அரசு ஊழியர்களின் உயிரை பறிக்கும் எஸ்.ஐ.ஆர்

“நான் எனது தூக்கத்தைத் தொலைத்து விட்டேன். அதிகாலை, மதியம், இரவு என எல்லா நேரத்தையும் கணிப்பொறியில் கழிக்கிறேன். பிள்ளைகளுக்கு சரியான உணவு கொடுப்பதில்லை. இந்த ஒரு மாதப் பணியில் நீண்ட காலம் மாத்திரை மருந்துகள் எடுக்கும் உடல் சிக்கல் ஏற்பட்டு விட்டது.” – தமிழ்நாட்டில் SIR வேலையில் ஈடுபடும் ஒரு ஆசிரியரின் வேதனைகள் இவை. இந்தியாவின் தேர்தல் ஆணையத்தினால் குறுகிய காலமே கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 51 கோடி வாக்காளர்களுக்கு SIR பணி திருத்தம் செய்யும் வாக்குச்சாவடி அலுவலர்கள் (BLO) வலிகள் இதை விட சொல்லி மாளாதவையாக இருக்கின்றன.

இந்தியாவில் மொத்த வாக்காளர்களின் தற்போதைய எண்ணிக்கை 99 கோடியாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல, SIR பணிகள் கேரளா, மேற்குவங்கம், உத்திரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிகோபார், லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் இருக்கும் வாக்காளர் எண்ணிக்கை தேர்தல் ஆணையத்தின் (EC) புள்ளிவிவரங்களின்படி, 51 கோடி. ஆக கிட்டத்தட்ட 50% வாக்காளர்களின் எண்ணிக்கையை கணக்கிட உள்ளது தேர்தல் ஆணையம்.

இந்தியாவில் வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடக்கும் 12 மாநிலங்களில், இதில் ஈடுபடும் பணியாளர்கள் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். தமிழ்நாட்டில் ‘வாக்குச்சாவடி அலுவலர்கள் (BLO)’ எண்ணிக்கை 68,467 ஆக உள்ளது. இது 2025 நவம்பர் மாதம் SIR செயல்முறையின் போது அறிவிக்கப்பட்டது. இதில் அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஆசிரியர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தாசில்தார், ஊராட்சி அலுவலக ஊழியர்கள் போன்றோர் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு 6 நாட்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவர்கள் கணிப்பொறி இயக்கும் தொழில்நுட்பம் பற்றி அறியாதவர்கள். அவர்களுக்கு டேட்டா என்ட்ரி, ஆன்லைன் அப்லோட், QR கோட், ஸ்கேன் போன்ற டிஜிட்டல் கருவிகளுக்கு பயிற்சி போதுமானதில்லை. படிவங்கள் நிரப்புதல், இடம்பெயர்ந்த வாக்காளர்கள், பழைய தகவல்கள் குறித்து, குறிப்பாக 2002/2005 ஓட்டுப் போட்டவர்களின் விவரங்களை சரிபார்த்துக் கையாளுதல் போன்ற செயல்முறைகளுக்கு தெளிவான வழிகாட்டுதல் இல்லை.

ஒவ்வொரு BLO-வும் குறைந்தபட்சம் 1000 வீடுகளுக்குச் சென்று விண்ணப்பப் படிவம் கொடுப்பது மற்றும் சரிபார்த்து வாங்கும் பணியை செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் பல முறை சென்று பார்க்க வேண்டும். படிவங்களை மக்களுக்குப் புரிய வைத்து ஆவணங்களை வாங்கி பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு படிவத்திற்கே 10 நிமிடம் முதல் அரை மணி நேரம் செலவிட நேரிடும். மீண்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எல்லாம் இணையத்தில் பதிவேற்ற வேண்டும். அவர்களின் மதிய உணவு தவிர்த்தும் கூட, நள்ளிரவு வேளைகளிலும் கூட இந்த வேலை செய்ய வேண்டியுள்ளது.

மேலும் நகரம், ஊர், மலைப்பகுதி என பாராமல், தனது அலுவலகப் பணியையும் பார்த்துக்கொண்டும் இந்த SIR பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். காலக்கெடு மிகவும் குறைவாக இருப்பதால் ஏற்பட்டிருக்கும் இவ்வளவு மன அழுத்தங்களுடனும், உடல் சோர்வுகளுடனும் பணிபுரிகின்றனர். இதனால் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற வியாதிகள் அதிகரித்துள்ளது. கடும் பணிச்சுமை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஜாகிதா பேகம் என்றும் அரசு ஊழியர் தற்கொலை செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கிராம வருவாய் ஊழியர் ஒருவரும் அழுத்தத்தினால் இறந்திருக்கிறார் என்னும் செய்தியும் வெளிவந்திருக்கிறது. மேலும் பலர் தீவிர நோய்த் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள செய்திகளும் வருகின்றன.  

இந்தியா முழுக்க இந்த SIR பணி அழுத்தம் காரணமாக இதுவரை கிட்டத்தட்ட 40 BLO க்கள் தற்கொலை மற்றும் நோய் தீவிரத்தால் இறந்துள்ளனர்.  தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் கொடுத்த மன உளைச்சல்களையே காரணமாகக் கூறுகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள வீட்டில் 46 வயதான BLO ஒருவர் நேற்றைய தினம் கடுமையான மன உளைச்சலில் ஆளானதால் தற்கொலை செய்து கொள்வதாக காணொளி வெளியிட்டு இறந்திருக்கிறார். கடுமையாக உழைத்தாலும் இந்த வேலையை தன்னால் முடிக்கவில்லை என கண்ணீர் விட்டு கதறியிருக்கிறார். குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு தனது மகள்களை கவனித்துக் கொள்ளுமாறு வெளியிட்ட காணொளி மனதை உருக்கும் வகையில் உள்ளது. மாவட்ட அடிப்படை கல்வி அலுவலருக்கு எழுதிய கடிதத்தில் ‘இரண்டு மணி நேரம் கூட என்னால் தூங்க முடியவில்லை. எனக்கு  நான்கு மகள்கள் உள்ளனர். மன உளைச்சல் தாங்காது இந்த முடிவை எடுத்திருக்கிறேன். மன்னிக்கவும்’ என்று எழுதி இருக்கிறார்.

மேலும் உத்திரப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரி மேதா ரூபம் என்பவர், தேர்தல் கணக்கெடுப்பதற்கு அலட்சியம் காட்டி இருப்பதாக 57 BLOக்களுக்கு FIR போட உத்தரவிட்டுள்ளார். இவர் தலைமை தேர்தல் அதிகாரியான ஞானேஷ்குமாரின் மகள் ஆவார். இந்த தேர்தல் அலுவலகர்கள் மேலதிகாரிகள் தரும் இந்த உளவியல் நெருக்கடியை சமாளிக்க முடியாது நிறைய BLOக்களின் தற்கொலைகள், மன அழுத்த நோய் தாக்குதல் இறப்புகள்  நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உத்திரப்பிரதேசத்தில் 2027-ல் தான் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு டிசம்பர் 4, 2025 வரையான குறுகிய கால இடைவெளியே கொடுக்கப்பட்டு, தற்போது டிசம்பர் 11 வரை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அவசர கணக்கெடுப்பு பணி ஏனென்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தியாவில் SIR பணி மேற்கொள்ளப்படும் மாநிலங்களில் கிட்டத்தட்ட 50 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு அதிகமாக மக்கள் தொகைக்கு சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பது கடுமையான உழைப்புச் சுரண்டலாக உள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமே இல்லாத குடியுரிமை நிரூபிக்கும் வகையான கேள்வி, ஆவணங்களைக் கேட்டு மக்களிடம் மன அழுத்தத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் நீண்ட காலப் பணிக்கு குறுகிய கால இடைவெளி கொடுத்து, அதிகமானவர்களை ஈடுபடுத்த வேண்டிய பணியில் குறைவான பணியாளர்களை ஈடுபடுத்தி அரசு ஊழியர்களையும் நிம்மதியின்றி ஆக்கியிருக்கிறார்கள்.

கருப்புப் பணத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் நடு இரவில் 1000, 2000 ரூபாய்கள் செல்லாது என அறிவித்து நடுத்தர மக்களையும், ஏழை எளியோரையும் நடுத்தெருவில் நிற்க வைத்தது மோடி அரசு. அந்த மன உளைச்சலில் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். ஆனால் வங்கிக்கு 99% பணம் திரும்ப வந்து கருப்புப் பணம் மக்களிடத்தில் புழங்கவில்லை என்கிற உண்மையும் வெளி வந்தது. அப்போது தேவையில்லாத ஒரு வேலைக்கு எந்த அளவிற்கு மக்களை அலைக்கழித்து கடுஞ்சுமைக்கு ஆளாக்கினார்களோ, அதே போல SIR மூலமாக மக்களையும், BLO க்களை ஆளாக்கியுள்ளனர். 

பாஜக சிறுபான்மையினரை, தலித் மக்களை, பெண்களை வாக்குரிமையிலிருந்து நீக்கும் நோக்கம் கொண்டது என்பதை பீகார் தேர்தல் நிரூபித்திருக்கிறது. சுமார் 65 லட்சம் மக்களின் ஓட்டுரிமையை பலி கொடுக்க தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி தங்களது நோக்கத்தை சாதித்திருக்கிறது. தேர்தல் ஆணையாளரை நியமனத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கி அரசின் முடிவையே இறுதி செய்யும் ஏற்பாட்டை செய்ததில் இருந்து, தேர்தல் அலுவலர்கள் மீது எந்த வழக்கும் பாயாதவாறு சட்டத்திருத்தம் செய்தது வரை அனைத்தையும் சாதகனமான முறையில் நடத்தி முடித்து விட்டது. பீகாரில் நடத்திய வேலையை எல்லா மாநிலங்களிலும் உருவாக்கவே இந்த SIR என்றே ஜனநாயக சக்திகளின், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இந்தியாவின் மேல்மட்ட பார்ப்பனிய அதிகார வட்டத்தின் யதேச்சையதிகாரத்தினால் அடிமட்ட அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஒன்றே SIR. BLO க்களுக்கு எந்த  வசதியும் செய்து தராது, உரிய பயிற்சியோ, உரிய ஊக்கத் தொகையும் அளிக்காது, குறுகிய காலத்தில் எடுக்கப்படும் பணிக்கு அதிக அளவு ஆட்களை ஈடுபடுத்த வேண்டிய அடிப்படை அறிவுமில்லாமல் SIR எடுக்கும் முடிவு என்பது தேர்தல் ஆணையத்தின் ஆணவத்தினுடைய அடையாளம்.

பாஜக மோடி அரசினால் கொண்டு வரப்பட்ட தேசிய குடியுரிமைப் பதிவேடு (NRC) மக்களின் கடுமையான எதிர்ப்பினால் பின்வாங்கப்பட்டது. சாமானிய ஏழை மக்களிடம் முந்தைய தலைமுறையினரின் ஆவணங்களை வலியுறுத்தும் திட்டமே NRC. இதனை நடைமுறைப்படுத்தினால் ஆவணங்களற்ற பல கோடி மக்கள் குடியுரிமை கேள்விக்குறியாகும் என்பதனால் மக்களால் எதிர்க்கப்பட்டு பின்வாங்கப்பட்டது. ஆனால் அதே திட்டத்தை தேர்தல் ஆணையத்தின் மூலமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது பாஜக. தலித் மக்கள், சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமிய பெரும்பான்மை மக்களின் குடியுரிமை பறிக்கும் செயல் SIR. இது தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் மறுவடிவமே. மக்கள் பாஜக மோடி அரசின் சதிவலையைப் புரிந்து கொண்டு ஜனநாயக சக்திகளுடன் போராட்டத்திற்கு அணிதிரள்வது ஒன்றே இதனைத் தடுக்கும் வழியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »