
மே 5, வணிகர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை சென்னையில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை:
வணிகர்களே, நீங்கள் தமிழ்நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பானவர்கள். இன்றைய திராவிட மாடல் ஆட்சியிலே பொருளாதார வளர்ச்சி பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக, பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் தமிழ்நாட்டினுடைய வணிகர்கள். ஒரு அரசாட்சியை, ஆட்சி அதிகாரத்தை நிர்ணயம் செய்யக்கூடியவர்கள் வணிகர்கள் என்பதை நான் சொல்லவில்லை, 120 ஆண்டுகளுக்கு முன்பே வ.உ.சி அவர்கள் சொல்லியிருக்கிறார். சுதேசி வணிகத்தை கையில் எடுத்தால் வெள்ளையர்களை வெளியேற்றி விடலாம் என்று பிரகடனப்படுத்தினார் பெருந்தலைவர் வ.உ.சி அவர்கள். அவர் அன்று தமிழ் மண்ணிற்கு வழங்கிய அந்தப் போராட்டச் சொல்தான்’ சுதேசி’ என்று சொல். அந்த சொல் இன்றைக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் ஐயா. வெள்ளையன் அவர்கள்.
ஐயா வெள்ளையன் அவர்கள்தான் வணிகர்களுடைய வலிமையை அவர்களுக்கு உணர்த்துகின்ற வகையில், அவர்களை பெருந்திரளாக ஒரு வலிமைமிக்க அணியாக மாற்றி, அதன் மூலம் வணிகர்களின் உரிமையைப் பேசுகின்ற ஒரு மாபெரும் இயக்கத்தை கட்டி எழுப்பியவர். அவர் எங்களுக்கு எல்லாம் தந்தை போன்றவர். நாங்கள் போராட்டக் களத்தில் நிற்கக்கூடிய அனைத்து இடங்களிலும் அவரை நாங்கள் மறந்தது கிடையாது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக தன்னுயிர் கொடுத்து போராட்டத்தை முன்னகர்த்திய மாவீரன் முத்துக்குமாரின் உடலை, கடுமையான இன்னல்களுக்கு மத்தியில் பாதுகாத்து, மாணவச் செல்வங்கள் எல்லாம் போராட்டக் களத்தில் அணியமாவதற்கு உறுதுணையாக நின்றவர் அவர்.
வணிக நலன் என்பது வணிகர்களின் நலம் என்பது தனித்த ஒன்று அல்ல அது சமூகத்தோடு இணைந்தது என்பதை நன்கு உணர்ந்தவர் ஐயா வெள்ளையன். அதனால் தான் சமூகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் வணிகர்களை போராட்ட களத்தில் இணைத்தார். சமூகம் முன்னேறும் பொழுது அல்லது சமூகம் மேம்படையும் பொழுது அதில் வணிகர்களின் நலனும் முன்னேறும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர். அதனால் தான் தமிழ்நாட்டின் வரலாற்றில் எந்த வணிகர் சங்க தலைவர்களும் செய்யாத ஒரு மாபெரும் பணியை ஐயா. வெள்ளையன் அவர்கள் செய்தார்கள். அது என்னவென்றால் வணிகர் சங்கங்களை தமிழ்நாட்டின் உரிமைக்கான போராட்டங்களில் எல்லாம் பங்கெடுக்க வைத்தார்.
வணிகர்கள் கிட்டத்தட்ட 14 முதல் 16 மணி நேரம் உழைக்கக்கூடிய நெருக்கடியான தொழிலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கான அன்றாட சேவைகளை தங்கு தடை இன்றி வழங்கக்கூடிய ஒரு மாபெரும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு கூட நேரத்தை ஒதுக்கக்கூடிய ஒரு சாத்தியம் இல்லாத நிலை இருக்கிறது. இந்த நிலையிலே வணிகர்களை சமூகத்தின் உரிமைக்காகவும், தமிழர்களின் போராட்டத்திற்காகவும், தமிழ் தேசிய கோரிக்கைக்காகவும் பயிற்றுவித்தவர் ஐயா. வெள்ளையன் அவர்கள். இன்று வணிகர் சங்கத்தில் ஒப்பற்ற தலைவர்கள் எல்லாம் அணி வகுக்கிறார்கள் என்றால், அதற்கு ஒற்றைக் காரணமாக இருப்பவர் ஐயா வெள்ளையன் அவர்கள் மட்டும்தான். இந்த வரலாறு சாதாரண வரலாறு அல்ல. கூடங்குளம் போராட்டத்தின் போது, அந்த போராடும் மக்களோடு தோளோடு தோளாக நின்றவர் ஐயா. வெள்ளையன் அவர்கள். ஐயா. வைகோ அவர்கள் முன் நின்று நடத்திய ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது, அந்த இடத்திலே ஐயா. வெள்ளையன் அவர்கள், தூத்துக்குடி வணிகர்களை ஒரு மாபெரும் ஆற்றலாக மாற்றி வீதியிலே நிறுத்தவில்லை என்றால் ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து போராடுவதற்கு நமக்கு போதுமான வலிமை கிடைத்திருக்காது.

அது மட்டுமல்ல, முல்லைப் பெரியாறு உரிமை காக்க ஐயா. வைகோ அவர்கள் பெரும் போராட்டத்தை நடத்திய போது வணிகர்களை அதில் இணைத்தவர். இந்தப் போராட்டம் உச்சநிலையை அடைந்தபோது, 2011-ல் கேரளாவில் நமது தமிழர்கள் கொடிய இன்னல்களுக்கு ஆளான போது ஐயா வெள்ளையன் அவர்கள் ஒரு அறிவிப்பை செய்தார்கள். கோயம்பேட்டில் இருக்கக்கூடிய வணிகர்கள், வணிக சங்கங்கள், இந்த வணிக வளாகத்தை மூடுகிறோம் என்றார்கள். எப்போது முல்லைப் பெரியாறு பிரச்சனை தீர்கிறதோ, என்றைக்கு அதை சார்ந்திருக்கக் கூடிய விவசாயிகளின் இன்னல்கள் இன்னல்கள் தீர்கிறதோ, அன்றைக்கு தான் கடைகளைத் திறப்போம் என்று ஐயா. வெள்ளையன் அவர்கள் உத்தரவிட்ட காரணத்தினால் தான், ஒரு மாபெரும் எழுச்சி தமிழ்நாடு முழுவதும் நடந்தது. இவ்வாறு வணிகர்களை அவர் சிறிது சிறிதாக அரசியல்படுத்தினார். அவர்களுக்கு தமிழ் தேசிய உணர்வை ஊட்டினார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எல்லாம் போராடுவதன் மூலமாக இந்திய அரசு தமிழர்களின் கோரிக்கைகளுக்கு தலை வணங்குகின்ற சூழலை உருவாக்கிய ஒரு மாபெரும் போராளி தான் ஐயா வெள்ளையன் அவர்கள்.
அவரின் எத்தனை போராட்டங்களை சொல்வது? ஈழப் போராட்டம், ஏழு தமிழர் விடுதலைப் போராட்டம், மீத்தேனுக்கு எதிரான போராட்டம், கோகோ கோலா நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் எனப் பல போராட்டங்களோடு வால்மார்ட்டை தடுத்து நிறுத்திய மாபெரும் போராட்டத்தை நடத்தி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய வணிகர்களின் உரிமைகளையும் பாதுகாத்தவர் அவர். இப்பேர்ப்பட்ட போராளி வளர்த்தெடுத்த இயக்கம் இந்த வணிகர் இயக்கம்.
உலக வர்த்தக கழகமான WTO ஒப்பந்தம் என்று என்னவென்றே தெரியாத நிலையில் பலர் இருக்கின்ற சமயத்தில், வணிகர் சங்கம் அந்த ஒப்பந்தத்தை கையில் எடுத்து போராடியது. இந்த முன்னோடி போராட்டம் இந்தியாவினுடைய கொள்கை வகுப்பாளர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தது. ஐயா. வெள்ளையன் அவர்களின் பங்களிப்பை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த அனைத்தையும் தொகுத்து பார்த்தால் தான் முடியும். வரலாற்று நாயகர் அவர். வணிகர்களுக்கு வணிக களத்திலே, சமூக களத்திலே முகவரி கொடுத்தவர் அவர். அப்பேர்ப்பட்டவர் வளர்த்தெடுத்த வணிகர் சங்கத்தின் மாநாட்டில் நான் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்த தோழமைகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வணிகர்கள் இல்லை என்றால் ஆட்சி அதிகாரம் கிடையாது. நல்லாட்சி என்பது சாத்தியமில்லை. வணிகர்களுடைய நலனை முன்னிறுத்துகின்ற வகையில் பல்வேறு தீர்மானங்களை கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் தீர்மானங்களை முழுமையாக வாசித்து முடிக்க முடியவில்லை, அவ்வளவு கோரிக்கைகளை தொகுத்திருக்கிறீர்கள். எந்த சங்கத்திலும் அந்த சங்கத்தின் உறுப்பினர்களின் முழுமையான கோரிக்கைகளை தொகுத்து நான் இதுவரை பார்த்ததில்லை. ஆனால் இந்த வணிகர் சங்கங்களின் பேரவை அதனை முழுமையாக தொகுத்திருக்கிறது என்றால், இந்த சங்க தலைமை முழுமையாக அரசியல் மயப்பட்டிருக்கிறது, வணிகர் நலனுக்காக முழுமையாக சிந்தித்திருக்கிறது என்பதை இந்த தீர்மானமே காட்டுகிறது. தமிழ்நாட்டின் திமுக அரசியல் இந்த கோரிக்கைகளை கவனம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நான் சில தகவல்களை உங்கள் முன்னே பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் பன்னாட்டு, பெரு நிறுவனங்களுக்கு எல்லாம் பல்வேறு உதவிகளை செய்கிறார்கள். நிலத்தை மானியமாக தருகிறார்கள். 24 மணி நேரமும் மின்சாரம் கொடுப்பதற்கும் ஏதுவாக ஏற்பாடு செய்கிறார்கள். வரிச்சலுகைகள் கொடுக்கிறார்கள். இப்படி எண்ணற்ற உதவிகளை செய்கிறார்கள். இங்கு ஃபோர்டு நிறுவனம் இருக்கிறது. பென்ஸ், ஹூண்டாய் போன்ற பல கார் கம்பெனிகள் இருக்கின்றன. ஆனால் அந்த நிறுவனங்களை விட பல மடங்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறவர்கள் நமது வணிகர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. ஆக இதை கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.
இங்குள்ள வணிக நிறுவனங்களுக்கு தடைகளை ஒன்றிய பாஜக அரசு திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்கிறது. GST வரி, சுங்க வரி போன்ற எண்ணற்ற வரிகளை, எண்ணற்ற பரிசோதனைகளை வணிகர் தலையிலே விதித்துக் கொண்டிருக்கிறது. சிறு வணிகர்கள், சில்லறை வணிகம் தேவையில்லை என்றும். பன்னாட்டு பெருநிறுவனங்களின் பெருத்த முதலாளிகளிடம் இவற்றை கொடுக்க வேண்டும் என்றும் பாஜக அரசு வேலை செய்து கொண்டிருக்கிறது. இதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது. அந்த திட்டங்களை எல்லாம் முறியடித்து நாம் வெல்ல வேண்டும். சில்லறை வணிகத்தை சுதேசி வணிகத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டு வணிகர்கள் ஒரு போர்க்குணம் மிக்க போராட்ட அணியாக மாற வேண்டும். இந்த வணிகர் சங்கத்திற்கு ஆளுகின்ற திமுக அரசும், தோழமை இயக்கங்களும் துணை நிற்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

வணிகர்களை தொழிலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் முறியடிக்க வேண்டும். நமக்கு மிகப்பெரும் சிக்கல்களாக மின்-வணிகம் (E-commerse) என்று சொல்கிறார்களே, அந்த இணைய வழியிலான வர்த்தகம் வந்து கொண்டிருக்கின்றது. அந்த வர்த்தகம் வழியாக பல நூறு கோடி ரூபாயை, பல்லாயிரம் கோடி ரூபாயை இத்தொழிலிலே செலுத்தி, சில்லரை வணிகர்களை வணிகத் தொழிலில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். நம்மால் செய்ய முடியாத தள்ளுபடி விலைகளை கொடுப்பதன் மூலமாக சில்லறை வணிகர்களை அப்புறப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த இடத்தில் மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கான வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது. இல்லையென்றால் இங்கு சில்லறை வணிகத்தை முற்றிலுமாக அழிக்கக்கூடிய வேலையை செய்து முடிப்பார்கள்.
பெரிய நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்து இத்தொழிலில் புகுந்து வணிக சாமான்களை வீட்டிற்கு கொண்டுவந்து தரும் வசதிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வணிகத்தை நாம் எவ்வாறு கையாள்வது? இதை எதிர்கொள்ள சில்லறை வணிகத்தை சேர்ந்த நீங்கள் எல்லாம் ஒரு அரசியல் ஆற்றலாக, சமுதாய ஆற்றலாக, அனைத்து சமுதாய இயக்கங்களோடு, சனநாயக ஆற்றல்களோடு ஒன்று சேர்ந்து போராடும் ஒரு திட்டத்தை முன்வைக்கவில்லை என்றால் இங்கு சில்லறை வர்த்தகத்தை நாம் இழந்து விடுவோம் என்கின்ற ஒரு பேரபாயம் இருக்கிறது.
இந்த சுதேசி வணிகத்தை, சில்லறை வணிகத்தை எப்படி பாதுகாப்பது என்றே ஐயா வெள்ளையன் அவர்கள் எப்பொழுதும் பேசிக் கொண்டிருந்தார். அவர் சொல்லிய பாதுகாப்பு என்பது யாரிடம் இருந்து என்பதுதான் மிகவும் முக்கியமானது. சில்லறை வணிகத்தை யாரிடம் இருந்து பாதுகாப்பது? அதை பன்னாட்டு பெரு நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பது என்பது, அந்த கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு முதுகெலும்பாக இருக்கக்கூடிய பாஜக கட்சி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினை எதிர்ப்பதன் மூலமே பாதுகாக்க முடியும். எப்படி பாரதிய ஜனதா கட்சி வணிகர்களுக்கு எதிராக இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இன்றைக்கு இருக்கக்கூடிய பெரு வணிகர்களின் திட்டங்களுக்கு எல்லாம் ஆதரவான சட்ட திட்டங்களை வகுப்பதோடு வரிச்சலுகைகளும் கொடுக்கின்ற இந்த பாஜக அரசு, இத்தனை லட்சம் சில்லறை வணிகர்களுக்கு என்ன கடன் வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அம்பானியும், அதானியும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு நிறுவனங்களை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கு அவர்கள் கொண்டு வரும் மசாலா பொருட்கள் எண்ணெய் பொருட்கள் அவைகளின் மூலப் பொருட்களை கையகப்படுத்துகின்ற வேலையை வடநாட்டு பனியா கம்பெனிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை யாராவது மறுக்க இயலுமா? அது மட்டுமல்ல, தமிழக வணிகர்களை, இஸ்லாமிய வணிகர்கள் இந்து வணிகர்கள் என்று பிரித்து, இந்து பண்டிகையின் போது இஸ்லாமியர் கடையில் பொருட்களை வாங்காதே என்று சொல்கிறார்களே, இதெல்லாம் எதற்காக? வணிகர்களை மதரீதியாக, சாதி ரீதியாகப் பிரித்து சூழ்ச்சியாக இவர்களின் வணிகத்தை திணிக்க வேண்டும் என்பதற்காகத்தான். நாம் மதத்தை கடந்து தமிழ்நாட்டு வணிகர்களிடத்தில் பொருட்களை வாங்குவோம் என்று முடிவெடுப்போம். வடநாட்டுப் பெரு வணிக அந்நிய முதலாளிகளிடமிருந்து ஒரு பொழுதும் பொருட்களை வாங்கக்கூடாது என்பதை முழக்கமாக முன் வைப்போம். மே 17 இயக்கம் இதைத்தான் சொல்கிறது.

எங்கள் ஊரில், எங்கள் தெருவில், எங்கள் நலனுக்காக 14 முதல் 16 மணி நேரம் உழைக்கக்கூடிய எங்கள் வணிக கடைகளில் பொருட்களை வாங்குவோம். பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களிடமிருந்து ஒரு பொழுதும் பொருட்களை வாங்கக் கூடாது என்னும் மாபெரும் பிரச்சாரத்தை மே 17 இயக்கம் முன்னெடுக்கும் என்பதை இந்த மன்றத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். எங்கள் வணிகப் பெருமக்கள் எங்கள் உறவினர்கள் . அவர்கள் உரிமைகளை நிலைநாட்டும் போராட்டத்தை மே 17 இயக்கம் முன்னெடுக்கும். உங்களோடு என்றும் துணை நிற்போம். ஏனென்றால் எங்களை வளர்த்தெடுத்தவர் ஐயா. வெள்ளையன் அவர்கள். அவரின் போராட்ட குணம், அவரின் முழக்கங்களுக்காகத் தான் நாங்கள் அவருக்கு ‘அருந்திறள் தமிழர்’ என்ற பட்டதை கொடுத்து நாங்கள் எங்களை பெருமைப்படுத்திக் கொண்டோம். அது எங்களுக்கான பெருமை.
அப்படிப்பட்ட போராளித் தலைவனை தலைவராக கொண்டிருந்த நீங்கள், பெரும் கோரிக்கை கொள்கை ஆவணத்தை முன் வைத்திருக்கிறீர்கள். இந்தக் கொள்கை ஆவணத்தில் நாங்கள் உடன்படுகின்றோம். இந்தக் கொள்கை ஆவணத்தில் நீங்கள் என்ன கோரிக்கைகள் எல்லாம் வைத்திருக்கிறீர்களோ, அதற்கு மே 17 இயக்கம் தனித்தும், உங்களோடு, ஜனநாயக ஆற்றல்களோடு இணைந்தும் போராட்டக் களத்தில் நிற்கும் என்று சொல்லிக் கொள்கின்றேன். தமிழ்த்தேசியப் பெரியாரிய அரசியல் இந்த மண்ணில் நிலை பெறட்டும். இந்த மாநாட்டினை ஒருங்கிணைத்த அனைத்து ஆளுமைகளுக்கும், தலைமைகளுக்கும் தோழமைகளுக்கும் நன்றி சொல்லி விடை பெறுகின்றேன்.