எளிய மக்களின் வாக்குரிமையைப் பறிக்கவா எஸ்.ஐ.ஆர்?

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) நவம்பர் 4, 2025 அன்று தொடங்கியதில் இருந்து கடுமையான சர்ச்சைகள் எழுந்துள்ளன. படிப்பறிவு பெற்றவர்களே மிரளும் வகையில் படிவத்தைப் பூர்த்தி செய்யும் ஒவ்வொரு பகுதியும் இருக்கிறது. சாமானிய மக்களின் வாக்குரிமையை சுலபமாக நீக்கி விடும் வகையிலாக விண்ணப்பப் படிவமாக இருப்பதாக பெரும்பாலாக மாநிலக் கட்சிகளின் முகவர்களான BLAக்கள் கூறுவது இதன் தீவிரத் தன்மையை உணர்த்துகிறது. 

இப்படிவத்தின் உள்ள சிக்கலான பகுதிகள் :

  1. முதல் பக்கத்தின் மேல் பாதியில், வாக்காளர் பிறந்த தேதி, ஆதார் எண், தந்தையார் தாயார் பெயர், அவர்களின் ஆதார் எண், துணைவரின் பெயர்கள் கேட்கப்படுகிறது. அதுவே போதுமானதான ஆதாரங்களாக இருக்கிறது. ஆனால் இரண்டாவது பகுதியில் கேட்கப்படும் விவரங்களே மக்களை குழப்பமடைய செய்கிறது.
  2. 1987 க்கு முன் பிறந்து, 2022-ல் ஒருவர் ஓட்டு போட்டிருந்தால், அன்றைக்கு எடுக்கப்பட்ட பழைய வாக்காளர் அடையாள அட்டையின் எண் மற்றும் உறவினரின் விவரங்களும் கேட்கப்படுகிறது. அவர்கள் 2002இல் வாக்களித்த தொகுதி… அதன் பாகம் எண், வரிசை எண் கொடுக்க வேண்டும். அவர்களுடைய தந்தை (அ) தாய்  வாக்காளர் அடையாள எண்ணை குறிப்பிட வேண்டும். 2002–ல் ஓட்டுப் போட்ட விவரப் பட்டியல் தெரியாவிடில், ஒன்று தேர்தல் அலுவலர்களிடம் கேட்க வேண்டும் அல்லது இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் போய் தேட வேண்டும். 50 அல்லது 60வயது இருப்பவர்கள் 26வருடத்திற்கு முன்னால் எங்கு வாக்களித்தோம் என்கிற விபரங்களை நினைவில் வைத்திருக்க இயலாததால், தமிழ்நாட்டில் முதியவர்கள் பலர் தங்கள் வாக்குரிமையை இழக்கும் வாய்ப்பிருக்கின்றது.
  3. மூன்றாவது பகுதி 1987 – 2004 வரை பிறந்தவர்களின் விவரங்கள் குறித்தானது. வாக்காளரின் உறவினர் குறித்த விவரங்களும், அவர் வாக்களித்த தொகுதி, வரிசை எண், பாகம் எண் குறிப்பிடப்பட வேண்டும். இவை முந்தைய தகவலுடன் ஒத்துப் போகாத நிலையில்.  தேர்தல் அலுவலர்  அறிவிக்கும்படி, அந்த நபர் பிறப்பு சான்றிதழ் காட்ட வேண்டும் மற்றும் தந்தை (அ) தாயின் பிறப்பு தேதியைக் குறிப்பிடும் வகையில், 13 ஆவணங்களின் ஒன்றைக் காட்டி நிரூபிக்க வேண்டும். அரசு ஊழியர் அட்டைகள், பிறப்புச் சான்றிதழ், கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், முகவரிக்கான சான்றிதழ் என முழுக்க முழுக்க அரசு அதிகார பதிவேட்டில் குறிக்கப்பட்டிருக்கும் சான்றிதழ்கள் மட்டுமே ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும் நிலையில், எளிய மக்கள் பயன்படுத்தும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என எதுவும் செல்லுபடி ஆகாது. இது பலரைக் குறிப்பாக பெற்றோர் (அ) உறவினர் இல்லாதவர்களை வாக்குரிமையிலிருந்து வடிகட்டுவதற்கு உரிய பகுதியாக இருக்கிறது.
  4. 2004 க்கு மேல் பிறந்தவர்கள் பிறப்புச் சான்றிதழ் காட்டவேண்டும். அதன் பிறகு தந்தை தாய் இருவரின் பிறப்புச் சான்றிதழ் அல்லது 13 ஆவணங்களில் ஒன்றைக் காட்ட வேண்டும். 

    தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) போன்று இந்த எஸ்ஐஆர் நடைமுறையை சட்டவிரோதமாக வடிவமைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். சட்டப்படி ஆணையத்திற்கு இந்த உரிமை இல்லை. அன்றாட வாழ்க்கையில் ஓடும் சாமானிய மக்களின் கோடிக்கணக்கான பேர் ஆவணங்களை பராமரிப்பதில்லை. இதனால் பாஜக கொண்டு வர நினைத்த தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) க்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழும்பியது. அதனால் அதை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் எஸ்ஐஆர் மூலமாக வாக்குரிமைக்கு அற்றவர்களாக மாற்றி விடும் போது, குடியுரிமையும் கேள்விக்குறியாக்கப்படுகிறது. இதன் கண்முன் உதாரணமாக பீகார் வாக்காளர் தீவிர திருத்தம் நடைபெற்றிருக்கிறது. சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல 71% பெண்கள் எஸ்ஐஆர் கேட்கும் சான்றிதழ் அளிக்க முடியாததால் வாக்கு பட்டியலில் இடம்பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆன்லைன் மூலம் படிவம் நிரப்புவதிலும் பல தொழில்நுட்ப சிக்கல்களை மக்கள் எதிர்கொள்கின்றனர். ஆதார் அட்டையில் உள்ள பெயரிலும் வாக்காளர் அட்டையில் உள்ள பெயரிலும் எழுத்துப்பிழை இருந்தால் எஸ்.ஐ.ஆர். ஆன்லைன் முறை இன்னும் சிக்கலாக மாறி விடுகிறது. எனவே நேரடியாக பி.எல்.ஓ.விடம் படிவங்கள் பெறும் கட்டாயச் சூழல் உருவாகிறது. (பி.எல்.ஓ. இரண்டு படிவங்கள் கொடுப்பார். அவற்றை நிரப்பி ஒன்றை அவரிடமும் மற்றொன்றை வாக்காளரும் வைத்திருக்க வேண்டும்.) ஆனால் இது குறித்த சரியான விளக்கம் கொடுக்கப்படாததால் சில முதியவர்களும் அடித்தட்டு மக்களும் ஆதாரமாக நம்மிடம் அளிக்கப்படும் ஒரு படிவத்தை தாங்களே வைத்திருக்காமல், இரண்டு படிவங்களையுமே திருப்பிக் கொடுத்து விடுகின்றனர். தமிழ்நாட்டின் சில பகுதிகளில், இரண்டு படிவங்களுக்குப் பதில் ஒரே ஒரு படிவம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் தமிழ்நாட்டின் எஸ்.ஐ.ஆர். படிவங்களில் பீகாரின் சிறப்பு தீவிர திருத்தத்தின் சான்றுகளைக் கேட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கின்றது தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டின் வாக்காளர் திருத்தத்தில் பீகாரின் சான்று எதற்கு? வடமாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் வேளையில், தேர்தல் அடையாளத்தின் சான்றாக சமர்ப்பிக்கக்கூடிய ஆவணங்களின் ஒரு பகுதியாக ஏன் பீகாரின் ஆவணம் கேட்கப்பட்டிருந்தது போன்ற கேள்விகளுக்கு எந்த முறையான பதிலும் கிடைக்கவில்லை.

    மேலும்,

    1. வேலை நிமித்தமாகவோ, குடும்ப சூழல் நிமித்தமாகவோ ஒருவர் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு மாறினால் இவ்வளவு ஆவணங்களுக்கு அலைய முடியுமா?  
    2. ஆற்று ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் வாழும் மக்களை அப்புறப்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு சமீபத்தில் அனகாபுத்தூர் பகுதி போன்று கட்டாயமாக இடப்பெயர்வு செய்து மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்கள் அரசியல் கட்சிகளின் மீது கொண்ட விரக்தி காரணமாக  இவ்வளவு ஆவணங்களுக்கு அலைவதில் அக்கறை காட்டுவார்களா?
    3. வாக்குச் சாவடி அலுவலர் (BLO) மூன்று நாட்கள் வீடு தேடி வருவார் என்கிற விதியில், சாமானிய மக்கள் தங்களது வேலைகளை விட்டு விட்டு வாக்காளர் படிவம் பூர்த்தி செய்வதற்கு  முன்னுரிமை கொடுப்பார்களா?
    4. வேறு மாநிலங்களுக்கு மாதக் கணக்கில் இடம்பெயர்ந்து வேலைக்கு செல்லும் நிலையில் அந்த மக்களுக்கு இந்தப் படிவங்கள் பூர்த்தி செய்வது எவ்வகையில் சாத்தியம்?

    போன்ற கேள்விகளுக்கு, அவசரம் அவசரமாக நடத்தப்படும் இந்த எஸ்.ஐ.ஆர் வாக்கு பட்டியல் திருத்த நடைமுறையில் பதில்கள் இல்லை. பல லட்சம் மக்களின் வாக்குரிமை பாதிக்கப்படும் என்று தெரிந்தே நீண்ட நாட்கள் எடுக்கப்பட வேண்டிய இந்த சீர்திருத்த முறையை ஒரு மாதத்திற்குள் சுருக்கமாக நடத்திவிட துடிக்கிறார்கள் என்கிற எண்ணமே ஏற்படுகிறது

    சனவரி 1, 2025-ல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டின் சுமார் 6.36 கோடி வாக்காளர் உள்ளனர். இவர்களுக்கான எஸ்,ஐ,ஆர் படிவங்கள் 95% வரை கொடுக்கப்பட்டதாகவும், அதில் 35% வரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் பல இடங்களுக்கு விண்ணப்ப படிவங்களை சென்று சேரவில்லை என்பதுதான் கள நிலவரமாக உள்ளது. கடுமையான வேலைப்பளுவில் படிவம் விநியோகிக்கும் அரசு அலுவலர்களான BLO க்களும், மாநில கட்சி முகவர்களாக BLA க்களும் தீவிரமான பணிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

    எஸ்.ஐ.ஆர். பணியினால் பி.எல்.ஓ எனப்படும் பூத் அதிகாரிகள் படும் துயரங்கள் செய்திகளாக வெளிவந்திருக்கின்றன. கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று ஊழியர்கள் செய்யும் வேலையை ஒரே ஊழியர் செய்வதால் அவர்கள் கடும் பணிசுமைக்கு ஆளாகியுள்ளனர். கேரளாவில் பணிச்சுமை காரணமாக ஒரு பி.எல்.ஓ அதிகாரி தற்கொலை செய்துகொண்டது அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 800 படிவங்களை நிரப்ப வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்ட ஜாகிதா பேகம் என்ற பி.எல்.ஓ 80 படிவங்களை மட்டுமே நிரப்பியதால், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் கொடுத்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

    கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் SIR திருத்தம் நடைபெறுவதால், இது போன்ற 30க்கும் மேலான துயர சம்பவங்கள் மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பதிவாகியுள்ளன.

    பணிச்சுமை என்கிற காரணம் மட்டுமல்லாமல், மக்களின் மீது சுமத்தப்படும் அடக்குமுறை என்ற காரணத்திற்காகவும் எஸ்.ஐ.ஆர். திட்டத்தை புறக்கணிக்க ‘அலுவலர் சங்கங்கள்’ ஒருமித்து முடிவெடுக்க வேண்டுமென மே17 இயக்கம் தேர்தல் ஆணைய முற்றுகை போராட்டத்தில் கேட்டுக்கொண்டது. அதற்கேற்ப வாக்காளர் திருத்தப் பணிக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்த திருத்தப் பணியினை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி இருக்கின்றது.

    மக்களுக்கு இவ்வளவு இன்னல்களைக் கொடுக்கும் எஸ்.ஐ.ஆர்.திருத்தம் பாஜகவிற்காகவே நடைபெறுவதை பீகாரின் தேர்தல் முடிவு இன்று வெட்டவெளிச்சமாக்கி இருக்கின்றது. பீகாரில் எஸ்.ஐ.ஆர். திருத்தத்தின் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டதும், பிறகு 21 லட்சம் மக்களை சேர்ந்ததும் பாஜக ஆட்சியைப் பிடிக்க உதவியிருக்கிறது. எங்கெல்லாம் எஸ்.ஐ.ஆர்.-யினால் அதிகளவில் வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதோ அங்கு ஐந்தில் நான்கு தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இசுலாமியர் அதிகம் வாழும் புர்னியாவில், 50,767 வாக்காளர்கள் எஸ்.ஐ.ஆர்.-ஆல் நீக்கப்பட்டதால் அங்கு பாஜக வென்றிருப்பது ஒரு சிறு சான்று மட்டுமே.

    மேலும் இவை அனைத்தையும் விட, வீடுகள் தோறும் ஆர்.எஸ்.எஸ் செல்லப் போகிறது என்கிற அறிவிப்பும், தமிழ்நாட்டின் விண்ணப்பப் படிவத்தில் பீகாரை குறித்தான 13 வது ஆவணமும்  இணைந்துள்ளது பலத்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது. குறிப்பாக பீகார் தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழ்நாட்டின் எஸ்.ஐ.ஆர். பணிகளில் பாஜக நபர்களின் ஊடுருவல் அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவையெல்லாம் பீகாரிகளை தமிழ்நாட்டு வாக்கு பட்டியலில் இணைக்கும் சதி வேலையா என்கிற கோணத்திலும் கேள்வி எழும்புகிறது.

    இவ்வாறு பாஜகவிற்கு வேண்டியவர்களுக்கு வாக்கை உறுதி செய்வது, பாஜகவிற்கு எதிரானவர்களுக்கு வாக்கை ரத்து செய்வது என மாநில கட்சிகள் ஆளும் எல்லா மாநிலங்களிலும் எஸ்.ஐ.ஆர் எனும் சதித்திட்டம் அரங்கேறி வருகின்றது. முதலில் தேர்தல் ஆணையாளர்களை நியமனம் செய்வதிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியை தூக்கிவிட்டு அதில் இந்திய அரசின் அமைச்சர் ஒருவரை நியமித்தார்கள். அதற்கடுத்து எந்த குற்றச்சாட்டிலும் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் மீது வழக்கு தொடர முடியாது என்கிற சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்கள். வாக்காளர்கள் எந்த சின்னத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள் என்பதை அறிய உதவும் 17சி படிவத்தை தேர்தல் ஆணையம் அளிக்க வேண்டும் என்கிற நிபந்தனை இல்லை என்பதை உறுதி செய்தார்கள்.

    இவ்வாறு தேர்தல் ஆணையத்தை வெளிப்படைத் தன்மையற்று இயங்கும்படி செய்து, பெரும்பான்மை அடிப்படையில் தாங்களாகவே தேர்தல் ஆணையாளர்களை நியமித்து, நீண்ட கால தேர்தல் சீர்திருத்த முறையை குறுகிய காலமாக சுருக்கும் எஸ்.ஐ.ஆர் திருத்தம் கொண்டு வந்து, பூர்வகுடிமக்கள், சிறுபான்மையினர், முதியவர் என அனைவரின் வாக்குரிமையைப் பறித்து தன் அதிகாரப்பசியை தீர்த்துக்கொண்டிருக்கின்றது பாஜக.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Translate »