“பிரிட்டிஷ் அரசாங்கம் யாரை பயங்கரவாதி என்று சொல்கிறதோ அவனே உண்மையான ஐரிஸ் தேசிய போராளி என்று ஐரிஷ் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார். அதுபோல இலங்கை அரசு என்னைத் தேடப்படுபவர்களில் முதன்மையானவராகக் கருதினால் அது நான் உண்மையான தமிழ்த் தேசியப் போராளி என்பதை உணர்த்துகிறது” – தலைவர் பிரபாகரனின் வார்த்தைகளே சர்வதேச வலதுசாரி அரசுகள் கட்டமைக்கும் பயங்கரவாதி என்ற சொல்லுக்கும், ஒரு இனத்தின் இறைமைக்கு போராடும் தேசியப் போராளி என்ற சொல்லுக்கும் விளக்கமாக அமைந்து விடுகிறது.
ஒரு இனத்தின் நிலம், மக்கள், மொழி உரிமைகளுக்காக, அம்மக்களின் தன்னாட்சிக்காகப் போராடுவதே தேசியம். அந்த வகையில் தமிழ்த் தேசியத்தின் தலைமகனாக தமிழீழ நிலத்திற்காக படை திரட்டி, மக்களின் சுதந்திரத்திற்காக ஆயுதம் எடுத்து, தம் மொழி உயிர்ப்புக்கு தன்னையே அர்ப்பணித்தவர் தலைவர் பிரபாகரன். சுதந்திரத் தன்னாட்சி பிரதேசமாக தமிழீழ ஆட்சிப் பரப்பை தற்சார்புடன் நடத்திக் காட்டி, தமிழ்த் தேசியத்தின் முகவரியாக வாழ்ந்தவர் தலைவர் பிரபாகரன் அவர்கள்.
‘தமிழீழம் எனக்கு சொந்தமான நிலம்; வரலாற்று ரீதியாக எமக்கு உரித்தான நிலம்; எமது வாழ்விற்கும் வளத்திற்கும் ஆதாரமான நிலம்; நாம் பிறந்து வாழ்ந்து வளர்ந்த நிலம்; எமது தேசிய அடையாளத்துக்கு அடித்தளமான நிலம்; இந்த நிலத்தை தனது சொந்த நிலம் என்கிறான் எதிரி. எமது விடுதலைப் போரானது ஒரு மண் மீட்பு போராகும். எமக்குச் சொந்தமான நிலத்தை மீட்டு அந்த நிலத்தில் எமது ஆட்சி உரிமையை இறைமையை நிலைநாட்ட நடைபெறும் போர்’
வரலாற்று அடிப்படையில் தமிழீழ நிலத்துடன் பின்னிப் பிணைந்த வாழ்வியலைக் கொண்டவர்கள் தமிழர்கள் என்னும் உரிமையை நிலைநாட்ட போராடிய மகத்தான தமிழ்த்தேசியப் போராளி. ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்னும் இலட்சியத்தை கொண்டு, தாயக நிலத்தின் விடுதலைக்கு போரிட்ட புரட்சியாளர்.
‘மனித உரிமைக்கும், மனித நீதிக்கும், சமாதானத்திற்கும், குரல் எழுப்பும் இந்த உலகமானது, உரிமை கேட்டு, நீதி கேட்டு, சமாதான வழியில் தீர்வு கேட்டு நிற்கும் எமது மக்களுக்கு சார்பாக குரல் எழுப்ப வேண்டும். இதுவே உலகத்தின் இன்றைய தார்மீக கடப்பாடு ஆகும்’ – தம் மக்களுக்காக உலகத்துடன் வாதிட்டவர். உங்களைக் கோவப்படுத்த, என்ன செய்ய வேண்டும் எனக் கேட்ட ஒரு நேர்காணலில், ‘தமிழினத்தைப் பற்றி தவறாகப் பேசினால் சட்டென கோவப்படுவேன்’ என்னும் அளவுக்கு தமிழினத்தை நேசித்த தலைவர்.
ஒரு அரசியல் போராளியாக மக்களின் சுதந்திரத்திற்கு போர்க் களத்தில் நின்றாலும், சமூகப் போராளியாகவும் அவர்களின் உள்ளூர விளைந்து நிற்கும் பிற்போக்குத் தனங்களையும் தனது தன்னாட்சி நிர்வாகத்தினால் களையெடுத்தார். தமிழ்த்தேசிய ஓர்மையை முதன்மைப்படுத்தி காலம் காலமாக மக்களின் எண்ணங்களில் புரையோடிப் போயிருந்த சாதியை, தீண்டாமையை பின்தள்ள வைத்து, இயக்கத்தை சாதியின் சுவடே தெரியாமல் கட்டினார்.
வெள்ளாளர் சாதிய ஆதிக்கம் கொண்ட மண்ணில், விடுதலைப்புலிகள் 1994-ம் ஆண்டு கொண்டு வந்த தமிழீழ தண்டனை வழிகாட்டு முறைகளில், சாதிய ஒதுக்குதலுக்கு தடை மற்றும் அதற்கான குற்றவியல் தண்டனை சட்டங்களை அமுல்படுத்தினர். சாதி ஒழிப்பு என்பது கருத்தியல் மட்டத்திலும் உளவியல் மட்டத்திலும் சட்டமுறையின் மட்டத்திலும் ஒரே சமயத்தில் நடத்த வேண்டிய போராட்டம் என்று கருதி, அதற்கான பாதைகளை வகுத்தனர். இயக்கத்தவரிடையே முற்போக்கு சிந்தனைகளை பயிற்றுவித்து, மக்களிடையே படிப்படியாக நிலைநிறுத்திய சாதி ஒழிப்புப் போராளியாக வாழ்ந்தவர் தலைவர் பிரபாகரன். மாணவர்களிடையே வளர்க்கும் புரட்சிகர கல்வியே சாதி ஒழிப்புக்கு வழியென நடைமுறைப்படுத்தினர்.
கல்வி, மொழி, கலை, கலாச்சாரம் என்பன ஒரு தேசிய இனத்தின் கட்டமைப்பிற்கு தூண்களாக விளங்குகின்றன. ஒரு தேசிய நாகரிகத்தின் அத்திவாரமாகின்றன – தேசிய இனத்தின் தூண்களை வலுவாக்கிய செயல்முறைகள் தலைவர் பிரபாகரன் அவர்களிடமே இருந்தது. ‘நான் கலை இலக்கியங்களை மதிப்பவன், கலை இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிப்பவன், கலை கலைக்காக அல்லாமல் மக்களுக்காக படைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை உடையவன் …’ – பேச்சளவில் சொல்லாமல் அதனை நம் இயக்கத்தவரிடையே பயிற்றுவிக்க தமிழ்நாட்டில் இருந்து இவை சார்ந்த ஆளுமைகளை வரவழைக்க ஏற்பாடுகள் செய்தவர். தமிழீழ தேசத்தின் தன்னிறைவு இறைமைக்கான முயற்சிகளை மேம்படுத்திக் கொண்டே இருந்தவர்.
தமிழீழ தேசத்தில் ‘பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை’ என முழங்கி, பெண்களை படையணியில் இணைத்து, அவர்களின் வீர தீரங்களை சிங்கள இனவெறிப் படைக்கு எதிராக நிகழ்த்த வைத்ததெல்லாம் உலகச் சரித்திரங்களில் பொறிக்கப்பட வேண்டியவை. ‘பெண்கள் சம உரிமை பெற்று, சகல அடக்குமுறைகளில் இருந்தும் விடுதலை பெற்று, ஆண்களுடன் சமத்துவமாக – கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாக தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல்’ என்கிற உள்ளார்ந்த விருப்பத்தோடு படையணிகளில் மட்டுமல்லாது ஆட்சி நிர்வாகங்களில், காவல் பணிகளில், கலை இலக்கியங்களில் ஈடுபட வைத்தவர்.
பழமைவாதத்திலும், மூடநம்பிக்கையிலும் ஊறிப் போன எமது சமூக அமைப்பில் நீண்ட நெடுங்காலமாக பெண்ணினம் ஒடுக்கப்பட்டு வருகிறது. எமது வேதாந்தங்களும், மத சித்தாந்தங்களும், மனுநீதி சாஸ்திரங்களும் அந்தக் காலம் தொட்டே பெண்ணடிமைத் தனத்தை நியாயப்படுத்தி வந்திருக்கின்றன.
ஆணாதிக்கம், சாதியம், சீதனம் என்று பல்வேறு பரிணாமங்களில் இந்த ஒடுக்குமுறையானது பெண்களின் வாழ்வில் ஊடுருவி நிற்கிறது’ – என 1991-ம் ஆண்டு அனைத்து உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டு, ‘காலம் காலமாக அடுக்களையில் அடைந்து போயிருந்த தமிழீழ பெண்ணினம் இன்று ஆயுதம் ஏந்தி நிற்கிறது, சீருடை தரித்து நிற்கிறது, எதிரியை களத்தில் சந்திக்க நிற்கிறது, எமது போராட்டத்தில் ஒரு புரட்சிகர சக்தியாக எழுச்சி கொண்டு நிற்கிறது… போராட்டம் மூலமாகவே நாம் பெண் விடுதலையையும், தேச விடுதலையையும் வென்றெடுக்க முடியும்’ என்று உலகுக்கே எடுத்துக்காட்டியவர் மேதகு பிரபாகரன் அவர்கள். பார்ப்பனியம் பெண்களின் மீது வேத, மத, சாஸ்திரங்களால் கட்டமைத்த ஈராயிரம் ஆண்டு உளவியல் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட பெண்ணுரிமை நாயகன் பிரபாகரன் அவர்கள்.
‘தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன்’ என்றார் பாவேந்தர். அந்த சீற்றத்திற்கு நிகராக வாள் எடுத்த மாவீரர் பிரபாகரன். தமிழ் மாணவர்களை தரப்படுத்தல் என்ற சட்டத்தின் மூலம் சிங்கள இனவெறி அரசு ஒதுக்கிய போது, சிங்கள மொழி ஆதிக்கம் நெறித்த போது, தமிழ் மாணவர் பேரவையைத் துவங்கினர் மாணவர்கள். இப்பேரவையில் வயதில் சிறியவராக சேர்ந்தார். தம்பி என அழைக்கப்பட்டார் தலைவர் பிரபாகரன்.
அரிய தமிழ் நூல்களின் இருப்பிடமான யாழ் நூலகத்தை சிங்கள இனவெறியர்கள் எரித்த பின்னரே, சண்டைகளாக நடந்து கொண்டிருந்த ஆயுதப் போராட்ட வடிவம் போராக உருக்கொண்டது. 1972-ல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கமாக ஆரம்பித்து 1976-ல் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் சூட்டிக் கொண்ட இயக்கத்தின் தலைவரானார். அரசியல், நீதி, நிர்வாகம் புலனாய்வு, படையணிகள், ஊடகம், நினைவு இல்லங்கள், குடியிருப்பு, விளையாட்டு, பயிற்சி நிலையங்கள், கடைகள், தெருக்கள் என எதிலும் தமிழ், எங்கெங்கும் தமிழ் என தமிழ் மணம் கமழ்ந்த பிரதேசமாக்கிய தமிழ் நேசிப்புப் போராளி.
தற்சார்பு இறைமையும், தற்சார்பு பொருளாதாரமும் கொண்டு தமிழீழ மக்கள் வாழ்க்கையை அமைக்குமளவில் நிர்வாகத்தை நடத்தியவர். இலங்கை பேரினவாத அரசு பல்லாண்டுகளாக தமிழீழ மக்களுக்கு அடிப்படைப் பொருட்கள் கூட கிடைக்க விடாமல் தடை செய்திருந்த போதும் மக்கள் விவசாயம், வணிகம் என பசிப் பிணியற்று வாழ்ந்தனர். 2022-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் இலங்கை மக்கள் தவித்த போதும், தமிழீழப் பகுதி மக்கள் தவித்து போராடவில்லை. அவரின் வழிகாட்டுதலை தமிழீழ மக்கள் மறக்கவில்லை.
விடுதலைப் புலிகளின் பண்பாட்டுத் திருவிழாக்களாக தமிழ் புத்தாண்டு நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது, மாவீரர்களை நினைவு கூறும் நாளாக மாவீரர் திருநாள் அனுசரிக்கப்பட்டது. தமிழர்களின் இயற்கையைப் போற்றி வாழ்ந்த சங்ககால மரபும், வீரர்களை நினைவு கூர்ந்த நடுகல் வழிபாடும் பண்பாட்டு வடிவங்களாக கொண்டு இவ்விரு நாட்களின் நிகழ்வுகளும் ஆண்டு தோறும் சிறப்புடன் நடத்தப்பட்டன.
தமிழ் தேசியத்தின் உட்கூறுகளான நிலம், மக்கள், மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் போன்றவற்றை உள்ளடக்கிய இறைமையுடன் தமிழீழ தேசத்தை கட்டி எழுப்பிய மாவீரர் தலைவர் பிரபாகரன் அவர்கள். தமிழினத்தின் இந்த இறைமையைக் காக்கவே ஆயுதம் தூக்கியவர். அவரின் வழிவந்தவர்கள் சாதியை எதிர்ப்பார்களே தவிர சாதியின் பெயரை மாற்றி குடி என்று வைத்துக் கொண்டு சாதியத்தை எதிர்ப்பதாக நாடகம் ஆட மாட்டார்கள். மத, வேத, மனு சாஸ்திரத்தை உருவாக்கியவனை எதிர்க்கும் திராவிடத்தை உயர்த்திப் பிடிப்பார்களே தவிர, முதன்மை எதிரிகளை மடைமாற்றும் வித்தையை செய்ய மாட்டார்கள். தமிழ்த் தேசியத்தின் உண்மையான போராளியான அவரை பின்தொடர்பவர்கள், மலிவான கதைகளைச் சொல்லி தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்த மாட்டார்கள். தமிழ்த் தேசிய சிந்தனைகளை உள்வாங்கியவர்கள் போலிகளை உடனே அடையாளம் கண்டு கொள்வார்கள்.
தமிழீழ தேசம் அமைந்தால் அது தமிழ்நாட்டு தமிழர்களுக்கு வாழ்வியல் வழிகாட்டலாக அமைந்து விடும் என்பதே தமிழ்நாட்டுப் பார்ப்பனப் பத்திரிக்கைகள், அவர்களை இங்கு பயங்கரவாதிகளாக கட்டமைத்ததன் பின்னணியின்றி வேறு என்னவாக இருந்து விட முடியும்! இந்தப் பார்ப்பனியத்துடன் மறைமுகமாக, நேரடியாக கைக்கோர்ப்பவர்களே அவரை பயங்கரவாதி என்கிறார்கள். உள்ளத் தூய்மை அற்றவர்களுக்கு ஒரு இனத்தின் தாய்மையாய் வாழ்ந்தவர்கள் இப்படி தெரிவதில் வியப்பில்லை.
தமிழின வீரத்தின் முகவரி நம் தமிழீழ தலைவர் பிரபாகரன். தமிழ் அறம் தழைக்கும் மனம் கொண்டவர்களின் நாயகன் தலைவர் பிரபாகரன். ஆதிக்கம் எதிர்க்கும் குணம் சுரக்கும் தமிழர்கள் போற்றும் விடுதலைப் போராளி பிரபாகரன். எக்காலமும் தமிழர்களின் நிலையான தமிழ் தேசியப் போராளி பிரபாகரன்.
வரலாற்றில் நிலையான தமிழ் தேசியப் போராளி, அவரை கவிதையால் இழைத்த புதுவை இரத்தினதுரையின் தங்க வரிகள் –
எல்லோருமே கலைஞர்களே!!
விரல்களை விரித்து மடித்து எண்ணிக் கொண்டு,
பெயர்களைச் சொல்லிப் பாருங்கள்.
எங்கள் தேசியத் தலைவர் வே. பிரபாகரனின்,
பெயரைச் சொல்லி முதல் விரலை மடிப்பீர்கள்.
நெருப்பாக நின்று எதிரியை நீறாக்குவது
இவரின் ஒருபக்கமென்றால்,
நிலவாக குளிர்ந்து நிழலாக இருப்பது இவரின் மறுபக்கம்.
பிரபாகரன் என்ற பெயர் தலைவன் என்றும்,
தளபதி என்றும் நின்று விடாது. கலைஞனென்றும், கவிஞனென்றும் நீளும்..
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ –