராவிட நாடு திராவிடருக்கே! என்ற போதும் அலங்கரித்தது. மொழி வழி மாகாண  பிரிப்பைப் பெரியார் தொடக்கத்தில் எதிர்த்த போது எதிர்த்தும், பின்னர் அவர்கள் போவது நல்லது என்ற நிலைப்பாடு மாறும் போது அதை தம் கவிதைகளில் எழுதியும், பின்னர் மீண்டும் தமிழ் நாடு தமிழருக்கே! என்று போது அதை எழுதுவது என்று பெரியாரின் அரசியல் நிலைப்பாடுகளை மக்களிடம் பரப்பும் வேலையையே கவிஞர் தம் வாழ்நாள் முழுவதும் செய்துள்ளார்.

தன் கட்டுரையில் தமிழன் யார்? என்பதற்கு இப்படி விடை தருகிறார்..

“தமிழ் நாடு, தாய்நாடு, தமிழே தாய்மொழி, தமிழர் ஒழுக்கம் தனதொழுக்கம். என்னும் இம் மூவகைப் பேறும் பெற்றவன் தமிழன்; மற்றவன் பிறனே!” (குயில் 1-6-1958). 

இன்றைய நாம் தமிழர் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டிய முக முக்கிய வரிகள் இவை. ‘தமிழர் ஒழுக்கம் தனதொழுக்கம்’ என்று இன்றுவரை ஏற்காத பார்ப்பனர்களை தமிழர்களே என்றும், என்றோ தமிழர் நிலத்தில் குடியேறிய பார்ப்பனர்களை நானும் ஆதரிக்கவில்லை என்றால் எப்படி? என்றும் பேசியவர் சீமான். இவர்கள் பாரதிதாசன் கவிதை வரிகளைப் பயன்படுத்த அருகதையற்றவர்கள்.

1938ல் சுயமரியாதை இயக்கத்தின் மிகச்சிறந்த பாவலர் என்று பெரியாரால் பாராட்டப்படுகிறார் பாரதிதாசன். ஒரு சுயமரியாதை காரானாக, பகுத்தறிவுவாதியாக, பெரியார் தொண்டராக தொடர்ந்து பணியாற்றியவர் பாரதிதாசன். அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தை உடைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி பெரியாரை நெருக்கடிக்கு உள்ளாக்கிய போதும் கூட பாரதிதாசன் பெரியாரின் பக்கம் நின்று கண்ணீர்த் துளிகள் என்று திமுக-வை விமர்சித்தார்.

அப்படிப்பட்ட பாரதிதாசனின் கவிதை வரிகளைத் தனியே உருவித்தான் தெலுங்கர்- வந்தேறி என்கிற பெயரில் திராவிட எதிர்ப்பு அரசியலுக்குப் பயன்படுத்துகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

பாரதிதாசனுக்கே தலைவர் பெரியார் தான் என்பதை இன்றைய நாம் தமிழர் கட்சியினர் புரிந்து கொள்ள அவரின் வரிகளில்..

பாரதி தமிழ்ப்பாட்டுக்கு ஒரு புதுநடைக் கண்ட புலவன்.

பாரதியைப் புகழ்ந்தோம், பாடினோம் நாம் புகழ்வதற்கும் பாடுவதற்கும் பாரதியைவிட ஒருவர் இருக்கின்றாரா? அவர் யார் என்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

குன்று உடைக்கும் தோளும், நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும், இறுகிய துறவி உள்ளமும் ஒரே இடத்தில் கண்டோம். இந்த அணுகுண்டு பட்டறைதாம் பெரியார் என்பதை கண்டோம். (குயில் 10.05.1960)

பெரியாரின் சமூக சீர்திருத்த மரபுவழியை நுணுக்கி உணர்ந்து கொண்ட கவிஞர், பெரியாரின் கொள்கைகளை தன் பாடல் ஒன்றில் புத்தரின் ஐந்து ரத்தினங்கள் போன்று கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்துகிறார்…

1. சாதியொழிப்பு

2. மத நூல் ஒழிப்பு

3. பார்ப்பனிய ஒழிப்பு

4. தன்மானம் கொள்ளல்

5. தமிழ் நாடடைதல்

பெரியார் பேசிய பெண்ணியத்தை, பொருள்முதல் வாதக் கருத்தை, பெரியாரின் தமிழ் நாடடைதலை தன் கவிதைகளின் மூலம் உலகம் உணரச் செய்தார். 

பெரியார் தொல்காப்பியரையே பார்ப்பன அடிவருடி என்றுதான் கூறினார். அந்த வழியில் நம் கவிஞர் தொல்காப்பியரின்

“அச்சமும் நாணமும் மடனுமுந்துறுத்த

நிச்சயம் பெண்ணிற்கு வேண்டும்.”

என்ற வரிகளுக்கு மாற்றாக

“அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்

அழகிய தமிழ் நாட்டின் கண்கள்.” என்று எதிர்ப்பாட்டுப் பாடியுள்ளார்.

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற பிரெஞ்சுப் புரட்சியின் விளைபொருளை உள்ளார்ந்த ஏற்றுக்கொண்டவர் நம் கவிஞர்.

 “விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, 

பாரடா உனது மானிடப் பரப்பை”

“வலியோர் சிலர் எளியோர் தமை

வதையே புரிகுவதா…?”

“புவியை நடத்து பொதுவில் நடந்து…”

 “பொதுவுடைமைக் கொள்கை திசை

எட்டும் சேர்ப்போம்…” போன்ற வரிகள் அவரின் உலகாயுத (Materialism) சிந்தனையை நமக்கு உணர்த்தும் வரிகள்.

 ‘உலகுக்கோர் அய்ந்தொழுக்கம்’ என்கிற தலைப்பில் கவிஞர் எழுதிய கட்டுரை ஒன்று ஒரு பண்பட்ட தேசிய இனத்தின் கவிஞராக அவரின் சிந்தனை அடித்தளத்தைப் படம் பிடித்துக் காண்பிக்கக் கூடியது.

1. ஓர் இனம் மற்றோர் இனத்தை மாய்க்கலாகாது.

2. ஒரு மொழி மற்றொரு மொழியை மாய்க்கலாகாது.

3. ஒரு நாடு மற்றொரு நாட்டைப் பற்றிச் சுரண்டும் பான்மை கட்டோடு ஒழித்தல் வேண்டும்.

 4. உள்நாட்டின் அமைதியைக் காக்கும் அளவுக்கு மேல் பெரும்படை, விலையேறப்பெற்ற அழிப்புக் கருவிகளை எந்த நாடும் வைத்திருத்தல் கூடாது; உண்டாக்கக் கூடாது.

 5. அங்காங்குள்ள சான்றோரைக் கொண்ட ஓர் உலகப் பெருமன்றம் மேற்சொன்ன நான்கு திட்டங்களைச் சிதறாமல் மேற்பார்வை பார்த்து வரவேண்டும்.,

 இவ்வைந்து ஒழுக்க நெறிகள் நின்றாலன்றி உலகம் முன்னேற முடியாது. (குயில்‘, குரல் 1, இசை 33, 14.1.1959)

 இப்படி தமிழர் அற நெறியிலிருந்து புதிய உலக சிந்தனையோடு இந்த உலகை பார்த்தவர் பாரதிதாசன்.

பார்ப்பன சதியில் சிக்கிய இரண்டாயிரம் வருடத் தமிழர்களின் அடிமைத் தன்மையையும், கலகப் பண்பையும் ஒருசேர ஆய்ந்து உணர்ந்ததாலோ என்னவோ தமிழர்களைத் தட்டி எழுப்ப தன் கவிதைகளில் அதிகப்படியான உணர்ச்சிகளைப் பயன்படுத்தினார் கவிஞர். தமிழர்கள் நசுக்கப்பட வேண்டும் என்ற தலைப்பிட்ட கட்டுரையில் (குடி அரசு,10-10-1937) இப்படி எழுதியிருக்கிறார்….

“தமிழருக்குப் புரட்சி மனப்பான்மை அவர்கள் தங்கள் பகைவரால் நசுக்கப்படுவதிலிருந்து உண்டாகும். ஆகையால் தமிழர் தம் பகைவரால் அடையும் எவ்விதத் தொல்லையையும் நான் வரவேற்கிறேன்…”

தமிழர்களின் கடந்த ஒரு நூற்றாண்டு வரலாறே இந்த கூற்றை நமக்கு உண்மையென்று காட்டிவிடும். இந்தி எதிர்ப்புப் போர் முதல் ஜல்லிக்கட்டு போராட்டம் வரை நாம் நம் பகைவர்களால் நசுக்கப்படும் போதே புரட்சி மனப்பான்மை கொண்டவர்களாக மாறுகிறோம். சங்க இலக்கிய மரபின் நீட்சியாகத் தன்னை அடையாளம் கண்டு கொண்டதன் மூலம் தமிழ்நாட்டின் புது அரசியல் பண்பாட்டுத் தளத்திற்கான இலக்கிய தளத்தைப் பாரதிதாசன் உருவாக்கியுள்ளார்.

எந்த ஒரு தேசிய உணர்வும் மக்களிடம் வளர அதற்கான கவிஞர்கள் தேவை. பாரதியின் தாக்கத்தில் தன்னை பாரதிதாசன் என்று அவர் அறிவித்தாலும், பாரதியின் சிந்தனை முறையின் முரணியக்கமே அவரை நாம் கொண்டாடும் பாரதிதாசனாக்கியுள்ளது. ஆம், இந்தியத் தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழ் நாட்டை விளக்கும் புள்ளி பாரதிதாசன்.

தமிழ்நாட்டின் இன்றைய தனித்துவத்திற்குப் பெரியாரின் இடது சாரி தமிழ்த் தேசிய முழக்கத்தை தன் கவிதைகள் மூலம் நிலைபெறச் செய்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பங்கு மிகப் பெரியது.

இன்று தமிழ்த் தேசிய களத்தைத் துரோகிகள் சூழ்ந்துள்ள வேளையில் தமிழ்த் தேசிய  பெருங்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் தமிழ்வேல் கொண்டு அவர்களை வீழ்த்துவோம்!. இடது சாரி தமிழ்த் தேசியத்தைத் திங்களும் குளிரும் போல, கதிரும் ஒளியும் போல, மீனும் புனலும் போல, விண்ணும் விரிவும் போல, தமிழ் மண்ணில்  பரவச் செய்வோம்!.

குறிப்பு:

  1. உலகுக்கோர் அய்ந்தொழுக்கம் (குயில் ஏட்டில் வெளியான தலையங்கக் கட்டுரைகள்), புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, 2022.
  2. திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல் ஒரு நூற்றாண்டு தமிழ்ச் சிந்தனை வரலாறு, தமிழவன், அடையாளம், 2016.
  3. பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ இந்து வெளியீடு, 2006.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »