
சாதி எளிதில் சாகாது. போராடாமல் அது வீழாது.
நெல்லையில் கடந்த ஜூலை 27, 2025 அன்று சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவினுக்கு நீதி கேட்டு சென்னை அண்ணா சாலையில் ஜீலை 30, 2025 புதன்கிழமை அன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆணவப்படுகொலை செய்த காவல்துறை அதிகாரிகளான பெற்றோர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும், அவர்கள் மீது கொலை-வன்கொடுமை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும், வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களாக மூத்த மனித உரிமை வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும், மேலும் ஆணவப்படுகொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியறுத்தி தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவினுக்கு நீதி வேண்டி போர்க்குணத்தோடு மே17 இயக்கம் நடத்திய இந்த மறியல் போராட்டத்தில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர் அமிர்தா, தமிழர் விடுதலை கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழ்வழிக்கல்வி இயக்கத்தின் தோழர் ‘தமிழ்கனலி’ சின்னப்பத்தமிழர், ஐக்கிய விவசாயிகள் முன்னனியின் தோழர் கே.பாலகிருஷ்ணன், பேராசிரியர் குழந்தை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் ஆவடி நாகராசன் உள்ளிட்ட எண்ணற்ற தோழர்கள் பங்கேற்று கண்டனக்குரல் எழுப்பினர். பல்வேறு கோரிக்கைளை முழக்கங்களாக எழுப்பியபடி தோழர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையினரால் தடுத்து கைது செய்யப்பட்டனர்.
ஆர்பாட்டத்தின்போது மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஊடகங்களிடம் கூறியவை:

“நெல்லையில் மென்பொறியாளர் கவின் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். சாதி ஆணவப்படுகொலை நிகழ்ந்து மூன்று நாட்களாகியும் கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோர் கைது செய்யப்படவில்லை. அந்த பெற்றோரின் ஆதரவில் இந்த படுகொலை நிகழ்ந்திருக்கிறது. இதில் மோசமான விடயம் என்னவென்றால் சுர்ஜித்தின் பெற்றோர் இருவருமே காவல்துறையைச் சேர்ந்தவர்கள். கொலை நடந்து மூன்று நாட்களைக் கடந்தும் அவர்களின் புகைப்படங்கள் கூட இன்னும் வெளிவரவில்லை.
அவர்களின் புகைப்படங்களை வெளியிடுவதில் என்ன பிரச்சினை? ஏன் குற்றவாளிகளை தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் பாதுகாக்கிறார்கள்? கேவலமான சாதிய வெறியோடு ஒரு படுகொலை நடந்திருக்கிறது. நன்கு கற்ற, சிறந்த பணியில் இருக்கக்கூடிய, முதல் மதிப்பெண் பெற்ற ஒரு இளைஞன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். இதற்காக வெட்கி தலை குணிய வேண்டும் என்கின்ற நிலையில் இருக்கும்போது, அந்த கொலையாளியினுடைய புகைப்படத்தை கூட வெளியிடாமல் நீங்கள் எதை பாதுகாக்கிறீர்கள்? காவல்துறையினுடைய மாண்பையா? இவர்கள் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்தால் காவல்துறையினுடைய மதிப்பை நீங்கள் பாதுகாத்து விட முடியும் என்று நம்புகிறீர்களா?
தொடர்ச்சியாக காவல்துறையை சார்ந்தவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டே இருக்கின்றன. காரணம் என்ன? காவல்துறையில் இருக்கக்கூடியவர்கள் இதுபோல குற்றங்களை செய்யக்கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்ற காரணத்தினால்தான் இந்த படுகொலையை செய்யக்கூடிய துணிச்சல் வருகிறது. சுர்ஜித்தின் அம்மா அப்பாவுக்கு தெரியாமல்தான் இந்த படுகொலை நடந்திருக்கிறதா? அவர்களுக்குத் தெரியாமல் அந்த ஆயுதம் வீட்டுக்குள் வந்திருக்குமா? சுர்ஜித் ஆயுதத்துடன் இருக்கக்கூடிய புகைப்படங்கள் வெளிவருகிறது. பெற்றோர்கள் இருவருமே காவல்துறையில் எஸ்ஐயாக (உதவி ஆய்வாளர்) ஆக இருக்கிறார்கள். அவர்கள் கண்ணுக்கு கீழ் இது நடந்ததென்றால் இந்த கொலையிலே அவர்களுக்கு துணை இல்லாமல் இருக்குமா? என்ற கேள்வி எழுகிறது.
சமூகத்தில் சாதி எவ்வளவு புறையோடி போயிருக்கிறது? இதுவரை திமுக அரசு இது குறித்து எதுவும் பேசவில்லை, கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்த காவல்துறை அதிகாரிகளை கைது செய்வதற்கான எந்த உத்தரவையும்/நெருக்கடியும் கொடுக்காமல் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். இது அதிகார வர்க்கத்துக்கு பெரிய துணிச்சலைக் கொடுக்கிறது. அதிகார வர்க்கத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஐபிஎஸ் அதிகாரிகளை, ஐஏஎஸ் அதிகாரிகளை, இதர துறையில் இருக்கக்கூடிய அதிகாரிகளை, காவல் காவல்துறையில் இருக்கக்கூடிய அதிகாரிகளை, கடைமட்ட அதிகாரிகளைக் கூட கேள்வி கேட்க முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்களா என்று கேட்க விரும்புகின்றோம்.

இரண்டு எஸ்ஐ இந்த படுகொலையில் ஈடுபட்டுள்ளதை கேள்வி கேட்க முடியவில்லை. அவர்கள் புகைப்படம் வெளிவரவில்லை. கொலை குற்றம் சாட்டப்பட்ட அந்த குற்றவாளிகளை இதுவரைக்கும் கைது செய்யவில்லை. காவல்துறையை சார்ந்தவர்கள் எங்கே இருப்பார்கள் என்பது காவல்துறைக்கு தெரியாதா என்று கேட்கிறோம்.
அவர்கள் என்ன ஹிஸ்டரி ஷீட்டரா? அல்லது தொடர்ச்சியாக குற்றங்களை செய்து பின் மறையக்கூடிய மாபியாவா? காவல்துறை சேர்ந்தவருடைய அனைத்து குடும்பப் பின்னணியும் அந்த துறையிடம் இருக்கும் பொழுது அவர்களை கண்டுபிடிப்பதில் என்ன சிரமம்? திட்டமிட்டு காவல்துறை இந்த சாதிய கொலையாளிகளை தனது துறையை சார்ந்தவர்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்றால், இந்த காவல்துறையில் உயர் மட்டத்தில் இருக்கக்கூடியவர்கள் சாதிய உணர்வோடு இருக்கிறார்கள் என்று நாங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்.
அந்த காவல்துறை அதிகாரிகள் சாதிய உணர்வோடு இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இந்த குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். ‘இல்ல நாங்க சாதிய உணர்வோடல்லாம் இல்லை’ என்று கூறினால் எதுக்கு கொலையாளியை பாதுகாத்தீர்கள்?
கொலையாளியை பாதுகாக்கின்ற ஒரு பணியையும் செய்கிறீர்கள். சாதியை பாதுகாக்க கூடிய பணியையும் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் காவல்துறையாக இயங்குவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம்.
பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை தொடர்ச்சியாக கொலை செய்து இந்த சமூகம் எதை சாதிக்க போகிறது? இந்த சாதி வெறியை தூண்டுகிற நபர்களை காவல்துறை கண்டுபிடிக்க முடியாதா? சமூக வலைதள பக்கங்களிலே சாதிவெறியோடு எழுதக்கூடியவர்கள், ஆயுதங்களை கையில் வைத்திருப்பதை போல எழுதக்கூடியவர்கள், புகைப்படங்கள் வெளியிடக்கூடியவர்கள், காணொளி வெளியிடக்கூடியவர்களை கைது செய்ய முடியாத நிலையில்தான் தமிழ்நாடு காவல்துறை இருக்கிறதா? தமிழ்நாடு காவல்துறைக்கு தெரியாமல் தான் இது நடக்கிறதா?
இங்கே நாங்கள் மறியல் போராட்டம் நடத்துகிறோம் என்ற உடனே இவ்வளவு கட்டுப்பாடுகள், தடுப்புகள் போட்டு, அருகே பேருந்தை நிறுத்தி இத்தனை காவல்துறை அதிகாரிகளை இறக்கி நாங்கள் போராடக் கூடாது என்று இவ்வளவு தூரம் தடுக்கிறீர்கள். போராடுவது என்பது ஜனநாயக உரிமை. நாங்கள் எதற்காகப் போராடுகிறோம்? நீங்கள் செயல்படவில்லை என்பதற்காக நாங்கள் போராடுகிறோம். நீங்கள்(காவல்துறை) செயல்பட மறுக்கின்ற காரணத்தினால் நாங்கள் போராட வேண்டிய தேவை ஏற்படுகின்றது. உங்களது தவறுகள் வெளியில் வரக்கூடாது, விமர்சனம் ஆகக்கூடாது, அதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காகவே எங்கள் போராட்டம் முடக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவைக் காட்டி குடிசைகளை அகற்றும் பொழுது வலுக்கட்டாயமாக இடிக்கின்றீர்கள், அந்த குடும்பங்களை தூக்கி வீசுகின்றீர்கள், பொருட்களை தூக்கி வீசி எறிகிறீர்கள். அதையெல்லாம் செய்யக்கூடிய உங்களால் நீதிமன்ற உத்தரவைக் காட்டி ஒரு கொலை குற்றம் செய்த குற்றவாளியை, ‘துறையில் இருக்கும் கருப்பு ஆடு பிடித்துக் கொடுப்பதுதான் எங்கள் வேலை’ என்று சொல்லி இருக்க வேண்டும்.

அந்த அற உணர்வு என்ன ஆனது? அந்த சாதிய மறுப்புணர்வு என்ன ஆனது? உங்களுக்குள் இருக்கும் அந்த சாதிய உணர்வு பெரிய அதிர்ச்சிக்குரிய விடயமாக இருக்கிறது. உங்களை நாங்கள் எங்களை பாதுகாக்க கூடியவர்களாக பார்த்தால் நீங்கள் இவ்வளவு சாதிய வன்மத்தோடு இயங்கி இருக்கிறீர்கள் என்பது அம்பலமாகி இருக்கிறது. எங்களுக்கு இது அச்சத்தைக் கொடுக்கிறது. இப்படிப்பட்டவர்கள் சட்டத்தை, அரசியல் சாசனத்தை பாதுகாக்க நேர்ந்தால் நாட்டு நிலைமை என்ன என்று கேட்க விரும்புகிறோம்.
இந்த அதிகாரிகளை ஆட்சியாளர்கள் கேள்வி கேட்க மாட்டார்களா? திமுக அரசு கேள்வி கேட்காதா? திமுகவின் மாவட்ட செயலாளர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சென்று பார்க்க மாட்டார்களா?அமைச்சர்கள் பேச மாட்டார்களா? இதுகுறித்து அவர்களிடம் இருந்து இன்னும் ஒரு பதிவு கூட வரவில்லை. அப்புறம் எப்படி சமூக நீதி இருக்கும்? ‘கல்வி கற்றால் சாதியிலிருந்து வெளியில் வந்துவிடலாம். பாதுகாப்பாக வாழ்ந்து விடலாம்’ என்று நாம் நம்பிக் கொண்டிருக்கக்கூடிய நிலையிலே கல்வியில் உயர்ந்த நிலையில் இருந்த இந்த இளைஞன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். இது நம் எல்லாருக்கும் அவமானமாக இல்லையா? ஒரு படித்த சமூகம், கல்வியில் உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம், இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கக்கூடிய மாநிலம் என்று நாம் பெருமை பேசுகின்றோம். பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என்று பெருமை பேசுகிறோம். இங்கே சாதிய கொலை நடந்தால் எல்லாரும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து அந்த கொலைகாரனை கைது செய்ய வைத்திருக்க வேண்டும்.
இங்கே நாங்கள் போராட்டம் நடத்துவதற்கான நோக்கம் ஒன்றுதான். காவல்துறையிலும் அதிகார வர்க்கத்திலும் ஆட்சியாளர்களிடத்திலும் சாதிய உணர்வு இருக்கிறது. சட்டமும் மக்களைக் காக்கின்ற கடமையும் உங்கள் கையில் இருக்கும்போது சாதி உணர்வோடு இருந்தால் எப்படி நீதி கிடைக்கும்? நீதிமன்றமும் இந்த வழக்கை இன்னும் ‘suo moto’ வாக எடுக்கவில்லை.
ஒரு படித்த இளைஞன் பட்ட பகலில் படுகொலை செய்யப்படுகின்றான். தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்வது தவறு? காதல் செய்வது சட்ட விரோதமா? அல்லது திருமணம் செய்வது அரசியல் சாசன விரோதமா? அல்லது மானுட குல விரோதமா? நீதிமன்றம், காவல்துறை, ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் என அனைவரும் அமைதி காக்கிறார்கள்.
கொன்னவன் இந்து, செத்தவன் இந்து. இந்து முன்னணி எங்க போச்சு? பிஜேபி, அண்ணாமலை எங்கே சென்றார்கள்? நயினார் நாகேந்திரடைய ஊரில் இந்தப் படுகொலை நடந்திருக்கிறது. அவருடைய மாவட்டத்தில நடந்திருக்கிறது. இந்த மாவட்டங்களில் எல்லாம் அவர்கள் இந்து மத உணர்வை வளர்க்கிறார்கள். இப்போது இறந்தவனும் இந்துதான், கொன்றவனும் இந்துதான். எங்கப்பா போச்சு உன்னுடைய இந்து தர்மம்? ஒரு இந்துப் பெண்ணை இன்னொரு இந்துப் பையன் கல்யாணம் பண்ணுவது தவறா? இந்து மாதத்தில், பகவத் கீதையில் அவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறதா?
திருபுவனம் அஜித்குமார் கொலை குறித்துப் பேசிய பாஜகவினர் தற்போது ஏன் வாய்திறக்கவில்லை? வீரவசனம் பேசக்கூடிய பாஜகவின் அண்ணாமலை எங்கே? சமூக நீதி பேசக்கூடிய அண்ணாமலை எங்கே? நரேந்திரனா தேவேந்திரனா என்ற வசனம் பேசின மோடியின் கட்சி எங்கே? பேசுவதற்கு ஏன் பயமாக இருக்கிறதா? மற்ற சாதிக்காரன் ஓட்டு போட மாட்டான் என பயமாக இருக்கிறதா? அவர்களுக்கு சாதி ஓட்டுதான் வேண்டும் என்பதற்கு தானே. எனவே இந்த இளைஞர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு எதிராக நான் போராடவில்லையென்றால் நம்மில் யார் வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம்.

இன்றைக்கு அந்த இளைஞனுடைய (கவினுடைய) காணொளிகள் வெளிவந்திருக்கிறது. வாழ்க்கையை உற்சாகமாக எதிர்கொள்ளக்கூடிய ஒரு இளைஞன். நம்பிக்கையோடு எதிர்கொள்ளக்கூடிய ஒரு இளைஞன். அவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். இதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிகார வர்க்கமும் ஆட்சியாளர்களும் கடந்த கால ஆட்சியாளர்களும் அமைதி காட்டுகிறார்கள் என்றால் அது ஆபத்தானது. சாதியத்தை ஊக்குவிக்க கூடியதாக இந்த மௌனம் இருக்கிறது. இந்த மௌனத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மறியல் போராட்டத்துக்கு வந்திருக்கிறோம்.
தமிழ்நாடு அரசு/திமுக அரசு இது போன்ற ஆணவ படுகொலை செய்யக்கூடியவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்து அதற்கென்ற சிறப்பு சட்டத்தை நிறைவேற்றி அவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.
ஏனென்றால் ஒரு குடும்பமே கொலை செய்திருக்கிறது. காவல்துறைக்கு டி.என்.பி.சி தேர்வு, பயிற்சி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்றவை மட்டும் போதுமா? அரசியல் சாசனம், சாதி மறுப்பு குறித்த வகுப்பு வேண்டாமா?
உயரதிகாரிகள் பல புத்தகங்களை படிக்கின்றீர்கள், சர்வதேச மட்டத்துக்கு பயிற்சி எடுக்கின்றீர்கள், கருப்பு ஆடுகளை களைவது அதிகாரிகள் பொறுப்பு தானே? நாங்கள் இன்று வீதியில் வந்து போராடக்கூடிய நிலைமையை உருவாக்கியது தமிழ்நாடு காவல்துறையும் தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு அதிகார வர்க்கமும் இங்கு இருக்கும் பெரிய கட்சிகளும் சேர்த்துதான் என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். உடனடியாக அந்த (சுர்ஜித்தின்) பெற்றோர்கள் கைது செய்யப்பட வேண்டும், மேலும் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும், அவர்கள் தொலைபேசிகளிலும் இதர வழிகளிலும் தொடர்பு கொண்ட, இந்தப் படுகொலையில் யாரெல்லாம் அதிகார மட்டத்தில் ஈடுபட்டிருந்தார்களோ அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பது எங்களுடைய கோரிக்கை.
மேலும் இதுவரை கைது செய்யப்படாத திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி மாவட்டத்தினுடைய பொறுப்பதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். 10 மணிக்கு மேல் டீ வித்தாலே கலவரம் வந்துரும் என்று பேசுறீங்களே, இந்த கொலைக்கு யார் பொறுப்பு? எங்களை உளவு பார்க்கக்கூடிய காவல்துறை தனது துறைக்குள் உளவு பார்க்க முடியாதா? சாதிவெறி, மத வெறியுடன் இருப்போரை உளவு பார்க்க முடியாதா? காவல்துறை சார்ந்த பெற்றோர்களுடைய பையன் கத்தியை வைத்திருப்பதை ஏன் காவல்துறை அனுமதித்தது?

கவின் படுகொலைக்கு எதிராக எல்லா மக்களும் போராட வர வேண்டும். எல்லா கட்சிகளும் போராட வர வேண்டும். அதிகாரத்துக்கு, பதவிக்கு ஆசை இருக்கிறது, ஆனால் சமூக நீதிக்காக களத்தில் இறங்குவதற்கு தயாராக இல்லை என்றால் அவர்களை நாங்கள் என்னவென்று சொல்வது? ஆகவே இந்த படுகொலைக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டுமென்றால் சுர்ஜித்தின் பெற்றோர் கைது செய்யப்பட வேண்டும். மேலும் ஆணவ படுகொலையைத் தடுப்பதற்கு சிறப்பு சட்டம் வேண்டும். இது போன்ற கொலையாளிகளை இனிவரும் காலத்தில் தடுக்கக்கூடிய வகையில், அனைவரும் போராடி நீதி நிலைநாட்டுவதற்கான போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் இருக்கின்ற காரணத்தினால், அந்த சட்டத்தை கேட்கிறோம். சட்டத்தை கொண்டு வருவதில் என்ன தப்பு இருக்கிறது என்கிற கேள்வியை நாங்கள் முன் வைக்கிறோம்.
சட்டம் கொண்டு வர வேண்டாம் என்றால் அதற்கான காரணத்தை திமுக அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்பதை இச்சமயத்திலே நாங்கள் முன்வைக்கின்றோம். இது தொடக்க கட்ட போராட்டம். இன்னும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவோம். அந்த (சுர்ஜித்தின்) பெற்றோரைக் காப்பாற்ற நினைத்தால் இன்னும் தீவிரமான போராட்டத்தை மேற்கொள்வோம்.
எங்களுடைய இளைஞர்கள் கொலை செய்யப்படக்கூடாது. சாதி ரீதியாக அவர்கள் துண்டாடப்படக்கூடாது. அதற்காக எங்கள் உயிரே போனாலும் பரவாயில்லை நாங்கள் இறங்கி போராடுவோம். நாங்கள் வாக்குக்காகவோ தேர்தலுக்காகவோ வரக்கூடியவர்கள் அல்ல. எங்களுக்கு மக்கள்தான் முக்கியம், இளைஞர்கள் தான் முக்கியம். இந்த மக்கள் சமூக அநீதியிலிருந்து விடுதலையாவதற்கு நாங்கள் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்பதை சொல்லிக்கொள்கின்றோம்” என்று கூறினார் தோழர் திருமுருகன் காந்தி.

தொடர்ந்து போராடிய நூற்றுக்கணக்கான தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு இரு பேருந்துகளில் குண்டுக்கட்டாக ஏற்றப்பட்டனர். தோழர்கள் பேருந்து செல்லும் வழியெங்கும் முழக்கமிட்டபடியே சென்றனர். சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான உணர்ச்சிமிகு போராட்டமாக மே பதினேழு இயக்கத்தின் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தை நடத்தியதற்காக காவல்துறை மே 17 இயக்கத்தின் மீது வழக்கு பதிவு செய்தது.
ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச்சட்டத்தின் தேவை குறித்து மே17 இயக்கக்குரலில் வெளிவந்துள்ள கட்டுரை: