உலகம் ஆபத்தான காலகட்டத்தை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறது. அமைதி-சமாதானம் எனும் பதம் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் அகராதியில் இருந்து நீக்கப்பட்டு கொண்டிருக்கிறது. உலகை முழுமையான அழிவிலிருந்து ஓரளவேனும் காத்து நின்ற போர்-சமாதானம் இரண்டுக்குமான அடிப்படை சர்வதேச விதிகள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன.
பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் ’இஸ்மாயில் ஹனியே’, ஜூலை 31 அதிகாலை 2 மணியளவில் இஸ்ரேல் அரசால் கொல்லப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரான் அதிபர் ‘மசௌத் பெஸிஸ்கியான்’ அவர்களின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள, ஈரான் அரச விருந்தினராக சென்ற இடத்தில், ஈரான் தலைநகர் ’டெஹ்ரானில்’ இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அவருடன் அவரின் மெய்காப்பாளரும் கொல்லப்பட்டுள்ளார்.
ஹனியேவின் கைபேசிக்கு உளவு செயலியின் மூலம் குறுந்தகவல் அனுப்பப்பட்டு, அவரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் கொன்சாலஸ், வரவரராவ், பாதர் ஸ்டேன் சுவாமி, சுதா பரத்வாஜ், தமிழ்நாட்டில் தோழர் திருமுருகன் காந்தி, கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மனித உரிமை போராளிகளின் கைபேசிகளுக்கு இவ்வாறான உளவு செயலிகளின் மூலம், அவர்களே அறியாத வகையில் தொழில்நுட்ப (Pegasus) குறுந்தகவல்கள் புகுத்தப்பட்டு, அதன் மூலம் பலரை கைது செய்து சிறையில் அடைத்தது மோடி அரசு. உலகம் முழுவதும் இத்தகைய உளவு செயலி தொழில் நுட்பங்களை வழங்கும் நாடு இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன், ஜூலை 30 இரவு லெபனான் தலைநகர் பெய்ரூட் தெற்கு புறநகர் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 5 பேர் உயரிழந்துள்ளனர். இதே தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் பொதுச்செயலாளரான ‘ஹசன் நஸ்ரல்லாஹ்’ அவர்களின் ஆலோசகரும், ஹிஸ்புல்லாவின் முக்கிய இரண்டாம் கட்ட தலைவருமான ‘ஃபவுத் சுக்கர்’ படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வாறு, சர்வதேச சட்டங்களுக்கு எதிராக ஜூலை 30-ல் ஹிஸ்புல்லா அமைப்பின் ‘ஃபவுத் சுக்கர்’ மற்றும் ஜுலை 31-ல் பாலஸ்தீனிய அமைப்பின் தலைவர் ‘இஸ்மாயில் ஹனியே’ ஆகியோர் மீது தொடுத்த அடுத்தடுத்த தாக்குதல்கள், இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், எரிந்து கொண்டிருக்கும் மேற்காசிய பிராந்தியத்தின் எதிர்காலத்தை மேலும் கேள்விக்குள்ளாக்கியிருகிறது. இஸ்ரேலின் இத்தகைய சட்டவிரோத தாக்குதல்கள், அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டணி சக்திகளின் ஆதரவுடன் முன்னகர்த்தப்படுகிறது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஜூலை, 24-ல் அமெரிக்க பயணம் மேற்கொண்டு, அமெரிக்க ஆளும் வர்க்கத் தலைவர்களை சந்தித்து வந்த பிறகே, மிக விரைவில் நிகழ்ந்துள்ள இந்த தாக்குதல்கள் அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டணி நாடுகளின் போர்வெறி நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. உலகெங்கிலும் போரை விரிவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. தான் இழந்து வரும் வல்லாதிக்கத் தகுதியை நிலைநிறுத்த அமெரிக்க போர் வெறியர்கள் எடுக்கும் மிக மோசமான அபாய முடிவுகளின் ஒரு பகுதியாக இந்த திட்டம் முன்வைக்கப் பட்டிருக்கிறது.
இனப்படுகொலையை நிறுத்தவும், மேற்காசியாவின் பாதுகாப்பை நிலை நிறுத்தவும் ஹிஸ்புல்லா, அன்சரல்லா போன்ற அமைப்புகள் எடுத்த முயற்சிகள் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய சக்திகளின் இத்தகைய ஆதிக்க சூழ்ச்சியால் மேற்காசியா முழுவதும் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் ’அல்ஜீரியா’ கொண்டுவந்த அவசர கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தில் ரஷ்யாவும், சீனாவும் இஸ்ரேலின் இந்த பொறுப்பற்ற சர்வதேச விதிமீறல் நடவடிக்கையை கண்டனம் செய்துள்ளன. ஈரான் அவைக்கான தூதுவர் இஸ்ரேலின் நடவடிக்கை ஒரு போர் தொடுக்கும் நிகழ்வு, இதற்கான தகுந்த பதிலடியை ஈரான் கொடுக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரானின் பாதுகாப்பு அவை அவசரமாக கூடிய பிறகு ஈரானின் தலைவர் ‘அயோதொல்லா சையத் அலி கமெனி’ இஸ்ரேல் மீதான நேரடி பதிலடி தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மேற்காசிய போர் விரிவாக்கம் என்பது ஏகாதிபத்திய சக்திகளின் சூழ்ச்சியால் தவிர்க்க முடியாத நிலை நோக்கி நகர்ந்து விட்டது என்றே கூறவேண்டும்.
அமைதி பேச்சுவார்த்தையை முறிக்கும் முயற்சி:
வலதுசாரி அரசாங்கத்தின் பாதுகாப்பு, உளவு நிறுவன கட்டமைப்பு தோல்விக்கான பொறுப்புக்கூறல், ஊழல் குற்றச்சாட்டு வழக்கு எனப் பல நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நெதன்யாகு தன் சுய லாபத்திற்காக போரை விரிவாக்கம் செய்ய முனைவது தெளிவாக விளங்குகிறது. அதன் ஒரு பகுதியாக இஸ்மாயில் ஹனியே அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் தலைவர் என்பதால் மட்டுமே இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை நடைபெறவில்லை, அமைதி பேச்சு வார்த்தையின் ஹமாஸ் தரப்பின் தலைமைப் பிரதிநிதியாக இருந்ததே இவரின் மீதான தாக்குதலுக்குக் காரணம். அமைதி பேச்சுவார்த்தையை முறிக்க நெதன்யாகு எடுத்த பல முயற்சிகளின் இறுதி வடிவம் ஹனியே அவர்களின் படுகொலையில் முடிந்திருக்கிறது.
இது இஸ்ரேல் அரசாங்கம் காலம்காலமாக பின்பற்றும் நடைமுறை. கடந்த இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து ஆனதில் பெரும் பங்கு வகித்தவர் ஹமாஸின் ’சலே அரோரி’. ஆகவே, அவர் லெபனானில் பெய்ரூட் நகரில் வைத்து அவருடைய வீட்டில் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அமைதி பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்தும் ’கத்தார்’ அரசுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. அதன் உச்சமாக கத்தார் வெளியுறவுத்துறை வெளிப்படையாக தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து ஹமாஸ் தலைமைக்கு புகலிடம் கொடுப்பதை நிறுத்தி வெளியேற்றுமாறு நெருக்கடி தரபட்டது. அது நிறைவேறாமல் போகவே, இறுதியாக கத்தாரின் செய்தி நிறுவனமான ’அல் ஜசீரா நிறுவனம்’ இஸ்ரேலில் தடை செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் உடைமைகள் கையகப்படுத்தப்பட்டன.
இந்த ஒட்டு மொத்த நடவடிக்கை, நடந்தேறிய படுகொலைகள் அனைத்தும் கூறுவது, சமாதான பேச்சுவார்த்தை நடப்பதற்கான வழிகளை முற்றிலுமாக அடைத்து முழுமையான போரை எந்தவித தடையும் இல்லாமல் அரங்கேற்றுவதற்கே என்பது தெளிவாக விளங்குகிறது.
அமெரிக்கா எனும் அழிவு சக்தி:
பூகோள அரசியலின் மிகமுக்கியமான நிகழ்வாக சீனா – ரஷ்யாவின் முயற்சியில் பாலஸ்தீன விடுதலை போராட்ட அமைப்புகளுக்கு இடையிலான புரிந்துணர்வாக அழைந்த “பீஜிங் பிரகடனம்”, அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் படியாக அமைந்தது.
இதனை சாதித்ததில் ஹனியேவின் பங்கு மிக முக்கியமானதாகும். இஸ்மாயில் ஹனியே சர்வதேச நாடுகளின் உறவுகளை பேணும் ஒரு சிறந்த இராஜதந்திரியாக விளங்கினார் என்பதும், சீனா, ரஷ்யா, ஈரான் என பண்முனை உலக ஒழுங்கு திட்டத்தை முன்னெடுக்கும் நாடுகளின் நன்மதிப்பை பெற்றவராக திகழ்ந்தார் என்பதும், அவரைப் படுகொலை செய்யத் தூண்டிய காரணிகளாக அமைந்துள்ளன.
‘திம்பு உடன்படிக்கை’ ஈழத்தமிழ் விடுதலைப் போராட்ட இயக்கங்களை இணைத்த போது, சகோதர யுத்தம் வல்லாதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டது. வரலாறு நெடுகிலும் அமைதிக்கான சூழல் வரும்போதெல்லாம் ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகள் கட்டவிழ்த்து விடப்படும், அவ்வாறே இந்த படுகொலையும் நிகழ்ந்துள்ளது.
அரசியல் படுகொலைகளின் நோக்கம்:
உலகில் சமாதானத்தை விரும்பாத ஆதிக்க சக்திகளின் ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு சூழ்ச்சிகரமான வடிவமே அரசியல் படுகொலைகள். இது ஒரு வழமையான நீண்ட கால செயற்திட்டமாக அமெரிக்க உளவு நிறுவன கைபாவைகளால் தசாப்தங்களாக இடம்பெறுகிறது. போராடும் மக்கள் அமைப்புகளுக்கு எதிராக அரசாங்க உளவு நிறுவனங்கள் இத்தகைய மனித உரிமைக்கு விரோதமான நடைமுறையை மறைமுகமாக செய்வது தொடர்கிறது.
உதாரணமாக ”இலங்கை சமாதான உடன்படிக்கை காலகட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வெற்றிகரமான திசையை நோக்கி பயணித்த போது, புலிகளின் அரசியற் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் இலங்கை சிங்கள அரசால் குண்டுவீசி படுகொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்தும் சமாதான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட நிலையில், புலிகளை பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேற்ற, அமெரிக்கா செய்த சூழ்ச்சியின் விளைவாக பேச்சுவார்த்தை முடிவுற்று இனப்படுகொலை போர் தமிழர்கள் மீது ஏவப்பட்டது” என்பது வரலாறு.
இந்த நீண்ட கால செயற்திட்ட நடைமுறையின் பலனாக அவர்கள் காண்பது, ஒரு இயக்கத்தின் அல்லது நாட்டின் தலைமையை கொலை செய்வதன் மூலம் அந்த அமைப்பின் மனவலிமையை குறைப்பது, இயக்கத்தை சிதைப்பது, மக்களையும், இயக்க உறுப்பினர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி இயக்கத்திற்கான ஆதரவை குறைப்பது, அதன் மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது. பல இடங்களில் இந்த வியூகம் தோல்வியையே அடைந்துள்ளது. ஒரு சில இடங்களில் வெற்றியும் அடைந்துள்ளது.
குறிப்பாக பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஈராக், ஏமன், லெபனான் போன்ற பகுதிகளில் இந்த செயற்திட்டம் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளது.
லத்தின் அமெரிக்க நாடுகள் ஆப்பிரிக்கா, ஈழம் போன்ற பகுதிகளில் கணிசமான வெற்றியை கொடுத்துள்ளது.
இனப்படுகொலையை எதிர்த்து நின்று போராடும் பாலஸ்தீன மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாக ஹனியேவின் வீரமரணம் இடம்பெற்று இருந்தாலும், அவர்களின் 75 ஆண்டு கால போராட்ட வரலாறைக் காணும் போது அவர்களின் மனவலிமை எத்தகைய கடினங்களையும் மீறி உயர்ந்து நிற்கும் என்பதே நிதர்சனம்.
யாசர் அராஃபத், ஹமாஸின் நிறுவன தலைவர் யாசின், என பல விடுதலை போராட்ட தலைவர்கள் ஆக்கிரமிப்பு ஆதிக்க படைகளால் சூழ்ச்சிகரமாக வீழ்த்தப் பட்டிருக்கிறார்கள், ஆனாலும் அடுத்தடுத்த தலைமுறை தலைவர்களை ஈன்றெடுத்த மண் பாலஸ்தீனம். PFLP, FATAH, PLO, HAMAS என பல இயக்கங்களை ஈன்றெடுத்து போராட்டத்தை முன்னோக்கி நகர்த்திய பாலஸ்தீனர்கள் வரலாறு உலகின் உரிமையிழந்த மக்களின் புரட்சிகர சிந்தனைக்கான திசைகாட்டி.
வெல்லட்டும் பாலஸ்தீனம்!