ஏன் வேண்டும் சுயமரியாதைத் திருமணம்?- புத்தகப்பார்வை

“சுயமரியாதைத் திருமணம் என்பது மணமக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து, தங்களுக்குளாகவே ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அர்த்தமும், பொருத்தமும், அவசியமும் இல்லாமல் வெறும் சடங்கு, பழக்கவழக்கம் என்பதற்காக மாத்திரம் ஒன்றையும் செய்யக்கூடாது என்பதுமேயாகும்” -தந்தை பெரியார்.

சாதகம் பார்க்காமல், சடங்குகள் மற்றும் மந்திரங்கள் இல்லாமல், ஆடம்பரம் இல்லாமல், தமிழ் மொழியில் நடத்தப்படும் சுயமரியாதைத் திருமணங்கள் திரைப்படங்களில் மட்டுமல்ல உண்மை வாழ்க்கையிலும் காண்பவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளாக இருக்கின்றன. ஏனெனில் பன்னெடுங்காலமாக பார்ப்பனரின் சமசுகிருத மந்திரங்கள் ஒலிக்க, புரியாத மொழியில் நடத்தப்பட்ட திருமணங்களே தமிழ் திரைப்படக் காட்சிகளாக திரையிடப்பட்டு வந்த நிலையில், தற்போது சுயமரியாதைத் திருமணங்களை திரையில் காணும்போது அரசியலாகவும் மரபு ரீதியாகவும் மக்கள் மனதில் இந்தக் காட்சிகள் பதிந்து விடுவது மிகச் சிறப்பான விடயம்.

பெண்ணியம், சாதி மறுப்பு, பொதுவுடைமை, ஆரிய எதிர்ப்பு என்று நாம் அரசியலாக மக்களுக்கு கற்பிக்க நினைப்பதை, சில நிமிட காட்சிகளின் மூலம் மக்களுக்கு கொண்டு செல்லும் இயக்குனர்களின் திறமையான படைப்புகளே சுயமரியாதைத் திருமண காட்சிகளாக நம் கண் முன்னே விரிகின்றன.

இந்தத் திரைக்காட்சிகளின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளவும், சுயமரியாதைத் திருமணம் குறித்து அறிந்து கொள்ளவும் ‘ஏன் வேண்டும் சுயமரியாதைத் திருமணம்?’ என்ற புத்தகம் (நிமிர் பதிப்பக வெளியீடு) நமக்கு உதவும்.

சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் அறிமுகமான வரலாற்றுப்  பாதையில் திராவிட கொள்கைகள் தமிழ் மண்ணில் வேரூன்றிய பின்னணி இருக்கின்றது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரே சாதிக்குள்ளாகவே திருமணங்கள் நடைபெற்று வந்த நிலையில், தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட சுயமரியாதைத் திருமண முறை ஆரிய திருமணத்தின் சடங்குகளை நீக்கி, ‘சுயமரியாதை இயக்கத்தின்’ ஒரு பகுதியாக அறிமுகமானது.

1955ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தமாக அப்போதைய முதலமைச்சர் ஆக இருந்த அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். அப்போதிருந்த சட்டமன்ற அவை, மேலவை ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. சனவரி 17, 1968ல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற நிலையில் 20-01-1968ல் அரசிதழில் வெளியிடப்பட்டு சட்ட வடிவமாக்கப்பட்டது.

1928-ம் ஆண்டு முதல் சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தவர் தந்தை பெரியார். அருப்புக்கோட்டையில் உள்ள சுக்கிலாநத்தம் என்ற ஊரில் சண்முகம் மற்றும் மஞ்சுளா என்ற இணையர்களுக்கு தந்தை பெரியார் நடத்தி வைத்த சாதி மறுப்புத் திருமணமே தமிழ்நாட்டில் நடந்த முதல் சுயமரியாதைத் திருமணம். கணவரை இழந்த கைம்பெண்ணான மஞ்சுளா அவர்களின் பெண்ணடிமை விலங்குகளை உடைக்க தந்தை பெரியார் எடுத்த சுத்தியலே சுயமரியாதைத் திருமணம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக சமூகத்தில் புரையோடிப்போன சாதி கட்டமைப்பின் காரணமாக ஒரே சாதியில் மணமுடிக்கும் ‘அகமண முறை’க்கு மாற்றாக தந்தை பெரியார் முன்னெடுத்ததே சுயமரியாதைத் திருமணம். நவீனத்துவம், தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் என அனைத்தையும் தாண்டி இந்த அகமண முறை வளர்ந்தாலும், திராவிட வழி நின்ற தமிழ்நாட்டில் பதிவுத் திருமணங்கள் அண்மைக்காலங்களில் பெருகுவது சிறப்பான குறியீடு. மேலும் ‘சாதி ஒழிப்பு’ என்ற இலக்கை அடைவதற்கு கருஞ்சட்டைப் படையினர் செய்யும் களப்பணியாக சுயமரியாதைத் திருமணமே அமைகிறது. பல தடைகளைத் தாண்டி, தான் நேசிப்பவரைக் கரம்பிடிக்க இன்று இளைஞர்கள் தேடும் புகலிடமாகவும்  சுயமரியாதைத் திருமணமே இருக்கின்றது.

சுயமரியாதைத் திருமணம் எவ்வாறு ஆரிய திருமண முறையில் இருந்து வேறுபடுகிறது என்பதை பல்வேறு வழிகளில் விளக்குகிறார் தந்தை பெரியார். ஆரிய முறை திருமணத்தில் சொல்லப்படும்

“ஸோம: ப்ரதமோ விவிதா

கந்தர்வோ விதித்த உத்தர…”

(பொருள்: சோமன் உன்னை (மணப்பெண்ணை) கந்தர்வனுக்குக் கொடுத்தான், கந்தர்வன் அக்கினிக்கு கொடுத்தான்…) எனத் தொடங்கும் சமசுகிருத மந்திரத்தின் பொருளை மணப்பெண் புரிந்து கொண்டால் முறத்தால் விரட்டுவாள் என்று கூறினார் தந்தை பெரியார். இந்த சமசுகிருத மந்திரத்திற்கு மாற்றாக “வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் அனைத்திலும், சம உரிமை,  சமமான பொறுப்பு  கொண்ட உற்ற நண்பர்களாக/தோழர்களாக வாழ்வோம் என்று உறுதி கூறுகிறோம். வாழ்க்கையில் என்னிடம் இருந்து என்ன உரிமைகளை எதிர்பார்க்க உங்களுக்கு உரிமை இருக்கிறதோ, அதையே உங்களிடம் எதிர்பார்க்க எனக்கும் சம உரிமை உண்டு” என்று உறுதிமொழி ஏற்பதே சுயமரியாதைத் திருமணம். இவ்வாறு பெண்ணிய கொள்கையின் அடிப்படையில் உருவான சுயமரியாதைத் திருமணமே ‘வாழ்க்கை ஒப்பந்த’ அழைப்பாக இன்று வளர்ந்திருக்கிறது.

ஆரிய திருமண முறையில் பார்ப்பனருக்கு செய்யும் செலவு, பல்வேறு சடங்குகளுக்குச் செய்யும் ஆடம்பர செலவு போன்றவற்றால் குடும்பத்தினருக்குதான் பொருளாதார சுமையாக ‘கலியாணக் கடன்கள்’ ஏற்படும் என விமர்சித்தார் தந்தை பெரியார். மாறாக சுயமரியாதைத் திருமணம் மூலம் இணைந்த கணவனும் மனைவியும் வரவுக்கு மீறாமல் செலவு செய்ய வேண்டும் என்ற பொதுவுடமைக் கருத்தை ஊக்கப்படுத்தினார்.

“நமது ஆராய்ச்சிக்கு எட்டிய அளவில் திராவிட மக்களுக்கு எவ்வித சடங்கு முறையும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆரியம் இங்கு நுழைந்த பிறகுதான் இச்சடங்கு முறைகள் ஏற்பட்டிருக்க வேண்டுமென்பது தெரிகிறது” என்று கூறுகிறார் தந்தை பெரியார். நடுகல் முதல் கல்வெட்டுகள் வரை சிறப்பான மரபைக் கொண்ட நம் வாழ்வியலில் சிறு மண்ணாங்கட்டி அளவு கூட வரலாறு இல்லாத ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்துள்ளதை அவரின் வரிகள் எளிதாக விளக்குகின்றன.

மேலும் “தமிழர்கள் ஆண்களும் பெண்களும் சமமாக இருந்திருக்கிறார்கள் என்பதை வள்ளுவரின் குரலைக் கொண்டு கண்டறிந்தோம். எனவே ‘வாழ்க்கைத்துணை ஒப்பந்தம்’ என்று பெயரிட்டு அதற்கேற்ப இம்முறைகளை கையாளுகிறோம்” என்று தந்தை பெரியார் கூறுவது சுயமரியாதைத் திருமணங்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் வரிகளாக இருக்கின்றன.

சாதி ஏற்றத்தாழ்வுகள் நீங்கிய சாதி மறுப்புத் திருமணமாக, ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்கும் திராவிடவழி திருமணமாக, இரு மனங்கள் ஒன்றிணையும் காதல் திருமணமாக, பெண்ணியம் போற்றும் வாழ்க்கை ஒப்பந்தமாக தமிழர்கள் பின்பற்ற வேண்டிய மரபே சுயமரியாதைத் திருமணம் என்ற கருத்தை தந்தை பெரியாரின் ‘ஏன் வேண்டும் சுயமரியாதைத் திருமணம்?’ புத்தகம் நமக்குள் விதைப்பது ஒரு சிறப்பான உணர்வைத் தரும். (சுயமரியாதைத் திருமண சட்டத்தின் அரசிதழ் வெளியீடு புத்தகத்தில் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.)

‘ஏன் வேண்டும் சுயமரியாதைத் திருமணம்?’ நூல் கிடைக்குமிடம்:

திசை புத்தக நிலையம்,

5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,

டிஎம்எஸ் அருகில், காமராஜர் அரங்கம் எதிரில்,

அண்ணாசாலை, தேனாம்பேட்டை,

சென்னை – 600086

தொலைபேசி: 98840 82823

Location: https://goo.gl/maps/fZXqRjz6n1u461fc7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »