தமிழீழ இனப்படுகொலையை நினைவு கூறும் 16-ம் ஆண்டு நினைவேந்தலை மே 18, 2025 அன்று மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஒருங்கிணைத்தது மே பதினேழு இயக்கம். சாதி-மத அடையாளம் கடந்து, கட்சி வேறுபாடுகளைக் களைந்து இந்த பண்பாட்டு நிகழ்வில் ஒன்றுகூட அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தது. பெருந்திரளான மக்களும், தோழமைக் கட்சி, இயக்கத்தினரும் நினைவேந்தலில் கலந்து கொண்டனர். கடற்கரைக்கு வந்திருந்த மக்களும் இந்நிகழ்வைக் குறித்து கேட்டறிந்து, நினைவேந்தலில் இணைந்து கொண்டவர்.
நினைவேந்தல் நிகழ்வு மய்யம் குழுவினரின் பறையிசையுடன் துவங்கியது. அதையடுத்து, ஈழம் குறித்தான பாடலை குழந்தைகள் பாடினர். அவர்களின் பாடல் மக்களின் மனதில் ஈழத்தமிழர்களின் வலியைக் கடத்தும் விதமாக இருந்தது. ஐயா. வைகோ அவர்கள் நினைவுச் சுடரேற்றி உணர்ச்சி முழக்கமிட்டார். அதைத் தொடர்ந்து தோழர்கள் முழக்கமிட, மக்களும் முழக்கமிட்டனர். பின்னர் சிங்கள இனவெறி அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளுக்கு நினைவேந்தினர். பாலச்சந்திரனின் மணல் உருவத்தின் அடியில், மக்கள் கண்ணீர் பெருக, ஏற்றிய தீபத்தை வைத்து வணங்கினர்.
ஐயா. வைகோ அவர்கள் தமிழீழ இனப்படுகொலை போரையும், விடுதலைப் புலிகள் மீது இந்திய அரசு ஒப்பந்தம் திணித்த வரலாற்றையும், போருக்குப் பின்பாக தமிழீழ மக்களின் நிலையையும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பத்திரிக்கையாளர்களிடம் எடுத்துக் கூறினார். முத்துக்குமாரை போல உணர்ச்சி கொண்ட இளைஞர்களாக மே 17 இயக்கத்தினர் இருப்பதாகப் பாராட்டினார். நினைவேந்தலைத் தொடர்ந்து தமிழீழம் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பத்திரிக்கையாளரிடமும், பின்னால் கடற்கரையிருந்த அமர்ந்திருந்த மக்களிடமும் உரையாற்றினார்.
நினைவேந்தலில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பத்திரிக்கையாளரிடம் கூறியவை :
முதலில் நாங்கள் ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். 16 வருடமாக நினைவேந்தல் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இது 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. இத்தனை ஆண்டு காலம் எங்களை ஆதரித்து இந்த நினைவேந்தல் செய்திகளை உலகெங்கிலும் கொண்டு சென்ற ஊடகங்களுக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றேன். ஈழத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்று சர்வதேச இனப்படுகொலை அறிஞர்கள் வரையறை செய்துவிட்டார்கள். இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நாவினுடைய மனித உரிமையும் அறிக்கை கொடுத்துவிட்டது.
பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் இலங்கை மீது விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் இன்றுவரை இலங்கை மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அங்கே ஜெயவர்த்தனா காலத்திலிருந்து இன்றைக்கு பொறுப்பேற்றிருக்கக்கூடிய தொழிலாளர் நலன் சார்ந்து இயங்கக்கூடிய அரசு என்று சொல்லப்படுகின்ற அன்றைய ஜேவிபியும், இன்றைய என்பிபி-யினுடைய அனுரா அரசாங்கம் வரை தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படவில்லை. இடதுசாரி அரசாக வந்திருக்கக்கூடிய அனுராவின் மீது தமிழர்கள் ஆரம்பக் கட்டத்தில் தமிழர்களுக்கு தீர்வுகள் கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் தமிழர் பகுதியிலிருந்து ராணுவம் 16 வருடமாக வெளியேற்றப்படவில்லை. ஏன் ராணுவத்தை அங்கு நிலைநிறுத்தியிருக்கிறார்கள் என்பதை இதுவரைக்கும் எந்த அரசாங்கமும் சொல்லவில்லை.
ராஜபக்சே அரசோ, ரணில் அரசோ, மைத்திரிபால அரசோ அல்லது அனுரா அரசோ யாருமே இதற்கான விடையை இதுவரைக்கும் சொல்லவில்லை. காணாமல் போனவர்களுக்கு என்று ஒரு தனி ஆணையம் அமைத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று ஐ.நாவிலே தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது இலங்கை அரசாங்கம். ஐ.நா மனித உரிமை அவையில் இந்த தீர்மானம் வந்தபொழுது நான்(திருமுருகன்) இருந்திருக்கின்றேன். இலங்கை ஏற்றுக்கொண்டது. ’ஆபீஸ் ஆஃப் மிஸ்ஸிங் பர்சன்ஸ்’ (OMP) மூலமான காணாமல் போனவர்கள் பற்றியான விவரங்களை நாங்கள் வெளியிடுகின்றோம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அனுரா அரசு வரை வெளியிடப்படவில்லை.
தமிழருடைய நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது இலங்கை ராணுவம். அதுவும் விடுவிக்கப்படவில்லை. காணாமல் போனவர்களுக்கான அந்த தாய்மார்களின் போராட்டம் ஒன்பது ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றன. உலகத்திலே பெண்கள் வீதியிலே அமர்ந்து ஒன்பது ஆண்டுகளாக நடத்தி நாம் பார்த்ததில்லை. ஆனால் இந்த போராட்டம் ஒன்பதாம் ஆண்டாக தாய்மார்களால் ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மூன்று அரசுகள் இதனுடன் மாறிவிட்டன. ஆனால் இதுவரை காணாமல் போனவர் பற்றி யான எந்த விவரமும் கொடுக்கப்படவில்லை. 146798 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட ஆவணங்கள் முன்பே நாங்கள் சமர்ப்பித்திருக்கின்றோம். அங்கே இதற்கான பல்வேறு ஆவணங்களை சர்வதேச அமைப்புகளும் பதிவு செய்திருக்கின்றன. தற்பொழுது மேலதிகமாக 23000 தமிழர்களும் காணவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே ஒட்டுமொத்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை என்பது 169798 பேர் என்கின்ற பட்டியல் இப்பொழுது புதிதாக வெளிவந்திருக்கிறது. இதற்கான பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். இவ்வளவு பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு பாலஸ்தீனத்தில் ஒரு நாளைக்கு 200 பேர் படுகொலை செய்யப்படுகிறார்கள். சர்வதேசம் முழுவதும் பாலஸ்தீன மக்களுக்கு நீதி வேண்டும் என்ற போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்க அரசு வழக்கு தொடுத்திருக்கிறது. இசுரேல் அரசாங்கத்தின் மீது பல நாடுகள் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இந்த சமயத்திலாவது இங்கே இலங்கை அரசு செய்த இந்த இனப்படுகொலை நீதிக்கான ஒரு வழக்கு என்பது சர்வதேச மன்றத்திலே பதிவு செய்யப்பட வேண்டும்.
தமிழ்நாட்டிலே ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் இயற்றப்பட்டது. இலங்கை அரசு ஒரு இனப்படுகொலை அரசு என்றும், அங்கே நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு தீர்வாக தமிழர்களுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட 10/12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகளில் இது பற்றியான எந்தவிதமான விவாதமும் திமுக, அதிமுகவினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் எழுப்பவில்லை. தமிழ்நாடு இது குறித்து பேச வேண்டும் என்ற கோரிக்கையை நான் இந்த சமயத்திலே வைக்கிறேன்.
நாங்கள் இந்த கட்சிகள் மீதான விமர்சனங்களோடு சென்றுவிட விரும்பவில்லை. மாறாக ஆக்கப்பூர்வமாக அவர்கள் செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கின்றோம். நீங்கள் (கட்சிகள்) தான் தீர்மானத்தை கொண்டு வந்தீர்கள். சட்டசபையிலே இதற்காக வாக்களித்தீர்கள். பாராளுமன்றத்தில் இது குறித்தும், மேலவையில் இது குறித்தும் நீங்கள் பேசி அதற்கான தீர்வை கொண்டு வருவதற்கு நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும். உங்களது தேர்தல் வாக்குறுதிகளில் தொடர்ச்சியாக இதை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்றவில்லை என்பதை இச்சமயத்திலே நாங்கள் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
தமிழ்நாட்டில் ஈழப்படுகொலைக்கான நீதி பெறுவதற்கு கட்சி கடந்து, மதம் கடந்து, சாதி கடந்து, தமிழர்களாய் ஒன்று திரள வேண்டும் என்று 16 ஆண்டுகளாக, மே 17 இயக்கம் கோரிக்கை வைத்து வருகிறது. இங்கு கடற்கரையில் நடக்கக்கூடிய நினைவேந்தல் நிகழ்வும் அப்படியாகத்தான் இத்தனை ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இடையிலே ஆறு ஆண்டுகள் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நினைவேந்தல் நடத்தியதற்காக என் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் இருந்தேன். என்னோடு தோழர் டைசன், தோழர் இளமாரன், தோழர் அருண்குமார் உள்ளிட்டவர்கள் நான்கு மாதத்திற்கு மேலாக சிறையில் இருந்தார்கள். அதற்கு பிறகு 2018ல் நாங்கள் மெரினாவிலே நினைவேந்தல் நடத்துவதற்காக முயற்சித்த பொழுது, ஐயா வைகோ அவர்கள் தலைமையில் சென்ற பொழுது, அவரின் மீதும் தோழர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது. 2019-யிலும் வழக்கு பதியப்பட்டது. 2020 /21/22-யிலும் நாங்கள் வழக்கை எதிர்கொண்டோம் இப்படியாக தொடர்ச்சியாக எங்களுக்கு தடை கொடுக்கப்பட்ட பொழுதும் கூட நாங்கள் பின்வாங்கவில்லை.
இந்த கடற்கரையில் நினைவேந்துவது என்பது எங்கள் தமிழர்களுடைய பண்பாட்டு உரிமை என்று போராடி மீட்டெடுத்தோம். அது மட்டுமல்ல 2017-ல் எங்கள் மீது போடப்பட்ட வழக்கை நீதிமன்றத்தில் போராடி அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வைத்திருக்கின்றோம். இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தின் மூலமாக நினைவேந்துகிற உரிமை பெற்றிருக்கிறோம். இந்த சமயத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த இனப்படுகொலைக்கு ஒரு நினைவுச் சின்னத்தை மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்தோம். இப்பொழுது மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
தமிழனுக்கு சொந்தமே இல்லாத கனடா அரசு தமிழனுடைய பூர்வீக நிலமில்லாத கனடா அரசாங்கம் அங்கே இனப்படுகொலைக்கான ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் உலகத்தின் மூத்தக்குடி தமிழ் குடி, அந்த தமிழ் குடி பிறந்த இந்த நிலத்தில் தமிழீழம் அழிக்கப்பட்டதற்கு ஒரு நினைவுச் சின்னம் இல்லை என்கின்ற ஆதங்கத்தையும் அந்த ஏமாற்றத்தையும் இந்த சமயத்தில் நாங்கள் பதிவு செய்கின்றோம்.
தமிழ்நாட்டினுடைய கட்சிகள் தங்களுக்குள் இருக்கக்கூடிய வேறுபாடுகளை எல்லாம் களைந்து இந்த நினைவு சின்னம் அமைப்பதற்கு முன்வர வேண்டும் என்கின்ற வேண்டுகோளை இச்சமயத்திலே முன்வைக்க விரும்புகிறோம். மேலும் சட்டசபையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலை, அந்த இனப்படுகொலைக்கு தீர்வாக நீதி கிடைக்கின்ற விதமாக அங்கே தமிழர்களிடத்திலே ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும், சர்வதேச விசாரணை இலங்கையரசின் மீது நடத்த வேண்டும் என்கிறபடி அந்த தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என இச்சமயத்திலே நாங்கள் முன்வைக்க விரும்புகிறோம்.
நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். ஆயிரம் கருத்து மோதல்கள் இருக்கலாம். நமக்குள்ளாக தேர்தல் ரீதியாக வேறு வேறு கூட்டணி இருக்கலாம். ஈழம் அழிக்கப்பட்டதிலே நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று அந்த மக்களுக்கு நீதி பெற்று தர வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
அது பக்கத்து நாட்டு பிரச்சனை. நீங்கள் என் பேசுகிறீர்கள் எனப் பலர் கேட்கிறார்கள். பக்கத்து நாட்டு பிரச்சனை, நாங்கள் பேச வேண்டாம் என்றால், பக்கத்து நாட்டு பிரச்சனையில் எதற்கு இந்தியா தலையிட்டது என்று கேட்க விரும்புறோம். பக்கத்து நாட்டு பிரச்சனையில் அந்த மக்கள் தீர்விற்காக போராடிக் கொண்டிருக்கும் பொழுது சிங்கள மக்களுக்கு ஆயுதம் கொடுக்கின்ற உதவியை இந்திய அரசாங்கம் ஏன் செய்தது என்கின்ற கேள்வியை நாங்கள் எழுப்புறோம். ஆகவே இது பக்கத்து நாட்டு பிரச்சனை அல்ல. இந்தியா தலையிட்ட காரணத்தினால் தான் தமிழர்களுக்கு இதுவரைக்கும் நீதி கிடைக்கவில்லை.
சிங்களர்களை வீழ்த்துவது தமிழர்களுக்கு பெரிய விசியமாக இல்லை. சிங்கள ராணுவத்தை விரட்டுவதற்கு புலிகளுக்கு பெரிய சிரமம் இருக்கவில்லை. ஆனால் சிங்கள ராணுவத்திற்கு இந்தியா உதவி செய்த காரணத்தினால் தான் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். ஆகவே இந்தியா தலையிடாமல் இருந்திருந்தால் நாங்கள் ஆதரவு தெரிவிப்பது என்பதிலே பெரிய அக்கறை செலுத்தி இருக்க வேண்டியதில்லை. ஆனால் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு சிங்கள அரசிற்கு ஆதரவு தெரிவித்து தமிழரை கொலை செய்வதற்கு உதவி செய்த காரணத்தினால் தமிழ்நாடு காலம் முழுவதும் தமிழீழ மக்களோடு நிற்கும். எப்பேர்ப்பட்ட அடக்கு முறையை டெல்லி இந்திய அரசு ஏவினாலும் தமிழன் இருக்கின்ற வரை ஈழத் தமிழனுக்கு துணையாக நிற்பான். கட்சி கடந்து நிற்பான் என்பதை இச்சமயத்தில் நாங்கள் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.
ஆகவே இங்கே ஈழத்திற்கு எதிராக முரண்பட்டு பேசக்கூடியவர்கள் அது அண்டை நாட்டு பிரச்சனை என்று சொன்னால் அண்டை நாட்டு பிரச்சனையில் எதற்கு இந்தியா தலையிடுகிறது என்ற கேள்வியை டெல்லியில் பார்த்து கேளுங்கள். டெல்லிக்காரன் எதற்கு அங்கு படை அனுப்பினான், அங்கு அவனுக்கு எதற்கு ஆயுதம் தருகிறான், அவனுக்கு எதற்கு ராணுவ பயிற்சி தருகிறான், அவனுக்கு எதற்கு பொருளாதார உதவி தருகிறான் டெல்லிக்காரனை பார்த்து கேளுங்கள். நான் கொடுக்கக்கூடிய வரிப்பணத்தை தூக்கி சிங்களனுக்கு தூக்கிக் கொடுத்தால் எங்கள் தமிழனுக்காக நாங்கள் நிற்போம். அதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறோம். ஆகவே தமிழ்நாட்டில் தமிழத்திற்கான ஆதரவு களம் ஒரு நாளும் வீழ்ந்து விடவில்லை. அது மேலும் மேலும் புத்துணர்ச்சி பெற்று உத்வேகம் அடைந்து வருகிறது என்பதை இந்த 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். மேலும் வலிமை பெற்று அந்த மக்கள் தங்கள் உரிமையை மீட்டெடுப்பார்கள். தமிழீழம் வெல்லும்.
அதே சமயத்தில் இன்னொன்று சொல்லுகிறேன். இந்த அனுரா அரசு, ஜேவிபி அரசு, ஒரு பாட்டாளி வர்க்க அரசாக இருக்கப் போகிறது என்று இந்தியாவின் இடதுசாரிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை ஆதரிக்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், தமிழர்களினுடைய அமைதி ஒப்பந்தத்தை முறிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியது இதே அனுராவினுடைய கட்சி தான். அனுரா அதன் முன்னணியாக செயல்பட்டவர். அது மட்டுமல்ல அமைதி ஒப்பந்தத்தை முறித்து விடுதலைப் புலிகள் மீது போர் தொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்து, அந்த கோரிக்கை ஏற்றால் தான் நாங்கள் ராஜபட்சேவினுடைய ஆட்சிக்கு ஆதரவு தருவோம் என்று சொல்லி பதவி ஏற்றவர்கள் அனுராவின் தலைமையில் இருக்கக்கூடிய ஜேவிபினர். அது மட்டுமல்ல இவ்வாறாக நீங்கள் போர் தொடுக்கவில்லை என்றால் நாங்கள் ஆட்சியிலிருந்து வெளியேறி இந்த ராஜபட்சே ஆட்சியை கவிழ்ப்போம் என்று சொன்னவர்கள் அனுராவினுடைய ஜேவிபியினர். இப்படிப்பட்ட ஆட்சிதான் அங்கு இருக்கிறது. அங்கு ஏதோ பாட்டாளி வர்க்க அரசு எல்லாம் வந்துவிட்டது இடது அரசு வந்துவிட்டது என்றெல்லாம் சிலர் நம்பி கொண்டிருக்கிறார்கள்.
அனுரா அரசு வந்ததற்கு பிறகு முள்ளிவாய்க்கால் பகுதியில் கிட்டத்தட்ட 6000 ஏக்கர் நிலத்தை இலங்கை அரசு எடுத்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் பகுதியில் இருக்கக்கூடிய 6000 ஏக்கர் நிலத்தை எடுத்தால், அங்கு இனப்படுகொலைக்கான சாட்சியங்கள் அளிக்கப்படும்.
அது மட்டுமில்ல 250 ஏக்கரில் புத்த விகாரை அங்கு அமைக்கிறார்கள். இலங்கையில் சிங்களர் பகுதியில் கூட இடந்த 250 ஏக்கரில் புத்த விகாரை கிடையாது. தமிழர் பகுதியில் 250 ஏக்கரில் புத்த விகாரை அமைப்பதுதான் ஒரு இடதுசாரி அரசினுடைய யோக்கியதையா என்பதை இச்சமயத்தில் கேட்கிறேன். ஆகவே இந்தியாவின் இடதுசாரிகள் ஜேவிபி அரசை அம்பலப்படுத்துவதும், தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான பொறுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இச்சமயத்திலே சொல்லிக் கொண்டு, இந்த நினைவேந்தல் என்பது தொடர்ச்சியாக நடைபெறும். தமிழ் ஈழத்திற்கான நீதி கிடைக்கின்ற வரை தமிழருக்கான நீதி கிடைக்கிறவரை நடக்கும் என்பதை இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். – என பத்திரிக்கையாளர்களிடம் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பேசினார்.