தொழிலாளர்களின் தோழரான தந்தை பெரியார்

“திராவிட மக்கள் அனைவரும் தொழிலாளிகள்; திராவிட மகனாய் இருக்கிறதாலேயே அவன் தொழிலாளியாகவும், பார்ப்பானாய் இருக்கிறதாலேயே அவன் முதலாளியாகவும், முதலாளி ஜாதியானாகவும் இருக்கிறான் என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள்…” – தந்தை பெரியார்.

பெரும் பகுத்தறிவுவாதியாகவும் சாதி ஒழிப்பு போராளியாகவும் விளங்குகின்ற தந்தை பெரியார் ஒரு உறுதியான பொதுவுடைமைவாதியாகவும் இருந்தார் என்பதை தொழிலாளர்களிடம் உரையாற்றும்போது அவரின் வார்த்தைகள் வெளிப்படுத்தும். தந்தை பெரியார் தனது பார்ப்பனிய எதிர்ப்பு மூலம் சமூக பொருளாதார சமத்துவத்திற்காகப் போராடிய அதே வேளையில், தொழிலாளர்களை ஒழுங்கமைக்க தொழிற்சங்கங்களுக்கு ஆதரவளித்தது அவரின் பொதுவுடைமை கருத்துக்களுக்கு சான்றாக அமைகின்றன.

தொழிலாளர் வர்க்கத்தை ஒரு புரட்சிகர ஆற்றலாக அடையாளம் கண்டுகொண்ட தந்தை பெரியார், 1930களின் தொடக்கத்திலிருந்து, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் எம். சிங்காரவேலு அவர்களுடன் சேர்ந்து நிறுவன முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்களை ஒருங்கிணைத்தவர். காரல் மார்க்ஸின் கம்யூனிச அறிக்கையை 04-10-1931ல் தனது குடியரசு பத்திரிக்கையில் வெளியிட்டவர் பெரியார். தொழிலாளர்களை சங்கமாக ஒருங்கிணைப்பதன் அவசியத்தை கூறும் தளங்களாக அவரின் ‘குடி அரசு’, ‘புரட்சி’ பத்திரிக்கைகள் செயல்பட்டன.

தனியார் நிறுவனங்களின் சுரண்டலை அழிக்க அடிப்படை தொழில்கள் யாவும் அரசுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று கூறினார் பெரியார். விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நேரடியாகப் பயனளிக்கும் கூட்டுறவு சங்கங்களை ஆதரித்தார். மேலும் தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தைப் பெறுவதில் மட்டும் திருப்தி கொள்ளாமல் முழுமையான சமூக மாற்றத்தை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்துவார் பெரியார்.

“தொழிலாளர் சங்கப் போராட்டம் என்றால் முதலாளிகளை ஒழித்து, முதலாளி – தொழிலாளி என்ற பேதமில்லாமல் செய்வது” என்று கூறியதோடு “தொழிலாளிக்கு லாபத்தில் மட்டுமல்ல முதலிலும் பங்கு இருக்கவேண்டும்” என்று கூறி கம்யூனிசத்தின் ஆழம் வரை தொட்டவர் பெரியார்.

இத்தகைய மாற்றத்தை நிகழ்த்த வேண்டுமென்றால் தொழிலாளர்களுக்கு கல்வியோடு அரசியல் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார் பெரியார். இவ்வாறு பெரியாரின் எழுத்துக்களும் உரைகளும் இன்றும் கூட தொழிலாளர் அமைப்புகளை ஊக்கப்படுத்தும் வகையிலேயே இருக்கின்றன. இவ்வாறு தொழிலாளர்களை ஊக்கப்படுத்தியதோடு 1952ஆவது ஆண்டு, திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் என்னும் அமைப்பினையும் உருவாக்கினார். இதன் மூலம் கடுமையான உழைப்புச் சுரண்டலை எதிர்கொண்ட தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்க உதவி செய்தார்.

மேலும் தொழிலாளர்கள் மத்தியில் ஆற்றிய உணர்ச்சிமிக்க உரைகள் மூலம், உழைக்கும் மக்களிடையே ஒரு புதிய அரசியல் உணர்வை எழுப்பியவர் தந்தை பெரியார். இந்த உரைகளில் ரயில்வே தொழிலாளர்களிடத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரைகள் சிறப்பு மிக்கவை. தமிழ்நாட்டில் ரயில்வே தொழிலாளர்களின் போராட்ட வரலாறு முக்கியமான ஒன்று. நாகப்பட்டினத்தில் முதன்முதலில் அமைக்கப்பட்ட இரயில்வே பணிமனை ரயில்வே நிர்வாகத்தால் 1928இல் திருச்சியில் உள்ள பொன்மலை நகருக்கு மாற்றப்பட்டபோது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து, 1928 ஜூன் 29 முதல் ஆகஸ்ட் 2 வரை இரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதே போன்று 1946 ஆம் ஆண்டு, பொன்மலை பணிமனையில் ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டதை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்தை ஒடுக்க ரயில்வே நிர்வாகம் கடுமையான வழிகளைக் கையாண்டது. தொழிலாளர்களை ஒடுக்குவதற்காக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இருந்தபோதிலும், தொழிலாளர்கள் பணியவில்லை.

இவ்வாறு அன்றைய காலகட்டத்தில் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டங்களும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களும் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களின் முன்னோடியாக அமைந்தன.

இத்தகைய சூழலில் தொழிலாளர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு சம உரிமை பெறுவது மட்டுமன்றி அவர்களை பகுத்தறிவுவாதிகளாக்கும் நோக்கத்துடன் தென்பகுதி ரயில்வேமென் யூனியன் துவங்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா 10.9.1952 அன்று பொன்மலையில் நடைபெற்றது. அப்போது பேசிய தந்தை பெரியார், தொழிலாளர்களை பொருளாதாரத்தில் மட்டுமல்ல, சமூக மாற்றத்தின் மைய புள்ளியாக உருவகித்து உரையாற்றினார்.

இந்தியாவில் தொழிலாள வர்க்கம் முதலாளிகளாலும் சாதியாலும் இரட்டிப்பாக ஒடுக்கப்படுகிறது என்பதை பெரியார் தொடக்கத்திலேயே உணர்ந்திருந்தார். எனவேதான் தொழிலாளர்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரை சுரண்டல் அமைப்புகளை அகற்றி, சமத்துவத்தை நிறுவுவதில் உள்ள முக்கியத்துவத்தை எடுத்துக்கூறின.

மேலும் எளிய மக்களிடம் பேசும்போது எளிமையான வார்த்தைகளில் பேசுவது எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்தவர் தந்தை பெரியார். இதே கருத்தை வலுப்படுத்தும் விதமாகத்தான் அவரின் தொழிற்சங்க உரைகளும் அமைந்திருக்கின்றன. மிகவும் கடுமையான வேலையைச் செய்து குறைந்த ஊதியம் பெறும் உழைப்பை ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களே செய்கிறார்கள் என்றும், உழைப்பின் பலன்கள் பெரும்பாலும் உயர் சாதியினரும் முதலாளிகளும் அனுபவிக்கிறார்கள் என்றும் அவர் அடிக்கடி சுட்டிக்காட்டினார். “தொழிலாளிகள் என்றால் யார்? எல்லோரும் திராவிட மக்கள்தான்! திராவிட மக்கள்தான் உழைக்கும் மக்களாய், பாடுபடும் பாட்டாளிகளாய் இருக்கிறார்களே தவிர, எந்தப் பார்ப்பான் தொழிலாளியாய் இருக்கிறான்?” என்ற கேள்விகள் மூலம் உயர் சாதி வர்க்கம் உடல் உழைப்பை ஏற்காத நிலையை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் தந்தை பெரியார்.

பொன்மலை தொழிலாளர்களிடத்தில் பேசும்போது நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர் வேலை சங்கத்தில் சுமரியாதை இயக்கத்தினர் அதிகளவில் இருந்ததைக் குறிப்பிட்டு தந்தை பெரியார் பேசினார். “இன்றைய தினம் எங்கோ முதலாளிகள் வாழுகிறார்கள் என்றால், அது சர்க்காரின் தயவினால்தான் ஆகும். முதலாளிகள் என்பவர்கள் இந்த சர்க்காரால் பிழைக்கிறவர்கள். சர்க்கார் பாதுகாப்பில் உயிர் வாழ்கிறவர்கள். இந்த நாட்டுத் தொழிலாளிகள் ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’. திராவிட மக்களாக இருப்பதாலேயே சமுதாயச் சூழ்நிலையும், ‘விதி’ மத சாஸ்திர முறையும் அவர்களைத் தொழிலாளியாக்கி வைத்திருக்கிறது” என்று கூறுகிறார் பெரியார்.

அதோடு ‘இந்து’ ‘சுதேசமித்திரன்’ போன்ற பத்திரிக்கைகள் வேலைநிறுத்தத்தை உடைத்துவிட செய்த முயற்சிகளையும் அம்பலப்படுத்துகிறார் பெரியார். போராட்டங்கள் நடைபெற்ற பொது இந்தப் பத்திரிகைகள் “தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பி விட்டார்கள்” என்ற பொய்ச் செய்தியை எழுதி இருக்கின்றன. இதையும் தனது உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார் பெரியார்.

இறுதியாக ரயில்வே தொழிலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது ‘ஜாதி, மத, சாஸ்திரத்தின் பேரால் பார்ப்பான் ஆதிக்கம் செலுத்தி சுரண்டுவதை ஒழிந்தால்தான் தொழிலாளி உயர முடியும்’ என்ற கருத்தை வலியுறுத்திக் கூறி தனது உரையை முடித்தார். (தந்தை பெரியார் ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் ஆற்றிய முழு உரையினை ‘தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை’ எனும் புத்தகத்தில் வாசிக்கலாம்.)

இவ்வாறு தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, சமூக மாற்றத்தை இலக்காக கொண்ட மக்கள் அனைவருக்கும் பெரியார் ஒரு சோசலிஸ்டாக சிவப்புச் சட்டையில் மனதில் தோன்றுவதை தவிர்க்க இயலாது. ஏனெனில் பெரியாரின் சோசலிசக் கண்ணோட்டம் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அப்பாற்பட்டது. உழைக்கும் மக்களால் ஆளப்படும் ஒரு சமூகத்தை அவர் வழிகாட்டினார். இந்த சமூகத்தை வழிநடத்த உழைக்கும் மக்களே பெரும் ஆற்றல் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். இதன் காரணமாகவே தொழிலாளர் போராட்டங்களை ‘கூலி உயர்வு’ என்பதோடு சுருக்கி விடாமல் அவர்கள் வாழ்வாதார முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவராக இருந்திருக்கின்றார். உடையார்பாளையம் பருக்கலில் 03.06.1973இல் அவர் நிகழ்த்திய உரையில் “தொழிலாளர்களைத் தொழிலில் பங்குதாரராக ஆக்க வேண்டுமென்ற கொள்கையை என் வியாபாரத்தில் 1900ல் அனுசரித்தேன். என் கடையில் இருந்த மூன்று பேர்களைக் கஷ்டக் கூட்டாளிகளாக ஆக்கினேன். அவர்களுக்கு மாதம் தலா ரூ.10-8-7 சம்பளமாகும். வியாபாரத்திற்கு முதல் ரூபாய் பத்தாயிரம். இலாபத்தில் முதலாளி என்கிற எனக்கு ஒரு பாகம். என் முதலுக்கு ஒரு பாகம். கஷ்டக் கூட்டாளிகள் மூவருக்கும் ஒரு பாகம் என்று அமல்படுத்தினேன்” என்று கூறி உள்ளார். (தகவல் : விடுதலை)

தொழிலாளர்கள் லாபத்தில் மட்டுமல்ல மூலதனத்தில் பங்கு கேட்டு போராட வேண்டும் என்ற கருத்தின் மூலம் சமூக சீர்திருத்தத்திற்கான அடித்தளமிட்டிருக்கிறார் பெரியார். சமூகத்தில் தொழிலாளர் வர்க்கம் உயர்ந்தால்தான் சமூகம் முழுவதும் மாற்றமடையும் என்பதே பெரியார் வழி.

மேலும் தொழிற்சங்கவாதம் என்பதை ‘கூலி உயர்வு’ எனும் உடனடி வேலைத்திட்டதிற்குள் குறுக்கிக் கொள்ளாமல் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நிலவுகின்ற சமூக அமைப்பை உருவாக்குவது என்பதையே அண்ணல் அம்பேத்கர் முதற்கொண்டு தந்தை பெரியார் வரை வலியுறுத்தி உள்ளனர். ‘மற்றவர்களுக்கு அடிமையாக கிடப்பதே தொழிலாளர் வர்க்கத்தின் தலைவிதி’ என்ற முடிவுக்கு இட்டுச் செல்லும் கூலி அடிமை முறைக்கு மாற்றாக, ‘சமத்துவ சமூகம்’ என்பதே தொழிலாளர் வர்க்கத்தினருக்கு இறுதி லட்சியமாக இருக்க வேண்டும் என்றும் போராடி உள்ளார் பெரியார்.

தந்தை பெரியாரின் சமத்துவ சமூகம் குறித்த தொலைநோக்குப் பார்வை இன்றும் ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படுகிறது, ஆனால் முக்கியத்துவம் கொடுக்கப்படாத ஒன்றாக இருக்கின்றது. தனது உரைகளில்  பலமுறை ‘தொழிலாளர்கள்தான் திராவிட மக்கள்’ என்று வலியுறுத்திக் கூறுகின்றார் தந்தை பெரியார். எனவே பெரியார் வகுத்த கொள்கையின்படி தொழிலாளர் நலன்தான் ‘திராவிட மாடல்‘ என்றாக இருக்க வேண்டும். எனவே இன்று தூய்மைப் பணியாளர் போராட்டத்தை அரசு ஒடுக்கும் விதமும் அனகாபுத்தூரில் உழைக்கும் வர்க்கத்தினர் வெளியேற்றப்பட்ட விதமும் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு உட்பட்டவையா என்று ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

சென்னையில் பல ஆண்டுகளாக மாநகராட்சியின் கீழ் பணி புரிந்து வந்த தூய்மை பணியாளர்கள் தற்போது தனியாரின் கீழ் பணிபுரிய வற்புறுத்தப் படுகின்றார்கள். முறையான கூலி உயர்வு பெற்றாலே அதிகரிக்கும் விலைவாசியை சமாளிக்க முடியாத எளிய மக்கள், குறைந்த கூலியும் பணி நிரந்தரமின்மையும் மட்டுமே கொடுக்கும் தனியார்நிறுவனத்திற்கு செல்லுமாறு கட்டாயப்படுத்தப் படுகின்றார்கள். இதைப் போலவே சென்னையின் பூர்வகுடிகள் ‘அடையாறு ஆற்றை அழகுபடுத்துதல்’ என்ற பெயரில் அகற்றப்படுகிறார்கள்.

உழைக்கும் வர்க்கத்தை பெருமளவில் ஒடுக்கும் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கான வழிகளை அரசு சிந்திக்க வேண்டும். சிந்தித்து அதற்கேற்றாற்போல் தொழிலாளர் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். அதுவே உண்மையான ‘பெரியார் வழி’ சமூக நீதி அரசின் அடையாளமாக இருக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »