சிதம்பரம் நடராசர் கோயிலை அபகரித்து வைத்திருக்கும் தீட்சிதர்கள் என்ற பார்ப்பனர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார். நீதிபதியாகிய தனக்கே அங்கு அவமதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராசர் கோயில் சைவ வழிபாட்டில் மறுக்கமுடியாத இடத்தை பெற்றுள்ளது. ‘தில்லை’ என்ற பெயரால் தமிழ் பக்தி இலக்கியங்களில் குறிப்பிடப்படும் சிதம்பரம் பல நாயன்மார்களால் பாடப்பட்ட ஊராக உள்ளது. நடராசர் கோயிலின் சிவன் சிலையும் பரதம் ஆடும் நிலையில் இருப்பதால் பரதக் கலைஞர்களின் அரங்கேற்ற நிகழ்வுகள் நடைபெறுவதும், இது தொடர்பான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகவும் இருக்கிறது. இதனாலேயே அக்கோயிலின் சிலைக்கு ‘அம்பலத்தில் ஆடும் தில்லை நடராசர்’ என்ற பெயரும் தரப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்புகள் ஒருபுறம் சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு ஒரு புகழை தேடித்தருகிறது என்றால் மறுபுறம் அதே பக்தி இலக்கியங்களில் ‘தில்லை வாழ் அந்தணர்’ என்றும் ‘தீட்சிதர்கள்’ என்று தம்மைக் கூறிக் கொள்ளும் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர் நடராசர் கோயில் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கூறிக் கொண்டு பல்லாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் பல்வேறு சர்ச்சைகளில் தீட்சிதர்கள்:
- கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் தனியாக பணம் வசூலிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் மிக சர்ச்சையான பின் தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு விசாரணை செய்தது. பின்னர், கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அறிவித்தது.
- மேலும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு எழுப்பியுள்ள நிலையில், ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவுள்ளது.
- கோயிலுக்கு வழிபட வந்த பெண் பக்தரை சாதி பெயர் சொல்லி தீட்சிதர்கள் திட்டியுள்ளனர். எனவே அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்ததில் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- 2021 ஆண்டில் சிதம்பரம் தீட்சிதர்கள் 4 குழந்தை திருமணத்தை செய்து வைத்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் ஒரு குழந்தை திருமணத்தில்தான் தற்போது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள குழந்தை திருமணத்தில் விசாரணை என்னவென்று தெரியவில்லை.
- 2024, அக்டோபர் 7ந்தேதி விசிக பிரமுகரான இளையராஜா என்பவர் சாமி கும்பிட சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் தீட்சிதர்கள் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியதை படம் பிடித்துள்ளார். இதைக் கண்ட தீட்சிதர்கள், அவரின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டனர். இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின்பே தீட்சிதர்கள் வந்து அவரின் செல்போனை காவல் நிலையத்திற்கு வந்து கொடுத்து விட்டு சென்றிருக்கின்றனர்.
குறிப்பாக நடராசர் கோயிலில் ஓதுவார் என்று அழைக்கப்படும் தமிழ் பக்தி இலக்கியமான தேவாரம் பாடும் பெரியோர்களை அனுமதிக்காத போக்கு இன்றும் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் தமிழர்களின் காணிக்கையில் இயங்கும் ஒரு கோயிலில் சிவனைக் குறித்து எழுத்தப்பட்ட தமிழ் பக்தி இலக்கிய பாடல்களை பாட விடாமல் தடுக்கும் திமிர் பிடித்த போக்கை பலகாலமாக திராவிட மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் கண்டித்து போராடி வந்துள்ளனர்.
இந்நிலையில் தீட்சித பார்ப்பனர்களில் இருந்தே நடராஜன் என்று ஒருவர் பக்தர்களை கனகசபையில் ஏற செய்து வழிபட வைத்திருக்கிறார். இதற்காக அவரை அவமதித்து பணி இடைநீக்கம் செய்திருந்தனர் தீட்சித பார்ப்பனர்கள். தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையோ பணி இடைநீக்கத்தை நீக்கியுள்ளது. இதை எதிர்த்து தீட்சித பார்ப்பன கும்பல் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. அங்கு இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் தண்டபாணி அவர்கள் தீட்சிதர்களை கடுமையாக கண்டித்து விமர்சித்துள்ளார்.
அவரது கண்டனத்தில் “மனக் கஷ்டத்தை போக்கிக் கொள்ளவே மக்கள் கோயிலுக்குச் செல்லும் நிலையில், அங்கு அவர்கள் அவமானப் படுத்தப்படுகிறார்கள். தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவது நல்லது அல்ல. தீட்சிதர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என்று நினைக்கிறார்கள்.” என்று கூறியுள்ளார். இது போன்ற அவமதிப்பு தனக்கே நடந்துள்ளதாக கூறியுள்ள நீதியரசர், “கோயிலுக்கு வரும் அனைவருமே சண்டைக்கு வருவதாக தீட்சிதர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். கோயிலை பொறுத்தவரை பக்தர்கள் வரும் வரைதான் அது கோயில், இல்லை எனில் அது பாழாகிவிடும். கோயிலில் காசு கொடுத்தால் தான் பூ கிடைக்கும். அது இல்லை என்றால் விபூதி கூட கிடைக்காது” என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இவ்வழக்கை திறம்பட நடத்த வேண்டும். தமிழர்களால் உருவாக்கப்பட்ட நடராசர் கோயிலை ஆரிய தீட்சித பார்ப்பனர்களிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். தீண்டத்தகாதவர் என்று சொல்லி நம் மூதாதை நந்தனாரை தீயில் தள்ளி கொலைசெய்து “திருநாளைபோவார் ஜோதியில் கலந்துவிட்டார்” என்று கூறியது மட்டுமல்லாமல், அவர் ’நடராசர் கோயிலுக்கு நுழைந்த கோபுரவாசலை அடைத்து வைத்திருக்கும் இழிவு நீக்க’ இத்தகைய வழக்குகளில் வெல்வதே சரியான செயல்திட்டமாக இருக்கும்.
இப்படி வழக்குகளில் வெல்வது தற்காலிக ஏற்பாடாக இருந்தாலும், தமிழ் பக்தி இலக்கியங்களில் குறிப்பிட்டு இருக்கிற தமிழர்களின் சொத்தான தில்லை நடராசர் கோவிலை இந்து அறநிலையத்துறையின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும், அடாவடி தீட்சதர்களை அடக்கி அதை தமிழக அரசே நடத்துவதும் தான் அடாவடி பார்ப்பனர்களை அடக்குவதற்கு இதுவே சரியான வழியாக இருக்க முடியும்.
கோயிலில் வழிபடவரும் பக்தர்களை அவமதிப்பது, கனகசபை என்ற மேடையில் ஏறி வழிபட விரும்பும் பக்தர்களை தடுப்பதும், தள்ளிவிடுவதும் என்று தொடர் வன்முறையில் ஈடுபட்டும் வருகின்றனர். மேலும் கோயில் சொத்துகளையும் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கையையும் கொள்ளையடிப்பது, கோயில் சொத்துகளுக்கு சரியாக கணக்குக் காட்டாமல் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையை ஏமாற்றுவது என்று தீட்சித பார்ப்பனர்களின் அகங்காரம் அளவுக்கு அதிகமானது. இதை கேள்வி எழுப்பினால் சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ கும்பல்கள் மிரட்டல்கள் விடுகின்றன. இதற்கெல்லாம் மேல் சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் எதையும் செய்யவில்லை என வக்கலாத்து பேச வருகிறார் ஆளுநர் ஆர். என் ரவி, மேலும் தமிழ்நாடு அரசு அவர்கள் மீது பழிவாங்கும் விதமாக நடவடிக்கை எடுக்கிறது என்கிறார்.
மேலும் இந்த பார்ப்பன கும்பல் தான் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோயில்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. எங்கே பார்ப்பனர்கள் கையில் கொடுங்கள் என்று சொன்னால் மக்கள் விழிப்படைந்து விடுவார்களோ என்றுதான், இந்து கோயில் இந்துக்களுக்கே என்று ஏதோ இத்தனை வருடங்கள் இந்து கோயிலை வேற்று மதத்திற்கு அவர்கள் பராமரிப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். ஒரு கோயிலை அபகரித்துக் கொண்டே மக்களை அடிப்பதும் அவமானப்படுத்துவதும் என்கிற வேலையை செய்கிற இந்த பார்ப்பனர்கள் கையில் ஒட்டுமொத்த கோயிலும் சென்றால் என்னவாகும் என்று மானமுள்ள பக்தர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.