தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டின் அனைத்து அரசியல் சாசன அமைப்புகளிலும் தங்களின் ஆட்களை ஊடுருவச் செய்துள்ளது. இதன் மூலம் நாட்டின் அனைத்து அதிகார துறையிலும் அவர்கள் அசைக்க முடியாத வலுவான நிலையில் உள்ளனர். இதனால் ஒருவேளை தேர்தலில் பாஜக தோற்றாலும், நாட்டின் அனைத்து அதிகார மையங்களில் இருந்தும் ஆர்எஸ்எஸ்-ஐ அகற்றுவது என்பது இயலாத காரியம். உதாரணத்திற்கு மத்திய பிரதேசத்தில் கமல்நாத் முதல்வராக இருந்தபோது அரசு துறையில் இருந்த மூத்த அதிகாரிகள் ஆர்எஸ்எஸ் ஆட்கள் என்பதால், முதல்வர் சொல்வதை அவர்கள் கேட்கவேயில்லை.
சனநாயகத்தின் கழுத்தை பாஜக-இந்துத்துவா மெல்ல மெல்ல நெரித்து கொன்று வருகின்றன. அதோடு அவர்கள் இந்திய ஒன்றியத்தின் ஒட்டு மொத்த கல்வி அமைப்புக்கும் குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றனர். சமத்துவம் என்ற எண்ணத்திற்கு எதிராக ஆர்எஸ்எஸ் பள்ளிகள் வழியாக தாக்குதல் நடத்தி வெற்றிநடை போட்டு வருகிறது. இந்தியாவின் கல்வி அமைப்பை மாற்றி அதை தனது கைக்குள் கொண்டு வர பல்வேறு சித்து வேலைகளையும் செய்து வருகிறது ஆர்எஸ்எஸ். அதன்படி பாஜக ஆளும் மாநிலங்களில் பாடப் புத்தகங்களில் வரலாறு மாற்றி எழுதப்படுகிறது. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல வகையான புதிய கல்வி முறையின் மூலம் சமமற்ற ஒரு சமுதாயத்தை கட்டமைக்க பெரும் சிரத்தையுடன் முயன்று வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் அரசின் அனைத்து துறைகளிலும் வலுவாக காலூன்றி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர், நாட்டின் ஒட்டு மொத்த கல்வி அமைப்பிலும் தாக்குதல் நடத்த துவங்கியுள்ள இவ்வேளையில் கலைஞர் தொலைக்காட்சி குழுமத்திற்கு சொந்தமான சித்திரம் தொலைக்காட்சியில் மாணவர்களிடையே அரசியல் பேசும் நிகழ்ச்சி ஒன்றில் பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் பேசியுள்ளது தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திராவிடம் மற்றும் இஸ்லாமியத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டை ஆன்மீக பூமி என்றும் அரசியலில் ஆன்மீகத்தை சேர்ப்பது பற்றியும் வினோஜ் பி செல்வம் பேசியதாக மாணவர்கள் கூறிய காணொளிகள் சமூக வலைதளங்களில் காணக் கிடக்கின்றன. மதநல்லிணக்கத்தை கற்க வேண்டிய மாணவப் பருவத்தில் பிற்போக்குத்தன இந்துத்துவ சனாதன கொள்கைகளைப் பரப்ப பாஜகவினரால் அதுவும் கலைஞர் குழும தொலைக்காட்சி ஒன்றிற்குள்ளே எளிதாக வர முடிகிறது என்பதே மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
இதுபோன்ற கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் கல்வித் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) தீவிர ஆர்எஸ்எஸ் நபரான சாணக்கியா யூட்யூப் சேனல் ரங்கராஜ் பாண்டேயின் நண்பரும், பங்குதாரருமான மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டதான அறிவிப்பு பல அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்தப் பதவிக்கு தகுதியான திறமை மிக்க எத்தனையோ பேர்கள் இருக்க தீவிர RSS நபரான, அதுவும் முதல் முறையாக பள்ளிக்கல்வித் துறையைச் சாராத ஒருவர் முதன்மை செயல் அலுவராக எந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படலாம் என்று பல சர்ச்சைக்குரல் எழுந்ததும் அவரது நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல, கோவை ஆர்எஸ் புரம் அருகே தேவாங்கர் பள்ளி சாலையில் உள்ள கோவை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியின் வளாகத்தில் 09-10-22 அன்று காலை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மேற்கொண்ட பயிற்சி குறித்த புகைப்படம், காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு பள்ளி வளாகங்களில் இது போன்ற தனியார் அமைப்பின் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனும் போது, மாநகராட்சி பள்ளி வளாகத்திலே ஆர்எஸ்எஸ் பயிற்சி தொடர்ந்து பல மாதங்களாக நடைபெற்று வந்ததும், மாநகராட்சி நிர்வாகம் அதை கண்டுகொள்ளாமல் இருந்ததும் தெரியவந்தது. இதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தோழர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கள்ளக்குறிச்சி பள்ளியில் மர்மமான முறையில் மாணவி ஸ்ரீமதி இறந்ததற்கு காரணமான பள்ளியின் தாளாளர் RSS-BJP-ஐ சேர்ந்தவர் என்பதற்காக மாணவி இறந்து 5 நாட்களாக மக்கள் பல்வேறு போராட்டம் நடத்தியும் கல்வி அமைச்சகம் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. பாஜகவினரை காப்பாற்றும் செயலாகவே இன்றும் இது குறித்து மக்களால் பேசப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சென்னை மேடவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 8-ம் தேதி மகளிர் நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், பாஜக நபரான நடிகை ஜெயலட்சுமி கலந்து கொண்டார். இவர் சினேகம் அறக்கட்டளையின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் கந்துவட்டி, அடியாட்களை வைத்து மிரட்டுவது போன்ற பல குற்றச்சாட்டுகள் ஜெயலட்சுமி மீது முன் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய குற்ற பிண்ணனி உள்ள பாஜகவை சேர்ந்த ஒருவரை அரசுப் பள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்து சிறப்பித்தது பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவை அதன் தலைவர்களை கீழ்த்தரமாக விமர்சித்து வருபவர் பாஜகவை சேர்ந்த தேன்மொழி எழில் என்பவர். இவர், உண்மைக்கு புறம்பாக செயல்பட பணம் பெற்றுக்கொண்டதாக சமீபத்தில் மதன் என்பவர் வீடியோக்களை வெளியிட்டதோடு பணம் பெற்றுக்கொண்டவர்கள் பட்டியலையும் வெளியிட்டார். அந்த பட்டியலில் இந்த தேன்மொழி 30000 பெற்றுக்கொண்டதாகவும் உள்ளது. இப்படியான ஒருவர், அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியுள்ளார். இது திமுகவினர் மத்தியிலேயே அதிருப்தியை உண்டாக்கியது.
ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியதையும், அதேபோல கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி இறந்த விடயத்தில் RSS பின்புலம் கொண்ட பள்ளிக்கு சாதகமாக பேசியதும், சுமார் 1 கோடி மாணவர்களின் நலனை கருத்தில்கொள்ளாது இந்துத்துவ சனாதனி ஒருவரை உயர் பதவியில் அமர வைப்பது, பள்ளிகளில் RSS பயி்ற்சி நடத்த அனுமதிப்பது, கலைஞர் தொலைக்காட்சி வழியாக இந்துத்துவ சனாதனி மாணவர்களுடன் உரையாற்றுவது போன்ற விடயங்கள் சாதாரணமாக நடந்தேறியுள்ளன. ஆர்எஸ்எஸ் கட்டுப்பாடுகளின்றி செயல்படுவது, அரசு மீது அவதூறுகளை அள்ளி வீசும் ஆர்எஸ்எஸ் நபர்கள் அரசு நிகழ்வுகளில் பங்கேற்பது, ஆர்எஸ்எஸ் தொடர்புடையவர்களுக்கு சாதகமாக அமைச்சர்களே செயல்படுது போன்றவற்றை பார்க்கும் போது, திமுகவினுள் உள்ள ஒரு கூட்டம் இந்துத்துவ ஆர்எஸ்எஸ்-பாஜகவிற்கு கட்டுப்பட்டே செயல்படுகிறதா என்ற ஐயம் எழுகிறது.
இந்துத்துவ சனாதன பாஜக தமிழ்நாட்டில் வேரூன்றி வளர்ந்து வரும் நிலையில் அதை வேரோடு வெட்டி சாய்க்காமல் அதற்கு நீரூற்றி வளர்க்கும் விதமான நடவடிக்கைக்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படாவிட்டால் தமிழ்நாட்டில் பாசிச பாஜக ஆட்சியில் இல்லாமலிருந்தாலும் அவர்கள் வைத்தது தான் சட்டமாக மாறும். எனவே அனைத்து அரசு துறையிலும் உள்ள இந்துத்துவ சனாதனிகளை களையெடுக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.