அபாயகரமான பாதையில் இலங்கை – ஐ.நா அறிக்கை

ஐக்கிய நாடு சபையால்  கடந்த புதன் கிழமை ஈழம் பற்றி வெளியிடப்பட்ட அறிக்கை, மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறக்கூடிய அபாயகரமான பாதையில் இலங்கை பயணிப்பதாக குறிப்பிடுகிறது. பிப்ரவரி 22 முதல் மார்ச் 19ஆம் தேதி வரை மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற இருக்கும் 46ஆவது அமர்வில் இந்த அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.

குடிமை (சிவில்) அரசு அலுவலகங்கள் ராணுவமயமாக்கப்படுவது, அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்புகள் நீக்கப்படுவது, மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளிலிருந்து வழங்கப்பட்டிருக்கும் அரசியல் விலக்கு, இனத்துவ தேசியவாத கடும்போக்கு , பொது மக்கள் மீதான தொடர் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக வெளிகள் சுருக்கப்படுதல் மற்றும் சிவில் சமூகம் அச்சுறுத்தப்படுதல் போன்ற போக்குகள் , மனித உரிமைகள் பேரவையின் அவசர கவனம் தேவைப்படும் முக்கியமான ஆரம்ப எச்சரிக்கை சமிக்ஞைகளை குறிப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையர் பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த 16 பக்க அறிக்கையானது ஈழத்தில் பெரும்பாண்மை பெளத்த அரசால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் பாகுபாட்டை மையமாக கொண்டிருப்பதாக குறிப்பிடுகிறது.

அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும்  முக்கிய கூறுகள் :

ஈழத்தில் இருக்கும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு, குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான, ஆழமான பாகுபாடு மற்றும் தீண்டாமை ஆகியவை காட்டப்பட்டதன் பின்னணியில் தான் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் எழுச்சியடைந்தது என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

2020 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து முக்கியமான நிர்வாகப் பதவிகளுக்கு தற்போது சேவையில் இருக்கும் அல்லது முன்பு ராணுவ மற்றும் புலனாய்வுத் துறையிலிருந்த அதிகாரிகள் 28 நபர்களை ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். குறிப்பாக போரின் இறுதி வருடங்களில் போர்க்குற்றங்களை நிகழ்த்தியிருப்பதாகவும், மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களை செய்ததாகவும், முந்தைய ஐ.நா அறிக்கைகளில் குறிப்பிட்டுருந்த மூத்த ராணுவ அதிகாரிகள் அந்த பதவிகளில் நியமனம் செய்யப்பட்டிருப்பது கவலைக்குரிய ஒரு விடயம் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. ராணுவ தளபதியாக ஆகஸ்து 2019 சவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டது மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராக கமல் குணரதன நவம்பர் 2019ல் நியமனம் செய்யப்பட்டது என்பனவும் இதில் அடங்குகின்றன.

நீதித்துறை மற்றும் ஏனைய முதன்மையான அரசு நிறுவனங்களின் தன்னாட்சி தன்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அவற்றுக்கு இணையான ராணுவ செயலணிகளையும், ஆணையக்குழுக்களையும் அரசாங்கம் உருவாக்கி இருப்பதாகவும்  இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும், சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரைக் கொண்ட தரப்புகள் மீது தீவிரமான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தப்படுவதையும் , தன்னாட்சியாக இயங்கும் ஊடகங்களுக்கான வெளியானது சுருங்கி வருவதனையும் அது ஆவணப்படுத்தியுள்ளது.

“ மனித உரிமைகள் பாதுகாவலர்கள், சட்ட வல்லுநர்கள், இதழியலானர்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களினால் பாதுகாக்கப்பட்டவர்கள் அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்திலான அரசு முகவர்களின் வருகைகள் உள்ளடக்கிய அனைத்து வடிவங்களிலுமான கண்காணிப்புகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென உயர் ஆணையாளர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். “என இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

ஒன்றன் பின் ஒன்றாக வந்த அரசாங்கங்களினால் நியமனம் செய்யப்பட்ட பெருந்தொகையான விசாரணை ஆணைக்குழுக்கள் அத்துமீறல்கள் தொடர்பான உண்மையை நம்பகமான விதத்தில் நிரூபிப்பதற்கும் , பொறுப்புக்க்கூறல்களை உத்தரவாத படுத்துவதற்கும் தவறியிருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

“கடந்த காலம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறியிருக்கும் நிலை தமக்கு நீதியும் இழப்பீடுகளும் கிடைப்பதுடன் மற்றும் தனது அன்புக்குரியவர்களுக்கு நேர்ந்த கதி குறித்து உண்மை தெரியவேண்டுமென  வலியுறுத்தி வரும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான  குடும்ப உறுப்பினர்கள் மீது மேசமான தாக்கங்களை இலங்கை அரசு எடுத்து வந்திருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சலி பெல்செட் குறிப்பிட்டுள்ளார்.

 

”நீதிக்கென பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் துணிச்சலாக , தொடர்ச்சியாக எழுப்பி வரும் வேண்டுகோள்களுக்கு செவிமடுக்க வேண்டுமெனவும் இனிமேலும் இடம்பெறக் கூடிய அத்துமீறல்கள் குறித்த முன்னெச்செரிக்கைச் சமிக்ஞைகளை எடுத்து கொள்ள வேண்டும் எனவும் நான் சர்வேதச் சமூகத்திடம்  கேட்டுகொள்கிறேன். “ எனக் குறிப்பிடும் பெச்லெட், ஐ.நா உறுப்பு நாடுகள் திட்டவட்டமான விதத்தில் இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.

 

“தேசிய மட்டத்தில் பொறுப்புக் கூறல்களை எடுத்து வரும் விடயத்தை முன்னெடுப்பதில் அரசாங்கம் எடுத்துக் காட்டியிருக்கும் இயலாமை மற்றும் விருப்பமின்மை என்பவற்றின் பின்னணியில் , சர்வ்தேசக் குற்றச்செயல்கள் தொடர்பாக நீதியை உத்தரவாதப் படுத்தும் பொருட்டு சர்வதேச நடவடிகைக்களுக்கான தருணம் தற்போது வந்துள்ளது. மேலும் , இந்த உறுப்பு நாடுகளின் அரசுகள் அவர்களது நாடுகளுக்கு வெளியிலான நீதியின் கீழ் அல்லது சர்வதேசம் தழுவிய நியாயத்தின் கீழ் தமது தேசிய நீதிமன்றங்களில் இலங்கையில் அனைத்து தரப்புகளினாலும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சர்வதேச குற்றச் செயல்கள் தொடர்பாக புலன் விசாரணைகளையும், வழக்குத்தொடுப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும்” என மிச்சலி பெச்லெட் குறிப்பிட்டுள்ளார்.

“ மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பவற்றை நிகழ்த்தியிருப்பதாக நம்பகமான விதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நபர்களுக்கு எதிராக அவர்களுடைய சொத்துக்களை முடக்குவது மற்றும் பயணத்தடைகள் போன்ற இலக்கு வைக்கப்பட்ட தடைகளை அரசுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியும்.” ஐ.நா அமைதி காக்கும் படைகளின் செயற்பாடுகளில் இலங்கையின் பங்களிப்புகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென உயர் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மே பதினேழு இயக்கம் தொடர்ந்து இலங்கை அரசு தமிழ் மக்களின் மீது தொடுத்த இனப்படுகொலைப் போர் பற்றியான விசாரணை செய்யும் அதிகாரத்தை இலங்கை அரசிடமே கொடுப்பதை கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறது. மே பதினேழு இயக்கம் இலங்கை இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தொடர்ச்சியாக என்னென்ன சூழச்சிகளை செய்யும் , எப்படி இனப்படுகொலையினை சர்வதேச சமூகத்தின் முன் வெளிப்படையாகத் தொடரும் என்று எச்சரித்ததோ அதையே தற்போது ஐ.நா அதனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தமிழர்களுக்கான எந்தத் தீர்வையும் தராது என்பதையும் அமெரிக்க தீர்மானம் தமிழ் மக்களுக்கு எதிரான தீர்மானம் என்பதையும் மீண்டும் மீண்டும் மே பதினேழு இயக்கம் பதிவு செய்தது. இலங்கை அரசை காப்பாற்றும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானமானது இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது  தொடர் இனப்படுக்கொலையினை நிகழ்த்திய ஒரு அரசு தொடர்ந்து அதனது ராணுவத்தை பலப்படுத்தவும், தமிழ் மக்களின் நிலங்களை இராணுவமயப்படுத்தவும் வாய்ப்பினை வழங்கியது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஐந்து வருடங்களுக்குப் பிறகும் நீதியானது தமிழ் மக்களுக்கு கானல் நீராகவே இருக்கிறது. இதை எதிர்நோக்கியதால் தான் , தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு மற்றும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை மே பதினேழு இயக்கத்தால் அமெரிக்க தீர்மானத்திற்கு மாற்றாக வைக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றம் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது. திமுக- காங்கிரஸ் கூட்டணி உடையவும் இதுவே காரணமானது.

இப்படியான அறிக்கைகளில் இருந்து நமக்கு புரிவது ஒன்று தான் . 72 வருடங்கள் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். சர்வதேச கண்காணிப்பின் கீழ் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடைபெற வேண்டும். இதற்கான அழுத்தத்தினை தமிழ்நாட்டு தமிழர்கள் உள்பட உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும் .

Translate »