“பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பதை முன்வைத்து தமிழ்நாடு தழுவிய அளவில் மே 17 இயக்கம் தொடங்கிய பரப்புரை 15/4/2024 அன்று மதுரையில் நடந்தது. மதுரை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர். சு.வெங்கடேசன் அவர்களை ஆதரித்து, மதுரையின் ஜெய்ஹிந்த்புரம், சிம்மக்கல், விளாங்குடி பகுதிகளில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றினார்.
சங்கிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் வீழ்த்த, மார்க்ஸிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் தோழருக்கான இந்த பரப்புரையில், உடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர். கணேசன், துணை மேயர் மார்க்ஸிஸ்ட் கட்சியின் தோழர். நாகராசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த பொறுப்பாளர் தோழர். இஸ்மாயில் மற்றும் இதர தோழமைகளும் கலந்து கொண்டனர். மே 17 இயக்கத் தோழர்கள் துண்டறிக்கைகள், புத்தகங்கள் விநியோகித்தனர்.
இந்தப் பரப்புரையில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் :
நாங்கள் தமிழ்நாட்டிலே காலூன்றுவோம் என்று மதவெறியர்கள் கொக்கரிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்த மதவெறியர்களை இந்திய அளவில் அப்புறப்படுத்தும் ஒரு பொறுப்பு நமக்கு வந்திருக்கிறது. அவ்வகையில் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம், பாஜகவிற்கு பாடை கட்டுவோம் என்கின்ற தமிழர்களின் அரசியல் முழக்கம் இந்தியா முழுவதும் எதிரொலிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 2015-ல் சென்னையில் வெள்ளம் வந்தது. 2016-ல் டெல்டாவில் வறட்சி வந்தது. அதற்குப் பிறகு கஜா புயல் வந்து டெல்டாவில் இருக்கக்கூடிய பயிர்களை எல்லாம் அழித்தது. பல நூறு பேர் இறந்து போனார்கள். ஒக்கி புயல் கன்னியாகுமரியில் வீசி அடித்ததில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போனார்கள். அடுத்தடுத்து நிவர் புயல், மிக்ஜாம் புயல், சென்னை வெள்ளம் என்று பேரிடர்கள் நம்மை தாக்கிக் கொண்டிருந்தன. சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளம் வந்தது. தமிழ்நாட்டில் நடந்த இந்த பேரழிவுகளுக்கெல்லாம் எட்டிப் பார்க்காத மோடி, இப்பொழுது வாரத்திற்கு நான்கு முறை வருகிறார். துக்கம் விசாரிக்க வராத மோடி வாக்கு பிச்சை எடுக்க வருகிறார்.
நல்ல விஷயத்துக்கு போகவில்லை என்றாலும் பரவாயில்லை, துக்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான் நமது பண்பாடு. இந்த நாட்டில் அதிக வரிகளை செலுத்தக்கூடிய நாம் பேரிடர்களை எதிர்கொண்ட போதும், நாம் வாழ்வழிந்து, சீரழிந்து துக்கத்தில் வதைபட்ட போதும், நாம் கேட்ட பேரிடர் நிதிகளை வழங்கவும் வராத நரேந்திர மோடி, இன்று தேர்தல் பிச்சையெடுக்க வருகிறார். இந்தப் பேரிடர்களுக்கெல்லாம் மொத்தமாக சேர்த்து கேட்ட தொகை 1,00,000 கோடி. ஆனால் நரேந்திர மோடி அரசு அனைத்திற்கும் சேர்த்தே 5,000 கோடி மட்டுமே கொடுத்தது. நாம் கொடுத்த வரிப்பணத்தில்தான் நட்ட ஈடு கேட்டோம். அதையும் மறுத்தது.
நாம் அனைத்துப் பொருள்களுக்கும் 12 சதவீதம் வரி கட்டுகிறோம். ஷாப்பூ, சோப்பு, சாப்பாட்டுக்கு என வரி இல்லாத பொருட்களே இல்லை. உப்பு எடுப்பதற்கு வரி போட்டான் வெள்ளைக்காரன். எங்கள் கடலில் இருந்து உப்பு எடுக்கிறோம், அதற்கு எதற்கு வரி என்று இந்தியா காந்தியின் தலைமையில் திரண்டு எழுந்தது. ஆனால் இன்று உப்புக்கு 12 சதவீதம் வரி. நாம் கொடுக்கும் வரியில் நமக்கான பங்கு கேட்டால் பிச்சை என்கிறார்கள். அதானிக்கும் அம்பானிக்கும் வரி விலக்கு தருகிறார்கள். அம்பானி அதானிக்கு 22 சதவீதம் வரியிலிருந்து 18 சதவீதமாக குறைத்ததும், நமக்கு போட்ட வரியை ஒரு சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தியதும்தான் நடந்தது. கிரைண்டருக்கு 18% வரி, வட நாட்டான் சப்பாத்தி எந்திரத்திற்கு 5% வரி. வடநாட்டானுக்கு ஒரு வரி, தமிழ்நாட்டானுக்கு ஒரு வரி என ஆளைப் பார்த்து வரி போட்டார் மோடி. இந்த வகையான அநீதிகளுக்கெல்லாம் துணிந்து பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டவரே சு. வெங்கடேசன் அவர்கள்.
ஒரு இலட்சம் ரூபாய் பைக் வாங்கினால் கூட 30 ஆயிரம் வரியை கட்டுகிறோம். 10 லட்சம் கார் வாங்கினால் 3 லட்சம் வரி. 10 ஆயிரம் ரூபாய் கிரைண்டருக்கு 1800 ரூபாய் வரி. பிறகெப்படி விலைவாசி ஏறாது? ஆனால் பணக்காரர்கள் வாங்கும் வைரத்திற்கு 2% வரிதான். குஜராத் வைர வியாபாரி செழிக்க வேண்டும். ஆனால் நமக்கு அரிசிக்கு கூட 5% வரி செலுத்த வேண்டும். இதையெல்லாம் கேட்டால் இந்துக்களுக்கு உரிமை இல்லை என்று வந்து விடுவார்கள் பாஜக, ஆர்எஸ்எஸ்-காரர்கள். பெட்ரோல் டீசல் விலை உயர்வு எல்லாம் இந்துக்களுக்கும் சேர்த்து தானே. இந்த உரிமையை பற்றியெல்லாம் பேச மாட்டார்கள்.
மோடி இந்த பத்தாண்டு காலத்தில் ஒரு மருத்துவமனையை, ஒரு தொழிற்சாலையை, ஒரு பல்கலைக்கழகத்தை திறந்து வைத்திருக்கிறாரா? தேசிய நெடுஞ்சாலை, பாலத்தை திறந்து வைத்தேன் என்று மட்டுமே செய்திகள் வரும். ஏன் இவர் இது சார்ந்தவை மட்டும் திறக்கிறார் என்று ஆய்ந்து பார்த்தால், நெடுஞ்சாலை துறையில் மட்டும் 7.50 லட்சம் கோடி ஊழல் செய்திருக்கிறார். இது தமிழ்நாட்டின் மூன்று வருட வருமானத் தொகைக்கு ஒப்பானது. எட்டு கோடி தமிழர்கள் மூன்று வருடம் உழைத்து சம்பாதித்த வருமானத்தை ஒரே ஒரு துறையில் கொள்ளையடித்தவர் மோடி. மோடியின் அமைச்சரவையின் அறிக்கை இது. நம் கையில் பணப்புழக்கம் இல்லாமல் போனதற்கு காரணம் இதுதான். நம் பாக்கெட்டில், சுருக்கு பையில் இருந்து திருடிய பணம் இது.
மோடி செய்யாத ஊழலே கிடையாது என்பதற்கேற்ப ராணுவத்திற்கு விமானம் வாங்க ஊழல், தடுப்பூசி வாங்க ஊழல் என்பதால் தான் நம் கையில் பணமில்லை. மாநிலத்திற்கு வரி வசூலில் முறையான பங்கு இல்லை. மாநிலத்தின் கழுத்தை போட்டு நெரித்துக் கொண்டிருக்கிறார் மோடி. இப்படிப்பட்ட சூழலில் பாராளுமன்றத்தில் முதுகெலும்புள்ள, நேர்மையாக கேள்வி எழுப்பக்கூடிய, வீரமுள்ள, துணிச்சலுள்ள ஆளை அனுப்ப வேண்டும். மக்களை நேசிக்கும் தோழன் அங்கே செல்லவேண்டும். அப்படியான தோழன் சு. வெங்கடேசன் அவர்கள்.
அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சிந்தித்து செயல்பட்டவர். மதுரை மாநகருக்கு எதையெல்லாம் கொண்டு சேர்க்க வேண்டுமோ அதை எல்லாம் கொண்டு சேர்த்தவர். இளைஞர்களுக்கு வரக்கூடிய வேலை வாய்ப்பை தட்டிப் பறித்த நரேந்திர மோடி அரசை எதிர்த்து தினந்தோறும் கேள்வி கேட்டவர். கல்வி உரிமை பற்றி பேசியவர். மண்ணின் உரிமை பற்றி பேசியவர். பண்பாட்டை பற்றி பேசியவர். இப்படிப்பட்ட அறிவின் சொந்தக்காரரரை விட்டுவிட்டு, இன்று இரவு எந்த கட்சியில் இருப்பார், அடுத்த நாள் எந்த கட்சிக்கு தாவுவார் என்பவரை எப்படி அனுப்ப முடியும். அதிமுக வேட்பாளரான சரவணன் மதிமுக, திமுக, பாஜக என தாவி இப்போது அதிமுகவில் வேட்பாளராக நிற்கிறார். அப்படிப்பட்ட கொள்கைப் பிடிப்பு இல்லாதவரை எப்படி பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடியும்? கொள்கையே இல்லாதவரை அனுப்பப் போகிறீர்களா அல்லது கொள்கைப் பிடிப்புடன் மக்களுக்காக பேசக்கூடியவரை அனுப்பப் போகிறீர்களா?
மோடி ஒவ்வொரு முறை வரும்போதும் ஒவ்வொரு தலைவர்களுக்கும் மாலை போடுகிறார். காமராசர், முத்துராமலிங்க தேவர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்று வரிசையாக மாலை போடுகிறாரே தவிர, அவருடைய கட்சியில் இருந்து எடுப்பதற்கு அவருக்கு ஒரு தலைவர் கூட தமிழ்நாட்டில் இல்லை. நமக்கு நீதி கட்சியில் ஆரம்பித்து திராவிட இயக்கம் தொடங்கி பெரியார், அண்ணா என்று பெரிய வரிசையில் தலைவர்கள் இருக்கிறார்கள். அதுபோல கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துக் கொண்டால் சீனிவாசராவ், சிங்காரவேலர், ஜீவா என பெரிய பாரம்பரியமே அவர்களுக்கு சொல்ல முடியும். அதுபோல அம்பேத்கரிய தோழர்கள், இஸ்லாமிய தோழர்கள் ஒரு பெரிய பட்டியலே கொடுப்பார்கள். இப்படி ஒவ்வொரு கட்சியும் தனது கட்சிக்காக உழைத்தவர்கள் என்று நான்கு பேரையாவது காட்டுவார்கள். ஆனால் மற்ற கட்சியில் இருந்து தலைவர்களை எடுத்து தனது கட்சிக்கு பயன்படுத்திக் கொண்ட ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சிதான்.
இந்த பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் மட்டுமல்ல, தேர்தல் முடிந்த பிறகும் இந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும். முதலில் தேர்தலில் தோற்கடிப்போம். பிறகு வீதியில் இருந்து விரட்டி அடிப்போம். அதுதான் எங்கள் லட்சியம். இந்த கட்சி தமிழர்களுக்காக, தமிழர் நலனுக்காக எதுவும் செய்யாத கட்சி. இந்த கட்சியுடன் கள்ளக் கூட்டணி வைத்திருப்பவரே எடப்பாடி. நான் சிறையில் இருந்தவன். சிறையைப் பற்றி எனக்கு தெரியும். ஜெயலலிதா அம்மையாரை ஜெயிலுக்கு அனுப்பியவர் மோடி அவர் வெளியே வந்து 10 மாதம் கழித்து மர்மமாக இறந்தார். அவர் உடல்நிலை ஏன் பாதித்தது என்பது குறித்து என்றாவது அதிமுக தொண்டர்கள் கேள்வி கேட்டீர்களா? மே 17 இயக்கம் 8 ஆண்டுகளாக கேள்வி கேட்கிறது. உங்கள் தலைவரை நோக்கி இந்த கேள்வியை கேட்டீர்களா? எடப்பாடியார் மோடியை நோக்கி இந்த கேள்வியை கேட்க மாட்டார். ஏனென்றால் அவருக்கு மோடி தான் டாடி. ஜெயலலிதா மோடியா? லேடியா ? என்று கேட்டார்கள் இவர்கள் மோடி தான் எங்கள் டாடி என்று மொத்த கதையும் முடித்து விட்டார்கள்.
எடப்பாடிக்கும் அண்ணாமலைக்கும் இருப்பது பங்காளி சண்டை, அது கூட்டணி சண்டை. அது கொள்கை சண்டை கிடையாது. மோடி ஆட்சி வரவிடாமல் தடுப்போம் என்று எடப்பாடி எங்கேயும் பேசியதில்லை. எடப்பாடியின் தலைவர் மோடியும், அமித்சாவும்தான். அவருக்கு அண்ணாமலை கூட மட்டும் தான் பிரச்சனை. மோடி ஆட்சிக்கு எதிராக இருக்கும் மம்தா பானர்ஜி கட்சியினர் வீட்டுக்கும், லாலு பிரசாத் கட்சியினர் வீட்டுக்கும் சிபிஐ செல்கிறது, அமலாக்கத் துறை செல்கிறது. மோடி ஆட்சிக்கு எதிராக இருந்த சிவசேனையை இரண்டாக உடைத்தார்கள். மோடி ஆட்சிக்கு எதிரான கூட்டணியில் இருப்பேன் என்று கூறிய ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேம்ந்த் சோரனை சிறையில் அடைத்தார்கள். மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று சொன்ன அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்கிறார்.
இப்படி மோடி ஆட்சிக்கு எதிராக இருக்கிறோம் என்று சொன்ன அனைவரும் சிறையிலும், வழக்கிலும் இருக்கும்போது, நாங்கள் பாஜகவிற்கு எதிராக இருக்கிறோம் என்று சொன்ன எடப்பாடி வீட்டிற்கும் அமலாக்கத்துறை போயிருக்க வேண்டுமா, இல்லையா? ஏன் போகவில்லை? ஏனென்றால் மோடி இங்கு இரண்டு வகையான கூட்டணியை உருவாக்கி இருக்கிறார். ஒன்று பாஜக கூட்டணி, மற்றொன்று அதிமுக கூட்டணி. இந்த இரண்டு கூட்டணியில் எந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் அது பாஜகவிற்கே வெற்றியாகும். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் பாஜகவையும் வீழ்த்த வேண்டும், அதிமுகவையும் வீழ்த்த வேண்டும். இதில் குழப்பம் இருக்கக் கூடாது. உண்மையிலேயே இரட்டை இலையை காப்பாற்ற வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினால் உங்கள் கட்சி தோற்றால்தான் காப்பாற்ற முடியும். உங்கள் கட்சியை மூன்றாக உடைத்தது பாஜக. அப்படிப்பட்ட கட்சியுடன் மாற்றி மாற்றி கூட்டணி வைப்பதை கேள்வி கேட்க மறுக்கிறீர்கள்?
ஆகவே மக்களே தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத, வடநாட்டு கட்சியே பாஜக. தமிழ்நாட்டின் நலனை சிந்திக்காத கட்சி அதிமுக. மதவெறியை, சாதிவெறியை ஊக்குவிக்கும் கட்சி பாஜக. பெண்களுக்கு எதிரான கட்சி, கலவரத்தை உருவாக்கும் கட்சி, சாமானியர்களுக்கு, ஏழைகளுக்கு, தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு எதிரான கட்சியான பாஜகவும், அதனுடன் கூட்டாளியாக இருக்கக்கூடிய அதிமுகவும் வீழ்த்தப்பட வேண்டும். தமிழர் உரிமை பேசும் சு. வெங்கடேசன் அவர்கள் வெற்றி பெற வேண்டும்.“ என திருமுருகன் காந்தி பேசினார்.
சென்னை பரப்புரை:
ஏப்ரல் 2, 2024-ம் தேதி முதல் நாள் தவறாமல் தோழர்களின் துண்டறிக்கைப் பரப்புரை சென்னையில் தொடர்கிறது. அதன்படி, 15/4/2024 அன்று பல்லாவரம் மற்றும் கிண்டிப் பகுதிகளைச் சுற்றிலும் துண்டறிக்கைகளும், புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டன.
தொடர்ந்து மே 17 இயக்கம் முன்னெடுக்கும் பாஜகவுக்கு எதிரான பரப்புரையில் தோழர்கள், உணர்வாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள உரிமையோடு அழைக்கிறோம்.
தொடர்புக்கு : 9884864010 எண்ணை அணுகவும்.