நிரபராதி 7 தமிழர் விடுதலை: நெருங்கி வந்த விடுதலை ஒளிக்கீற்று
இராஜிவ்காந்தி கொலையில் பேரறிவாளனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை நான் தவறாக எழுதிவிட்டேன் என்று ஒய்வுபெற்ற விசாரணை அதிகாரி தியாகராசன் சொன்னதன் அடிப்படையில் தன்னை விடுதலை செய்யவேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் பேரறிவாளனின் மனு மீது எந்தவித காரணமுமில்லாமல் காலம் கடத்துவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று தொடர்ந்து கருத்து சொல்லி வந்தது. இந்நிலையில் 07.12.21 செவ்வாய் அன்று வந்த இந்த வழக்கு விசாரணையில் மிகுந்த கண்டிப்புடன் இனியும் இந்த வழக்கை ஒத்தி வைக்க முடியாது; இதுவே கடைசி ஒத்திவைப்பு என்று சொல்லி சனவரிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
ஒருவேளை சனவரிக்குள் இவர்கள் சரியான காரணம் சொல்லவில்லை என்றால் நீதிமன்றமே அவர்களை விடுதலை செய்வதை தவிர வேறுவழியில்லை என்ற சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால், புதுகாரணத்தை ஏதேனும் ஒன்றிய அரசு ஆளுநர் மூலம் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையை சிலர் சந்தேகமாக முன்வைக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இனிமேலும் இந்த வழக்கை காலதாமதப்படுத்த ஆளுநருக்கோ, ஒன்றிய அரசுக்கோ சொல்ல காரணங்கள் இல்லை. எல்லா காரணங்களையும் ஏற்கனவே தெரிவித்துவிட்டார்கள். அதாவது இந்த வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை பல்நோக்கு கண்காணிப்பு ஆணையம் (MDMA) இன்னும் இந்த வழக்கை விசாரிக்கிறது என்று ஒரு பதிலை சொல்லிப்பார்த்தார்கள். உடனே நீதிமன்றம் இத்தனை வருடம் அந்த ஆணையம் விசாரித்த விசாரனையின் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி தெரிவித்தது. சிபிஐ அந்த அறிக்கை சமர்பித்தவுடன் அதனை பார்த்த நீதியரசர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணையே நடத்தாமல் இருப்பதற்கு ஆணையம் எதற்கு என்று கண்டித்தார்கள். உடனே பல்நோக்கு விசாரணை ஆணையம் விடுதலைக்கும் எங்கள் விசாரணைக்கும் சம்பந்தமில்லை என்று நீதிமன்றத்திலேயே கூறிவிட்டது.
அடுத்ததாக, இந்த வழக்கில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநராகிய எனக்கில்லை குடியரசுத்தலைவருக்கு மட்டுமே உள்ளது என்று ஆளுநர் ஒரு பதிலை கூறி காலம் கடத்தப்பார்த்தார். அதற்கும் நீதிமன்றம் உறுப்பு 72ஆம் படி குடியரசுத்தலைவரும், உறுப்பு 161இன் படி ஆளுநரும் முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர்கள் என்று கூறியது. ஆளுநர் குடியரசுத்தலைவர் இருவரும் உள்துறை மற்றும் மாநில அமைச்சரவையின் முடிவை செயல்படுத்தும் அதிகாரம் உள்ளவர்கள் என்றும்; ஏற்கனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் அவர்கள் இந்த வழக்கில் தேவையின்றி காலதாமதம் ஆனதால் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைப்பதோடு இவர்களுக்கான விடுதலையை அந்த மாநில அமைச்சரவையின் மூலம் ஆளுநரே நிறைவேற்றலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
மாநில அரசும் உடனடியாக அமைச்சரவையை கூட்டி இவர்களை விடுதலை செய்யலாம் என்று தீர்மானத்தை இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆகவே, இவர்களின் விடுதலையை ஆளுநரே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இப்படியிருக்க, ஒன்றிய அரசு விடாப்பிடியாக குடியரசு தலைவருக்கு தான் இதில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்று தொடர்ந்து கூறி வந்தது.
தற்போது, “ஒன்றிய அரசு தொடர்ந்து தாமதப்படுத்துகிறது, இதுவே கடைசி ஒத்திவைப்பு” என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பு காட்டியிருக்கிறது. இதனையடுத்து, நிரபராதி ஏழு தமிழர்கள் விடுதலையை தொடர்ந்து காலதாமதம் செய்து இழைக்கப்பட்ட அநீதிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படுமென தெரிகிறது.
ஆகவே, வரும் சனவரிக்குள் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதை தவிர ஒன்றிய அரசுக்கு (ஆளுநர்) வேறு வழியில்லை. இதை தவிர்த்து வேறு ஏதேனும் குளறுபடிகளை ஒன்றிய அரசு செய்யுமானால் அது அரசியலமைப்புக்கு எதிரானது ஆகும். அதே நேரத்தில் மாநில அரசு இனியும் ஒன்றிய அரசை நம்பிடாமல் மாநில அமைச்சரவைக்கு உள்ள 161வது அதிகாரத்தின் படி இவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.