மோடி ஆட்சியால் சீர்கெடும் இரயில்வே துறையில் தொடரும் விபத்துகள்

பள்ளி மாணவர்கள் மூன்று பேரை பலி கொண்ட கடலூர் ரயில்வே விபத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள் திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்து, திருப்பதி விரைவு ரயிலில் பயணிகள் பெட்டி எரிந்து சேதம் என இந்த ஒரு வார காலத்திற்குள் தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்கும் விபத்துகள் ரயில்வே துறையின் நிர்வாக ஒழுங்கின்மையை எடுத்துக் காட்டியிருக்கிறது. மோடி ஆட்சியின் கடந்த 11 ஆண்டு காலத்தில் இரயில்வே துறை சீரழிந்திருக்கும் நிலையை சுட்டிக் காட்டியிருக்கிறது.   

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகில் ஜூலை 8, 2025 அன்று, திறந்திருந்த ரயில்வே கேட்டை கடந்த பள்ளி வாகனம் ஒன்று கொடூர விபத்துக்குள்ளானது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகள் முதற்கொண்டு மூவர் உயிரிழந்தனர். மேலும் பள்ளி வேன் ஓட்டுநர், மாணவர்கள் உட்பட்ட 10 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்திற்கு வடமாநிலத்தைச் சார்ந்த கேட் கீப்பர் பணியில் இருந்து பங்கஜ் சர்மா என்பவர் ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் திறந்து வைத்து தூங்கிய அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சென்னை எண்ணூரில் இருந்து மும்பைக்கு சென்ற டேங்கர் ரயில் மணலி அருகே விபத்துக்குள்ளானது. ஒன்றிய அரசின் நிறுவனமான IOCL நிறுவனத்திலிருந்து பெட்ரோலிய கச்சா எரிபொருள் கொண்டு சென்ற 45 டேங்கர்களை கொண்ட இந்த ரயில் ஜூலை 13, 2025 அன்று தீப்பிடித்து எரிந்தது. சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த இந்த விபத்தில் அருகிலிருந்த ஊர்களான வரதராஜபுரமும், இருளர் காலனியும் பாதிப்புக்குள்ளானது. கடும் புகைமூட்டமும், நச்சுக் காற்றும் பரவியதால் மக்கள் வேறிடம் தேடி ஓடினர். அங்குள்ள வீடுகளிலிருந்து சிலிண்டர் உட்பட்டவை அகற்றப்பட்டன. ரயில்வே துறையின் துரிதமான நடவடிக்கை இல்லாததால் மக்கள் ஒன்று சேர்ந்து ஆபத்தை உணராமல் எரியாத கண்டெய்னர்களை அகற்றிய நிலையும் ஏற்பட்டது. பல மணி நேர ரயில் போக்குவரத்தும் தடைபட்டது.

இதற்கு அடுத்ததாக, ஜூலை 14, 2025 அன்று திருப்பதி விரைவு ரயில் ஒன்றின் பெட்டி திடீரென்று தீப்பிடித்து அப்பெட்டி முழுக்க சேதமாகும் அளவில் எரிந்தது. இதற்கு உரிய காரணங்கள் தெரியவில்லை. ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இரயில் விபத்து என்பது தொடர்கதையாக நீடிக்கிறது என்பதற்கு கடந்த வாரம் நடந்த இம்மூன்று விபத்துகளுமே சாட்சிகளாகி இருக்கின்றன. இந்திய ரயில்வே கிட்டத்தட்ட 67000 கி.மீ இயக்கப்படுகிறது, சுமார் 2.5 கோடி அளவில் பயணிக்கிறார்கள். இதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக மூன்று விபத்துகள் நிகழ்ந்ததாகவும், 2024-25-ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 18 விபத்துக்கள் பதிவாகியுள்ளன எனவும் மத்தியப் பிரதேசத்தின் சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலறிந்து வெளிப்படுத்தியுள்ளார். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 200 பெரிய ரயில் விபத்துகள் நடந்துள்ளதாகவும் அதில் 145 விபத்துகள் தடம் புரள்வதால் நடந்ததாகவும் மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

ரயில்கள் தடம் புரள்வதற்கு தண்டவாளங்கள் பராமரிப்பின்மையே முக்கியக் காரணமாக இருக்கிறது. பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் என இரண்டுமே பெரும்பாலும் தண்டவாள பராமரிப்பின்மை காரணமாக  விபத்துக்களில் சிக்குகின்றன. தண்டவாளங்களை புதுப்பிக்க போதிய நிதியின்மை இருப்பதால் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளதாக CAG அறிக்கை கூறியது. மேலும் தண்டவாள பராமரிப்புக்கான மேலாண்மை அமைப்பு (TMS) நிர்வகிக்கும் செயலியே செயல்படவில்லை என அவ்வறிக்கை கூறியது. 2017-21 வரை நடந்த 1127 தடம் புரள்வுகளில் சுமார் 289 தண்டவாளம் புதுப்பிக்கப்படாமையால் நடந்ததாக தெரிவிக்கிறது. 2020-21 ம் ஆண்டில் தண்டவாளம் புதுப்பிக்க 58,459 கோடி தேவையிருந்தும் ரூ 671 (0.07%) கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என CAG அறிக்கை தெரிவிக்கிறது. எனவும் 2014-24 வரை 1,09,023 கோடி வரை தேவை நீடிப்பதாக இரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்ல, 2024-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, பாதுகாப்பு பணிகள் என வகைப்படுத்தப்பட்ட 10 லட்சம் இடங்களில் சுமார் 1,52,000 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை என ரயில்வே அமைச்சகமே தெரிவித்துள்ளது. பாதுகாப்பு பணி என்பது முக்கியமாக ரயில் ஓட்டுநர்கள், ரயில் மேலாளர்கள் பாதை பராமரிப்பாளர்கள், நிலைய மேலாளர்கள், மின்சார சிக்னல் பராமரிப்பாளர்கள் போன்ற பல பணிகளைக் குறிப்பதாகும்.

இதில் குறிப்பாக ரயில் ஓட்டுனர் பணிகளில் 14429 (20.5%) , உதவி ரயில் ஓட்டுநர் பணியிடங்களில் 4337 (7.5%) இடங்கள் காலியாக உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவிக்கிறது. காலியான இடங்கள் நிரப்பப்படாமல் பணியாளர்கள் பற்றாக்குறையை ஈடு செய்ய ஓட்டுநர்கள் அதிக மணி நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். மேற்கு வங்காளத்தில் ஜூன் 17 அன்று கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதியதில் 2 ஓட்டுநர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஓட்டுநர் சிக்னலை கவனிக்கவில்லை என ஓட்டுநர் மேல் பழியை போட்டு விட்டனர் தலைமை நிலைய அதிகாரிகள். ஆனால் அந்த ஓட்டுநர் தொடர்ந்து 4 நாட்கள் பணி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார் என்ற செய்தி வெளிவரவில்லை. அதீத பணிச்சுவை சோர்வை ஏற்படுத்தி ரயில் விபத்துக்கு முக்கிய காரணமுமாகி விடுகிறது. இந்த நிலை ஓட்டுநர் அளவிலிருந்து கேட் கீப்பர் வரை நீடிக்கிறது.

இது போல கீழ்மட்ட வேலைகளில் பணிச்சுமை ஏற்றி விட்டு, பாதிப்பு ஏற்படும் போது பழிபோட்டு விட்டு, மேல் மட்ட அதிகாரிகள் கடந்து விடுகின்றனர். கடலூர் விபத்திலும் கேட் கீப்பரின் பணிச்சுமை காரணமாக இருக்கலாம் எனும் ஒரு சந்தேகமும் எழுகிறது. மேலும் ரயில்வே  விபத்துக்கள் அதிகரிப்பதற்கு மிகவும் முக்கிய காரணமாக இருப்பது சிக்னல் கருவியில் ஏற்படும் கோளாறு ஆகும்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2023, ஜூன் 2 ந்தேதி மூன்று ரயில்கள் மோதி 293 -க்கும் மேற்பட்டோர் பலியாகி, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததற்கு சிக்னல் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சொல்லப்பட்டது. பள்ளிப் பிள்ளைகளை பலிவாங்கிய தற்போதைய விபத்திலும் கேட் மூடப்படவில்லை என்றாலும் சிக்னலின் சமிக்ஞை மூலமாக ரயில் நிலைய அதிகாரிக்கு தெரிந்து, அவர் ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்திருக்கலாம் என்கிற ஒரு வழியும் இருந்திருக்கிறது. ஆனால் அதுவும் அலட்சியமாக நிராகரிக்கப் பட்டிருக்கலாம் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.

விபத்துகள் நடப்பதற்கு ஆளில்லா தானியங்கி லெவல் கிராசிங்குகளும் முக்கியக் காரணங்களாக இருந்தன. 2020 முன்பு வரை 8398 தானியங்கி லெவல் கிராசிங்கினால் ஒரு நாளைக்கு சுமார் 50 என இறப்புகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. இதனால்  இப்போது 599 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் சிக்னல் கோளாறுகளால் பல இறப்புகள் பதிவாகின்றன.

ரயில்வே என்பது மக்களின் சொத்து. கோடிக்கணக்கான மக்கள்  நாள்தோறும் பயணிக்கிறார்கள்.  ரயில்வே நிதியாக ஒன்றிய அரசினால் ஒதுக்கப்படுவதும் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத் தொகைகளே. மக்களின் பணத்தில் இயங்கும் இரயில்வே இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவமான, ஆபத்தில்லா பயணத்தை கொடுக்க வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் கடமை. ஆனால் காலாவதியான உள்கட்டமைப்பு, தண்டவாளம் பராமரிப்பின்மை, மொழிச் சிக்கலால் தகவல் தொடர்பு மற்றும் ஊழியர்களிடையே சிக்னல் செயலிழப்புகள், ஆளில்லா லெவல் கிராசிங், போதுமான பயிற்சியற்ற ஓட்டுநர்களை நியமிப்பது, ஓட்டுநர் பணி நேரம் நீட்டிப்பு என மோசமான இரயில்வே நிர்வாகத்தினால் விபத்துகள் நேர்கின்றன. சாமானிய மக்கள் பயன்பாட்டுக்குரிய உள் கட்டமைப்பில் பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்வதை தவிர்த்து விட்டு, கட்டணத் தொகை அதிகமாக வசூலிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கே ரயில்வே நிர்வாகம் முக்கியத்துவம் அளிக்கிறது. மோடி அரசாங்கம் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக, தங்களின் அடையாளங்களை நிறுவிக்கொள்ள தயாரிக்கும் வந்தே பாரத் ரயில் எளிய மக்களின் பயணக் கட்டணங்களுக்கு கட்டுப்படியாவதில்லை.

கடந்த ஜூன் 9, 2025 அன்று மும்பையில் இருந்து லக்னோவிற்கு சென்று கொண்டிருந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் மும்ப்ரா ரயில் நிலையம் அருகே பல பயணிகள் தவறி விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து சுமார் 12 பேர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் 5 பேர் இறந்தனர். ஆக டெல்லி, மும்பை போன்ற மக்கள் மிகவும் நெரிசலான பகுதிகளில் நாள் தோறும்  நெரிசல்களில் சிக்கி பயணிக்க வேண்டிய நிலையே இன்றும் நீடிக்கிறது. இதன் மூலமாக மூச்சுத் திணறல், இடிபாடுகளில் சிக்குதல் போன்றவைகளால் பலர் இறக்க நேரிடுகிறது. நகர்மயமான பகுதிகளில் நாள்தோறும் பணிக்கு சென்று வரும் மக்களுக்காக கூடுதல் ரயில்களை இயக்காமல், பல ஊர்களுக்கு செல்லும் தூரப் பயணங்களுக்கு பயன்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு மோடி அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.

இது தவிர, ஊர்களுக்கு இடையேயான பயணங்களுக்கான திட்டங்களுக்கு அறிவிக்கும் தொகையும், அதிலிருந்து குறைவாகவே அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கென 2024-ல் இடைக்கால பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே தடங்களுக்கென ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 976 கோடி குறைக்கப்பட்டு 301 கோடியே ஒதுக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்கள் தனது  X தளத்திலும் ஆதாரத்துடன் கூறியிருந்தார்.

இரயில்வே துறையிலுள்ள பல்வேறு பிரிவு கட்டமைப்புகளை தனியார் மயப்படுத்தவே ரயில்வேயின் மோசமான கட்டமைப்புகளை சரி செய்யாமல் பாஜக அரசு கடக்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறது. மக்களின் உயிர்களை பணயம் வைத்து, பெருநிறுவனங்களுக்கு இரயில்வே கட்டமைப்புகளை தானம் அளிக்கும் மோடி அரசின் செயல்பாடுகளை அம்பலப்படுத்துவது அவசியமானது. மேல்மட்ட அரசியல், அதிகார மட்டத்தினரின் நிர்வாக ஒழுங்கின்மைக்கு கடலூரில் ஒரு குடும்பம் தன் இரு பிள்ளைகளையும் இழந்து வாடுவதைப் போல இனியொரு விபத்து நடக்காமலிருக்க, அந்தந்த நிலத்துக்குரியவர்கள் இரயில்வே பணியில் நியமிக்கப்பட வேண்டும் என்பதை வலிமையாக முன்னிறுத்துவோம். 

குறிப்பு:

https://timesofindia.indiatimes.com/city/agra/18-train-accidents-in-first-5-months-of-2024-alarming-rti-findings/amp_articleshow/113826271.cms

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »