இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழ்நாட்டில் ஒரு மாணவன் முதல் தரவரிசையில் வந்தவுடன், அதை தங்களுக்கு சாதகமாகப் பரப்புரை செய்யும் பல வலதுசாரிகளை நாம் காண முடிகிறது. ஆனால், ஒற்றை மாணவனின் தரவரிசை மட்டுமே தமிழ்நாட்டின் அடையாளமாகிவிட முடியாது. இதன் பின்னால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள “கோச்சிங் சென்டர்” எனும் பெருவணிகம் இருப்பதை மே17 இயக்கம் தொடர்ந்து பேசி வருகிறது இதைப்போன்ற தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பிற்கு முன்னால் நீட் தேர்வென்பது எவ்வளவு தொலைவு அந்நியப்பட்டு நிற்கிறது என்பதை விளக்க ஒரு புத்தகம் நமக்கு உதவும்.
மருத்துவம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் இந்தியாவின் மாநிலங்கள் அனைத்திற்குமான ஒப்பீடு தரவுகளைகொண்டு “தரவு விஞ்ஞானி” (Data Scientist) ஆர்.எஸ்.நீலகண்டன் ஆங்கிலத்தில் “South vs North” என்கிற முதல் புத்தகத்தை எழுதியுள்ளார். தனது தரவுகள் ஆய்வுப்பணி அனுபவத்தில் “தி ஒயர்” போன்ற இணையத்தளங்களில் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியா பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறார். ஆங்கிலத்தில் வெளியான இப்புத்தகம் தற்போது தமிழாக்கத்திலும் வெளியாகியுள்ளது. ஆசிரியர் இப்புத்தகத்தில் பல தரவுகளை நேர்த்தியாக தொகுத்து தனது சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பார்வையை வைத்துள்ளார்.
வட மாநிலங்களை விட தென்மாநிலங்கள் மக்கள்தொகையிலும் நிலப்பரப்பிலும் குறைவாக உள்ளதால், இந்திய ஒன்றியத்தால் எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறது என்பதைத் தெளிவாக அட்டவணைகளோடு இப்புத்தகம் விளக்குகிறது. மேலும் தென் மாநிலங்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதையும், அவற்றின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மிகவும் குறைவான நிதி ஒதுக்கப்படுவதையும் தரவுகளுடன் அம்பலப்படுத்துகிறது. தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கு திராவிட அரசியல் கோட்பாடுகள் எவ்வாறு அடித்தளமாக அமைந்தது என்பதை இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் எடுத்துரைக்கிறது.
மருத்துவத்துறை
தமிழ்நாட்டில் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உயர்கல்விக்கான முன்னுரிமை வழங்குவதன் மூலம் கிராமப்புற மருத்துவ சேவையை ஊக்குவிக்கும் முறையைக் கொண்டிருந்தது. ஆனால் இந்த முறை தற்போது சிதைக்கப்பட்டுள்ளது. இன்று பல லட்சம் ரூபாய் செலவழித்து நீட் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தாங்கள் செலவழித்த பணத்தை மீட்கும் நோக்கத்தில் இருப்பார்களே ஒழிய கண்டிப்பாக கிராமப்புறங்களில் மருத்துவ சேவையாற்ற விரும்பமாட்டார்கள்.
குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்களை நியமித்த மாநிலம் தமிழ்நாடு. அங்கு பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுகலை பட்டப்படிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் கிராமப்புறங்களில் மருத்துவ சேவை வழங்குவது சாத்தியப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த மாநிலத்தின் இட ஒதுக்கீடு கொள்கையின் விளைவாக பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் உருவாக்கப்பட்டனர். இப்படியான மருத்துவர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு மருத்துவத்தை வழங்கியதற்கு சான்றுகளுடன் இப்புத்தகம் விளக்குகிறது. இந்த வரிகள் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வெளிப்படுத்துகிறது.
மேலும், நீட் தேர்வு எழுதிடாத இந்த மருத்துவர்கள் தான் சிறப்பான வகையில் தாய்-சேய் பராமரிப்பு, குழந்தை பிறப்பு விகிதம், அரசு சுகாதாரத்துறையின் பல்வேறு சாதனைகளை இந்த புத்தகம் பட்டியலிட்டு கூறுகிறது.
“…தமிழ்நாடு கிராமங்களில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களை ஊக்குவிக்க தங்க நாணயங்களை பரிசாக அளித்தது.” இந்த வரிகளை வாசிக்கும்போது, தங்கத்திற்கு நிகரான தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பிற்குள் துருப்பிடித்த தகரமான நீட் தேர்வு ஊடுருவுவதை வாசகர்கள் உணர முடியும்.
இந்திய ஒன்றியத்தின் புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கான தரவுகளுடன் காரணங்களும் இந்த “South Vs North” நூலில் இருக்கின்றன. உதாரணமாக, 2035 ஆண்டிற்குள் ஒட்டுமொத்த இந்தியாவும் Gross Enrollment Ratio (*GER) – 50% இலக்கை அடையவேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. ஆனால், தமிழ்நாடு 2018ல் GER – 49% எட்டிவிட்டது.
(*GER – பள்ளிக்கல்வி முடித்து தொழிற்கல்வி, பட்டப்படிப்புகளில் நுழைபவர்கள் விகிதம்.)
எழுத்தறிவு விகிதம், மதிய உணவுத் திட்டம், பெண் கல்வி என அனைத்துத் துறைகளிலும் வட மாநிலங்களைவிட தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்ட பிறகு ஒன்றிய அரசின் தொடர் “மையப்படுத்தும்” (Centralizing) திட்டங்கள் குறித்து விரிவாகவே கூறப்பட்டுள்ளது.
கல்வி, மருத்துவத்தைத் தொடர்ந்து மாநிலங்களின் பொருளாதாரம் பற்றிய பகுதி வருகிறது. பொருளாதாரம் வாசிப்பதற்கு கடினமாக இருக்கும் எனும் பொதுக்கருத்தை மறுக்கும் விதமாக, எளிமையான நடையில் இந்தப் பகுதி எழுதப்பட்டுள்ளது. விவசாய பயிர்களின் உற்பத்தி முதல் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (Gross State Domestic Product – GSDP) வரை அனைத்து மாநிலங்களுக்கும் இடையேயான ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சிப்பாதைக்கு தென் மாநிலங்கள் ஆற்றிய பங்கு குறித்து ஒவ்வொரு அட்டவணையிலும் தசம புள்ளி (decimal point) விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. வேளாண்துறை மட்டுமல்லாது தொழிற்சாலைகள் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு வட மாநிலங்களை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, உத்திர பிரதேசத்தில் 15,830 தொழிற்சாலைகள் உள்ளபோது தமிழ்நாட்டில் அதைவிட இரு மடங்கு அதிகமாக 37,787 தொழிற்சாலைகள் உள்ளன.
தென் மாநிலங்களின் வளர்ச்சிக் குறித்து விரிவான அலசலை அடுத்து இதற்கான சனநாயக ரீதியான காரணங்களை ஆசிரியர் விளக்குகிறார்.
அனைத்து முன்னேற்ற குறியீடுகளிலும் முன்னோடியாக திகழும் தென் மாநிலங்களின் அடுத்த பல பத்தாண்டுகள் இலக்குகள் என்பது வட மாநிலங்களின் இலக்குகளை விட மாறுபட்டதாகவும் வேறாகவும் இருக்கும். இந்த சூழலில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி திட்டங்களை தீட்டுவது முன்னேறிய மாநிலங்களை பின்னுக்கு இழுக்கும் விதமாகவே அமையும். இந்நிலையை சீர் செய்ய மாநிலங்களிடம் அவர்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டும் அதிகாரங்களை வழங்கிட வேண்டும் என்று விளக்குகிறார்.
இது குறித்து எழுதும்போது, “இவ்வளவு பெரிய (இந்திய ஒன்றியம்) மற்றும் பன்முகத்தன்மை மக்களுக்கான நிர்வாக அதிகாரத்தின் கட்டமைப்பு ஒற்றையாட்சியாக இருக்க முடியாது, ஆனால் ஒரு ஒன்றிணைக்கும் அமைப்பு இல்லாதது நாட்டின் நோக்கத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பும்.” என்று கூறுகிறார்.
மேலும், மாநிலங்களுக்கு அதிகாரத்தை வழங்குவதை தாண்டி அனைத்து ஒன்றியத்தின் அனைத்து மக்களின் குரலையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ முறையை அதாவது ஒரு நவீன் தேர்தல் முறை மாதிரியை ஆசிரியர் முன்மொழிகிறார். இது குறித்து சமூகத்தில் நீண்ட விவாதம் நடந்தால் மட்டுமே இந்தியாவில் இதன் சாத்தியக்கூறுகளை கண்டறிய முடியும்.
South Vs North புத்தகம் கிடைக்குமிடம்:
திசை புத்தக நிலையம்,
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ் அருகில், காமராஜர் அரங்கம் எதிரில்,
அண்ணாசாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600086
தொலைபேசி: 98840 82823
Location: https://goo.gl/maps/fZXqRjz6n1u461fc7