‘கடவுளை மற, மனிதனை நினை’ என்றார் பெரியார். கடவுள் ஒழிப்பு என்பது பெரியாரின் கொள்கை. ஆனால் அந்த கொள்கையை விட, ஒரு படி மேலாக மக்கள் சம உரிமை அடைவதற்காக உழைத்தார். அனைத்து மக்களும் சாதி வேறுபாடில்லாமல் கோவிலுக்குள் மட்டுமல்ல, கோவில் கருவறைக்குள்ளும் செல்ல வேண்டும் என்று போராடிய சமத்துவ உரிமைக்கான மானுடப்பற்று கொண்ட சமூகப் போராளி அவர் .
இன்று ஒரு இலட்சம் மக்கள் திருவரங்கத்திற்குள் பக்தியுடன் வரும் போது, அதற்கு முன் பெரியார் சிலை இருக்கலாமா எனக் கேட்கும் கனல் கண்ணன் போன்றோர்களுக்கு, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த நாடார் சமூக மக்களை உயர்சாதியினர் கோவிலுக்குள் நுழைய விடவில்லை என்ற வரலாறு தெரியுமா?
மறுக்கப்பட்ட ஆலய நுழைவு:
இராமநாதபுரம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் செல்ல, 1855-ல் கமுதி பகுதி நாடார்கள் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின்னர் 1897-ல் தான் அவர்கள் வலுக்கட்டாயமாக உள்நுழைந்தனர். அப்படி வழிபட்டதற்காக தமிழ் மன்னன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்ட அந்த சுந்தரேசுவரர் கோயில் தீட்டுப் பட்டுவிட்டதாக பார்ப்பனர்களால் சுத்திகரிக்கப்பட்டது. கோவிலை இழிவுபடுத்தியதாகக் கூறி அந்த கால கட்டத்திலேயே ரூ.5,000 இழப்பீடும், 15 நாடார்களின் மேல் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
1872-ல் திருசெந்தூர் கோவிலுக்குள் சென்றதால் ஏழு நாடார்கள் மீது ஆலய நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட மதுரை மீனாட்சி கோவிலுக்குள் 1874 -ல் மூக்க நாடார் என்பவர் கிளி மண்டபம் வரை வந்ததை அடையாளம் கண்டு கொண்ட ஆலய ஊழியர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நாடார்கள் பணியாட்கள் மீது வழக்குத் தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார். ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும் மனுதர்மம் தான் சட்டத்தீர்ப்பாக சொல்லப்பட்டது.
அதே போல 1876-78-இல் திருவில்லிபுத்தூர் தாலுகா திருத்தங்கலில் கோவில் உள்ளே நுழைய நாடார்கள் போராட்டம் நடந்தது.1890-இல் திருச்சுழி கோவிலுக்குள்ளும், மதுரை கோவிலுக்குள்ளும் நாடார்கள் செல்ல முயன்றபோது அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு 19ம் நூற்றாண்டு இறுதி வரையிலுமே பெருங்கோவில்களுக்குள் நுழைந்த நாடார்களை அடித்துத் துரத்தி, அவர்கள் மேல் வழக்குத் தொடுத்து நாடார் சமூகத்தை அலைக்கழித்த வரலாறுகள் எல்லாம் வெள்ளையர்களின் அரசு ஆவணங்களில் சாட்சியங்களாக இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்தால் தீட்டு என்ற பார்ப்பனர்களின் மனுதர்மமே அன்று தீர்ப்பாக சொல்லப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலைய பெருமாள் கோயிலுக்குள், நாடார், ஈழவர், பறையர், புலையர், குறவர் ஆகியோர் நுழையக்கூடாது என்ற தகவல் பலகையே வைக்கப்பட்டிருந்தது. இப்படியெல்லாம் பார்ப்பனியத்தின் சனாதனக் கொடுமையால், கோவிலுக்குள் சென்று வழிபடக் கூட உரிமையற்றவர்களாக இருந்த அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களே, பார்ப்பனிய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள உருவாக்கப்பட்ட இந்துத்துவ அமைப்புகளில் பெரும்பான்மையாக உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை.
ஆலய நுழைவுக்காக பெரியார் போட்ட தீர்மானங்கள்:
1929-ம் ஆண்டு ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியில் 25 ஆண்டு காலமாக உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் இருந்தார் பெரியார். அந்தக் கோயிலில் அனைத்து சாதியினரும் செல்ல பெரியாரின் முக்கிய முயற்சியாலும், மற்ற உறுப்பினர்களாலும் உருவாக்கப்பட்ட ஆலய நுழைவு தீர்மானம் இயற்றப்பட்டது. பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் அந்தத் தீர்மானம் நிறைவேறவில்லை. அதனால் கோவம் கொண்ட பெரியார் பதவி விலகலை அறிவித்தார். மனிதர்களின் சமத்துவ உரிமையான அனைத்து சாதியினரும் ஆலயங்களுக்குள் செல்ல வேண்டும் எனும் நோக்கம் நிறைவேற பெரிய பதவியையும் துச்சமாக தூக்கியெறிந்தார். பெரியார் காங்கிரசு கட்சியில் இருக்கும் பொழுதே 1922-ஆம் ஆண்டு திருப்பூர் மாநாட்டில் கோவில் நுழைவு உரிமைகள் வேண்டுமெனத் தீர்மானம் கொண்டு வந்தார்.
நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், 30.11.1917 அன்று நெல்லையில் நடைபெற்ற நீதிக்கட்சி தான் தென்மண்டல மாநாட்டில், இந்து கோயில்களுக்குள் இந்து நாடார்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. 1926-ல் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் இந்துக் கோயில்களில், ”இந்து என்று சொல்லப்படும் எல்லா வகுப்பாருக்கும், ஆலயப் பிரவேசத்திலும், பூசையிலும், தொழுகையிலும் சம உரிமை உண்டு” என்று மதுரையில் நடந்த மாநாட்டில் தீர்மானம் இயற்றியது.
பெரியாரிய தோழர்களின் ஆலய நுழைவு போராட்டங்கள்:
கேரள மாநிலம் திருவிதாங்கூரின் வைக்கம் ஊரில் உள்ள சோமநாதர் கோயில் தெருவில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கவேக் கூடாது என்ற அநீதிக்கு தொடர் போராட்டத்தின் காரணமாக முடிவு கட்டினார் பெரியார். அவரின் தொண்டர்களோ இதனையும், சுயமரியாதை இயக்க மாநாட்டுத் தீர்மானங்களையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கொண்டு கோவில் நுழைவுப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
முதல் கோயில் நுழைவுப் போராட்டத்தைத் துவங்கியவர் ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர். இவர் 07.02.1927-இல் திருவண்ணாமலை கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார். அவரை கோவிலுக்குள் வைத்து பூட்டினர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையில் கண்ணப்பருக்குச் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. 1927-ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக்கொண்டு திருச்சி தாயுமானவர் மலைக்கு படியேறிச் சென்றபோது அவர்கள் குண்டர்களால் தடியால் அடித்து பாறைப்படிகளில் உருட்டிவிடப்பட்டார்கள். அன்றைய சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் 1927-இல் சுமார் 1,000 பேர் அனைத்து சாதியினருடன் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் நுழையச் சென்றனர். 1928-இல் திருச்சி மலைக்கோயிலிலும், திருவானைக்கோவிலிலும் இவ்வாறு முயற்சிகள் நடத்தப்பட்டன.
1929 மார்ச் 12 அன்று பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு குத்தூசி குருசாமி, 3 தாழ்த்தப்பட்ட தோழர்களை நெற்றியில் திருநீறு பூசச் செய்து முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துச் சென்று தேங்காய், பழம், பூ ஆகியவை அடங்கிய தட்டுடன் கோவிலுக்குள் நுழைந்தார்கள். அவர்களை கோவிலுக்குள்ளேயே வைத்து பார்ப்பனர்கள் பூட்டினர். இரண்டு நாள்களுக்குப் பின் பெரியார் வந்த பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டது. 9 மாதங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ஈசுவரன், பசுபதி, கருப்பன் ஆகியோருக்கு ரூ.60 அபராதம் விதிக்கப்பட்டது. ஈசுவரன் மட்டும் அபராதம் கட்ட மறுத்து சிறை சென்றார்.
ஈரோடு மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களைச் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் மேற்கொண்டனர். ஈரோட்டில் கண்ணப்பரும், காரைக்குடியில் சொ.முருகப்பாவும் தலைச்சேரியில் டபிள்யூ. பி.ஏ. சவுந்தரபாண்டியனும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலீசுவரர் கோவில்களில் ‘திராவிடன்’ ஆசிரியர் சுப்ரமணியன், பண்டிதர் திருஞானசம்பந்தன் தலைமையிலும், ஆதி திராவிடர்களுடன் ஆலய நுழைவு செய்து கைதானார்கள். இத்தனை நபர்களும் ஆறு கால பூசை செய்யும் பக்தர்கள் அல்ல. கோவிலில் வழிபடும் மக்களின் உரிமைகளுக்காக களம் கண்ட பெரியாரின் வழி வந்த தொண்டர்கள். இன்று ஒரு இலட்சம் பேர் திருவரங்கம் கோவிலுக்குள் நுழைவது எளிமையானதாக தோன்றலாம். ஆனால் இதற்காக பெரியாரிய தொண்டர்கள் செய்த அர்ப்பணிப்புகள் ஏராளம் என்பதை கனல் கண்ணன் போன்ற அறிவிலிகள் அறிய வேண்டும்.
இன்னும் 1939-ம் ஆண்டு ஜூலை 8-ம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஆதிதிராவிட மக்களை அழைத்துச் சென்ற வைத்தியநாத ஐயரை முதலில் கோவில் நுழைவு போராட்டத்தை நடத்தியவர் என்று கூச்சமேயில்லாமல் பொய்களைப் பரப்புபவர்களின் எடுபிடிக் கூட்டமாக இந்த நபர்கள் இருக்கிறார்கள்.
1932-இல் அந்த மசோதாவை கொண்டு வந்தவர் டாக்டர். சுப்பராயன். எதிர்க்கட்சி கொண்டு வரும் மசோதா என்பதால் நீதிக்கட்சி அதை எதிர்க்காமல் ஆதரிக்க வேண்டும் என்று குடி அரசு பத்திரிகையில் 30.10.1932 அன்று பெரியார் தலையங்கம் எழுதினார். மேலும் “எல்லோரும் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும், அங்கு தெய்வம் இருக்கிறது அல்லது கடவுள் இருக்கிறது, என்னும் நோக்கத்துடன் நாம் கோவில் நுழைவினை ஆதரிக்கவில்லை. கோவில்களும் தேசத்தின் பொதுச்சொத்து என்கிற முறையில் வணங்குவதற்கோ, வேடிக்கை பார்ப்பதற்கோ அல்லது சும்மாவாகவோ கோவிலுக்குள் நுழையக்கூடிய உரிமை தேச மக்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்னும் எண்ணத்துடனே கோவில் பிரவேசத்தை முழு மனதுடன் ஆதரிக்கின்றோம். இதனை சட்டம் செய்யும் முயற்சியையும் வரவேற்கின்றோம்” என்று குடி அரசில் எழுதினார். கடவுள் மறுப்பை விட தேச மக்கள் உரிமை என்பதற்கு முன்னுரிமை கொடுத்தவர் பெரியார் என்பதை இந்தக் கருத்துக்களே சொல்லி விடுகிறது. ஆலய நுழைவு மசோதா 1939 ஜூலை 11ம் நாள் நிறைவேற்றப்படும் வரை இதற்கு பெரியாரின் ஆதரவு முழுமையாக இருந்தது.
பார்ப்பனியத்தின் நோக்கம் :
இந்துக்களின் உரிமை மீட்பு என்று நடந்த கூட்டத்தில் “திருவரங்கம் கோவிலின் முன் இருக்கும் பெரியாரின் சிலை உடைக்கப்படும் நாளே இந்துக்களின் உண்மையான எழுச்சி நாள், ஒரு இலட்சம் பேர் வழிபட வரும் இடத்தின் முன் பெரியார் சிலை இருக்கக் கூடாது.” என்று வன்முறையை தூண்டுமவிதத்தில் பேசியிருக்கிறார் இந்த கனல் கண்ணல் என்ற திரைத்துறையை சேர்ந்த நபர்.
இந்த இந்துத்துவ கும்பல் உரிமை மீட்பு என்று சொல்வதெல்லாம், திரும்பவும் கோயில் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்னும் சூழ்ச்சி தானே தவிர வேறொன்றும் கிடையாது. அறநிலையத் துறையே இருக்கக் கூடாது என்பது தான் இவர்களின் நோக்கம். நீதிக்கட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட அறநிலையத் துறையினால் கோடிக்கணக்கான சொத்துகளை பாரம்பரியமாக கொள்ளையடித்த பார்ப்பனிய கும்பலுக்கு கைகட்டி விடப்பட்டது போலிருக்கிறது. இதனால் தான் பார்ப்பன உரிமை மீட்பு என்பது இந்துக்களின் உரிமை மீட்பாக மறைமுகமாக இப்படிப்பட்ட நபர்களால் பேசப்படுகிறது.
இந்துக்களின் உரிமை:
இந்து என்று சொல்லும் இந்துவாக்கப்பட்டவர்களின் உரிமை மீட்பினை செய்தவர் பெரியார். இந்த மீட்சிக்காகத் தான் சமத்துவமும், சமூகநீதியும் கொண்ட இடஒதுக்கீடு உரிமைக்காக காங்கிரசிலிருந்து விலகினார் பெரியார். சாதி ஒழிப்பு அவரின் கொள்கை. ஆனால் சாதிப் படிநிலையில் கீழ் நிலையில் இருப்பவர்கள் உயர வேண்டும் என்பது அவரது மானுடப் பற்று. கொள்கையை விட மானுடப் பற்றுக்கே முன்னுரிமை தந்தார். அவரின் வலிமையான பிரச்சாரம் சாதி சங்கங்களிடையேயும் நடந்தது. அரசியல் மட்டங்களிடையேயும் தொடர்ந்தது. அதன் பலனாக கிடைத்தது தான் நீதிக்கட்சி 1921-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வந்த வகுப்புரிமை என்றழைக்கப்பட்ட இன்றைய இட ஒதுக்கீட்டு உரிமை. இதையும் விட்டார்களா பார்ப்பனர்கள். உச்சநீதி மன்றம் வரை சென்று தடை வாங்கினார்கள். செண்பகம் துரைராசன் என்கிற பார்ப்பனப் பெண் மருத்துவக் கல்விக்கு விண்ணப்பமே போடாமல் மருத்துவ சீட்டு கோரி நீதிமன்றத்தை நாடிய சூழ்ச்சியின் மூலம் வகுப்புவாரி உரிமைக்கு தடை விதிக்கப்பட்டது. 1950-களில் நிகழ்த்தப்பட்ட இந்த அநீதிக்கு துடித்தெழுந்தவர் பெரியார். அவரின் பிரச்சார பலன் தான் இன்று இந்தியா முழுதும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்தியாவில் இன்று 50% இட ஒதுக்கீடு என்றால் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு பெரியாரின் வழிவந்தவர்களால் சாத்தியமானது.
இந்துக்களின் எழுச்சி:
இந்து என்று சொல்லப்படும் இந்துவாக்கப்பட்டவர்களுக்கு சுயமரியாதையுடன் கூடிய எழுச்சியை ஏற்படுத்தியவர் பெரியார் தான். ஒவ்வொன்றையும் அறிவியல் பார்வையுடன் அணுகும் கருத்தியலை பரப்பினார். புனிதக் கட்டுமானங்களைத் தகர்த்தார். மக்களின் மூளையில் பார்ப்பனியம் மாட்டியிருந்த அடிமைச் சங்கிலிகளை பரப்புரைகளால் உடைத்தார். பெரியாரின் தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சாதி மத ஒழிப்பு, பெண்ணடிமைத் தன ஒழிப்பு போன்ற ஒழிப்பு செயல்பாடுகளால் அறியாமை இருளில் சிக்கியிருந்த மக்களிடம் எழுச்சி ஏற்பட்டது. பகுத்தறிவை உணர வைத்தார். இந்துவாக்கப்பட்ட தமிழர்களின் எழுச்சி பெரியாராரின் தொண்டினால் உருவானது. அவரின் கருத்துக்களைத் தொடர்ந்தால் தான் இந்துத்துவ கும்பல் செய்யும் வன்மமான பிரச்சாரங்களிலிருந்து விடுபட முடியும். அப்போது தான் பெரியார் திரட்டிய மக்கள் எழுச்சியினால் சாத்தியப்பட்ட இட ஒதுக்கீடு உரிமை இனி அரசுத் துறையில் இனி தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்ற சமூக நீதி உரிமைக்கு போராடத் தூண்டும் படி விரிவாகும்.. சமூகத்தின் ஏற்றத் தாழ்விற்கு காரணம் பார்ப்பனிய அதிகார மட்டம் செய்த சூழ்ச்சிகளே என்பதை அறிந்து கொண்டு எழுச்சி உருவாக வழி வகுக்கும். பனியா, குஜராத்தி முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்தும், ஏழை எளிய மக்களின் அடிப்படை உணவான அரிசி, கோதுமைக்கும் வரி போடும் அரசியலும் புரிந்து எழுச்சி ஏற்படும். மக்களின் அடிப்படைத் தேவையான பொருட்களின் விலைவாசி உயர்வை எதிர்க்கும் எழுச்சி ஏற்படும். இன்னும் விவசாயத்தில், சிறு குறு தொழிற்சாலைகளில், தனியார் நிறுவனங்களில் என எங்கெல்லாம் பணியாளர்களை சுரண்டும் முறைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் எழுச்சி ஏற்படும். இந்தி எதிர்ப்பு மூலம் அவர் உருவாக்கிய எழுச்சிகளைப் படிப்பதன் மூலம் தேசிய இனங்களின் தாய்மொழிகளை அழிக்க ஆதிக்க மொழியாக இந்தியைக் கொண்டு வரத் துடிக்கும் டெல்லியின் அரசியல் புரியும். ‘தமிழ்நாடு தமிழருக்கே ‘ என்று அவர் முழங்கிய காரணம் தெரியும். பெரியாரை முழுமையாகப் பயின்றால் தான் வேத வழிபாட்டைத் திணித்த பார்ப்பனீயத்திற்கு நல் வாய்ப்பாக கிடைத்த ஒன்றே இந்து என்ற சொல் என்பதும் புலப்படும்.
திருவரங்கத்தில் பெரியார் சிலை அமைப்பதற்கு அப்போதுள்ள திமுக அரசு ஆணையிட்ட பொழுதும், தடை செய்ய என்னவெல்லாம் வழிகள் இருக்கிறதோ அவ்வளவையும் செய்தது இந்துத்துவ கும்பல். சிவசேனா அமைப்பு சார்பில் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தார்கள். போலியாக ஆவணங்கள் சமர்ப்பித்தார்கள். இறுதியில் சென்னை உயர் நீதிமன்றம் அவர்களை எச்சரித்து அனுப்பி, பெரியார் சிலை அமைக்க அனுமதி கொடுத்தது.
பெரியார் சிலை எங்கு அமைக்கப்பட்டாலும் கடவுளை நம்புபவன் முட்டாள் என்று தொடங்கும் வாசகங்கள் இடம்பெறும். அதற்கு காரணம் அவருக்கு கடவுள் மீது இருக்கும் தனிப்பட்ட பகை அல்ல. கடவுள் பெயரைச் சொல்லி அதன் மூலம் உருவான சாதிகளும், அதனைக் காரணமாக வைத்து பார்ப்பனியம் உருவாக்கிய மதமும் மனிதர்களை கூறு போட்டு அடிமை நிலையில் வைத்திருந்ததனால், இவற்றிற்கெல்லாம் மூலக் காரணமாக கடவுளைக் கருதியதால் தான் இந்த வாசகங்கள் இடம் பெற வேண்டும் என்றார் பெரியார்.
இந்துக்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதாக காட்டிக் கொள்ளும் இந்தக் கும்பலின் உண்மையான நோக்கம் இந்திய ஒன்றியத்தில் 80% மேல் இருக்கும் இந்துக்களுக்காக அல்ல. வெறும் 5% கீழ் இருக்கும் பார்ப்பனர்களின் ஆதிக்க மேலாண்மையை நிலைநிறுத்துவதற்காக தான். இதில் சோகம் என்னவென்றால் இந்த இந்துத்துவ அமைப்புகளில் கடவுள் பக்தி, சாதிப் பற்றுகளுக்காக சேர்ந்திருக்கும் இந்துக்களுக்கு இது தெரிவதில்லை. பல சிக்கலான வலைப்பின்னல்களால் பிணைக்கப்பட்ட இந்த அரசியலைப் புரிந்து கொள்ள முடியாத அறியாமையால் சேர்கின்றனர். மதவெறியை வளர்த்துக் கொள்கின்றனர். பார்ப்பனியத்தின் கூலிப்படை தான் தாங்கள் என அறியாதவர்களாக மதவெறி கொண்டு அலைகின்றனர்.
பெரியாரின் “மண்டைச் சுரப்பை உலகு தொழும் ” என்றார் பாவேந்தர் பாரதிதாசன். அவருடைய சிந்தனைகள் காலத்தால் அழிக்க முடியாது. இன்று பல மாநிலங்களும் பெரியாரின் கருத்துக்களை ஆழக் கற்கின்றனர். உலகெங்கும் பெரியாரின் சிந்தனைகள் விரிந்து பறக்கிறது. ஆனால் சில பிறவிகள் பெரியாரின் சிலையை உடைத்து விட்டால் அவரின் சிந்தனைகள் சிதறி விடும் என மனப்பால் குடிக்கின்றனர். இவர்களின் முயற்சி வெல்ல அனுமதிக்கக் கூடாது. கனல் கண்ணன் என்ற நபர் பெரியாரின் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசி ஒரு வாரம் கடந்த பின்னும் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனைக் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது பெரியாரின் வழி வந்த அரசாக சொல்லிக் கொள்ளும் திமுக அரசிற்கு அழகல்ல. இனி பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட நம் தலைவர்களின் சிலையை உடைப்பவர்கள், உடைப்போம் என்று பேசுபவர்களை கடுமையான தண்டனைப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்.
‘யாதும் ஊரே; யாவரும் கேளிர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ – என்று மனித குலத்திற்கான வாழ்வியலை வகுத்தவர்கள் தமிழினச் சான்றோர்கள். இந்த வரிசையில் ‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’ என்ற பெரியார் மனித விடியலுக்கான 21ம் நூற்றாண்டு சிந்தனையாளராக, புத்துலகின் வழிகாட்டியாக வலம் எக்காலமும் வலம் வருவார்.
இந்துவாக்கப்பட்டவர்கள் என்ற வார்த்தை பார்ப்பனர் அல்லாத இந்துக்களை குறிக்கும் சரியான வார்த்தையாக உள்ளது