அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டிய கல்வி நிறுவனங்களில் தன்னம்பிக்கை சொற்பொழிவாளர்கள் என்கிற பெயரில் ஆர்.எஸ்.எஸ் நபர்கள் ஊடுருவதை சமீபத்தில் நடந்த நிகழ்வு எடுத்துக் காட்டியிருக்கிறது. மாணவர்களிடம் சுயமரியாதை, பகுத்தறிவு, துணிச்சல் போன்றவற்றை வளர்க்க வேண்டிய பள்ளிகளில், மூடத்தனங்களை பரப்பும் மோசடிப் பேர்வழிகள் இந்த முகமூடியுடன் நுழைகிறார்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்களை சமத்துவம் நோக்கி முன்னேற விடாமல், முற்பிறவி, பாவம், புண்ணியம், மந்திரம் முதலான புரட்டுகளை இன்னமும் பரப்பிக் கொண்டிருப்பவை ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அமைப்புகள். இந்த அமைப்புகள், தங்களின் அடையாளத்தோடு வராமல், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் என்ற பெயரில் தங்கள் சிந்தாத்தத்தை சேர்ந்த பலரை களமிறக்கி விட்டிருக்கிறார்கள். அங்கங்கு ஆன்மீக வகுப்புகள் வகுப்புகள் முளைப்பதே இதற்கு சிறந்த உதாரணம். மகாவிஷ்ணு என்ற நபரால் நடத்தப்படும் ’பரம்பொருள் பவுண்டேஷன்’ என்றும் நிறுவனம் இதற்கு தகுந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் மகாவிஷ்ணு என்னும் இந்த நபர் தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்கிச் சென்று பேசியிருக்கிறார். அவரிடம் கூட அந்த நபர் தன்னம்பிக்கை பேச்சாளர் போல பேசவில்லை என்பது காணொளி மூலம் தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் அந்த நபருக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள். ஆசிரியர்கள், மாணவர்கள் அளித்த பலமான வரவேற்புடன் வந்து அந்த நபரும் பேசியிருக்கிறார். தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக அல்லாமல், ஆன்மீக வகுப்பாக நடந்த அந்த சொற்பொழிவில், மறுபிறவி குறித்த கதைகள், பாவ புண்ணியம், மந்திரக் கதைகள், குருகுலங்கள் என ஆதாரமற்ற புரட்டுகளை பேசியபடி இருந்தார்.
அவற்றை ஆசிரியர்களும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்த நிலையில்தான், மாற்றுத் திறனாளியான அப்பள்ளியின் தமிழ் ஆசிரியரான சங்கர் என்பவர் இடைமறித்திருக்கிறார். ‘முற்பிறவியில் செய்த பாவத்திற்கேற்பவே இப்பிறவியில் பிறப்பு என்று பேசுவது, தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சா, இவற்றை இங்கு பேச அனுமதிக்க மாட்டேன்’ என்று சுயமரியாதை உடையவராய் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் தமிழ் ஆசிரியர் சங்கரையே அந்த நபர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். தங்கள் பள்ளி ஆசிரியரை மிரட்டியதை அங்குள்ள ஆசிரியர்கள் எந்த சலனமுமற்று என்பதோடு, சிலர் அவரின் கோவத்தை தணிக்கும் வகையில் சங்கரைக் கட்டுப்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தும் காணொளியாக வெளிவந்த நிலையில்தான், சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு எழும்பியது. மாணவிகளிடம் மூட நம்பிக்கையை விதைக்கும் வகையில் பேசியதற்கு அனுமதி கொடுத்தது யாரென்கிற கேள்விகள் எழும்பியது. இந்த மகாவிஷ்ணு என்னும் நபர் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இருக்கிறார். அதற்குப் பின்னர் ஒரு படம் தயாரித்திருக்கிறார். நடிகராக நடித்திருக்கிறார். எதுவும் கைக்கொடுக்காத நிலையில் யு-டியூப் மூலம் பாலியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து பேசி பிரபலமாகியுள்ளார். இப்படிப்பட்ட நபரையே தன்னம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவாளராக அழைத்திருக்கின்றனர்.
அதன் பின்னர், ’பரம்பொருள் பவுண்டேஷன்’ என்னும் நிறுவனத்தை நிறுவி ஆன்மீக வகுப்புகள் எடுப்பதாக பணம் ஈட்டியுள்ளார். எந்த ஆதாரமும் இல்லாமல், அறிவியல் தன்மையற்ற போலிக் கதைகளை புனைவாற்றலுடன் பேசக் கூடிய திறனை மட்டுமே வளர்த்துக் கொண்டு, வெளிநாடுகளிலும் சென்று ஆன்மீக வகுப்புகள் எடுக்குமளவிற்கு, மூடநம்பிக்கைகள் பரப்பும் சொற்பொழிவாளராக வலம் வந்திருக்கிறார்.
வளரிளம் பருவத்தில் உள்ள ஆயிரம் மாணவியரிடம் போலியான கற்பனைக் கதைகளைப் பேசி, உண்மையைப் போல பதிய வைக்கிறார். ’அந்த வயதுக்கே உரிய வகையில் செய்யும் சிறிய சிறிய தவறுகளை எல்லாம் பெருங்குற்றங்களைப் போல கட்டமைக்கும் பேச்சினால், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை குற்றவுணர்ச்சிக்குள் தள்ளும் வேலையை செய்திருக்கிறார். குற்றமே செய்யாதவர்களை குற்றவுணர்ச்சிக்கு தள்ளியதன் வாயிலாக மாணவிகளை கண்ணீர் விட்டு அழ வைத்திருக்கிறார்’. பெரும்பான்மையான ஆன்மீக சொற்பொழிவாளர்கள் செய்யும் அதே தந்திரங்களை இவரும் செய்துள்ளார்.
தன்னம்பிக்கை என்பது முறையான பயிற்சி மூலம் பெறுவதாகவே இருக்க முடியும். மூளைக்கான பயிற்சியால் அடைய முடியும் என்பது மனநல நிபுணர்களின் கருத்து. இந்த வகையான ஆன்மீக உரைகள் எந்த பிரச்சனைக்கும் கேள்வி எழுப்பாமல், எதையும் ஏற்றுக் கொண்டு அடிமைத்தனமாக வளரும் சமூகத்தையே உருவாக்கும், ஒரு இக்கட்டான சூழலில் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் போது, அறிவுப்பூர்வமாக அதனை அணுக முடியாமல், குற்றவுணர்ச்சியால் தவறான முடிவுகளைத் தேடும் உணர்வு தூண்டப்படும் என்று, இந்த ஆன்மீக உரைகளின் மூலம் ஏற்படும் பாதிப்பை விளக்குகின்றனர். இத்தகைய இளம் பருவத்தில் இந்த மாதிரியான உரைகள் அவர்களை ஆபத்தில் தள்ளுவதற்கான அறிகுறி என்னும் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.
மேலும், இந்த நபர் அந்தப் பள்ளிக்கு ஒரு இலட்சம் நன்கொடை அளித்ததும் தெரியவந்துள்ளது. நன்கொடை என்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனமுவந்து கொடுக்கப்பட வேண்டியது. ஆனால் இவர் அளித்த நன்கொடையை, ஆன்மீகத் தொழில் வளர்ச்சிக்கான முதலீடாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இவரின் ஆன்மீக பயிற்சிக்கு ஆட்கள் பிடிக்கும் பின்னணியும் இதில் மறைந்திருக்கும் என்கிற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் முதலில் இலவசமான பயிற்சி என ஆரம்பித்து, படிப்படியாக ஆன்மீகம் சார்ந்த பொருட்கள் மற்றும் லேகியம் முதலான மருந்துகள் விற்பனை, ஆன்மீக வகுப்பு என பல்லாயிரங்களை கொள்ளையடிக்கும் தொழில் இது. ஜக்கி வாசுதேவ், பதஞ்சலியிலிருந்து நித்யானந்தா வரை இங்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இதையேதான் இந்த நபரும் செய்திருக்கிறார்.
இது போன்ற மூடத்தனமான சொற்பொழிவுகளில், இந்த ஒரு நபரின் பின்னணி மட்டுமே இப்போது தெரிய வந்துள்ளது. இன்னும் எத்தனை பள்ளிகளில் இப்படியாக தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற பெயரில் மூடத்தனங்கள் புகுத்தப்படுகிறது என்கிற சந்தேகமும் வலுவாக எழும்புகிறது.
இல்லம் தேடி கல்வி என்கிற திட்டத்தை தமிழ்நாடு அரசு ஆரம்பிக்கும் போது ’பள்ளி மாணவர்களிடம், இப்படியான தன்னார்வலர்களாக இந்துத்துவ, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் ஊடுருவுவார்கள் என்றே மே 17 இயக்கம் எச்சரித்தது’.
இன்று இந்த பிரச்சனை சமூக வலைதளங்களில் கண்டனமாக எழுந்த பின்பே, நடவடிக்கை வேகமாக எடுக்கப்பட்டிருக்கிறது. கல்வி அமைச்சர் அடுத்த நாளே அந்தப் பள்ளிக்கு சென்று பேசியதும், தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ததும், மகாவிஷ்ணு என்னும் அந்த நபரை கைது செய்ததும் என வேகம் பெற்றது.
இப்பள்ளியில் இந்த நபர் உரையாற்ற வந்ததற்கும், பள்ளி மேலாண்மைக் குழுவின் வாட்ஸ் அப் குழுவில் புதிதாக இணைந்த மூத்த மாணவி ஒருவர் கொடுத்த பரிந்துரை மூலமே நடைபெற்றிருப்பதாக சொல்கிறார்கள். ஓராயிரம் மாணவிகளை தன்னம்பிக்கை ஊட்டுவதற்கு அழைக்கும் நபருக்கு எவரோ ஒருவர் செய்யும் பரிந்துரையே போதும் என்கிற அளவிற்கு பள்ளி நிர்வாகமும், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளும் நினைக்கிறார்கள் என்றால், கல்வித் துறையின் அதிகாரிகளாக ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் ஊடுருவி இருப்பதையே காட்டுகிறது.
மேலும் இன்னொரு சம்பவமாக, ஆசிரியர் தினத்தன்று, ஆசிரியர்களுக்கு கால் கழுவும் நிகழ்வும் ஒரு தனியார் பள்ளியில் நடந்திருக்கிறது. ’பாடங்களை கற்றுத் தரும் ஆசிரியர்கள் என்பதாலேயே புனிதர்கள் என்னும் ஒரு கட்டமைப்பு உருவாக்கப் பட்டிருக்கிறது’. குடும்ப வாழ்க்கையில் மூடத்தனம், அடிமைத்தனம் என்பதை பின்பற்றுபவர்களே ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அதற்கு தகுந்த உதாரணமாக மகாவிஷ்ணு என்னும் நபர் அறிவியலற்ற கதைகளை சொல்லும் போது அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த அவர்களின் நடத்தையையே சுட்டிக்காட்டலாம்.
ஆசிரியர்களின் அறிவு இன்றைய காலகட்டத்தில், பாடங்கள் சார்ந்து மட்டுமே இருக்கிறதே தவிர, சமூகநீதி குறித்த புரிதலோ, பகுத்தறிவு குறித்த செயல்பாடோ இல்லாமலிருக்கிறது. மாணவ சமூகத்தினை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் இந்த அடிமைத்தனத்தினை ஊக்குவிக்க மாட்டார்கள். இந்த அடிமைத்தன செயல்பாடு நீண்ட காலமாக தனியார் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. இதனை நிறுத்த வேண்டிய செயல்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதற்கு முன்பே, கோவையில் உள்ள அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதனைக் கண்டித்து கோவை. ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் போராட்டங்கள் நடந்தது. அதைப் போல, சென்னை வேளச்சேரி அருகில் உள்ள பள்ளியிலும் நடப்பதாக சர்ச்சைகள் எழுந்தது. முற்போக்கு அமைப்புகள் கண்டறிந்து வெளிப்படுத்தினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற அளவுக்கே, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை செயல்பாடு மந்தமாக இருக்கிறதா அல்லது இவர்களே அனுமதித்து தான் நடக்கிறதா என்கிற கேள்விகள் இவைகளின் மூலம் எழும்புகிறது.
இன்னும் தன்னார்வலர்கள் போர்வையில் சென்று, எத்தனைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் விதமாக பாவம் புண்ணியம் என்று விஷமத்தனமான பேசி குற்ற உணர்வுக்கு உள்ளாக்கி இருக்கிறார்களோ என்பது தெரியவில்லை. பொதுவெளிக்கு வந்து பலருக்கும் தெரிய வந்தால் மட்டுமே, நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற நிலைதான் நீடிக்குமென்றால், திமுக அரசு திராவிட மாடல் அரசு என்று பேசுவது அர்த்த்தமற்றது.
பள்ளி, கல்லூரிகளில் முன்வாசல் வழியாக வரும் இதைப் போன்ற தன்னம்பிக்கை சொற்பொழிவாளர்கள் அனுப்பி விட்டு, பின்வாசல் வழியாக இந்துத்துவ அமைப்புகள் பள்ளிக்கல்வித் துறையை கைப்பற்றும் ஒன்றாகவே இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் மகாவிஷ்ணு என்னும் அந்த நபருக்கு ஆதரவாக இந்துத்துவ அமைப்புகளின் குரல் பலமாக எழும்பியிருப்பதே இதற்கு சான்று. பள்ளிக்கல்வித் துறையில் சிறப்பான கவனம் எடுக்கத் தவறினால், வளர்ந்த தமிழ்நாட்டை இந்துத்துத்துவ, ஆர்.எஸ்.எஸ் நபர்கள் சுலபமாக கைப்பற்றி விடும் அவலம் விரைவில் நடந்து விடும்.
அறிவியல் பூர்வமான சிந்தனை, பகுத்தறிவு, துணிச்சல், மூடத்தனமற்ற இளைய சமூகத்தைப் படைக்க, முற்போக்கு அமைப்புகள், சனநாயக சக்திகள் இணைந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களை சென்று சேரக்கூடிய வழிகளைக் குறித்து சிந்தித்து, செயல்பட வேண்டிய வேலைகள் இன்னும் அதிகமாக இருப்பதையே இந்த நிகழ்வு சொல்லிச் சென்றிருக்கிறது.