“நாம் போராடி சட்டங்கள் கொண்டு வரும் நாளில் பார்ப்பான் நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்” என்று தந்தை பெரியார் சொன்னது போல மக்களின் நலனுக்காக இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிச் சனாதன கொள்கையைச் சட்டங்களாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதற்குச் சான்றாகப் பல்வேறு வழக்குகளில் மநுவை மேற்கோள் காட்டி தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பா.ஜ.க.வின் நிகழ்ச்சிகள் அனைத்திலுமே மநுதர்ம அடிப்படியிலான (அதுவும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான விடயங்களில்) விதிகளைப் பின்பற்றி அந்த வழக்கத்தை இயல்பான ஒன்றாக மாற்றுகின்றனர்.
குஜராத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பாஜக எம்.பி, எம்.எல்.ஏ.க்களுடன், பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் பங்கேற்று இருக்கிறார் என்பது சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பதிவின் மூலம் பரபரப்பாகி உள்ளது.
2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் வெடித்த குஜராத் கலவரத்தில் இருந்து தப்பித்து ரந்திக்பூர் என்ற கிராமத்தில் தஞ்சம் அடைந்த பில்கிஸ் பானுவை இந்துத்துவ வாதிகள் கூட்டு பாலியல் வன்முறை செய்து அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் கொலை செய்தனர். மேலும் அங்கிருந்த 60 முஸ்லீம் வீடுகளையும் தீக்கிரையாக்கினர்.
கொல்லப்படவர்களில் அவரது 3 வயது குழந்தையும் அடங்கும். இவ்வழக்கில் ஜனவரி 2008-ம் ஆண்டு 13 பேர் கொலை குற்றவாளிகள் என்றும் அதில் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15, 2022 சுதந்திர தினத்தன்று கருணையின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தது பாசிச பா.ஜ.க. அரசு. மத்திய அரசின் ஒப்புதலின் பேரில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. மிருகத்தனமான செயல் என்று சொல்ல, யோசிக்க வைக்கும் அளவிற்கு மிருகத்தை விட மிகக் கொடுமையான ஒன்றை நிகழ்த்தியவர்கள் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது நாடு முழுவதும் பரபரப்பானது.
“அவர்கள் பிராமணர்கள். பிராமணர்கள் நல்ல சன்ஸ்காரம் (நன்மதிப்பு) கொண்டவர்கள்” என்றும் “அவர்களை சிறையில் இருந்து நன்நடத்தை காரணமாக விடுதலை செய்ய முடிவு செய்தோம்” என்று கூறி குஜராத் அரசாங்கம் தங்கள் முடிவை நியாயப்படுத்தினர்.
இவர்களின் விடுதலையை எதிர்த்து, மேல்முறையீட்டு வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மார்ச் 25, 2023 அன்று குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்டத்தின் கர்மாடி கிராமத்தில் குழு குடிநீர் திட்ட நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளமான டிவிட்டரில் தலைவர்களால் பதிவு செய்யப்பட்டது. அதில் லிம்கேடா எம்.எல்.ஏ. சைலேஷ் பாபோரும், சைலேஷ் சிமன்லால் பட், தாஹோட் முன்னால் எம்.பி. ஜஸ்வந்த் சிங் பாபோர் மற்றும் அவரது சகோதரரும் காணப்பட்டனர். இவர்களுடன் பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி ஒருவரும், நிகழ்சியில் பங்கேற்று பூஜையில் கலந்து கொண்டதும் இவர்களுடன் போட்டோவுக்குப் போஸ் கொடுத்தும் வெளிவந்திருக்கிறது. படங்கள் மற்றும் வீடியோக்களை டிவீட் செய்த இரு தலைவர்களிடமும் இது பற்றிக் கருத்து கேட்பதற்குத் தலைவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ஊடகத் தரப்பு தெரிவித்துள்ளது.
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவிப்பதை எதிர்த்து தொடர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுதாரர்களில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, சி.பி.எம். பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி மற்றும் பலர் அடங்குவர்.
27-03-2023 அன்று விசாரணைக்கு வந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மற்ற கொலை வழக்குகளைப் போலவே இந்த வழக்கிலும் சீரான தரநிலைகள் பின்பற்றப்பட்டுத்தான் தீர்ப்பு வழங்கப்பட்டதா என்று கேள்வியை எழுப்பியுள்ளது. பானு தாக்கல் செய்த மனுவுடன் சமூக ஆர்வலர்கள் தாக்கல் செய்த பொதுநல மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரித்தது. நடந்த சுருக்கமான விசாரணையில், விரிவான ஒரு வாதத்தை வழங்குமாறு இரு தரப்பினரையும் பெஞ்ச் கேட்டுக்கொண்டது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்துப் பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை விசாரித்தது.
பில்கிஸ் பானு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷோபா குப்தா வாதிடுகையில், சமூகத்தில் குற்றத்தின் தாக்கம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டார். குற்றவாளிகளில் ஒருவர், பரோலில் இருந்தபோது, ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் குரோவர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க, பில்கிஸ் பானுவின் மனு தற்போது முதன்மை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகவியலர், செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கேள்விகள் எழுந்த நிலையில் இது வரையில் தலைவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. மாறாகப் பா.ஜ.க. இந்துத்துவ வாதிகள், “இது அவ்வளவு பெரிய வழக்கு இல்லை, அவர்கள் விடுதலையானதில் எந்தத் தவரும் இல்லை, சில நேரங்களில் ஆண்கள் தவறாக வழிநடத்தப்பட்டுவிடுகின்றனர்” எனவும், சிலர் “அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றால் என்ன? அதற்காக அழ வேண்டாம்” எனவும் இன்னும் பல பதில்கள் இந்தச் செய்தியை நியாயப்படுத்ததும் விதமாக “இதில் என்ன அநியாயம் இருக்கிறது” என்கிற அடிப்படையில் வாதிடவே செய்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் நிறுவனரான சாவர்க்கரும் ஒருபோதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. மாறாக மநுஸ்மிருதியை சட்டமாக மாற்றவேண்டும் என்று நினைத்தவர்கள். சாவார்க்கர் இதுகுறித்து எழுதியதாவது,
“மநுஸ்மிருதி என்பது நமது இந்து தேசத்திற்கு வேதங்களுக்குப் பிறகு மிகவும் வழிபடக்கூடிய வேதமாகும், மேலும் இது பண்டைய காலங்களிலிருந்து நமது கலாச்சாரம் – பழக்கவழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறையின் அடிப்படையாக மாறியுள்ளது. இந்தப் புத்தகம் பல நூற்றாண்டுகளாக நமது தேசத்தின் ஆன்மீக மற்றும் தெய்வீக பயணத்தைக் குறியீடாக்கியுள்ளது. இன்றும் கோடிக்கணக்கான இந்துக்கள் தங்கள் வாழ்விலும் நடைமுறையிலும் பின்பற்றும் விதிகள் மநுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டவை. – [வி.டி. சாவர்க்கர், “சாவர்க்கர் சமகர்” (இந்தியில் சாவர்க்கரின் எழுத்துக்களின் தொகுப்பு), பிரபாத், டெல்லி, தொகுதி 4, பக் 415.]
இவர் மட்டுமல்லாது இந்துத்துவக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட அனைவரின் மனநிலையுமே இதுவாகத் தான் உள்ளது. இதற்கான அடிப்படையே இவர்கள் மநுவை நீதி நூலாக ஏற்றுக்கொண்டதுதான் காரணம்.
பார்ப்பனர்களுக்கான அறமாக மநு சொல்லும் சில விதிகள் இவை:
“உலகப் படைப்புகளில் பார்ப்பனன் உயர்ந்த பிறவியாகப் பிறந்து பிற உயிர்கள் அனைத்துக்கும் தலைவனாக இருப்பதற்கு அவன் சட்டம் எனும் கருவூலத்தைக் காப்பவனாக இருப்பதே காரணம்”. மநுதர்மம் – அத்தியாயம் 1 சுலோகம் 1:99
“பார்ப்பனன் எத்தகைய ஒழுக்கம் கெட்டவனாக, பிறர்மனை நயப்பவனாக இருந்த போதிலும் அவனைக் கொல்லக்கூடாது; அவனது தலையை மழித்து அவமானப்படுத்துவதோடு நின்று விடவேண்டும்”. மநுதர்மம் – அத்தியாயம் 1 சுலோகம் 8.379
“சூத்திரன் ஒருவனைப் பார்ப்பனர் கொலை செய்தால் அக்கொலையை ஒரு தவளையைக் கொன்றதற்கு இணையாக எடுத்துக்கொள்ள வேண்டும்”. மநுதர்மம் – அத்தியாயம் 11 சுலோகம் 131
பார்ப்பனன் உயர்ந்த பிறவி, கொலைக் குற்றமே செய்திருந்தாலும் கூட அவனுக்குத் தண்டனை கிடையாது என்கிற மநுதர்ம கோட்பாட்டின் அடிப்படையிலே இது போன்ற தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இது ஒரு வழக்கல்ல மநுதர்மத்தை மேற்கோள் காட்டி பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மநுவை அடிப்படையாக வைத்துத்தான் சட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நினைக்கிறார்கள். இந்த நீதிபதிகளிடமிருந்துதான் நாம் சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.