கடந்த நவம்பர் 3, 2024 தேதியன்று சென்னையில் எல்லோருடைய இதயத்தையும் இருள்கவ்வ செய்த ஒரு துயரம் 16வயதே ஆன சிறுமியின் இறப்பு. அதுவும் மிகவும் கொடுமை செய்யப்பட்டு அதாவது உடலில் சிகரெட் சூடு, மார்பிலும் முதுகிலும் அயர்ன் பாக்ஸ் சூடு வைக்கப்பட்டு, இரும்பு கம்பியால் தாக்கப்பட்டுள்ளார் அந்த சிறுமி தசைநார்கள் கிழிக்கப்பட்டு, உடல் அழுகிய பிறகுதான் இந்த கொலை பற்றிய செய்தி வெளிவந்திருக்கிறது. அதில் மிகப்பெரிய அவலம் அந்த பெண் குழந்தையின் வயிற்றில் ஒரு பருக்கை சோறும் இல்லை என்ற மருத்துவ அறிக்கை. மனிதநேயமிக்க யாராலும் இதை வெறும் செய்தியாகக் கடக்கவே இயலாது.
சென்னை அமைந்தகரையில் உள்ள மேத்தா நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் முகமது நவாஸ் (35). இவரது மனைவி நஸ்ரியா(30). கடந்த ஓராண்டாக இவர்களது குழந்தையை பார்த்துக்கொள்ள தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை அழைத்து வந்து வீட்டிலேயே தங்கி பார்த்துக்கொள்ள செய்திருக்கின்றனர். தந்தையை இழந்த இச்சிறுமியை, தாயின் அரவணைப்பில் வாழ வேண்டிய இவரை 6வயது குழந்தையை பார்த்து கொள்ள பணியமர்த்தியிருக்கின்றனர். குடும்பத்தின் ஏழ்மைநிலை காரணமாக தஞ்சாவூரிலிருந்து தாயை பிரிந்து வந்து வேலை செய்த சிறுமிதான் மிகவும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆறு பேரை காவல்துறை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த படுகொலை நிகழ்வின் மருத்துவ அறிக்கையை வாசிக்கும்போது, தன் குழந்தையை விட 10வயதே மூத்த குழந்தையை இந்த அளவிற்கு கொடுமை செய்ய முடியுமா என்ற வருத்தம் மேலோங்குகிறது. மேலும் அச்சிறுமியின் இரைப்பையில் ஒரு பருக்கை சோறு கூட இல்லை எனவும் மருத்துவ அறிக்கை சொல்கிறது. அப்படியென்றால் அச்சிறுமிக்கு உணவு கொடுக்காமலேயே அடித்து சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருக்கிறாள் என்பதும் தெளிவாகிறது. அப்படி என்ன தவறு செய்துவிடப்போகிறாள் அந்த ஏழைச்சிறுமி? விளையாட்டு பிள்ளை தவறு செய்திருந்தாலும் அதை பொறுமையாக சுட்டிக்காட்டி எடுத்துச்சொல்லி இருக்கலாமே. பட்டினி போட்டு அடித்தே கொன்று இருக்கிறார்கள் என்று அறியவரும்போது மனித நேயமே மடிந்துவிட்டது போல் இருக்கிறது. இவளது உடலை பெற்று சொந்த ஊருக்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்யக்கூட வசதியில்லாத அச்சிறுமியின் தாயார் சென்னையிலேயே தன் மகளை அடக்கம் செய்திருக்கிறார்.
தனதுவீட்டில் பணி செய்ய வந்துவிட்டால் தமக்கு அடிமையாக நினைப்பது பணக்கார மனநிலை. பணிசெய்ய வருபவர்களும் மனிதர்கள்தானே. அதுவும் தாயைவிட்டு பிரித்து கூட்டிவந்த சின்னஞ்சிறு சிறுமி. ஊரிலிந்து பணிக்காக சென்னை அழைத்துவந்த சிறுமிக்கு அலைபேசி எண் கூட இல்லை என தெரிகிறது. அப்படி என்றால் அவள் தன் தாயை எப்படி தொடர்பு கொள்வாள், அக்கம் பக்க வீட்டில் கூட பேச அனுமதிக்காது வீட்டிலேயே ஏன் முடக்கி வைக்கவேண்டும்? தான் எப்படி நடத்தப்படுகிறோம் என்பதை மற்றவரிடமோ அல்லது தன் தாயிடமோ சொல்லக்கூட அனுமதிக்காத அளவிற்கு ஏன் இத்தனை கொடுமைகள்? ஏழ்மை நிலை மட்டுமே இதற்கு காரணம் என்று சொல்லி கடந்துவிடமுடியாது. ’பணியாளர் என்றால் அவர்களின் உரிமை நசுக்கப்படலாமா? அவர்களுக்கென்ற அரசின் சட்டம் என்ன? முதலில் 18வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை பணியில் அமர்த்தக்கூடாது. அப்படி அமர்த்தினால் அதுவே முதலில் சட்ட மீறல்தான், மேலும் ஏழைதானே இவர்களை என்ன வேண்டுமென்றாலும் செய்துவிடலாம் யார் கேட்க போகிறார்கள் என்ற திமிர்தான் இவ்வாறு செய்ய தைரியம் வருகிறது. சட்டங்கள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும்’.
இன்றைய காலகட்டத்தில் விலைவாசி உயர்வால் குடும்ப நிதிநிலையை உயர்த்த குடும்பத்தில் உள்ள அனைவருமே பணிக்கு செல்வது என்பது தேவையாகி இருக்கிறது. கொஞ்சம் படித்தவர்கள் ஏதாவது தொழிற்சாலைகள், கடைகள் என பணிக்கு செல்கின்றனர், கைத்தொழில் அல்லது தொழிற்கல்வி தெரிந்தவர்கள் அதன்மூலம் வருவாய் தேடிக்கொள்கின்றனர். பட்டப்படிப்பு படித்தவர்கள் அதற்கேற்ற பன்னாட்டு நிறுவனங்களிலோ அல்லது சிலர் அரசு வேலைகளிலோ சேர்ந்து பணியாற்றுகின்றனர். ஆனால் கல்விகற்கும் வாய்ப்பு பெறாத எளிய குடும்பத்து பெண்கள்தான் இவ்வாறு வீட்டு வேலைகளில் (முறைசாரா துறை) பணி செய்கின்றனர்.
இவ்வாறு வீட்டு வேலைசெய்யும் பணியாளர்களுக்கான ‘முறைசாரா துறை பணியாளர் பாதுகாப்பு சட்டம்’ 2008 இல் அங்கீகாரம் செய்யப்பட்டது. பின்னர் அது சட்டமாக்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தொழிலாளர் அமைச்சகம் வீட்டுப்பணியாளர்களுக்கான தேசிய கொள்கையை மீண்டும் 2019ல் உருவாக்கியது. இதன் மூலம் வேலைவாய்ப்பு நிறுவனங்களை ஒழுங்கு படுத்துதல், வீட்டு வேலை பணிசெய்பவர்களையும் உள்ளடக்கி அவர்களின் குறைந்தபட்ச ஊதிய உரிமை, சமூக பாதுகாப்பு, தவறான நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு வழங்குதல், சுகாதாரம் மற்றும் மகப்பேறு நலன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கைகளை சுட்டிகாட்டிய இச்சட்டமும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்பதை அறியமுடிகிறது.
தற்போது சென்னையில் வாடகை வீட்டில் குடிவரும் நபர்கள் குறித்தும் அவர்கள் ஆதார் எண் முதற்கொண்டு வீட்டின் உரிமையாளர் அந்த சுற்றுவட்டார காவல்நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும் எனும் நிலை இருக்கும் போது இதுபோன்ற முறைசாரா துறை பணிகளை மேற்கொள்ளும் பெண்களை/சிறுமியர்களை பணியமர்த்தும் வீட்டு உரிமையாளர்கள் இதே போன்று தனது பணியாளர் குறித்த விவரங்களை காவல்துறை ஏன் கேட்பதில்லை? இவர்களுக்கும் உயிர்/சமூகபாதுகாப்பு தேவைதானே. சமூகத்தில் உழைக்கும் வர்க்கம் எப்போதுமே சமூக பாதுகாப்பற்றதாகவும், சுகாதாரமற்றவர்களாகவும், கேட்பாரற்றவர்களாகவும் வாழ்ந்து உழைத்து மடிய வேண்டுமா?
பெரும்பாலும் இன்று ஒவ்வொரு கிராமப்புறங்களிலும் தொடக்கப் பள்ளிகள், அனைவருக்கும் கல்வித் திட்டம் என பல திட்டங்கள் இருக்கின்றன. இவ்வாறிருக்க சிறார்கள் இன்றும் சட்ட விரோதமாக வீட்டு பணி, தொழிற்சாலை/ தொழிற்கூடங்கள் என பணி புரியும் நிலை ஏன் ஏற்பட்டது என அரசு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். விவசாயம் அழிந்து பொருளாதார நிலை பின்தங்கிய கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் ஊர்ப்பகுதிகளில் இருந்து 18 வயதிற்கும் குறைவான சிறார்கள் நகரங்களில் சட்ட விரோதமாக பணியமர்த்தப்படுவதைத் தடுக்க முடியும். குறிப்பாக வீட்டு பணி செய்யும் தொழிலாளர்களுக்காக பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்றி இவர்களும் சம உரிமையுடன், அச்சமின்றி சமூகத்தில் பாதுகாப்பாக வாழ அரசு வழிசெய்ய வேண்டும்.