இன்றைய மணிப்பூர் பிரச்சனை துவங்கிய இடம் கடந்த ஏப்ரல் 19, 2023 அன்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு தான். அது, மெய்தி மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க ஒன்றிய அமைச்சகத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்று மணிப்பூர் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. தங்கள் வாழ்வாதாரத்தை-வாழ்விடத்தை சிதைக்கக் கூடிய இந்த தீர்ப்பினை எதிர்த்து குக்கி என்ற பழங்குடி இன மக்கள் நடத்திய பேரணியில் ஆளும் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆதரவு குழுக்கள் வன்முறையை தூண்டி விட, பெரும்பான்மையான மெய்தி இன மக்கள் ஏற்படுத்திய கலவரம், இரண்டு மாத காலத்திற்கும் மேலாகியும் முற்றுப்பெறாமல் தொடர்ந்துக் கொண்டுள்ளது.
வடகிழக்கு மாகாணங்களின் வரலாறை தெரிந்து கொண்டால் இன்று அங்கு நடைபெறும் வன்முறைக்கான பின்னணியை புரிந்துகொள்ள முடியும். இந்திய ஒன்றியத்தின் வட கிழக்குப்பகுதி முற்றிலும் மலைகள் நிறைந்த நிலப்பரப்பு. இங்கு வாழும் மக்கள் இன்றளவும் பெரும்பான்மையாக பழங்குடி இனக்குழு வாழ்வியலை கடைபிடித்து வருகின்றனர். வட இந்திய கங்கை சமவெளியுடன் சொல்லும் அளவுக்கு பரிமாற்ற வரலாறு இல்லாத வட கிழக்கு மலைப் பிரதேசங்கள், காலனிய பிரிட்டன் காலத்தில் தில்லி அதிகாரத்தின் கீழ் அடைக்கப்பட்டது. காலனிய பிரிட்டனை எதிர்கொண்ட பழங்குடி சமூகம் அதே வகையில் 1947-க்கு பிறகு இந்தியாவின் தில்லியை எதிர்கொண்டு வருகிறது. ஆகவே, வடகிழக்கு மாநிலங்களின் இந்திய உறவு ‘அவநம்பிக்கை’ அடிப்படையில் தொடர்ந்து வருவதாகும்.
இந்திய ஒன்றியம் கூறும் சனநாயத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல், தில்லி ஆதிக்கத்தை வெறுக்கும், பல்வேறு தேசிய இனங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தனர். இன்றும் முன்னெடுத்து வருகின்றனர். உலகின் மிகப்பெரிய சனநாயகம் என்று சர்வதேசத்தில் முழங்கும் இந்தியா தனது ஒன்றிய வாழ் மக்களின் அடிப்படை சனநாயக உரிமைகளை நசுக்கிட ‘ஆயுதப்படை சிறப்பு சட்டங்கள்’ இயற்றி இராணுவ ஒடுக்குமுறையை ஏவிடும் ஒரு சர்வாதிகாரியாக தான் செயல்படுகிறது.
இராணுவமயமாக்கல்
இந்தியாவின் வடகிழக்கு பிரதேசம் பல தேசிய இனங்கள் வாழும் பகுதியாக இருக்கிறது. பழங்குடி இனக்குழு உணர்வுமிக்க இம்மக்களை காலனிய பிரிட்டிஷ் அரசும்; பின்னர் அதன் நீட்சியாக இந்திய அரசும் பல்வேறு சட்டங்களை இயற்றியும், இராணுவமயமாக்கல் மூலமும் கட்டுபடுத்தி ஆட்சி செய்து வந்திருக்கிறது.
வடகிழக்கின் இன்றைய நாகலாந்து, மணிப்பூர், அசாம், அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவலாக வாழ்பவர்கள் நாகா இன மக்கள். 1947-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே இவர்கள் தங்களுக்கான தனிநாடு கோரிக்கையை பிரிட்டிஷ் காலணியத்திடம் முன்வைத்து வந்துள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-க்கு பிறகு அசாம் மாநிலத்தோடு இணைத்திருப்பதை எதிர்த்து பல்வேறு மக்கள் அமைப்புகள் உருவாகின. அதில் ஒன்றான நாகா தேசிய கவுன்சில் (NNC – Naga National Council) என்கிற அமைப்பு 1951-ல் நடத்திய பொதுவாக்கெடுப்பில் 99% மக்கள் “சுதந்திர, இறையான்மை” கொண்ட நாகா தேசத்திற்கு வாக்களித்தனர். 1952-ம் ஆண்டு முதல் தேர்தல் புறக்கணிப்பில் தொடங்கி அரசு பள்ளி, ஏனைய அரசு துறைகள் என அனைத்தையுமே புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை விரிவுபடுத்தி வந்துள்ளனர்.
நிலைமையை சமாளிக்க அசாம், பொது ஒழுங்கு பாதுகாப்புச் சட்டத்தை திணித்து கிளச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள ஆரம்பித்தது. வடகிழக்கு எல்லை பாதுகாப்பிற்காக 1835-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலணிய அரசால் அசாம் ரைபிள்ஸ் என்கிற துணை இராணுவ படை உருவாக்கப்பட்டது. பின்நாட்களில் வடகிழக்கு மாநிலங்களில் உருவான போரளிக்குழுக்களை ஒடுக்க இப்படை தான் பயன்படுத்தப்பட்டது.
இப்படையினரின் துணைக்கொண்டு நாகா கிளர்ச்சியாளர்களை கட்டுக்குள் கொண்டு வர இந்தியா நினைத்தது. ஆனால், போலிஸ் படையினராலோ இராணுவத்தாலோ இவர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 1956-இல் நாகா தேசிய கவுன்சில் (NNC – Naga National Council) ஒரு இணை அரசாங்கத்தை அமைத்தது.
இதனை தொடர்ந்து அசாம், மணிப்பூர் மாநிலங்களில் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலைகளை சமாளிக்க, 1958-இல் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் ஒப்புதலின் பெயரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA – Armed Forces Special Power Act,1958) அமல்படுத்துகின்றனர். 1942-ஆம் ஆண்டு நடந்த “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தை ஒடுக்க வைசராய் லின்லித்கோ (Viceroy Linlithgow) கொண்டுவந்த காலனியத்துவ அடக்குமுறை சட்டத்தின் அடிப்படையில்தான் இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் 355-வது பிரிவின் கீழ் மாநிலத்தின் எந்த பகுதியிலாவது கிளர்ச்சி, வன்முறை, மோதல் மாதிரியான சூழ்நிலைகள் உருவாகும் பட்சத்தில் அந்த இடத்தை தொந்தரவுக்குறிய பகுதியாக அறிவித்து அம்மாநிலத்தின் ஆளுநரோ அல்லது ஒன்றிய அரசோ இச்சிறப்பு சட்டத்தை அமல்படுத்தலாம். அந்த பகுதிகளில் இராணுவத்தினர் முன் அனுமதியின்றி சோதனையிடவும், வாரண்ட் இல்லாமலே யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும் முடியும். கைது செய்யப்பட்டவர்களை எந்த வித காலக்கெடுவுமின்றி காவல்நிலையங்களில் வைத்து கண்காணிக்கலாம். சந்தேகத்தின் பெயரில் துப்பாக்கிசூடு நடத்தவும் இராணுவத்தினருக்கு இச்சட்டத்தில் அதிகாரம் உள்ளது.
இப்படியான சூழலில் இராணுவத்தினரின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் பாதிப்படைந்தாலும், ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் இராணுவத்தினரை விசாரிக்கவோ அவர்களை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கவோ முடியாது. மீண்டும் நிலைமை “அமைதியான சூழலுக்கு” திரும்பும் போது சட்டத்தை திரும்பப்பெற்றுக்கொண்டு இராணுவத்தினர் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
இச்சட்டம் முதன் முதலில் அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தில் தான் அமுல்படுத்தப்பட்டது. பின்னர் சில வடகிழக்கு மாநிலங்களுக்கும் இச்சட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த அளவில்லாத அதிகாரத்தினால் வடகிழக்கு மக்கள் கடுமையான அடக்குமுறைகளையும், இழப்புகளையும் சந்தித்தனர்.
இச்சட்டத்தின் பாதுகாப்புடன் ஆயுதப் படையினரின் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் காரணமாக ஆயிரக்கணக்கானோர் அங்கு பலியாகி இருக்கிறார்கள். இத்தனை அநியாயங்கள் நடந்தேறிய போதும், இந்தக் குற்றங்களில் ஈடுபட்ட ஆயதப்படை வீரர் ஒருவர் மீது கூட இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்கப்பட்டதில்லை.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக எண்ணற்ற போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், அந்தப் போராட்டங்கள் யாவும், நடந்த சுவடே தெரியாமல் ஒடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பெண்கள் முன்நின்று நடத்திய சில போராட்டங்கள் இந்தியாவின் கோரமுகத்தை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியது.
பெண்கள் போராட்டம்
1980-ஆம் ஆண்டில் மணிப்பூர் மாநிலம் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு கிளர்ச்சியை சமாளிக்க மணிப்பூரின் மலை மாவட்டங்களில் மட்டும் இச்சட்டம் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டது.
1980-களில் துவங்கி 2000-ஆம் ஆண்டு வரை எண்ணற்ற வன்கொடுமைகளும், மனித உரிமை மீறல்களும், படுகொலைகளும் இச்சட்டத்தின் துணைகொண்டு நடத்தப்பட்டன. அவற்றில் சில ஓய்னம் (Oinam) படுகொலைகள், உக்ருல் (Ukhrul) படுகொலைகள், பாஷிகோங் (Bashikhong) படுகொலைகள், சூரசந்த்பூர் (Churachandpur) படுகொலைகள், நுங்லீபன் (Nungleiband) படுகொலைகள், தபோக்பிகோங் (Tabokpikhong) படுகொலைகள், டான்சென் லாம்கை (Tonsen Lamkhai) படுகொலைகள், மாலோம் படுகொலைகள் ஆகும்.
இவற்றில், சர்வதேச சமூகத்திடம் இந்தியாவை அம்பலப்படுத்தி நிறுத்தியது இரண்டு படுகொலைகள்.
ஒன்று மாலோம் படுகொலை. நவம்பர் 2, 2000ல், மணிப்பூர் மாநிலம் மாலோம் அருகே அசாம் ரைபிள்ஸ் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்றும், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நவம்பர் 5, 2000 அன்று, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை (AFSPA) தடை செய்யக்கோரி மணிப்பூரின் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா அவர்களின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. 16 ஆண்டுகால உண்ணாவிரதத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 9, 2016-ல் அவர் உண்ணாவிரதத்தை முடித்தார். 500 வாரங்களுக்கும் மேலாக உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்ள மறுத்ததால் சிறையில் அவருக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்கப்பட்டது. இதனால், அவர் “உலகின் மிக நீண்ட உண்ணாவிரதப் போராட்டக்காரர்” என்று அழைக்கப்படுகிறார்.
மற்றொன்று, மனோரமா தங்ஜம் படுகொலை. 11 ஜூலை, 2004ல் அசாம் ரைபிள்ஸ் படையினரால் சந்தேகத்தின் பெயரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 32 வயதான மனோரமா தங்ஜம் என்ற பெண் கொடூரமாக முறையில் கொல்லப்பட்டார். மனோரமாவின் உடல் அவர் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட சில மணி நேரங்களிளேயே அருகேயிருந்த நெல் வயலில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களும், அவரது பிறப்புறுப்பு மற்றும் தொடைகளில் இருந்த காயங்களின் மூலம் பாலியல் வன்புனர்வுக்கு ஆளாக்கப்பட்டு, இறக்கும் தருவாயில் கடுமையான சித்திரவதை அனுபவித்தார் என்பது தடயவியல் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. ஆனால், அவர் தப்பிக்க முயன்றதால், கால்களில் சுட்டதாக அசாம் ரைபில்ஸ் தெரிவித்தனர். அவரது உடலில் மொத்தம் 16 தோட்டாக்கள் இருந்தன, அவற்றில் எதுவும் அவரது கால்களைத் தாக்கவில்லை என்று முதல் தகவல் அறிக்கையில் பதிவாகியிருக்கிறது.
இராணுவத்தின் இந்த காட்டுமிராண்டி தனத்தை கண்டித்து “மீரா பைபி” (தீப்பந்தம் ஏந்திய பெண்கள்) என்கிற பெண்கள் அமைப்பு இச்சட்டத்துக்கு எதிராக நிர்வாணப் போரட்டத்தை நடத்தியது.
இவ்வமைப்பின் பெண்கள் ‘மணிப்பூரின் தாய்மார்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் இரவு நேரங்களில் நகர வீதிகளில் பெண்கள் அணிவகுத்துச் செல்லும்போது எடுத்துச் செல்லும் தீப்பந்தங்களிலிருந்து இந்த இயக்கம் அதன் பெயரைப் பெற்றது.
இவர்கள் இம்பால் பள்ளத்தாக்கின் அனைத்து சமூக பிரிவுகளிலிருந்தும் வந்தவர்கள். அப்பாவிகளுக்கு எதிராக துணை இராணுவம் மற்றும் ஆயுதப் படைப் பிரிவுகளால் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு காணக் கோரியும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் அவர்கள் தீப்பந்தம் ஏந்தி ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள். மணிப்பூர் மக்கள் தங்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடிக் கொண்டிருந்த நேரத்தில் இக்கொள்கையை அடிப்படையாக் கொண்டு உருவாக்கப்பட்துதான் “மீரா பைபி” இயக்கம். இவ்வமைப்பு, மணிப்பூரில் அரச வன்முறைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக போராடும் மிகப்பெரிய வெகுமக்கள் இயக்கமாகும்.
ஜூலை 15, 2004 அன்று, காங்லா கோட்டையின் முன்பு “இந்திய இராணுவம் எங்களை வன்புணர்கிறது” (“Indian Army Rape Us”), “இந்திய இராணுவமே எங்கள் சதையை எடுத்துக் கொள்” (“Indian Army Take Our Flesh”) என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி இவ்வமைப்பின் பெண்கள் போராடினார்கள்.
மனோரமா படுகொலையின்போது, இதே சட்டத்தை எதிர்த்து இரோம் ஷர்மிளா நடத்திக்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் நான்கு ஆண்டுகளை கடந்திருந்தது. மீரா பைபிகளின் நிர்வாண போராட்டமும் இரோம் சர்மிளாவின் உண்ணாவிரத போராட்டமும் இந்திய மக்களுடைய கவனத்தையும், சர்வதேச சமூகத்துடைய கவனத்தையும் வடகிழக்கை நோக்கியும், இச்சர்வாதிகார சிறப்பு சட்டத்தை நோக்கியும் முதன்முதலில் திருப்பியது.
மாநில சிறப்பு அந்தஸ்து
1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றதாக சொல்லப்பட்ட நாள் முதல், இந்தியாவும் பாகிஸ்தானும் ஜம்மு-காசுமீர் தங்களுக்கு சொந்தமான பகுதி என்று கோரிவந்துள்ளனர். பிராந்திய நலனுக்காகவும், எல்லைப்புற பாதுகாப்பிற்காகவும் காஷ்மீரை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்நியா நினைத்தது. இதன் காரணமாக, 1954-ஆம் ஆண்டு ஜம்மு-காசுமீர் ஆட்சியாளர் வைத்த நிபந்தனைகளை இந்தியா ஏற்று அதற்கு சிறப்பு அந்தஸ்த்து (Article 370) வழங்கி இணைத்துக்கொண்டது.
இந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவின்படி, பாதுகாப்பு, வெளியுறவு, நிதி மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு பொருந்தும் சட்டங்கள் எதுவும் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. அம்மாநில சட்டசபை இயற்றும் சட்டங்கள் மட்டுமே பொருந்தும். முக்கியமாக, இந்திய ஒன்றியத்தின் பிற பகுதிகளில் இருப்பவர் ஜம்மு காசுமீர் மாநிலத்தில் நிலம் வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை ஒழித்துக்கட்டுவது ஆர்எஸ்எஸ்ன் நெடுங்கால திட்டமாக இருந்து வந்தது. 2019 தேர்தலில் இச்சட்டத்தை ரத்து செய்வதாக அளித்த வாக்குறுதியின் பெயரில் ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தினை பாஜக ரத்துச்செய்தது.
“காசுமீர், இந்தியாவை அழிக்க பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் சதிகள் செய்யும் இடம் என்பதால் காசுமீரை இந்தியாவோடு வைத்துக்கொள்ள வேண்டும்” என்ற எண்ணம்தான் இந்த 2019-ல் சிறப்பு அந்தஸ்தினை நீக்கும்போதும் இந்திய வெகுமக்களின் பொதுபுத்தியில் இருந்தது. இச்சிறப்பு சட்டத்தை ரத்து செய்த பிறகு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தப்போவதாகச் சொல்லி தொடர்ந்து அங்கே இராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.
உலகின் அதீத இராணுவமயமாக்கப்பட்ட பிரதேசமாக உள்ள காஷ்மீர் அரச பயங்கரவாதத்தையும், வன்முறையையும், கொடுமைகளையும் அனுபவித்து வருகிறது. இதை எதிர்த்து போராடிய மக்களை ஒடுக்க 1990-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA – Armed Forces Special Power Act) இயற்றப்பட்டது. அம்மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது தொடங்கி, சிறைக்காவல் மரணங்கள், எண்கவுண்டர் என இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை கணக்கில்லாமல் தொடர்ந்து வருகிறது. இன்று வரை அந்த இராணுவ சிறப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. ஜம்மு-காசுமீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்வதில் காங்கிரசும் பாஜகவும் ஒருமித்த கருத்தில் தான் உள்ளன.
ஜுன் 26, 2023-ல் ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற மாநாட்டில் உரையாற்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “ஜம்மு-காஷ்மீர் பிராந்தியம் நிரந்தரமான அமைதியை அடைந்தவுடன் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ஜம்மு-காஷ்மீரில் இருந்து நீக்கப்படும்” என்று அறிவித்தார். ஆனால், சிறப்பு அந்தஸ்து பெற்ற காசுமீரில் 1990-ல் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் அமல்படுத்தப்பட்டது முதலே அங்கு நிரந்தரமான அமைதிக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என்பது தான் எதார்த்தம். இதே நிலை தான் இச்சட்டம் நடைமுறையில் உள்ள பிற எல்லைப்புற மாநிலங்களிலும் நீடிக்கிறது.
காசுமீருக்கு சிறப்பு அந்தஸ்த்து (Article 370) வழங்கப்பட்டது போல நாகலாந்து (371A), அசாம் (371B), மணிப்பூர் (371C), சிக்கிம் (371F), மிசோரம்(371G), அருணாசல பிரதேசம் (371H) போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கும் அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்பட்டன. மணிப்பூருக்கு வழங்கப்பட்ட (371C) அந்தஸ்த்தின்படி மாநில சட்டமன்றக் குழுவின் அரசியலமைப்பு செயல்பாடுகளை குடியரசுத் தலைவர் முடிவு செய்யலாம். ஆனால், சட்டமன்ற குழு மணிப்பூரின் மலைப் பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் மலைப்பகுதிகளின் நிர்வாகம் தொடர்பாக ஆளுநர் வருடாந்திர அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இது நிலம், காடுகள், கனிம வளங்கள் மற்றும் மலைவாழ் பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாக்க தேவையான சட்டங்களை மணிப்பூர் சட்டமன்றத்தில் இயற்ற வழிவகை செய்திடும் சிறப்பு அந்தஸ்த்து வழங்குவதாக கூறப்பட்டது.
இச்சிறப்புச் அந்தஸ்து சட்டங்கள் மூலம் அதிகார பரவல், மாநில சுயாட்சி உரிமை, மாநிலங்களின் இறையாண்மையை பாதுகாக்கவும் ஜனநாயக முறையில் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில் பாதுகாப்பு என்கிற பெயரில் எல்லைப்புற மாநிலங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காகவும், அவற்றின் சுயாட்சி உரிமைகளை நசுக்குவதற்காகவுமே இச்சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
1980-களில் பஞ்சாப் மாநிலத்தில் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து காலிஸ்தான் இயக்கத்தினர் போராடினர். அதனை ஒடுக்குவதற்காக 1983-ஆம் ஆண்டு ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை பஞ்சாப் மற்றும் சண்டிகரில் ஒன்றிய அரசு இயற்றியது. இதன்படி, சந்தேகத்தின் பெயரில் எந்தவொரு நபரையோ, வாகனத்தையோ தடுத்து நிறுத்தி, சோதனை செய்யவும்; வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்யவும் முடியும். பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து சோதனை செய்யவும் இராணுவத்திற்கு அதிகாரம் உள்ளது. இது போன்ற உட்பிரிவுகள் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டன. 2008 இல் பஞ்சாப் மாநிலத்திலும் 2012-இல் சண்டிகரிலும் இந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
பா.ஜ.கவின் வடகிழக்கு மாடல்
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் எல்லை மாநிலங்களின் வரலாறுகள் இப்படியாகவே இருந்து வந்துள்ளன. சுயநிர்ணய உரிமையையும் தனிநாடு கோரிக்கையும் முன்வைத்தவர்களின் மீது இது போன்ற அடக்குமுறை சட்டங்களை திணித்து அரசாங்கம் அவர்களை ஒடுக்கி வந்துள்ளது. ஒருபுறம் இதுபோன்ற தன்னாட்சி பாதுகாப்பு சட்டங்களும், மறுபுறம் அம்மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் (AFSPA) போன்ற அடக்குமுறைச் சட்டங்களும் இம்மக்களை போலியான சனநாயக சூழலுக்குள் தள்ளுகிறது. அதே போல ஒருபுறம் தேர்தலின் மூலமாக சனநாயக அமைப்பும் மறுபுறம் கட்டற்ற அதிகாரத்துடன் இராணுவமும் நிலைகொண்ட சனநாயக விரோத சூழலையும் அம்மக்களுக்கு டில்லி – பார்ப்பனிய – இந்திய அரசு கொடுத்தது என்பது தான் 70 ஆண்டுகால சுதந்திர தேசம் உருவாக்கிய வேதனை.
இதுவே தான் தமிழீழத்திலும் நடந்தது. சுயநிர்ணய உரிமை, தனித் தமிழீழம் வேண்டி நடந்த அமைதி வழிப் போராட்டம் ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கு நகர்ந்த போது, இலங்கை அரசும் உலக நாடுகளும் சேர்ந்து தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்தது. இன்றும் செய்து கொண்டிருக்கிறது. தங்களின் அரசியல் லாபத்துக்காக சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்குமான பிரிவினையை ஏற்படுத்தி தமிழ் மக்கள் மீதான சிங்கள மக்களின் வெறுப்பை பயன்படுத்திய காலணிய அரசுகளின் அதே முறையை தற்போது இந்திய அரசாங்கம் செய்து வருகிறது. தங்களின் உரிமைக்காக ஒன்று சேர்ந்து போராடிய மக்களை இரண்டாக பிரித்து ஒருவருக்கு ஒருவர் எதிரானவர் என்று பொய் பிரச்சாரத்தை கட்டமைத்து, அவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கி, இந்த மோதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிற பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்-ன் “வடகிழக்கு மாடல்” தனித்த இறையான்மை கொண்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் இன்ன பிற தேசிய இனங்களுக்கும் ஒரு பாடம்!