போரினால் ஏற்படும் பாதிப்புகள் அதில் பங்கேற்கும் நாடுகளை மட்டுமல்ல, அதில் பங்குபெறாத பூகோள ரீதியாக தொலைவில் உள்ள நாடுகளையும் பாதிக்கும். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரினால் தெற்காசியா நாடுகளும் ராணுவ/பொருளாதார தாக்கங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. உலகில் பேரழிவைக் கொண்டு வரும் போர் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து கொண்டிருக்கும் வேளையில், போர்நிறுத்தம் எட்டுவதற்கான சிறு அறிவிப்பும் நமக்கு சற்று ஆறுதலைத் தரக் கூடும். ஆனால் தங்கள் நாட்டில் உற்பத்தி ஆகும் ஆயுதங்களை விற்பதற்கு போரை ஒரு சந்தையாகப் பார்க்கும் மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளுக்கு போர்நிறுத்தம் என்பது விரும்பத்தகாத நிகழ்வாகவே இருக்கும்.
தற்போது நடைபெறும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வராமல் அதை நீட்டிப்பதன் மூலம் அமெரிக்காவும் தனது ஆயுத சந்தையை விரிவுபடுத்தும் செய்தி தற்போது வெளிவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடனான அமைதி ஒப்பந்தத்தை நிராகரிக்குமாறு ஜெலன்ஸ்கியிடம் மேற்கத்திய நாடுகள் கூறியதை அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலர் ’விக்டோரியா நுலாண்ட்’ உறுதிப்படுத்தி இருக்கிறார்.
மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் வகையில் பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கியது. ஆனால் போர் தொடங்கிய சில நாட்களிலேயே உக்ரேனிய மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் ஒரு சமாதான பேச்சுவார்த்தை நடத்தியது பலருக்கு புதிய செய்தியாக இருக்கும். பல ஊடகங்களில் விரிவாக விவாதிக்கப்படாத அந்த சமாதான பேச்சுவார்த்தை வெற்றி பெற்றிருந்தால் அது இப்போது போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கும். ஆனால் இந்த சமாதான ஒப்பந்தத்தில் உக்ரைனை முன் நகர விடாமல் பின்னோக்கி இழுத்த நாடு அமெரிக்கா. ரஷ்யாவுடனான சமாதான ஒப்பந்தத்தை கைவிடுமாறு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்குலக நாடுகள் உக்ரைனிடம் கூறியதாக முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலர் ‘விக்டோரியா நுலாண்ட்’ அண்மையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
உலகப் போர்களில் மேற்குலக வல்லாதிக்க நாடுகளின் பங்கு ராணுவ தலையீட்டையும் தாண்டி, போரின் தன்மையையும் போர் எத்தனை நாட்கள் நடைபெற வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரமிக்க நாடாக வலம்வருவதையும் உறுதி செய்கின்றது. குறிப்பாக அமெரிக்கா சார்பு ‘நேட்டோ’ அணியில் உக்ரைனை இணைத்து கொள்வதற்காக நடைபெறும் இந்தப் போர், உக்ரைனின் பேரழிவுக்காக அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
உண்மையில், உக்ரேனிய மக்கள் 2014 வரை நேட்டோவில் பங்குபெறும் முடிவை பெருவாரியாக எதிர்த்தனர். 2014இல் கிரிமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்குப் பிறகு அமெரிக்கா உக்ரைனுக்கான நிதி உதவியை அதிகரித்தது. விரிவான கட்டுரை: https://may17kural.com/wp/is-nuclear-war-brewing/
2014 ஆம் ஆண்டில், ஒபாமா நிர்வாகம் உக்ரைனுக்கு 291 மில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக வழங்கியது. 2021ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்கா மொத்தம் $2.7 பில்லியன் பயிற்சி உபகரணங்களை வழங்கியது. இந்த ராணுவ உதவியோடு, “உக்ரைனில் உள்ள ‘யவோரிவ்‘ இராணுவத் தளத்தில் உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சியும் அளித்தது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த ராணுவ தலையீட்டிற்குப் பிறகே உக்ரைன் நேட்டோ பக்கம் சாயத் தொடங்கியது“.
அமெரிக்காவைப் போலவே இங்கிலாந்தும் உக்ரேனுக்கு ஆயுத உதவிய வழங்கிய முக்கிய நாடுகளில் ஒன்றாகும். இன்றுவரை, இங்கிலாந்து உக்ரைனுக்கு £12.5 பில்லியன் தருவதாக உறுதியளித்துள்ளது. இதில் £7.6 பில்லியன் மதிப்பிலான இராணுவ உதவிகளும் 3 பில்லியன் பவுண்டுகளுக்கு இணையான தளவாட உதவிகளும் செய்திருக்கிறது இங்கிலாந்து. இராணுவ உதவியோடு இங்கிலாந்து தன் நாட்டில் 86,000 உக்ரைனியர்களை குடியேற்றமும் செய்திருக்கிறது. உக்ரேனிய அதிவேக ஜெட் விமானிகளுக்கு பயிற்சியும் அளிக்கிறது இங்கிலாந்து.
இரு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா என இரு நாடுகளுமே அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை சந்தித்துள்ளன. முறையான மருத்துவ வசதி இல்லாததால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த மே மாதத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 1,200 பேர் போரினால் உயிரிழந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் உயிரிழப்புகள் பற்றிக் கவலைப்படாமல் மேற்குலக நாடுகள் ஆயுத வணிகத்திற்காக அமைதிப் பேச்சுவார்த்தையைச் சிதைத்ததால், உலகப் போர் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. போர் துவங்கிய சிறிது நாட்களில் ரஷ்யா- உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தைகள் முதலில் அமைதிக்கான ஒப்பந்தங்களாகத்தான் முன்மொழியப்பட்டன. இதற்காக மார்ச் 29,2022அன்று, ரஷ்யா மற்றும் உக்ரைனின் பிரதிநிதிகள் இஸ்தான்புல்லில் உள்ள போஸ்பரஸில் சந்தித்தனர். ‘நேட்டோவில் இருந்து உக்ரைன் விலகி செல்வது குறித்து அந்த சமாதான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட இருந்தது. உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், உக்ரேனுக்குள் ரஷ்ய மொழியைப் பாதுகாக்க வேண்டும், உக்ரைன் கிரிமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் மற்றும் கிழக்கு உக்ரேனில் உள்ள டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்கின் பகுதிகளின் சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும்‘ என்பன போன்ற பல முக்கிய தீர்வுகள் முன்மொழியப்பட்டன.
முதலில் அமைதி திரும்புவதற்கான ஒரே வழியாக கருதப்பட்ட இந்த ஒப்பந்தம் பின் பல சவால்களை எதிர்கொண்டது. குறிப்பாக அமெரிக்காவும் இங்கிலாந்தும் தங்கள் இராணுவ தளவாடங்களை இறக்குவதற்கு உக்ரைனைத் தேர்ந்தெடுத்திருந்த வேளையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை ஒரு தடையாக நினைத்தன.
இந்த பேச்சுவார்த்தை உக்ரைன் மீதான தங்கள் அதிகாரத்தைக் குறைத்து விடும் என்று வல்லாதிக்க நாடுகள் நினைக்கத் தொடங்கின. ஏனெனில் உக்ரேன் 250,000 நேட்டோ சிப்பாய்களுடன் போரிடும்போது ரஷ்யா அந்த எண்ணிக்கையை 85,000 சிப்பாய்களாக குறைக்குமாறு பேச்சுவார்த்தையில் வலியுறுத்துயது. இதேபோல், டாங்கிகள் எண்ணிக்கையையும் குறைப்பதற்கு வற்புறுத்தியது ரஷ்யா. ஆனால் தங்கள் ஆயுத பலத்தை நிறுவ விருப்பப்படும் வல்லாதிக்க நாடுகளால் இந்த முன்மொழிவுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஏப்ரல் 7, 2022 அன்று அப்போதைய இங்கிலாந்து பிரதமர் ‘போரிஸ் ஜான்சன்’ போர் முடியும் வரை உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதாக உறுதி அளித்தார். வல்லாதிக்க நாடுகளின் இந்த நடவடிக்கைகளால், இஸ்தான்புல் அமைதி ஒப்பந்தம் இறுதியில் தோல்வியடைந்தது. ஏப்ரல் 12, 2022 அன்று, ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார்.
ரஷிய-உக்ரைன் போரில் தலையிட்டதை போன்றே இசுரேல்-பாலஸ்தீனக் போரிலும் அமெரிக்கா தலையிட்டதை இதற்கு முன்னர் வெளிவந்த குரல் கட்டுரைகள் விவரித்துள்ளன https://may17kural.com/wp/americas-role-in-the-palestinian-genocide/
இவ்வாறு தற்போது மத்திய தரைக்கடல் பகுதி முழுமையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் அமைதியின்மைக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் ஏகாதிபத்திய வெறி காரணமாய் அமைந்திருக்கிறது. அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் ‘கமலா ஹாரிஸ்‘ போன்றோரும் போர்களில் அமெரிக்காவின் நிலைபாட்டை தங்களின் தேர்தல் பிரச்சாரங்களில் புகழவே செய்கின்றனர்.
தற்போது போர் முற்றி வரும் வேளையில் அமெரிக்காவின் CIA உளவு அமைப்பின் தலைவர் ‘வில்லியம் பேர்ன்ஸ்’ மற்றும் இங்கிலாந்தின் MI6 தலைவர் ‘ரிச்சர்ட் மூர்’ இருவரும் இணைந்து முதல்முறையாக ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்துள்ளனர். லண்டனில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய இவர்கள் இருவரும் “உலக ஒழுங்கிற்கு (world order) அச்சுறுத்தல்” ஏற்பட்டுள்ளதாக கூறினர். இந்த நூற்றாண்டின் முக்கிய அரசியல் சவாலாக அவர்கள் சீனாவைக் குறிப்பிடுவதால் இனி போரின் போக்கு ஆயுத வணிகத்தையும் தாண்டி புவிசார் அரசியலை நோக்கி நகர்வதை நாம் உணரலாம்.
ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த விடாமல் தங்களின் ஆயுத விற்பனையை வளர்த்த நாடு அமெரிக்கா. தங்களது வல்லாதிக்க நிலையை தக்க வைப்பதற்காக உலகெங்கும் பல்வேறு நாடுகளில் குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் கலகங்களை ஏற்படுத்தியது அமெரிக்கா. இராணுவ விரிவாக்கத்திற்காக நேட்டோ நாடுகளின் கூட்டணியை வலுப்படுத்த உக்ரைன் போரை நிறுத்த விடாமல் செய்து கொண்டிருக்கிறது. இன்று வரை இசுரேல் பாலஸ்தீன பிரச்சனை தீராமல் இருப்பதற்கும், உலகெங்கும் பல்வேறு நாடுகளில் மக்கள் பலியாவதற்கும் அமெரிக்காவே காரணம்.
அதுபோலவே தமிழ் ஈழத்தில் தமிழர்களை வீரத்தால் எதிர்கொள்ள இயலாத சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுத உதவியும் பண உதவியும் செய்து தமிழர்களை அழிக்க துணை புரிந்தது. தெற்காசியப் பிராந்தியத்தின் இராணுவ மையமாக திகழும் திரிகோணமலையைக் கைப்பற்ற, அமைதி ஒப்பந்தம் என நாடகமாடி ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொல்லக் காரணமாக இருந்தது. இனப்படுகொலை முடிந்தும் தீர்மானம் என்ற பெயரில் இனவெறி இலங்கையை காப்பாற்றியது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளினால் தூண்டப்படும் போர் என்பது அவற்றின் வர்த்தக, இராணுவ நலனின்றி வேறு அக்கறை இல்லை என்பதை ஈழம் நமக்கு சொல்லி விட்டே சென்றிருக்கிறது.