லட்சியத்திற்காகவும், சோசலிச சமூக மாற்றத்திற்காகவும், தேச விடுதலைக்காகவும், உழைக்கும் வர்க்கத்திற்காகவும், சம உரிமைக்காவும், ஏகாதிபத்தியத்தை ஒழிப்பதற்காகவும், சுதந்திர காற்றை மக்கள் சுவாசிக்க களத்தில் போராடியதால் தூக்கிலிடப்பட்ட புரட்சியாளர்கள் – பகத்சிங், சுக்தேவ், சிவராம் ராஜ குரு.
பகத்சிங், லாகூரில் வித்யாவதி மற்றும் கிஷன் சிங்கிற்கு இரண்டாவது மகனாக 27/09/1907-இல் பிறந்தார். பகத்சிங்கை போலவே மொத்த குடும்பமும் (அவரின் தாத்தா, அப்பா, சித்தப்பா) தேச விடுதலை போராளிகள் தான். தன் பன்னிரண்டு வயதில் நடந்த ஜாலியன் வாலாபாக் கொடூர நிகழ்ச்சியே பகத்சிங்கை பொது வாழ்க்கையில் ஈடுபடத் தூண்டியது.
பள்ளிப் படிப்பை முடித்த பகத்சிங், லாலா லஜபதிராயினால் தொடங்கப்பட்ட நேஷனல் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு தான் அவர் சுக்தேவ் மற்றும் பிற தோழர்களை சந்தித்தார். புத்தகப் பிரியரான பகத்சிங், வரலாறு, அரசியல், பொருளாதாரம், ரஷ்யப் புரட்சி, மார்க்ஸ், லெனின் புத்தகங்களை ஆழமாக படித்தார்.
சுக்தேவ் தாப்பர், பஞ்சாப் மாநிலம் – லயால்பூரில் ரல்லி தேவி தாப்பர் மற்றும் ராம்லாலூக்கு மகனாக 15/05/1907-இல் பிறந்தார். அப்பாவை இழந்த சுக்தேவ் சித்தப்பா அசிந்தராம் வளர்ப்பில் வளர்ந்தார். அவரது பன்னிரண்டாவது வயதில் அவரது சித்தப்பா 1919-இல் நடைமுறைப்படுத்தப்பட்ட இராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தனது சித்தப்பாவின் கைதினால் சுக்தேவிற்கு ஆங்கிலேய காலனி ஆட்சியின் மீது வெறுப்பு ஏற்பட்டு பொது வாழ்க்கையில் ஈடுபட ஆர்வம் அதிகரித்தது. கல்லூரியில் தான் பகத்சிங் மற்றும் பிற தோழர்களின் நட்பும் கிடைத்தது.
சிவராம் ஹரி ராஜகுரு, மகாராஷ்டிரா மாநிலம் – கேடா கிராமத்தில் பார்வதி பாய் மற்றும் ஹரி நாராயணாவிற்கு இரண்டாவது மகனாக 02/08/1909-இல் பிறந்தார். சிறு வயதில் அப்பாவை இழந்த ராஜகுரு அண்ணின் கண்டிப்பு வளர்ப்பில் வளர்ந்தார். அதன் விளைவாக வீட்டை விட்டு வெளியேறி நாடோடியாக அலைந்தார். வாழ்க்கையின் மீது சலிப்பு ஏற்பட்ட நிலையில் இருந்த அவருக்கு அரசியல் தன் வாழ்க்கையை புரட்டி போடும் என்று எதிர்பார்க்கவில்லை.
ஆங்கிலேய காலனி ஆட்சிக்கு எதிராக பல அமைப்புகள் பல வேலைத்திட்டங்களை முனைப்பாக செய்தது. அதில் குறிப்பிடத்தக்கது “காகோரி சதி வழக்கு”. இதை மேற்கொண்டது “இந்துஸ்தான் குடியரசுத் கழகம்”. இந்த அமைப்பின் முக்கிய தலைவரான சந்திரசேகர் ஆசாத்தின் தொடர்பு பகத்சிங்கிற்கு கிடைத்தது.
சிதறிக் கிடந்த புரட்சி இயக்கங்களை ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் நடந்தது. அதில், “இந்துஸ்தான் குடியரசு கழகம்” என்ற பெயர் “இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசுப்படை” என்று மாற்றப்பட்டது. அந்த கூட்டத்தில் பகத்சிங் பேசியது அனைவரையும் கவர்ந்தது.
“நாம் இமயம் முதல் குமரி வரை உள்ள மக்களுக்காகச் சுதந்திரம் கேட்கிறோம். நாம் கேட்டும் சுதந்திரம் நமது மனிதர்களின் பசியைப் போக்க வேண்டும். பட்டினியை நீக்க வேண்டும். அறியாமையை அகற்ற வேண்டும். இல்லையேல் சுதந்திரத்திற்கே அர்த்தமில்லாமற் போகும். சமதர்மச் சிந்தனைதான் உண்மையான சுதந்திரம். சுரண்டலை ஒழிப்பது தான் உண்மையான தேசபக்தி”
அடுத்ததாக 1928-ஆம் ஆண்டு சைமன் கமிஷனுக்கு (சைமன் கமிஷன் – ஜனநாயக சட்டமன்ற ஆட்சியை விரிவாக்க இந்தியா ‘பக்குவம்’ அமைந்திருக்கிறதா என்று கண்டறிய சர் ஜான் சைமன் தலைமையில் ஒரு குழுவை ஆங்கில அரசாங்கம் அமைத்தது.) எதிராக பல்வேறு பகுதிகளில் மக்களாலும், புரட்சி இயக்கங்களாலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்டோபர் 30-ஆம் தேதி லாகூருக்கு வந்த கமிஷன் குழுவினை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் “சைமனே திரும்பிப் போ”, “சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை“, “ஆங்கிலேய ஏகாதிபத்தியமே ஒழிக” போன்ற முழக்கங்களை எழுப்பி லாலா லஜபதிராயின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வேளையில், சாண்டர்ஸ் மற்றும் ஸ்காட் காவலர்கள் லஜபதிராயை சூழ்ந்து நின்று கடுமையாக தாக்கினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நவம்பர் 17-இல் மரணமடைந்தார்.
இந்த இழப்பு, நாட்டு மக்களையும், பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு மற்றும் பிற தோழர்களின் உணர்வை எழுப்பி விட்டது.
ஆங்கிலேயர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக லஜபதியாரை தாக்க சொன்ன ஸ்காட் காவல் அதிகாரியை கொலை செய்ய ஒரு மனதாக முடிவு செய்தனர்.
அதற்காக துப்பாக்கி சுடுவதில் தேர்ந்தவர்களான ராஜகுரு மற்றும் பகத்சிங் தேர்வு செய்யப்பட்டனர். டிசம்பர் 17 அன்று, அடையாளம் தெரியாமல் அதிகாரி சாண்யர்ஸ்யை சுட்டுக் கொன்றனர். இந்த தகவலை அறிந்த மக்களும் புரட்சியாளர்களும் மகிழ்ந்தனர்.
1929-ஆம் ஆண்டு – இந்தியத் தொழிலாளிக்கு எதிராக “பொது பாதுகாப்பு மற்றும் தொழில் தகராறுகள் – Public Safety and Trade Dispute Bill” மசோதாவை டில்லி நாடாளுமன்றத்தில் சட்டமாக ஆங்கிலேயர் முடிவு செய்தனர். இந்தச் சட்டத்தை எதிர்த்து பம்பாய், கல்கத்தா, கான்பூர், அலகாபாத் போன்ற பல்வேறு நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.
மக்களுக்கு எதிரான இந்த கொடூரமான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தடுத்து நிறுத்த வெடிகுண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று கழக உறுப்பினர்கள உறுதி எடுத்தனர்.
அதற்காக பீ.கே தத், பகத்சிங் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். திட்டமிட்டபடி நாடாளுமன்றத்திற்குள் பெரிய அதிகாரிகள் அமர்ந்திருந்த இடத்தில் ஆளுக்கொரு குண்டை வீசினர்.
“இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி ஒங்குக)
“பிரிட்டிஷ் இம்பீரியலிசம் டவுன் டவுன்” (பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக)
என்ற முழக்கங்களை சத்தம் போட்டு கூறி, சிவப்பு நிற துண்டறிக்கை வீசிக் கொண்டே காவலரிடம் சரண் அடைந்தனர்.
அடுத்த நாள் எல்லா ஊடகங்களிலும் பகத்சிங் மற்றும் தத் இருவரின் செயல்களைப் பற்றி அவர்களது படங்களோடு செய்திகள் வெளிவந்தன.
லாகூர் கான்பூர் சகரான் போரில் வெடிகுண்டுகளை தயார் செய்தவர்களும் நாடாளுமன்றத்தில் குண்டு வீசியவர்களும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை போலீஸ் புரிந்துகொண்டது. இதற்காக பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு உட்பட இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுப் படையைச் சேர்ந்த 25 பேர் மீது லாகூர் சதி வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கில் பகத்சிங், தத் ஆகிய இருவருக்கும் டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சிறையில் அடைக்கப்பட்ட போது, சிறையில் அரசியல் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டு வருவதை கண்டித்து சிறையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். அந்த உண்ணாவிரத போராட்டம் மக்களிடையே பெரும் புரட்சி உண்டாக்கியது.
இந்த வழக்கின் விசாரணை 10/07/1929-இல் தொடங்கியது. வழக்கறிஞர் இல்லாமல் தாங்களே நடத்துவதாக போராளிகள் முடிவு செய்தனர் வழக்கை நடத்த பகத்சிங், விஜயகுமார் சிங், சுகதீப் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டனர் இந்த வழக்கு மூலமாக தங்கள் புரட்சி இயக்கத்தின் கொள்கைகளை பிரச்சாரம் செய்வதை குழுவின் பிரதான நோக்கமாக முடிவு செய்தனர்.
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வரும்போது ‘புரட்சி ஓங்குக’, ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக’, ‘மக்களாட்சி மலர்க’ என புரட்சியாளர்கள் முழக்கமிட்டனர். தேசிய கீத பாடலையும் பாடினர். தங்கள் இயக்கத்தின் கோட்பாடுகளை கொள்கைகளையும் மக்கள் அறியும் முறையில் பகத்சிங்கும் அவரது தோழர்களும் பேசினார். இந்த விசாரணை மூலம் நாட்டின் இளைஞர்கள் வீரமும் உற்சாகமும் பெற வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். பத்திரிகைகள் தொடர்ந்து இந்த விசாரணைச் செய்திகளை வெளியிட்டு வந்தன. தங்கள் நோக்கத்தை வெளியிட ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தினர். ககோரி தினம், மே தினம் தினம் போன்றவற்றை வழக்கு விசாரணையின் போது கொண்டாடினார்கள்.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரவி பெரும் புகழ்பெற்றதால் வழக்குக்காக நிதி உதவிகளும் குவிந்தன. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கே எஃப் நாரிமன், அகமத் கித்வாய், மோதிலால் நேரு போன்ற பெருந்தலைவர்கள் பகத்சிங்கையும் தோழர்களையும் நீதிமன்றத்தில் சந்தித்து பேசினர்.
1930-ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் நாள் அளிக்கப்பட்ட தீர்ப்பில், பகத்சிங் ராஜகுரு சுகதேவ் ஆகிய மூவருக்கும் மார்ச் 24-இல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கிஷோரிலால், மகாவீர் சிங், விஜயகுமார் சிங், சிவவர்மா, காயப்பிரசாத், ஜெயதேவ்,கே என் திவாரி, பி.கே தத் ஆகிய எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குந்தன் லாலுக்கு ஏழு ஆண்டுகளும், பிரேமா தத்தாவுக்கு மூன்றாண்டுகளும் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அஜய்குமார் கோஷ், சன்யால், தேஸ்ராஜ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
வழக்கின் முடிவு மக்களையும் கல்லூரி மாணவ மாணவிகளையும் கோபமூட்டியது. அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரசின் தொண்டர்கள் நேரு மற்றும் காந்தியை சந்தித்து பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் மரண தண்டனை குறித்து பிரிட்டிஷ் அரசின் உயர் அதிகாரி இர்வின் பிரபுவிடம் (காந்தி – இர்வின் உடன்படிக்கை) பேசுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் காந்தியோ ‘அகிம்சையே தனது வழி, வன்முறையை ஆதரிப்பது இல்லை’ என்று காந்தி-இர்வின் உடன்படிக்கையில் கையெழுத்து போட்டுவிட்டார். பெரும் துரோகத்தை செய்து வரலாற்று பிழையாக காந்தி இருந்துவிட்டார்.
மார்ச் 24-ஆம் தேதி அன்று காலையில் சிறைவாசலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு விடுவார்கள் என எண்ணி மார்ச் 23-ஆம் தேதி மாலை 3 மணிக்கு தூக்கில் ஏற்ற வேண்டும் என்று தலைமை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது பிரிட்டிஷ் அரசு. தூக்கிலிடும் போது பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு முறையே 24, 24, 23 வயது நிரம்பிய இளைஞர்கள் தான் என்பது முக்கியமான ஒன்று.
வரலாற்றிலும், மேற்கத்திய நாடுகளிலும், மக்களிடையே கிளர்ச்சியை உண்டாக்கிய சதி வழக்கு தான் “லாகூர் சதி வழக்கு”
நாட்டின் எழுச்சிற்காக, மக்களின் நலனுக்காக தன்னுயிரை ஈந்த நாள் தான் இன்று – 23/03/1931.
ஆம். உயிரை இழந்து ஏகாதிபத்தியத்திற்கும், அடக்குமுறைக்கும் எதிராக போராடி பெற்ற உரிமையை இன்று ஒன்றிய அரசு பறித்துக்கொண்டு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு எதிரான ஆட்சிதான் இங்கு நிலவுகிறது. அதானிக்கும், அம்பானிக்கும் ஏற்றார் போல பல மசோதாக்கள் இங்கு நடைமுறை செய்யப்பட்டுள்ளது.
சமூகத்திற்கு எதிரான நீட் மசோதா, சிஏஏ மசோதா, ஜிஎஸ்டி மசோதா என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
உண்மையான வரலாற்றை கண்டறிந்து நம் புரட்சியாளர்கள் போல எதிரிகளை எதிர்த்து கையாள வேண்டும்.