அமெரிக்க டாலரை வீழ்த்துமா பிரிக்ஸின் புதிய நாணயம்?

ரஷ்யா-உக்ரைன் போர்ச்சூழலின் பின்னணியில் 2024 ஆண்டு அக்டோபர் மாதம் 22 முதல் 24 வரை பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டை விட ரஷ்யாவின் கசானில் இந்த ஆண்டு நடைபெற்ற மாநாடு பொருளாதாரம், அரசியல் என பல துறைகளில் கவனம் ஈர்த்தது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிய நாடுகள் இணைந்ததும் எண்ணெய் வர்த்தகத்திற்காக புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தியதுமே இதற்கு காரணமாகி இருக்கின்றன.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பில் ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எகிப்து, எத்தியோப்பியா ஆகிய நான்கு நாடுகள் தற்போது இணைந்துள்ளன. பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கிய நாடான சவுதி அரேபியாவும் இந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றது.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகத்திற்கு ஒரு புதிய நாணயம் முன்மொழியப்பட்டிருக்கிறது. இனி பிரிக்ஸ் நாடுகள் தங்கள் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இதை பயன்படுத்தும் என்ற செய்திதான் ட்ரம்ப் “பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% வரி விதிப்போம்” என்று அச்சுறுத்தக் காரணமாகியிருக்கிறது. அண்மையில் நடக்கும் புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் பிரிக்ஸின் புதிய நாணயம் ஆகியவை டாலரின் ஆதிக்கத்தை வீழ்த்தும் என்று கூறப்படுவதால் அமெரிக்கா பதற்றமடைந்திருக்கிறது.

இரண்டாம் உலகப் போர் முடிந்ததில் இருந்து அமெரிக்கா பிற நாடுகளின் மீது பொருளாதார ரீதியாக ஆதிக்கத்தைச் செலுத்த ‘டாலர்’ பயன்பட்டிருக்கிறது. குறிப்பாக 1970களில் இருந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் அமெரிக்க டாலர்களில் நடத்தப்படுகிறது. உலகின் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருளான கச்சா எண்ணெய்யை அமெரிக்காவின் டாலரில் வணிகம் செய்யும் வணிகத் தொடர்பே ‘பெட்ரோடாலர்’ முறை என்று அழைக்கப்படும். பல ஆண்டுகளாக அமெரிக்கா பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் இந்த பெட்ரோடாலர் முறையே காரணமாக இருந்து வருகிறது.

மேலும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மீதமிருக்கும் பெட்ரோடாலர்களை அமெரிக்க கருவூல பத்திரங்கள் மீது முதலீடு செய்யும் வழக்கமும் இருந்தது. பெட்ரோடோலர் மறுசுழற்சி என அழைக்கப்படும் இந்த முறையே அமெரிக்க பொருளாதாரத்தின் பின்புலமாக இருந்து வந்தது. மத்திய கிழக்கில் போர்களை உருவாக்குவதன் மூலமும் ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலமும் அமெரிக்கா ஏகாதிபதியத்தைச் செலுத்த இந்த பெட்ரோடாலர் முறையைப் பயன்படுத்திக் கொண்டது.

ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே  உலகின் கச்சா எண்ணெயில் சுமார் 44% உற்பத்தி செய்கின்றன. இன்று வரை அமெரிக்காவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்த இந்த நாடுகள் வேறு வழி இல்லாமல் டாலரை ஏற்றுக்கொண்டன. அந்த நாடுகளின் அந்நியச் செலாவணியை கட்டுப்படுத்தும் முக்கிய நிதி நாணயமாக டாலர் இருந்தது. ஆனால் இப்போது இந்த நாடுகள் பிரிக்ஸ் அறிமுகப்படுத்திய நாணயத்தை பயன்படுத்தினால் அது அமெரிக்க டாலரை பலவீனப்படுத்தக்கூடும்.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் எண்ணெய் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர இதற்கு முன்னரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2018 ஆம் ஆண்டில் பெட்ரோடாலருக்கு மாற்றாக சீனா பெட்ரோ-யுவானை உருவாக்கியது. ரஷியாவிற்கும் சீனாவிற்கும் இடையே சீன நாணயத்தில் எண்ணெய் வர்த்தகத்தை நடத்துவதற்கு ஒப்பந்தம் முடிவானது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் ரஷ்ய நாணயமான ரபில்-ஐ ஏற்றுக் கொண்டது.

அதே நேரத்தில் ஈரான் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகள் பெட்ரோடாலருக்கு மாற்றாக (யூரோ, யுவான் போன்ற) பிற நாணயங்களை ஏற்றுக்கொண்டன. இதனாலேயே இந்த நாடுகள் மீது  பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா.

தற்போது அமெரிக்காவிற்கு மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவு பலவீனமாகியுள்ள சூழலில் பிரிக்ஸ் நாணயம்  உலக அரங்கில் பேசுபொருளாகி இருக்கிறது. பெட்ரோ-யுவானின் தாக்கத்தைப் போல இந்த புதிய பிரிக்ஸ் நாணயமும் எண்ணெய் சந்தையில் அறிமுகமானால், அது டாலருக்கு நேரடி சவாலாக அமையும். பெட்ரோடாலர் வீழ்ச்சியடைந்தால் அமெரிக்க பொருளாதாரத்தின் / ஆயுத பேரத்தின் அடித்தளமே அசைக்கப்பட்டு விடும். மேலும் பல்வேறு நாடுகளுக்கு கடன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற அமைப்புகளில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறையும். இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சி வல்லாதிக்க நாடுகளின் போர்வெறிக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »