சென்னை குடிசைப் பகுதி மக்கள் அமைப்பு சார்பாக 1994-ல் நடந்த மாநாட்டில் முன்வைத்த கோரிக்கைகள்

சென்னையில் வசிக்கும் குடிசைப் பகுதி மக்கள் அமைப்பாய் திரண்டு 1994 ஆம் ஆண்டு அரசிடம் முன் வைத்த கோரிக்கைகள் பற்றியான ஆவணங்களை தகவல் பதிவு செய்தவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர், தோழர். கௌதம சன்னா அவர்கள் தனது முகநூலில் டிசம்பர் 31, 2015 அன்று பகிர்ந்தவை குறித்தானது.
 

சென்னை குடிசைப் பகுதி மக்கள் அமைப்பு
நான்காவது மாநாடு மற்றும் சர்வதேச பெண்கள் தின பேரணி
நாள்: 30.03.1994 மெமோரியல் அரங்கம் சென்னை 600003.
 
அறிக்கை:
 
சென்னை குடிசைப் பகுதி மக்கள் அமைப்பு சென்னையில் உள்ள 266 குடிசை பகுதிகளை உள்ளடக்கியது. சாதி, மத, கட்சி அரசியல் சார்பற்ற எமது அமைப்பு, சென்னையில் உள்ள 21 லட்சம் ஏழை குடிசைவாசிகளின் குடியிருப்பு உரிமைக்காக போராடி வருகிறது. இப்போராட்டம் கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
 
சென்னையை – மாநகரமாக முன்னேறுவதற்காக நூற்றுக்கு நூறு சதவீதம் உழைத்து வருபவர்கள் குடிசை மக்கள் ஆவர். சமூகம், தொழில் ரீதியாக எம்மக்களை இழிவுபடுத்திய போதும்கூட, இழிவானவை என கருதப்பட்ட தொழில்களை எல்லாம் செய்து எம்மக்கள் இந்நகரை முன்னேற்றத்திற்காக உழைத்து வருகின்றனர். இத்தகு கடுமையான உழைப்பை மேற்கொண்டிருந்தும் எம் மக்களின் வாழ்க்கைத் தரம் ஒரு சதவீதம் கூட முன்னேறவில்லை.
 
குடிசைப் பகுதி மக்களின் வாழ்க்கை தொடர்ந்து அச்சம் உள்ளதாகவே உள்ளது. உழைக்கவும் உயிர் வாழவும் தொழில் சார்ந்த குடியிருப்பு உரிமை போராட்டத்திற்கு குடிசை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் குடிசைப்பகுதி அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நடைபாதை மக்களின் குடியிருப்பு நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசம் அடைந்து வருகிறது. நகரின் மூத்த குடிமக்களாகிய குடிசை மக்கள் நகரில் இருந்து தூக்கி வெளியே வீசப்படுகின்றனர். சென்னையை எழில்மிகு நகரமாக்க வேண்டுமெனில் குடிசை மக்களை சென்னையில் வந்து வெளியேற்ற வேண்டும் என்று தமிழக அரசு கூறுகிறது.

சென்னை நகரின் அழகு கெடுவதற்கு குடிசை மக்கள் தான் காரணம் எனும் பொருள்பட அரசு திட்டமிட்டு குற்றம் சுமத்துகிறது. அப்படியெனில் இதுவரையில் சென்னை நகரின் அசிங்கங்களை அகற்றித் தூய்மைப்படுத்தியவர்கள் யார்? என்பதை அரசு சிந்திக்க மறுக்கின்றது.

”நகரழகு திட்டம்”, “எழில்மிகு சென்னை 2000” எனும் பெயரால் நூற்றாண்டு காலமாக குடிசை மக்கள் ஆண்டு அனுபவித்து வந்த நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது. இதை எதிர்த்து மக்கள் நடத்தி வருகின்ற குடியிருப்பு உரிமை போராட்டங்களையும், நீதிமன்ற தடை உத்தரவுகளையும் அரசு மதித்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் பலாத்காரமாக குடிசை மக்களை வெளியேற்றி குடியிருப்புகளை அரசு அளித்து வருகிறது. சென்னை நகரில் குடிசை மக்கள் வாழ்வதற்கான உரிமை முற்றிலும் மறுக்கப்படுகிறது.
 
குடிசை மக்களின் குடியிருப்பு உரிமைகளுக்காக – சென்னை குடிசைப்பகுதி மக்கள் அமைப்பின் சார்பில் மாநாடுகள், பேரணிகள், கையெழுத்து இயக்கங்கள், கருத்தரங்குகள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் போன்றவைகள் மூலம், குடிசை மக்களின் குடியிருப்பு உரிமையை பாதுகாக்க அரசாணை வலியுறுத்தி வருகின்றது. அந்த வரிசையில் கடந்த 18.11.1991 ஆம் தேதியன்று சென்னை குடிசை பகுதி மக்கள் அமைப்பு பெண்கள் பிரிவு சார்பில் மாபெரும் கோரிக்கை பேரணி  நடைபெற்றது. பேரணியின் இறுதியில் மாண்புமிகு தமிழக அமைச்சருக்கு 13 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கைகளுக்கு அரசு தரப்பில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் செயலாளரால் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை ஏமாற்றம் அளிப்பதாகவும் பொறுப்பற்ற வகையிலும் உள்ளது.
 
அரசின் இத்தகைய பொறுப்பற்ற போக்கைக் கண்டித்தும், தங்கள் குடியிருப்பு உரிமைகளை பாதுகாக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் கடந்த 30.03.94 அன்று 4-வது மாநாடு நடத்தப்பட்டது.
மாநாடு நடத்த அனுமதித்த போலீசார், பேரணி நடத்த அனுமதி மறுத்தனர். எனினும் ஏற்கனவே தீர்மானத்திருந்தபடி, மாநாட்டன்று காலை 9 மணி அளவில் சென்னை பாரிமுனையில் மக்கள் திரண்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் கைக்குழந்தையுடன் ஊர்வலத்துக்கு வந்திருந்தனர். ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என கூறி திரளாக திரண்டு இருந்த மக்களை கலைக்க போலீசார் முயன்றனர்.


 ஆனால் குடிசை பகுதி பெண்கள் இதை நிராகரித்தனர். ”நாங்கள் அராஜகவாதிகள் அல்ல, நாங்கள் ஏழை குடிசைவாசிகள், சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டியும் எங்கள் குடியிருப்பு உரிமையை வலியுறுத்தியும் பேரணியை நடத்துகிறோம். எங்களை கைது செய்தால் அது பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்” என்று கூறினர். பெண்களின் இந்த எழுச்சிக்கு போலீசார் பணிந்தனர்.

குடிசைப்பகுதி மக்களின் கோரிக்கைப் பேரணி குறளகம் அருகில் இருந்து புறப்பட்டது. அங்கிருந்து பார்க் டவுன் மெமோரியல் அரங்கை அமைதியாக அடைந்தது. எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. தங்கள் குடியிருப்பு உரிமை குரலை முழக்கங்களாக எழுப்பியவாறு பெண்கள் பேரணியில் வந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடியிருப்பு உரிமை முழக்கங்களையும் எழுப்பினர். காலை 11:00 மணி அளவில் பேரணி மெமோரியல் அரங்கத்தை அடைந்தது. அங்கு சென்னை குடிசைப்பகுதி மக்கள் அமைப்பின் 4-வது மாநாடு துவங்கியது.

குடிசை மக்கள் மீது தொடரப்பட்டு வருகின்ற உரிமை மீறல்களை கண்டித்தும் குடிசை மக்களின் கோரிகையை வலியுறுத்தி நடைபெற்ற மாநாட்டிற்கு மக்கள் இயக்க மைய இயக்குநரும் சென்னை குடிசை பகுதி மக்கள் அமைப்பின் ஆலோசகரமான திருமிகு. வி. ஜான் தேவவரம் தலைமை தாங்கினார். பிரச்சார குழு தலைவர் திருமிகு. த.மு. பழனி அவர்கள் முன்னிலை வகித்தார். நீதிபதி டாக்டர். சி. ராமகிருட்டிணன், பௌத்தப் பெரியார் சுந்தரனார், திருமிகு சக்திதாசன், திருமிகு. லி. கருப்பன், இ.ஆ.ப. (ஓய்வு), டாக்டர் A. சேப்பன், வழக்கறிஞர் P. விஸ்வநாத கக்கன், டாக்டர் M. நாகப்பன், திருமிகு. P. சந்திரசேகரன், திருமிகு. M.U.  கிருஷ்ணன். வழக்கறிஞர். சாந்தகுமாரி, பேராசிரியை. நிர்மலா அருள்பிரகாஷ், வழக்கறிஞர் S.J. ராஜா, திருமிகு. கு. துரைராஜ், திருமிகு. திண்டிவனம் ஸ்ரீராமலு, திருமிகு K.N. அரங்கநாதன், திருமிகு N.A. கருணாகரன், திருமிகு. K.R.M. ஆதிதிராவிடர், திருமிகு P. மனோகரன் (மதுரை), திருமிகு. சூசை மைக்கேல் ஆகியோர் மாநாட்டு தீர்மானத்தை ஆதரித்து வாழ்த்துரை வழங்கி பேசினர். திரு. எம். ரஃபீக், திரு. ஆர்.எஸ். ராஜூ, திரு. கே. பழனி, திருமதி. A. அன்னக்கிளி, திருமதி. பி. மேரி, திருமதி. என். வளர்மதி இன்னும் பல குடிசைப் பகுதிகளின் தலைவர்கள் தலைவிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
 
பல்வேறு தன்னார்வ குழுக்களின் தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மக்கள் அமைப்பினர், குடிசை பகுதி தலைவர்கள், பெண்கள் அமைப்பினர், சமூக சேவகர்கள் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
மாநாட்டு மண்டபத்தில் குடிசை மக்களில் வாழ்நிலை, குடியிருப்பு பிரச்சினைகள் மற்றும் குடியரசு உரிமைப் போராட்டங்களை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டின் இறுதியாக அரசினை வலியுறுத்தி கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
தீர்மானங்கள்:

1. அரசு நிலங்களிலும், பொது நிலங்களிலும், தனியா நிலங்களிலும், அறக்கட்டளை மற்றும் சமய அறக்கட்டளை இடங்களிலும் வாழ்கின்ற குடிசை மக்களுக்கு, கணவன் – மனைவி பெயரை இலவச கூட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.
அ) குடிசை மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலங்களின் தன்மைகள் பற்றி அரசு அறிவிக்க வேண்டும். அந்த நிலங்களில்; ஆட்சேபனைக்குரிய (அங்கீகரிக்கப்படாத) நிலங்கள் எவை? ஆட்சேபகரமற்ற (அங்கீகரிக்கப்பட்ட) நிலங்கள் எவை? எனும் விவரத்தை அரசு ஒரு அறிக்கை மூலம் உடனே வெளியிட வேண்டும்.
ஆ) குடிசை மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலங்களில் ஏதாவது ஒன்று அரசுக்கு தேவைப்படும் போதெல்லாம்; குடிசை மக்கள் எத்தனை நூற்றாண்டுகளாக வாழ்ந்து இருந்தாலும் அன்று முதல் அப்பகுதியை ஆட்சேபகரமான பகுதி என சட்டத்தின் மூலமோ – அரசாணை மூலமோ அறிவித்து குடிசைகளை பிரித்து அழித்து வருகின்ற தற்போதய நடவடிக்கைகளை அரசு உடனே கைவிட வேண்டும்.
இ) குடிசை மக்களின் முன் முயற்சியினால் சுயமாக வளர்ச்சி அடைந்துள்ள பகுதிகளுக்குக்கூட நேரடியாக மனைப்பட்டா வழங்கப்படாமல், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் (TUDP) கீழ் பணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கும் அரசின் கொள்கையை கைவிட வேண்டும்.

2. குடிசைப் பகுதிகள் அமைந்துள்ள தனியார் நிலங்களை அரசுக்கு ஒப்படைக்குமாறு தனியாரிடம் கோருவதையும், அவர்களின் வசதிகளுக்காக வளைந்து செல்லக்கூடிய நில மறுபங்கீட்டுத் திட்டத்திற்கான அரசாணையையும் அரசு உடனே கைவிட வேண்டும். 
அ) குடிசை மக்கள் வாழ்ந்து வருகின்ற தனியார் நிலங்களும் ஒவ்வொன்றும் மூன்று ஏக்கருக்கு குறையாத நிலப்பரப்பை கொண்டுள்ளது. அத்தகைய தனியார் நிலங்களில் 400-க்கும் மேற்பட்ட குடிசை பகுதிகள் உள்ளன. எனவே காலியாக உள்ள நிலங்களை மட்டுமே நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டத்தின் கையகப்படுத்த முடியும் எனும் உச்சவரம்பில் தற்போதைய விதியினை தளர்த்த வேண்டும். குடிசைகள் அமைந்துள்ள தனியார் நிலங்களையும் விதிக்கு உட்படுத்தி நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் உபரி நிலங்களாக அறிவித்து கையகப்படுத்த வேண்டும். அவ்வாறு கையகப்படுத்திய நிலங்களை அப்பகுதியில் வாழும் குடிசை மக்களுக்கே இலவச மனை பட்டா செய்து வழங்க வேண்டும்.


3. குடிசை மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டப்படி வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கக்கூடிய தமிழக அரசின் (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை) அரசாணை (எம்.எஸ். 1488/03.11.88)-யை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அ) இவ்வரசாணைப்படி மாற்றிடம் வழங்காமல் குடிசைகளை அகற்ற தடை விதிப்பதை ஒரு சிறப்பு அம்சமாக அரசு சித்தரிக்கிறது. அதாவது; மக்கள் குடியேறி 50-100 ஆண்டுகள் ஆனாலும் அல்லது பழமை வாய்ந்த எந்த பகுதி குடிசை மக்களுக்கானாலும் மாற்றிடம் கட்டப்பட்டு விட்டால், அப்பகுதியை அரசு கையகப்படுத்தலாம் என்று அர்த்தமும் இவ்வாணையில் பொதிந்துள்ளது. எனவே குடிசை மக்களின் பாரம்பரிய உரிமைகளைப் பறிக்கும் இவ்வரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்துகிறோம்.
ஆ) மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் போடப்பட்ட அரசாணை (எம்.எஸ் 672/10.07.83) அதாவது 30.06.1984-க்கு முன்பு இருந்து குடிசை மக்கள் எந்த இடத்தில் வாழ்ந்து வருகின்றார்களோ, அந்த இடத்தை மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் இலவச மனை பட்டா வழங்க வேண்டும் என்று குறைந்தபட்ச உத்திரவாத்தையாவது அவ்வரசாணை அளிக்கிறது. எனவே தமிழக அரசு அவ்வரசாணையை மீண்டும் கொண்டுவந்து அமல்படுத்த வேண்டும்.

4. குடிசை/நடைபாதை மக்களை வெளியேற்றுவதற்காக தீட்டப்பட்டுள்ள எல்லா சட்டங்களையும் அரசு திட்டங்களையும் உடனே நிறுத்த வேண்டும். சென்னையில் சுமார் மூன்று லட்சத்திற்கு அதிகமான குடிசை மக்களின் 55 ஆயிரம் குடிசைகளை பிரிப்பதற்கு தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் படி குடிசைகளை அகற்றுவதற்கு வாரியம் மற்றும் அரசு துறையில் நடவடிக்கைகளில் இறங்கி விட்டன.
அ) தொழிலை மையப்படுத்தியே குடிசை பகுதிகள் அமைந்துள்ளன. பணம் கொடுத்து நிலம் வாங்கி வீடு கட்டி வாழ வழியற்று உள்ளதினால்தான் நடைபாதைகளிலும் – கழிவுநீர் கால்வாய் ஓரங்களிலும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் குடும்ப உறவுக்காக மட்டுமே வருமானத்தை ஈடுபட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மக்களை சென்னையில் இருந்து வெளியேற்றி வேளச்சேரி, கொடுங்கையூர் போன்ற இடங்களில் மாற்றிடம் கொடுக்கப்படுகிறது. அங்கு அளிக்கப்படுகின்ற நிலம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு 20 ஆண்டுகளுக்கு பணம் கட்டத் தவறினால், மீண்டும் அங்கிருந்து விரட்டப்படுவதற்கான நிபந்தனையும் விதிக்கப்படுகிறது.
ஆ) இத்திட்டத்தினால், தற்போது நடைமுறையில் இருக்கும் குடியிருப்பு நில உரிமைகள் குடிசை பகுதி மக்களின் பாரம்பரிய உரிமைகள் ஆகியவற்றை அரசு மீறுகின்றது. இம்மக்களின் வாழ்க்கை உரிமையையும், வேலைவாய்ப்பு உரிமையையும் அரசு பறிக்கிறது. எனவே இந்த ராட்சத திட்டத்தை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உடனடியாகக் கைவிட வேண்டும்.

5. அரசு ஒரு பகுதியில் தன் திட்டத்தை செயல்படுத்தும் முன் குடிசை மக்களிடம் திட்டம் பற்றி கூறப்படுதாக அரசு பதில்கள் பல கூறியிருந்தாலும், உண்மையில் அது நடைமுறையில் இல்லை. நடைபாதை மக்களை மட்டும் தான் முன்னறிவிப்பு இன்றி அகற்றுவதற்கு அரசாணை வழிவகுப்பதாக அரசு கூறுகிறது. ஆனால், அரசின் தேவைக்கு நிலம் தேவைப்படும்போது எல்லாம் பாரம்பரியம் மிக்க குடிசைப் பகுதிகளைக்கூட நடைபாதை குடியிருப்புகள் என அறிவித்து, அப்பகுதி குடிசை மக்களை நிர்பந்தமாக அரசு வெளியேற்றம் செய்து வருகிறது.
அ) எனவே தவிர்க்க இயலாத சூழ்நிலையில் குடிசை மற்றும் நடைபாதை மக்களுக்கு மறுகுடியிருப்பு செய்ய நேர்ந்தால், சம்பந்தப்பட்ட மக்களுக்கு முழு விபரமும் தரப்பட்டு, எதற்காக இந்த திட்டம் தேவை என்பதற்கான காரணங்களை வெளியிட்டு, சம்பந்தப்பட்ட மக்களின் சட்டபூர்வமான / எழுத்து வடிவமான ஒப்பந்தம் / உடன்பாடு செய்த பின்னரே திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.

6. மக்கள் விரும்பும் அனைத்து வசதிகளையும் கொண்ட மாற்றிடத்தை தயார் நிலையில் வைத்த பின்னரே, மக்களை மாற்றுவதற்கு அனுப்ப வேண்டும். இதுவரையில் அம்மக்கள் அனைத்து வசதிகளையும் இலவசமாய் அனுபவித்து வந்துள்ளது போலவே, மாற்றிடத்தில் அளிக்கப்படுகின்ற நிலம், அடிப்படை வசதிகள் / சேவைகள் அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும். அத்துடன், பொது விநியோகமுறை, கல்வி, போக்குவரத்து, கட்டுப்படியாகக் கூடிய கடன் / மானியம் / நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை உறுதி செய்யும் சட்டபூர்வமான உடன்பாடு மூலம் மக்களை பாதுகாக்க வேண்டும். உலக வங்கியிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்காக மனைகள் மட்டும் குடியிருப்புகளுக்காக வசூலுக்கு பணம் தொகை நிறுத்த முடியாது என அரசு கூறுகிறது. ஆனால் உலக வங்கியில் இருந்து அரசு கடன் பெறுவதற்கும் பாரம்பரியமாக குடியிருந்து வருகின்ற குடிசை பகுதியில் மக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை.
அ) அத்துடன் சுயமாக முன்னேறி கொண்ட குடிசை பகுதிகளையும் அரசு தன்னிச்சையாக உலக வங்கி திட்டத்தின் கீழ் கொண்டு வருவது என்ன நியாயம் இருக்கிறது? ஏற்கனவே குறைந்த வருமானமும், விலைவாசி உயர்வும், வேலையின்மையும், அதனால் ஏற்பட்டுள்ள கடன் சுமைகளையும் தாங்கிக் கொண்டு இருக்கும் ஏழை, எளிய குடிசைவாழ் மக்கள் மீது, மேலும் கடன் சுமையை சுமத்துவதில் மூலம் குடிசை மக்களை அரசு மேலும் பின்னோக்கி தள்ளி வருகிறது.

7. அத்துடன் மாடி வீடு கட்டும் திட்டத்தை எந்த குடிசைப் பகுதி மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புதான் அதிகரித்து வருகிறது. மக்களின் விருப்பம் இல்லாத திட்டமான மாடி குடியிருப்பு திட்டத்தை மக்கள் மீது திணித்து அக்குடியிருப்புகளுக்காக கட்டாய வசூல் செய்தும், கட்டத்தவறினால்  அம்மக்களை அக்குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தீவிரமாக செய்து வருகிறது. இத்தகைய அரசின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே மக்கள் விரும்பாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்காகவும், அதனை பராமரிப்பதற்காகவும் வசூலிக்கப்படும் கட்டாய வசூல் திட்டத்தை அரசு உடனே கை விட வேண்டும்.

8. ஏற்கனவே கட்டப்பட்டு – குடியிருந்து வருகின்ற அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ள நிலம் மற்றும் வீடுகளை இலவச உரிமையாக்க வேண்டும். வாடகை வசூலை நிறுத்த வேண்டும். வாடகை பாக்கிக்காக குடியிருப்போரை வெளியேற்றும் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
அ) நிதிநிலை பற்றாக்குறையின் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளை இலவசமாக வழங்க இயலாது என அரசு கூறுகிறது. அடுக்குமாடி கட்டும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருப்பதாகவும் அதனை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி போவதாகவும் தமிழக சட்ட அமைச்சர் அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி, அது பற்றிய செய்தி நாளிதழிகளில் வெளிவந்துள்ளது. அந்த அளவுக்கு எதிர்ப்பு நிறைந்த அடுக்குமாடி திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும். அதன் மூலம் நிதிநிலை பற்றாக்குறைய அரசு தவிர்க்க வேண்டும்.

9. அடுக்குமாடி வீடுகள் கட்டும் திட்டதற்காக குடிசைப்பகுதி நிலங்களை கையகப்படுத்தும் வழக்கத்தினை, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் கைவிட வேண்டும். குடிசைப்பகுதி மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், அவர்களின் வீடுகளில் உள்ள நிலங்களுக்கு இலவச மனைப்பட்டா கிடைக்க உதவி செய்தல், மறு குடியிருப்பு தேவைப்படுகிற குடிசைப்பகுதி / நடைபாதை மக்களுக்கு ஆதரவு தருதல், சுலப கடன் வசதி மற்றும் மானியம் கிடைக்க வகை செய்தல் இவற்றிலேயே வாரியம் கவனம் செலுத்த வேண்டும். உலக வங்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக குடிசை மக்களை பிழிந்தெடுப்பதை அரசு நிறுத்த வேண்டும்.

11. அரசுக்கு சொந்தமான நிலங்களில் வாழும் எவரும் ”ஆக்கிரமிப்பாளர்கள்” என்று கருதப்படுவார்கள் என்று அரசு கூறுகிறது. பெரும்பகுதி மக்கள் நீண்ட நெடுங்காலமாக அரசு மற்றும் தனியார் நிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள். மக்கள் குடியேறிய பிறகும் கூட நிலங்களை அரசு கையகப்படுத்தி, அதனை அரசின் மூலமாக மாற்றிக் கொண்டுள்ளது. அதே சமயத்தில், அரசு முன்வந்து சில பகுதிகளில் குடிசை மக்களை குடியமர்த்தியும் உள்ளது.
அ) அதன்படி 1. அரசே குடியமர்த்திய பகுதிகள், 2. மக்கள் குடியேறி வெகு நாட்களுக்கு பின் அந்நிலத்தை அரசு தன்வசம் எடுத்துக் கொண்ட பகுதியில், 3. வெகு காலங்களுக்கு முன்பு இருந்து மக்கள் குடியிருந்து வருகின்ற பகுதிகள், 4. வேறு வழியின்றி ஏற்பட்டுவிட்ட நடைபாதை குடியிருப்பு பகுதிகள் போன்று இன்னும் பலவிதமாக பிரிக்கலாம்
ஆ) அரசே குடியமர்த்திய பகுதிகளுக்கும்கூட இதுவரையில் மனைப்பட்டா வழங்கப்படாதது அரசின் தவறே தவிர, மக்கள் புரிந்துள்ள குற்றமல்ல. மேலும் அரசினால் குடியமர்த்தப்பட்ட பொழுது அனுபவ பாத்தியம் (அனுபவ உரிமை) உள்ளவர்களாக இருந்தவர்கள்; அவர்களின் நிலங்களை அரசு திரும்ப பெற்றவுடன் அதே மக்கள் ஆக்கிரமிப்பாளர்களாக (குற்றவாளியாக) பெயர் மாற்றம் செய்யப்படுகிறார்கள். அதேபோன்று தனியார் நிலங்களில் ”அனுபவ பாத்தியமுள்ளவர்களாய்” இருந்த குடிசை மக்களின் நிலத்தை, அரசு கையகப்படுத்தியவுடன் அம்மக்கள் ”ஆக்கிரமிப்பாளர்கள்” என சித்தரிக்கப்படுகிறார்கள்.
ஆ) ஆக அரசு தன் விருப்பம் போல் மக்களை பெயர் மாற்றம் செய்து அவர்களின் குடியிருப்பு உரிமைக்கும், மாண்புக்கும் களங்கம் விளைவிக்கும் செயலை செய்து வருகின்றது. இதனால் குடிசை மக்களின் வன்மையான கண்டத்திற்கு அரசு உள்ளாகி வருகின்றது. அரசு தன்னுடைய பாதுகாப்புக்காக மக்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை ஏவியிருப்பதும் கண்டிக்கத்தக்கது. அத்தகைய குற்றவாளிகள் பட்டத்தை ரத்து செய்ய வேண்டியது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என அரசு தரப்பில் கூறப்பட்டு ஒரு பதிலில் கூறப்பட்டுள்ளது.
இ) நகர்ப்புற ஏழையாகிய குடிசை / நடைபாதை மக்களும் இந்நாட்டில் குடியுரிமை பெற்றவர்கள் – குடிமக்கள் என்கிற முறையில் அரசியல் அமைப்பு சட்டத்தினால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். இம்மக்களே ”ஆக்கிரமிப்பாளர்கள்”, “சமூக விரோதிகள்” குடிசைப் பகுதியை ”கைப்பற்றிக் கொள்பவர்கள்” என முத்திரையிடுவது அவர்களின் மாண்புக்கும், சுயமரியாதைக்கும் களங்கம் விளைவிக்கின்ற செயலாகும். எனவே 1982 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ”தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்ட காவல் சட்டம்” பிரிவு 14-இன் கீழ் முத்திரையிடப்பட்டுள்ள குற்றவாளிகள் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் இதே போன்ற வார்த்தைகளை அரசின் எல்லா சட்டங்களிலிருந்தும் அரசாணைகள் மற்றும் அரசியல் விவாதங்களில் இருந்தும் நீக்க வேண்டும்.
 
12. குடியிருப்பு என்பது அனைவருக்குமான ஒரு அடிப்படை உரிமை / குடியிருக்கும் உரிமை ஒரு அடிப்படை உரிமை என இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதனை ஏற்படுத்த வேண்டியதின் அவசியத்தை மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் ஒன்று உள்ளது நிறைவேற்ற வேண்டும்.

10. நில முதலாளிகள் தப்பித்துக் கொள்வதற்கு வசதியாக உள்ள, தமிழ்நாடு நகர்ப்புற நில (உச்சவரம்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல்) சட்ட ”விதிவிலக்குகளை” உடனே நீக்குவது இச்சட்டத்தினை கடுமையாக நிறைவேற்ற வேண்டும். உபரி நிலங்கள் / உபரி என அறிவிக்கப்பட்ட நிலங்கள், கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், வழக்கில் உள்ள நிலங்கள் ஆகியவை பற்றிய ஆய்வறிக்கை ஒன்றினை நகர்புற உச்சவரம்பு மற்றும் வரிதுறையினால் வெளியிடப்பட வேண்டும். இச்சட்டத்தின் கீழ் கையாகப்படுத்தப்பட்ட நிலங்களில் குடிசை பகுதி மக்களுக்கு வீடு கட்டுவதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். இந்நிலங்களில் அரசு அலுவலங்கள் கட்டவோ, தனியாருக்கு குத்தகைக்கு விடவோ கூடாது.
அ) வருவாய் துறை நிலங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடிசைப் பகுதியில் உள்ளன. இங்கு குடியிருந்து வருகின்ற குடிசை மக்கள் அரசுக்கு பல்வேறு வரிகளைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் இப்பகுதியை குடிசை மாற்று வாரியம் தன் பணி திட்டத்தின் சேர்த்துக் கொள்வதின் மூலம், மேலும் 20 ஆண்டுகளுக்கு மக்களை சுரண்டுகிறது. அத்துடன் அப்பகுதி நிலத்தையும் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சொந்தமாக்கிக் கொள்கிறது. எனவே, சென்னை மாவட்ட ஆட்சித்தலைவரின் அதிகாரத்துக்குட்பட்ட வருவாய் துறை நிலங்களை தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்திற்கு “நிலமாற்றம்” செய்வதை உடனே நிறுத்த வேண்டும். அங்கு குடியிருக்கும் ஏழை எளிய குடிசை மக்களுக்கே அந்நிலத்தில் இலவச மனைப்பட்டா செய்து வழங்க வேண்டும்.

13. ஒரு முழுமையான மாநில குடியிருப்பு கொள்கையினை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். அதனை பரந்த அளவில் பொதுமக்களின் விவாதத்திற்கு விட வேண்டும். அதன்பிறகே குடிசைப்பகுதி மக்கள், நடைபாதையில் வாழ்வோர், நிலமற்ற கூலி விவசாயிகள், ஏழை விவசாயிகள், கிராமப்புற உழைப்பாளர்கள், நகர்ப்புற ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள், பழங்குடியினர், வனப்பகுதியில் வாழும் ஏனையோர், கைவினைஞர்கள், மீனவ சமுதாயத்தினர், ஏனைய நசுக்கப்பட்ட சமூகத்தினர் போன்ற வீடற்ற மக்களுக்கு குடியிருப்பு உரிமையை உறுதி செய்யும் வண்ணம், குடியிருப்பு உரிமைச் சட்டத்தினையும் இயற்ற வேண்டும்.
 
தொகுப்பு:



குடிசை மக்கள் நலன் – உத்தரவாதம் – பாதுகாப்பு மற்றும் குடியிருப்பு உரிமைகளை கருதி, அரசு தன் சட்டங்களை – செயல்திட்டங்களை – கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
 
குறிப்பாக, நூற்றாண்டு காலம் சென்னையில் அனுபவ பாத்தியமுடைய குடிசை மக்கள் மீது, ஆக்கிரமிப்பாளர்கள் எனும் அவமதிப்பை சுமத்தி –  மக்களின் மாண்புக்கும் மரியாதைக்கும் ஊறுவிளைவித்துக் கொண்டிருக்கும் கொள்கையை அரசு உடனே கைவிட வேண்டும்.
 
மாற்றிடம் காட்டிவிட்டு அதன்மூலம் குடிசை மக்களின் பாரம்பரிய உரிமைகளை தகர்தெறிவதற்கு வழிவகுக்கும் அரசாணை (நிலை) (எம்.எஸ். 1466 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நாள் 03.11.88) –யை அரசு உடனே நீக்க வேண்டும்.
 
குடிசைப் பகுதிகள் / நடைபாதைகளில் வாழ்வோர் பற்றிய கணக்கெடுப்பை அரசு உடனே எடுக்க வேண்டும். அதன் மூலம் அம்மக்கள் தங்கி இருக்கும் நிலங்கள் பற்றி விபரங்களை மக்கள் அறியும் வண்ணம் வெளியிட வேண்டும். அந்நிலங்களில் அங்கீகரிக்கப்பட்டவை / அங்கீகரிக்கப்படாதவை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றினை அரசு வெளியிட வேண்டும். நடைபாதை வாசிகள் வாழும் பகுதிகள் என்று எவற்றையெல்லாம் அரசு குறிப்பிடுகிறது என்ற விபரத்தை வெளியிட வேண்டும்.
 
அங்கீகரிக்கப்பட்ட அல்லது ஆட்சேபகரமற்ற நிலங்களில் வாழும் குடிசை மக்களுக்கான அரசு திட்டங்கள் என்ன? ஆங்கிகரிக்கப்பட்டாத அல்லது ஆட்சேபனைக்குரிய  சொல்ல கூடிய நிலங்களில் வாழும் பொழுது மக்களுக்கான அரசியல் திட்டங்கள் என்ன? மற்றும் நடைப்பாதை மக்களுக்கான திட்டங்கள் என்ன? என்பது பற்றிய அறிக்கையை அரசு உடனே அறிவிக்க வேண்டும்.
 
அத்துடன், குடிசை மக்கள் சார்பாக சென்னை குடிசைப்பகுதி மக்கள் அமைப்பு கடந்த எட்டு ஆண்டு காலமாக அரசின் முன் வைக்கப்பட்டு வருகின்ற கோரிக்கைகள் கோரிக்கைகளாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக கடந்த 18.11.92 தேதியிட்டு எமது அமைப்பு தமிழக அமைச்சரிடம் அளித்திருந்த கோரிக்கை மனுவினை அரசு பரிசீலனை செய்து அரசு தலைப்பு பதில் அளிக்கப்பட்டிருந்தாலும், அது குடிசை மக்களுக்கு திருப்தியளிப்பதாக இல்லை.
 
எனவே 18.11.92 தேதியிட்டு மாண்புமிகு தமிழக அமைச்சருக்கு கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவினை அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.
 
அதன் மூலம் ஏழை – எளிய குடிசை மக்கள் / அடுக்குமாடிகளில் குடியிருப்போர் / நடைப்பாதைகளில் வாழ்வோர் / மாற்று குடியிருப்பு பகுதி மக்கள் ஆகியோரின் வாழ்க்கைக்கு உத்தரவாதமும், பாதுகாப்பும் கிடைக்க வழிவதை செய்யுமாறு அன்புடன் கூறுகிறோம்.
 
குடிசை மக்கள் குடியிருப்பு உரிமைகள் பெற்று மாண்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு எமது தீர்மான்ங்களை உடனே நிறைவேற்ற வழி வகுக்குமாறு அரசினை மிகவும் பணிவுடன் கோருகிறோம்.
நன்றி, வணக்கம்.
 
சென்னை குடிசை பகுதி மக்கள் அமைப்பிற்காக
ஜான் தேவவரம், ஆலோசகர்.
 
சென்னை குடிசை பகுதி மக்கள் அமைப்பின் நான்காவது மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியோர்:

 
டாக்டர் திருக்குறள் சி.இராமகிருட்டிணா (முன்னாள் நீதிபதி)
திருமிகு வி. கருப்பன் இ.ஆ.ப. (ஓய்வு)
பெளத்த பெரியார் மு. சுந்தரனார்
திருமிகு சக்திதாசன் பொதுச்செயலாளர், செட்டியூல்டு இன விடுதலை இயக்கம்
டாக்டர் அ. சேப்பன், மாநிலத் தலைவர் இந்திய குடியரசு கட்சி (கவாய் பிரிவு)
டாக்டர் எம். நாகப்பன், மாநிலத் தலைவர், டாக்டர் அம்பேத்கர் இளைஞர் இயக்கம்
வழக்கறிஞர் பி. விஸ்வநாத கக்கன், ஆசிரியர் கக்கன்ஜி குரல்
திருமிகு பி. சந்திரசேகரன், மாநில தலைவர், தலித் சேனா
வழக்கறிஞர் சாந்தகுமாரி, மாநிலச் செயலாளர், இந்திய குடியரசு கட்சி
திருமிகு கே.ஆர்.எம். ஆதிதிராவிடர், அமைப்பு செயலாளர், இந்திய குடியரசு கட்சி
டாக்டர் திண்டிவனம் ஸ்ரீராமலு, மாநில தலைவர், அம்பேத்கர் மக்கள் முன்னணி இயக்கம்
திருமிகு கு. துரைராஜ், மாநில தலைவர் மக்கள் உரிமை இயக்கம்
திருமதி எம். யூ. கிருஷ்ணன், காப்பாளர், பாபா சாகேப் அம்பேத்கர் வீட்டு வசதி மற்றும் சமூக நல சங்கம்.
திருமிகு கே.என். அரங்கநாதன், சென்னை மாவட்ட தலைவர். தமிழ்நாடு அரசு எஸ்.சி எஸ்.டி அலுவலர் நல சங்கம்3
திருமிகு பி. மனோகரன் இயக்குனர், மதுரை முறைசாரா கல்வி மையம்
திருமிகு சூசை மைக்கேல், சென்னை கிறிஸ்தவ சமூக சேவைக் குழு
திருமிகு ந.அ. கருணாகரன், காப்பாளர், இந்தியா நல உரிமை சங்கம்
வழக்கறிஞர் எஸ்.ஜே. ராஜா, மாநில தலைவர், அம்பேத்கர் புரட்சிகர மக்கள் கட்சி
டாக்டர் பேராசிரியை நிர்மலா அருள்பிரகாஷ்
திருமதி த.மு. பழனி, பிரச்சார குழுத் தலைவர், சென்னை குடிசைப்பகுதி மக்கள் அமைப்பு
திருமதி கே. பழனி, ஆதிதிராவிட நல்வாழ்வு சங்கம், புளியந்தோப்பு
 
வாழ்த்து செய்தி அனுப்பியவர்கள்:
டாக்டர் ர். பத்மநாபன், இ.ஆ.ப. (ஓய்வு)
தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச் செயலாளர்
திருமதி ஏ.எஸ் பொன்னம்மாள், தமிழக சட்டப்பேரவை, மூத்த சட்டமன்ற உறுப்பினர் குழுக்கள், சமூக சேவைகள் மற்றும் மக்கள் இயக்கங்கள்
 
தாழ்த்தப்பட்ட மக்களும் அவர்களிடம் பறிக்கப்பட்ட குடியிருப்பு உரிமையும்:


உடை, உணவு, உறைவிடம் ஆகிய மூன்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை தேவைகளாக உள்ளன. விலங்கு நிலையில் இருந்த மனிதனை இவைகள்தான் சமுதாய மனிதனாகவும், சமூக ஜீவியாகவும் மாற்றின.
இத்தேவைகளுக்கான தேடல்கள், இயற்கையாவே மனிதர்களை ஒன்று சேர்ந்த மனித சமூகமாக மாற்றுயது. இது ஆரம்ப காலத்திலும், வளர்ச்சிப் போக்கிலும் உலகம் முழுவதிலும் ஒரே விதமாகத் தான் இருந்தது.என மானுடவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், ஆரியர்களின் வருகைக்குப் பின் – இந்தியாவில் மட்டும் இதை வித்தியாசமாக மாறின. உடை, உணவு, உறைவிடம் ஆகிய மூன்றையும் ஆரியர்கள் தங்க தேவைக்காக மட்டும் பயன்படுத்தும் பொருட்டு, மனிதர்களை வித்தியாசப்படுத்தி அடையாளமிட்டனர்.  மனிதர்களை வேலை வாரியாக பிரித்தனர்.
கூடவே, யார் யார் எப்படி உணவை உண்ண வேண்டும்; எந்தெந்த இடங்களில் யார் யார் குடியிருக்க வேண்டும்; என்னென்ன உடைகளை எப்படி உடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டு மனிதர்களை இருவேறு கூறுகளாக பிரித்தார்கள்.
அவ்வாறு பிரிக்கப்பட்ட உணவு, உடை, சூழலை வைத்து; தீண்டதகாதவர்கள் – தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைத்தார்கள். அம்மக்கள் வாழும் பகுதியை சேரி – பறைச்சேரி – பள்ளச்சேரி – காலனி என்வும், உயர் சாதியினர் எனப்படுவோர் வாழும் பகுதியை ஊர் எனவும் ஒவ்வொரு கிராமத்தையும் மிக துல்லியமாக இரண்டு இரண்டாக பிரித்து வைத்தார்கள்.
ஒரு விவசாயி தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள; தன்னுடைய பெயர் கிராமத்தின் பெயர், இன்னாருடைய மகன் என்று குறிப்பிட்டால் மட்டும் போதாது, அவன் அந்த கிராமத்தில் ”ஊர்க்காரானா”, “சேரிக்காரனா” என்று குடியிருப்புப் பகுதியாலும் அடையாளம் இடப்படுகிறாரன்.
இவ்வாறு கிராமக் குடியிருப்புகள் பிரிந்துக் கிடப்பதை நமது அரசியல் அமைப்பும், சமூக அமைப்பும் இன்று வரை அப்படியே கட்டிக் காத்து வருகிறது.
தீண்டத்தகாதவர்கள் / தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கி வைத்ததற்கான காரணங்களாக இம்மக்கள்; மாட்டுக்கறியின் உண்கிறார்கள் – தீட்டான வேலைகளை செய்கிறார்கள் – அருவருப்பானவர்கள் – இழி குலத்தூர் – திருநிலை (ஆச்சாரம்) அற்றவர்கள் என்று சொல்லப்பட்டு வந்துள்ளன,
அத்துடன் தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமங்களுக்கு வெளியே தான் வசிக்க வேண்டும் என்றும் ”இந்து சாத்திரங்கள்” வலியுறுத்தி 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு, குடிசை பகுதிகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படவுமில்லை.
இதில் அதிர்ச்சி தருகின்ற செய்தி என்னவென்றால்; தமிழக சட்டப்பேரரையே சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின்போது; சென்னியிலிருந்து 55 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்றி பள்ளிக்கரணையில் குடியமர்த்த இருப்பதாக தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் அறிவித்துள்ளதுதாம்.
தாழ்த்தப்பட்ட/ குடிசை – நடைப்பாதை மக்களை சென்னையிலிருந்து வெளியேற்றுவதற்கு அரசு சொல்லும் காரணமென்ன?


”எழில்மிகு சென்னை 2000” என்பதுதானே! அப்படியானால் எழிலுடன் உருவாக இருக்கும் நகரில், தாழ்த்தப்பட்ட/ குடிசை மக்கள் உலாவ அருகதையற்றவர்களா? இல்லையென்றால் நகரின் வளர்ச்சிக்காக இதுவரையில் பாடுபட்டு வருகின்ற குடிசை மக்கள், மற்றவர்களுடன் சேர்ந்து நகரின் அழகை நுகரக்கூடாதபடி தடுப்பது எது? உயர்சாதிக்காரர்களுடனும் – செல்வந்தர்களுடனும் வசதி வாய்ப்பு உள்ளவர்களுடனும் குடிசை மக்கள் ”சேர்ந்து வாழக்கூடாதவாறு” பிரிப்பது எது?
இந்நிலை சென்னையில் மட்டுமல்ல, மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் வாழும் குடிசை மக்களை, நகரங்களில் இருந்து வெளியேற்ற வகை செய்யும் அரசாணை ஒன்றும் நடைமுறையில் உள்ளது. இந்த அணைப்படி, குடிசை மக்களை நகரத்தில் வெளியே 20 கிலோமீட்டர் தொலைவில் குடியேற்ற வகை செய்கிறது. ஆளுநர் கட்சிக் காலத்தில் போடப்பட்ட இந்த அரசாணை (எம்.எஸ் 1488, நாள் 03.11.88) மக்களாட்சியில் வெகுத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மக்களை பிரித்து வைப்பதற்கு மறு பெயர் சாதியாகவும், தீண்டாமையே அதன் உச்சமாக உள்ளது” என்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மிகத் தெளிவாக எடுத்து கூறியுள்ளார்.
அப்படியானால் இது வேதகால மனுதர்மமா? இல்லை ஜனநாயக சமதர்ம்மா? பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நூற்றாண்டு நிறைவில் இவற்றிற்கு நாம் விடை எடுப்போம். குடியிருப்பு உரிமையை வென்றெடுப்போம்.
 
வி. ஜான் தேவவரம், ஆலோசகர்
சென்னை குடிசைப்பகுதி மக்கள் அமைப்பு

https://www.facebook.com/share/p/1A7k9B2HXk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »