இந்த இந்திய நிலப்பரப்பு தேசிய இனங்களால் வேற்றுமை கொண்டது மட்டுமல்ல, அந்த தேசிய இனங்களின் ஆரிய எதிர்ப்பிலும் பெரும் வேறுபாடு கொண்டுள்ளது. கடந்த கால வரலாறு மட்டுமல்லாமல் சமகால நிகழ்வுகளும் இதையே நமக்கு கற்றுணர்த்துகின்றன. அத்தகைய அரசியல் பயிற்சியே தமிழ்நாட்டில் திராவிட இயக்க அரசியல் வளர்ச்சி, குறிப்பாக தந்தை பெரியாரின் காலத்து ஆரிய எதிர்ப்பு, இன்றளவும் இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டை தனித்துவமாக காட்டி வருகின்றன.
சமீபத்தில் இந்திய ஒன்றிய விடுதலை நாளை கொண்டாட வேண்டி அனைவரின் வீட்டிலும் இந்தியக் கொடியை ஏற்றச் சொல்லி ஒன்றிய மோடி அரசு கூறியது. மாநில அரசுகளும் அதற்கு உறுதுணையாகவே செயல்படுகின்றன. இந்தியக் கொடியை ஏற்றாதவர்கள் ஏதோ தேசத்துரோகிகள் போல சித்தரிக்கும் இவர்கள், உண்மையில் தேசத்துரோகமாக கருத வேண்டிய ஒரு அவமானகரமான நிகழ்வை வசதியாக தவிர்த்துவிட்டு செல்கின்றனர்.
இராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தில் சுரனா என்கிற கிராமத்தை சேர்ந்த 9 வயது பள்ளி குழந்தை இந்திர மேக்வல். தண்ணீர் தாகம் எடுத்ததால் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பானையைத் தொட்டு தண்ணீர் குடிக்க எத்தனித்திருக்கிறார். அதை கண்ட உயர் சாதி வெறி கொண்ட ஷாயில் சிங் என்ற ஆசிரியன், குழந்தை இந்திர மேக்வலை கடுமையாக தாக்கியுள்ளான். காரணம், இந்திர மேக்வல் ஒரு பட்டியல் சமூக மாணவன்.
இது நடந்ததோ கடந்த மாதம் (ஜூலை, 2022) 20-ம் தேதி. இது ஒரு செய்தியாகக் கூட இந்திய பத்திரிக்கைகள் பெரும்பாலானவற்றில் வரவில்லை. இராஜஸ்தான் அரசும் குற்றவாளி ஷாயில் சிங் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை. குழந்தை இந்திர மேக்வல் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்திருக்கிறார். ஆனால் மருத்துவம் கைகொடுக்காமல் இறந்து போயிருக்கிறார். அதன் பிறகே ஊடகங்கள் இந்த செய்தியை வெளியீட்டு இருக்கின்றன. ஆனால் இராஜஸ்தான் அரசோ மாணவனின் ஊரில் இணைய வசதிகளை தூண்டித்துள்ளது. பின் சாதி வெறி கொண்ட ஷாயில் சிங்கும் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
ஒரு குவளை தண்ணீரில் தீட்டு பார்க்கும் இந்த சமூகத்தில்தான் இந்தியக்கொடி ஏற்றி நாம் நாட்டுப்பற்றை நிரூபிக்க வேண்டுமாம். சாதியை, தீண்டாமையை ஒழிக்க முடியாத இந்த அரசு வழக்கம் போல நிவாரணத் தொகை 5 லட்சம் அறிவித்திருக்கிறது.
வட இந்தியாவின் இந்த ஒரு நிகழ்வு மட்டுமல்ல, பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், வன்புணர்வுகள், சொத்துக்கள் அழிக்கப்படுதல் மற்றும் கொலைகள் தினசரி வாடிக்கையாக போய்விட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு, குஜராத்தில் மகேஷ் ரகோத் என்ற 13 வயது சிறுவன் ‘உயரசாதியினர்’ அணியும் மொஜீரிஸ் என்ற ‘ராஜரீக’ காலணியை (Royal Shoe) அணிந்ததற்காக தாக்கப்பட்டார். அதே குஜராத்தில் மவுலீக் ஜாதவ் என்ற 22 வயது பட்டியல் சமூக இளைஞர் முகநூலில் ‘உயர் சாதியினரின்’ பெயர்க் குறியீடான ‘சிங்’ (Sinh) என்ற சொல்லை தன் பெயருக்குப் பின்னால் இணைத்து பயன்படுத்தியதால் அவரது வீட்டிலேயே தாக்கப்பட்டார். மகாராஷ்டிராவில் ‘உயர் சாதியினரின்’ கிணற்றில் குதித்து நீச்சல் அடித்ததற்காக 3 பட்டியல் சமூக குழந்தைகளை கட்டிவைத்து ஆடைகளை அவிழ்த்து, கட்டைகளாலும், பெல்ட்களாலும் அடித்து அதை காணொளியாக இணையத்தில் பரப்பியும் விட்டுள்ளனர். கடந்த 2019 ம் ஆண்டு, உத்திரகாண்ட் பகுதியில் ஒரு திருமணப் பந்தியில் ‘உயர் சாதி’ என்று தங்களை சொல்லிக்கொள்ளும் நபர்களுடன் சமமாக இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டதால் ஜிதேன்ரா என்ற பட்டியல் சமூக இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
கோயிலுக்குள் சென்றால் தாக்குதல், குடிநீர் எடுத்தால் தாக்குதல், நல்ல உடை அணிந்தால் தாக்குதல், குதிரை மேல் பயணித்தால் தாக்குதல் என்று பட்டியல் சமூக ஆண்கள் வன்கொடுமைகளுக்கு உள்ளாவதும், பட்டியல் சமூக பெண் என்றாலே வன்புணர்வுக்கு உள்ளாவதும், பள்ளிக்கு செல்லும் ‘தேசத்துரோகக்’ குற்றத்திற்காகவே பட்டியல் சமூக மாணவக் குழந்தைகள் தாக்குதலுக்கு உள்ளாவதும் என வட இந்திய சமூகம் மனுதர்ம சமூகமாகவே நிலைத்து வருகிறது. இந்நிலையில் தான் இராஜஸ்தான் மாணவரின் படுகொலையும் நிகழந்தேறியுள்ளது.
தமிழ்நாட்டிலும் ஒரு தண்ணீர்ப்பானை இருந்தது. அது தந்தை பெரியார் காங்கிரசில் இருந்த காலம். “காங்கிரஸின் அபரிதமான வளர்ச்சியே பெரியார் ஈவெரா அவர்களின் கடும் உழைப்பினால்தான்” என்று எல்லோரும் உணர்ந்திருந்தனர். அந்த நேரத்தில் பெரியாருக்கு ஒரு மாபெரும் கனவு இருந்தது. அது காங்கிரஸ் கட்சியில் சாதி பாகுபாடுகள் இருக்கக்கூடாது என்பதும், காங்கிரசுக்குள் வகுப்பு வாரி இடப்பங்கீடு கொண்டு வர வேண்டும் என்பதுமே. இத்தகைய எண்ணம் வைத்திருந்த பெரியார் காதில் நெருப்பாய் வந்து விழுந்தது ஒரு செய்தி.
வ.வே.சு. ஐயர் என்று அழைக்கப்படும் வரகனேரி சுப்பிரமணிய ஐயர் என்ற பார்ப்பனர் திருநெல்வேலியை அடுத்த சேரன்மகாதேவி என்ற பகுதியில் நடத்தி வந்த குருகுல பள்ளி ஒன்று இருந்தது. அக்குருகுலம் சரிவர நடைபெற நிதி வேண்டி வ.வே.சு ஐயர் காங்கிரஸ் செயற்குழுவுக்கு மடல் அனுப்பினார். அப்பொழுது மெட்ராஸ் மாகாண காங்கிரஸின் செயலாளர் வேறு யாருமல்ல, தந்தை பெரியார்தான். காங்கிரஸ் சார்பில் கோரிக்கையை ஏற்று பத்தாயிரம் ரூபாய் நிதி அளிக்க ஒப்புக்கொண்டதுடன் முதல் தவனையாக ஐயாயிரம் ரூபாய் அனுப்பியும் வைத்தார்.
அந்த குருகுல பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களில் ஒருவர் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் (1947-1949), காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான திரு.ஓமந்தூர் ராமசாமி அவர்களின் மகனும் ஆவார். விடுமுறைக்கு வந்த தன் மகனிடம் பள்ளிக்கூடம் எப்படி நடக்கிறது என்று ஓமந்தூரார் கேட்டார். அப்பொழுது அவர் மகன், ‘இனி அந்த பள்ளிக்கு செல்ல போவதில்லை’ என்று கூறி, அங்கு தங்களுக்கு அவமானம் ஏற்படுவதாக சொன்னார். மேலும் கேட்கையில் பார்ப்பன மாணவர்களுக்கு தனியாக சமைக்கப்பட்ட வகை வகையான சாப்பாடும், தங்களை போன்ற ‘சூத்திர’ மாணவர்களுக்கு சாம்பார் சோறு தனியாக சமைக்கப்பட்டும் போடப்படுகிறது என்றார்.
அதுமட்டும் அல்லாமல் “ஒருநாள் தண்ணீர் தாகம் எடுத்தது என்பதற்காக ஒரு பானையில் தண்ணீர் மோந்து குடித்தேன். அது பார்ப்பன மாணவர்களுக்கான பானையாம். அதை நான் தொட்டதால் தீட்டதாக்கிவிட்டதாம். தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பார்ப்பன ஆசிரியர் என்னை கன்னத்தில் அறைந்து விட்டார்” என்றும் அழுது கொண்டே சொன்னார்.
கடும் சினமடைந்த ஓமந்தூரார் தன் மகனை பெரியாரிடம் சென்று இதை பற்றி கூறும்படி கூறினார். பெரியாரின் காதுகளுக்கு இந்த செய்தி போய் சேர்ந்தது. பொதுவாகவே குழந்தைகள், மாணவர்கள் மேல் அளப்பரிய அன்பும், பரிவும் கொண்ட பெரியார், சாதி – தீண்டாமை என்ற சொல்லைக் கேட்டாலே கொதித்தெழும் பெரியார், தங்கள் கட்சி நிதியில் நடக்கும் பள்ளியிலேயே தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை கண்டு ஆட்கொள்ளா ஆத்திரமடைந்தார்.
அவசர காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. குருகுலத்தில் விசாரணை நடத்தப்பட்டு கொடுக்கப்பட்ட புகார் உண்மையே என்று கண்டறியப்பட்டது. நிதி கொடுப்பது நிறுத்துவதாக அறிவிப்பு வந்தது. பெரியார் முகத்துக்காக காங்கிரஸ் கட்சி சாராதார் கூட தருவதாக வாக்களிக்கபட்ட மற்றொரு நிதியும் தரப்போவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
1925-ம் ஆண்டு தொடங்கிய இந்த போராட்டம் ‘குருகுல போராட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. அதே வருடம் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டு பொதுக்குழுவில் பெரியார் முன்வைத்த கோரிக்கைகளில் சேரன்மகாதேவி குருகுலம் மீது நடவடிக்கை எடுப்பது சார்ந்த கோரிக்கையும் இருந்தது. அக்கோரிக்கை மட்டுமல்லாமல் தன்னுடைய வகுப்பு வாரி இடப்பங்கீடு கோரிக்கையும் ஏற்கப்படாத நிலையில்தான், அம்மாநாட்டு பந்தலிலேயே காங்கிரஸை விட்டு வெளியேறி ‘இனி காங்கிரஸை ஒழிப்பதே என் வாழ்நாள் பணி’ என்று உறுதியேற்றார். அன்று தொடங்கிய அவரது பயணமே தமிழ்நாட்டில் சாதித் தீண்டாமைக் கொடுமை, மதச் சுரண்டல், பார்ப்பனியக் கொடுமை, பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கை போன்ற காரிருள் அகற்றும் பகுத்தறிவு விளக்காய் அமைந்தது.
சேரன்மகாதேவி குருகுலம் முதல் சில நாட்களுக்கு முன் உயர்சாதி மாணவர்களுக்கான பானையில் தண்ணீர் அருந்தியதால் ஆசிரியரால் அடித்துக் கொல்லப்பட்ட குழந்தை இந்திர மேக்வல் வரை தண்ணீர்ப் பானை தீட்டுக் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. வடஇந்தியாவில் அண்ணல் அம்பேத்கர் முதல் தென்னாட்டில் தந்தை பெரியார் வரை சாதிக்கு எதிராக தொடங்கிய போராட்டம் நூற்றாண்டு தாண்டியும் தணிந்துவிடவில்லை என்பதையே சேரன்மகாதேவி குருகுல பள்ளி தீண்டாமையும், ராஜஸ்தான் பள்ளி மாணவர் அடித்து கொல்லப்பட்டதும் காட்டுகிறது. இதில், தமிழ்நாடு மட்டுமே அன்று முதல் இன்றுவரை சாதிக்கு எதிரான குரலை ஓங்கி ஒலிக்கிறது. அது பெரியார் என்னும் பெரு வெடிப்பால் நடந்த நன்மை.
இது வெறும் தண்ணீர்ப்பானை தொடர்பான பிரச்சனையல்ல. ‘நீ எங்கு இருக்க வேண்டும் என்று நான் சொல்வேன். அங்கேயே இரு’ என்று இந்திய ஒன்றியம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனிய கொடுங்கோல் மனுவாதத்திற்கு எதிரான கலகக் குரல். இது ஒருநாள் பெரும் இரைச்சலாய் மாறும். அன்று சாதி எனும் சாக்கடையால் தங்கள் காதுகளை மூடி வைத்திருக்கும் இந்த சமூகத்தின் செவிப்பறைகள் கிழியும். அந்த நன்னாளே நம் உண்மையான விடுதலை நாள்.