இந்தியாவின் நீதி பரிபாலனம்: பகுதி 2 – இந்திரா கொலை வழக்கு
– தோழர் அ.ஹரிஹரன்
ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரை அவரின் பாதுகாவலர்களே சுட்டு கொலை செய்கின்றனர். இப்படியான ஒரு வழக்கு எத்தனை கோணங்களில் விசாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கு, சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள் இந்திய இராணுவம் இந்திராகாந்தியின் உத்தரவின் கீழ் நுழைந்தது என்ற அடிப்படையை வைத்துக் கொண்டு கொலையில் ஈடுபட்டவர்கள் மொத்தமே நான்கே பேர் என்று ஆரம்பித்து, ஒருவர் விடுதலையாக மூவருடன் முடிந்து விட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள்
- பேனட் சிங்
- சத்வந்த் சிங்
- கேஹர் சிங்
- பல்பீர் சிங்
இந்திராகாந்தியை இரண்டு காவலாளிகள் சுட்டு கொலை செய்துவிட்டனர், அவர்களில் ஒருவர் இறந்து விட்டார், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி – இது தான் கொடுக்கப்பட்ட தகவல். ஆனால் அங்கு நடந்தது என்ன?
இந்திரா காந்தியை சுட்ட பிறகு பேனட் சிங், சத்வந்த் சிங் இருவரும் ஓடி வந்த மற்றவர்களிடம் தங்கள் துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு, நாங்கள் செய்ய வேண்டியதை செய்துவிட்டோம், நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள் என்று சரணடைந்தனர். இவர்கள் இருவரை அருகிலிருந்த காவலர் அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இந்திராவை காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனை செல்கிறார்கள். இது தான் நடந்தது அப்புறம் எப்படி ஒருவர் செத்தார், இன்னொருவர் காயம் அடைந்தார் என்று கேள்வி எழுகிறதா.
அதற்கு வழக்கில் சொல்லப்படுவது, காவலர் அறையில் அமைதியாக 10 நிமிடம் உட்கார்ந்து இருந்த பேனட் சிங் அருகில் இருந்த காவலரின் துப்பாக்கியை பிடுங்கி தப்பிக்க முயன்ற பொழுது சுட்டதால் பேனட் சிங் உயிரிழந்தார், மற்றும் சத்வந்த் சிங் காயம் அடைந்தார். பேனட் சிங் தப்பிக்க வேண்டும் என்று எப்படி நினைப்பார்? அவர் ஒரு சப் இன்ஸ்பெக்டர், 8 வருடங்களாக பிரதமரின் பாதுகாப்பில் பணியாற்றுபவர். அவருக்கு தெரியாதா எத்தனை பாதுகாப்பு வீரர்கள் இருப்பார்கள் என்று. முழு திட்டமே கொலை செய்துவிட்டு சரணடைவது தான். தற்கொலை கூட அவர்கள் செய்து கொள்ள நினைக்கவில்லை. அவர் தப்பிக்க நினைத்தாராம் இவர்கள் சுட்டார்களாம் ஒட்டுமொத்தமாக யாரையோ காப்பாற்ற நடந்த கொலை இது.
இதன் பிறகு, டிசம்பர் 1ஆம் தேதி கேஹர் சிங் கைது செய்யப்படுகிறார், ஒரு மாதம் கழித்து. அது வரை அவர் டைரக்டர் ஜெனரல் ஆப் சப்ளைஸ் & டிஸ்போசல் துறையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பேனட் சிங்கின் மாமா, அதாவது தந்தையின் தங்கையின் கணவர். இவர் மீதான குற்றச்சாட்டு, இவர் தான் பேனட் சிங்கை இந்திராவை பொற்கோயில் விவகாரத்திற்கு பழிவாங்க தூண்டினார், அதன் பின்னர் பேனட் சிங் மூலமாக சத்வந்த் சிங்கையும் கொலைச் சதிக்குள் கொண்டுவந்தார் என்பதே. அதன் பிறகு இருவரையும் பொற்கோயில் அழைத்து சென்று அமிர்தம் பகிரும் நிகழ்வை ஏற்பாடு செய்தாராம் கேஹர் சிங்.
இதே சமயத்தில் சத்வந்த் சிங் மருத்துவமனையில் இருக்கிறார், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்து வருகிறார். டிசம்பர் 3ஆம் தேதி பல்பீர் சிங் என்ற பிரதம மந்திரி வீட்டின் இன்னொரு பாதுகாவலரையும் கைது செய்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுக்க அழைத்து வருகிறார்கள். ஆனால் பல்பீர் வாக்குமூலம் கொடுக்கவில்லை, மறுக்கிறார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடுகிறார்.
பல்பீர் சிங் இந்திரா கொலையின் பொழுது மாலை நேரம் தான் பணிக்கு வர வேண்டும். எனவே கொலை நடந்த பொழுது அவர் அங்கு இல்லை. மாலையில் பணிக்கு வந்த பொழுது தலைமையகத்து அவரை வரச்சொன்னதாக அங்கிருந்த காவலர் சொல்கிறார். உடனே தலைமையகம் செல்கிறார், அங்கு விசாரணை நடக்கிறது. அன்றிலிருந்து ஒரு மாதம் அவர் அங்கு தான் இருக்கிறார் அவரை விசாரித்த ஆவணங்கள் உள்ளன. ஆனால் தலைமையகத்தில் இருந்து வெளியேறிய ஆவணமோ, காவல்துறை விடுவித்ததாகவோ எந்த ஆவணமும் இல்லை. டிசம்பர் 3 ஆம் தேதி தலைமறைவாக இருந்தவரை பிடித்து வந்தோம் வாக்குமூலம் கொடுக்க விரும்புகிறார் என்று நீதிபதியிடம் காவல்துறை சொன்ன பொழுது தான், நான் வேண்டுமென்றே குற்றம் சாட்டப்படுகிறேன் நான் வாக்குமூலம் கொடுக்க முடியாது என்று கூறினார். இதனால் தான் இவர் உயிர் தப்பியது.
இதன் பிறகு சதவ்ந்த் சிங் ஒரு நாள் அதிகாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ச் ஆகி சென்றுவிட்டதாகவும், அவரை செங்கோட்டை அருகே விரட்டி கைது செய்ததாகவும் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார். அதாவது ஒரு பிரதமரை கொலை செய்தவர் மருத்துவமனையில் எந்த பாதுகாப்பு இன்றி இருந்தாராம், அவரே டிஸ்சார்ஜ் ஆகி தப்பிச் சென்றாராம், இவர்கள் விரட்டிப் பிடித்தனராம். இந்த கதைக்கு காரணம் ஒன்றுமில்லை, சரணடைந்தவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை கிடையாது. அதனால் ஓடிய சத்வந்த் சிங்கை விரட்டி பிடித்தனர்.
இதன் பிறகு விசாரணை பல்பீர் சிங் இதில் எப்படி தொடர்பு என்று சென்றது. பல்பீர் சிங் பொற்கோயில் நிகழ்வுக்கு பழிவாங்க நினைத்து பேனட் சிங்கிடம் (இறந்துவிட்டார்), விவாதித்தாராம், அதன் பிறகு செப்டம்பர் மாதம் இந்திராவின் வீட்டின் அருகில் ஒரு பருந்து வந்து அமர்ந்ததாம், அதை பேனட் சிங்கிடம் கூப்பிட்டு காட்டினாராம். சிக்கியர்களின் பத்தாவது குருவான கோபிந்த் சிங்கின் அனுமதி கிடைத்துவிட்டது என்று கூறினாராம். அப்புறம் அக்டோபர் 30, இந்திரா கொல்லப்படும் ஒரு நாள் முன்பு கடைசியாக சத்வந்த் சிங்கிடமும் குருவின் அனுமதி குறித்து கூறினாராம்.
இது தான் முழு வழக்குன் சாராம்சம். பேனட் சிங் இறந்துவிட்டதால் மூவர் மீதும் வழக்கு நடந்தது. மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டிலும், உயர்நீதிமன்றத்திலும் மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் கேஹர் சிங் மற்றும் சத்வந்த் சிங் இருவருக்கும் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. பல்பீர் சிங் குற்றவாளி இல்லை என்று விடுவிக்கப்பட்டார்.
பல்பீர் சிங் தலைமறைவு ஆகவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்ததால் அவர் 30 நாட்கள் சட்டப்பூர்வமற்ற முறையில் காவலில் வைக்கப்பட்டது உறுதியானது. கேஹர் சிங் இதற்கு பிறகும் பல வழக்குகளை தொடுத்து தனது தூக்குதண்டனையை ரத்து செய்ய முயற்சித்தார், ஆனால் 1989 ஜனவரி 6 ஆம் தேதி கேஹரு சத்வந்த் சிங் இருவரும் தூக்கிலிடப்பட்டனர்.
கேஹர்சிங் வழக்கும் அவர் வாங்கிய தீர்ப்புமே இன்று பல அப்பாவி தூக்குதண்டனை கைதிகளை காப்பாற்றி வருகிறது.
பருந்து பறந்தால் நாராயணா என்று கன்னத்தில் போடுவது போல் ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்ய பருந்தையே துணைக்கு கூப்பிட்டு இருக்கிறார்கள், இதை நீதிமன்றமும் நம்பியுள்ளது.
நல்லவேளை அந்த பருந்து கிடைத்திருந்தால் அதையும் சிறையிலிட்டு தூக்கில் போட்டிருப்பார்கள்.
தொடரும்..
அடுத்து ஜெனரல் வைத்யா படுகொலை.
முந்தைய பகுதி, காந்தி கொலை வழக்கு.
இத்தொடர் கட்டுரையை எழுதிய தோழர் ஹரிஹரன், தமிழ்த்தேசிய களத்தில் மிகத்தீவிரமாக களமாடியவர். தமிழீழ இனப்படுகொலை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, எழுவர் விடுதலை, முல்லைப்பெரியாறு அணை மீட்பு, மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட தமிழக வாழ்வுரிமை போராட்டங்கள் அனைத்திலும் வீரியமாக செயல்பட்டு மே பதினேழு இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர். இவர் கடந்த நவம்பர் 29 அன்று உயிரிழந்தார். அவர் தனது முகநூல் பக்கத்தில் தொடர் கட்டுரையாக எழுதியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இங்கு மறுபதிப்பு செய்கிறோம்!