ஒன்றிய பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கை மற்றும் பி.எம். ஸ்ரீ (PM-Shree) தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாத காரணத்திற்காக, பள்ளிக்கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமான, ‘சமக்ரா சிஷா அபியான்‘ (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதியை விடுவிக்க மோடி அரசு மறுத்து விட்டது. அனைத்து மாநிலக் கல்வித் துறைக்கும் பொதுவாக பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியை, தமிழ்நாட்டிற்கு தராமல் நிறுத்தி வைத்திருப்பதால் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
மோடியால் 2022-ஆல் தொடங்கப்பட்ட ’பிரதான் மந்திரி பள்ளிகள் ரைசிங் இந்தியா’ (PM-SHRI), தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ அடிப்படையாகக் கொண்டது. இதனை செயல்படுத்துவதை நிரூபிக்க, குறைந்தது 14,500 அரசுப் பள்ளிகளை “முன்மாதிரி” நிறுவனங்களாக மாற்றும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 60% ஒன்றிய அரசும், 40% மாநில அரசும் பங்களிக்கும்.
இந்த பி.எம். ஸ்ரீ திட்டம் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் செயல்படுத்தப்படுவதால், இதனை பங்கேற்க மறுத்ததால், தில்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் பணம் செலுத்துவதை நிறுத்தியுள்ளது.
நிதி மறுக்கப்பட்ட மாநிலங்கள்
- டெல்லி ரூ.330 கோடி
- பஞ்சாப் ரூ.515 கோடி
- மேற்கு வங்கம் ரூ.1,000 கோடி
- தமிழ்நாடு ரூ.2,152 கோடி
தமிழ்நாட்டில் மறுக்கப்பட்ட நிதி விவரங்கள்:
- 2024-25-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.3,586 கோடி கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- ஒன்றிய அரசின் பங்கு ரூ.2,152 கோடி. இதற்கான முன்மொழிவுகள் கடந்த ஏப்ரல் 2024-ல் சமர்ப்பிக்கப்பட்டது.
- முதல் தவணையான ரூ.573 கோடி விடுவிக்கவில்லை.
- முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியை ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.
மக்கள் கட்டும் வரிப்பணத்தில், கல்வி நிதிக்குரியதை அளிக்காமல் மறுப்பது அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது, மாநில உரிமைகளுக்கு எதிரானது. தமிழ்நாட்டிற்கு ஜூன் 2024-ல் வழங்கியிருக்க வேண்டிய முதல் தவணை நிதி ரூ. 573 கோடி தாமதம் ஆனதால், ‘வட்டார வள மைய பயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 15,000 ஆசிரியர்களுக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, மேலும், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களுக்கான கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், ஆசிரியர் பயிற்சி, மாணவிகளுக்குத் தற்காப்புப் பயிற்சி ஆகியவையும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது‘. கடந்த சில மாதங்களாக மாநில அரசின் நிதிப் பங்களிப்பின் கீழ் சமக்ர சிஷா அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்ல மீதமுள்ள மூன்று மாநிலங்கள், முந்தைய நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் மற்றும் ஜனவரி-மார்ச் காலாண்டுகளுக்கான சமக்ர சிஷா அபியான் நிதியின் மூன்றாவது மற்றும் நான்காவது தவணைகளுக்காகவும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான முதல் தவணைக்காகவும் காத்திருக்கின்றன. ஆக கடந்த ஓராண்டாக நிதி வழங்கவில்லை. ஒன்றிய அமைச்சகத்தின் அதிகாரிகள் PM-SHRI திட்டத்தை செயல்படுத்தாமல், சமக்ர சிஷா அபியானின் கீழ் மாநிலங்கள் தொடர்ந்து நிதியைப் பெற முடியாது என்கிறார்கள்.
பி.எம் ஸ்ரீ-யால் தற்போது இந்தியா முழுவதும் 10,077 பள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன, அவற்றில் 839 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் 599 நவோதயா பள்ளிகள், இவை இரண்டும் ஒன்றிய அரசால் நடத்தப்படுகின்றன. மீதமுள்ள 8,639 பள்ளிகள் மாநில அல்லது உள்ளூர் அரசாங்கங்களால் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் 37000 மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 1400 பள்ளிகள் மட்டுமே பி.எம். ஸ்ரீ பள்ளிகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 3% குறைவான பள்ளிகளை நிறுவ தேசியக்கல்விக் கொள்கையை மாநில அரசிடம் திணிக்கிறது, நிதியையும் தர மறுக்கிறது. எனினும் ஒன்றிய அரசாங்கம் புதிய பள்ளிகளைக் கூட உருவாக்கவில்லை, ஏற்கனவே ’நன்கு நிறுவப்பட்ட பள்ளிகளை மட்டுமே புதுப்பிக்கிறார்கள்’. இதன் மூலம் தமிழ்நாட்டின் பள்ளி கட்டமைப்பை பயன்படுத்திக் கொண்டு, ஒன்றிய அரசின் கல்வியை நுழைக்கும் திட்டம். அதிலும் 40% மாநில அரசு பங்களிக்க வேண்டும். இது பி.எம்.ஶ்ரீ என்று பலகையில் எழுதுவதன் மூலம் மாநிலத்தின் கல்வித் துறையில் நுழைவதே முதன்மை நோக்கமாகத் தோன்றுகிறது என மாநில அரசுகள் கூறுகின்றன.
உத்தர பிரதேசத்தில் அதிக பி.எம் ஸ்ரீ பள்ளிகள் (1,865) உள்ளன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (910) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (900) உள்ளன. பாஜக அல்லாத மாநிலங்களான பஞ்சாப், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் மற்றும் சமீபத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்த ஒடிசா ஆகிய மாநிலங்களில் கூட அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
பி.எம்.ஸ்ரீ பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதல்களை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இது தவித்தது, ஒப்புதல் பெறுவதற்காக ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அனுப்பியது. ஆனால் இதை மோடி அரசு ஏற்க மறுத்துள்ளது.
ஒன்றிய பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது, சமூகநீதி-சமத்துவம்-சமவாய்ப்புக்கு எதிரானதாகவும், அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கக்கூடிய மாநில அரசின் உரிமைகளுக்கும், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கும் எதிரானதாக இருக்கிறது. மும்மொழி கொள்கை, ஆறாம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை புகுத்துதல், மூன்று-ஐந்து-எட்டு ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மற்றும் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களின் உரிமைகளை சிதைத்து விட்டு, அனைத்து உயர்கல்வி நிலையங்களுக்கும் இந்திய அளவில் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கும் முறைகள் போன்றவற்றை நம்மிடம் திணிக்கிறது.
சமக்ர சிஷா அபியான் (SSA) மற்றும் பி.எம்.ஸ்ரீ பள்ளி ஆகியவை ஒன்றிய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்கள். சமக்ர சிஷா அபியான் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் கல்வி நிதியை பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய திட்டம். பி.எம். ஸ்ரீ பள்ளி, என்பது அப்பள்ளியை ஏற்க வேண்டுமா, வேண்டாமா என்பது மாநில அரசின் விருப்பம். இருப்பினும் பி.எம். ஸ்ரீ ஏற்காத வரை, கல்வி நிதியை நிறுத்தி வைத்திருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதி குறித்து இதுவரை, எதுவும் பேசாத ஆளுநர் ஆர்.என். ரவி, கல்வி நிலையங்களில் சென்று, தேசிய கல்விக் கொள்கையை மேலோங்கியும், தமிழ்நாட்டு மாநிலக் கல்விக் கொள்கையை மலினப்படுத்தி பேசுவதும் வாடிக்கையாக்க கொண்டிருக்கிறார். உதாரணத்திற்கு உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை இந்திய சராசரி 25% என்றால் தமிழ்நாடு கூடுதலாக 25% என அதிகமாக 50% – ஐயும் தாண்டியிருக்கிறது. இருப்பினும் இந்துத்துவ நபராக, ஒன்றிய அரசின் தரகராக, சனாதன தூதுவராக இங்கு வந்து நம் பணத்தில் சுகமாக அமர்ந்து கொண்டு நம் மாநிலக் கல்வியை விமர்சிக்கிறார்.
ஒன்றிய அரசு, மாநிலங்களிடமிருந்து பெறும் நிதியை பகிர்ந்து அளிப்பதே அதன் வேலை. ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியில் வஞ்சகம் செய்வதில் முனைப்புடன் செயல்படுகிறார் என்பதற்கு, பேரிடர் நிதி, மெட்ரோ நிதி, ரயில்வே நிதி என கல்வி நிதி வரை எப்போதும் நிதிக் குறைப்பு அல்லது நிதி மறுப்பாகவே பட்ஜெட் தயாரிப்பதே உதாரணமாக இருக்கிறது.
ஒன்றிய அரசிற்கு தனித்த நிதி வரவு என்ற ஒன்றும் இல்லை. தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் வழங்கும் வரிகளின் மூலமே நிதியைப் பெறுகிறது. அந்த நிதியை கல்வி முதற்கொண்டான மற்ற திட்டங்களுக்கும் செலவழிக்க பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட, இந்தியாவிற்கு அதிக நிதி வருவாய் அளிக்கும் மாநிலமாகும். ஆனால் பாஜக தமிழ்நாட்டையே அதிகமாக வஞ்சிக்கிறது.
இந்திய அளவில் கல்வித் துறையில் பல்வேறு குறியீடுகளில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இதெல்லாம் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திற்கு உரிமை உடையதாய் மாற்றி, அதில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது நீதிக்கட்சி ஆட்சி.
அண்ணா ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின், தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழி கொள்கை தான் இருக்கும் என்று சட்டமாக்கினார். தமிழ் மொழி கல்வி மேலோங்கியது. உலக கல்வி ஆங்கில வழியில் பெறவும் முடிந்தது. திராவிட ஆட்சி காலத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொண்டது. தொடக்க பள்ளியில் இருந்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி என்று கல்வியின் தரம் உயர்ந்தது. தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு கல்வி வளர்ச்சியே முதன்மை காரணமாக இருக்கிறது.
இந்தக் கல்வி வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டு, தன்னுடைய இந்துத்துவ சித்தாந்தத்தை புகுத்த வேண்டும் என்பதே பாஜக-வின் நோக்கமாக இருக்கிறது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதான் சனாதன சித்தாந்தம். நூற்றாண்டுகள் முன்பு வரை சனாதன கருத்தியல்களால் இந்த நிலையை தக்க வைத்திருந்தார்கள். இதனை நொறுக்கி நீதிக்கட்சியிலிருந்து திராவிட கட்சிகள் வரை தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை சாத்தியமாக்கியது.
இப்போது தமிழ்நாட்டின் கல்வியை தன் வயப்படுத்த துடிப்பதன் வெளிப்பாடே, பி.எம். ஸ்ரீ பள்ளி, தேசிய கல்விக் கொள்கை என்று வரிசையாக கொண்டு வரும் கல்வி நாசகார திட்டங்கள். இவற்றை அனுமதிக்க முடியாதென மறுத்ததும் கல்வி நிதியை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒன்றிய பாஜக அரசின் இந்த மிரட்டல் தொனியை, மக்கள் உணர்ந்து கொண்டு குரல் கொடுக்க அணியமாக வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றும் களங்களை கட்டி எழுப்ப வேண்டும்.