
“இந்துத்துவம் என்பது பார்ப்பனியமே, நான் ஒரு இந்துவாகப் பிறந்தேன், ஆனால் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன்” என்று கூறி சனாதன கும்பல்களுக்கு சவாலாக இருந்தவர் அண்ணல் அம்பேத்கர். தான் எதிர்கொண்ட சாதிய ஒடுக்குமுறைகளை இனி யாரும் எதிர்கொள்ள கூடாதென்று அதை வேரறுக்கப் போராடியவர். அரசியல் சட்டங்களின் மூலம் மக்களுக்கான உரிமைகளை வகுத்து, இன்றளவும் சனாதனத்தை எதிர்க்க நமக்கு உதவியவர் அண்ணல். அவரின் 134வது பிறந்த நாளை மே பதினேழு இயக்கம் பல்வேறு நிகழ்வுகளின் மூலம் சிறப்பித்தது.
ஏப்ரல் 14, 2025 அன்று காலை தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மே பதினேழு இயக்கத் தோழர்கள் மரியாதை செலுத்தினர். கோவையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் தோழர்கள் அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்தனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள அண்ணலின் சிலைக்கு தோழர் பிரவீன் குமார் மற்றும் தோழர் கொண்டல் சாமி அவர்கள் ஒருங்கிணைக்க திரளான தோழர்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளும் அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
ஏப்ரல் 14, 2025 அன்று மாலை கோவை பீளமேடு பகுதியில் அண்ணலின் பிறந்த நாளை முன்னிட்டு ‘சனநாயகம் காப்போம்’ பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய தோழர் திருமுருகன் காந்தி, “அண்ணல் அம்பேத்கரின் சிறப்புகளை இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசும் வகையில் அவர் நமக்கு வழிவகை செய்திருக்கிறார். நமக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வாக்குரிமை மட்டுமல்ல தேர்தலில் போட்டியிடும் உரிமை எனப் பல உரிமைகள் கிடைத்ததற்கு அண்ணலே காரணம்.

இங்கு கோணி அம்மன், சுடலை மாடனை வழிபடும் தமிழர்க்கு இந்து மதம் கிடையாது. நமக்குப் புரியாத மொழியில் வேதம் ஓதும் பார்ப்பனர்களின் மதமே இந்து மதம். அவர்கள் சாமி வேறு, கிடா வெட்டு முறை கொண்ட நம் சாமி வேறு. நம் மாரியம்மன் கோவிலில் பார்ப்பனர் பூசை செய்வது கிடையாது. பூசாரி தான் செய்வார். அய்யர்-பூசாரி இருவரும் வேறு வேறு.
மாட்டுக்கறிக்குத் தடை போடும் வடமாநிலத்தவர்தான் உலகில் அதிகளவில் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்கின்றனர். இன்றும் பல்வேறு தொழில்துறைகளில் முன்னேறிய நம்மால் கோவில் கருவறைக்குள் நுழைய முடியுமா? மனுஸ்ம்ரிதி நம்மை கல்வி கற்க கூடாது என்று கூறுகிறது. நம்மைத் ‘தீட்டு’ என்று கூறுகிறது. இதைத்தான் அண்ணல் அம்பேத்கர் கேள்வியாக எழுப்பினார்.
இந்த பீளமேடு பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து படிக்கின்றனர். ஆனால் அரசாங்க உதவி பெரும் இந்த கல்வி நிலையங்களில் நமது பிள்ளைகள் படிக்க இயலுகிறதா? தற்போதைய நிலையே இவ்வாறு இருக்கும்போது, நூறு ஆண்டுகளுக்கு முன் இதைவிட அதிகமாக நமக்கு கல்வி மறுக்கப்பட்டது. அத்தகைய நிலையில்தான் ‘கல்வி அனைவருக்குமான அடிப்படை உரிமை’ என்று சட்டமியற்றினார் அண்ணல். அதனால்தான் இன்றும் நன்றியோடு அண்ணலை நினைவு கூறுகின்றோம்.
அண்மையில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு மாதவிலக்கு ஏற்பட்டதால் ‘தீட்டு’ என்று கூறி வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டார். இந்த அறிவியல் காலத்திலும் இயற்கையாக வெளியேறும் கழிவை ‘தீட்டு’ என்று கூறுகிறார்கள். உடம்பிலிருந்து இயற்கையாக வெளியேறுவது எவ்வாறு தீட்டாகும்? இது பெண்களை/ அவர்களின் கல்வியை முடக்கும் செயல். இதற்காக போராட்டத்தை அறிவித்தவுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான (வழக்கிற்கான) சட்ட வடிவத்தை வழங்கியவர் அண்ணல் அம்பேத்கர். அந்த எட்டாம் வகுப்பு மாணவியின் சுயமரியாதையை பாதுகாக்க அன்றே சட்டங்களை இயற்றியவர் அண்ணல் அம்பேத்கர். அதே போன்று பெண்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் தந்தை பெரியார். எனவேதான் இவர்களை நன்றியோடு நினைவு கூறுகின்றோம். நன்றியில்லாத சீமான் போன்றோர்தான் பெரியாரை இழிவுபடுத்துவார்கள்.
தற்போது அரசியல் களத்திலே அதிமுகவை மிரட்டி பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. 2% வாக்குவங்கி உள்ள பாஜக, 45% வாக்குவங்கி உள்ள அதிமுகவை மிரட்டுகிறது. மானமுள்ள தமிழர் யாரும் பாஜகவிற்கு வாக்கு போட மாட்டார்கள். நாற்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகவால், தமிழ்நாட்டுக்கு நல்லது செய்த ஒரு பாஜக தலைவரைக் கூட குறிப்பிட முடியவில்லை.
பாஜகவை தமிழ்நாட்டில் அம்பலப்படுத்தியது மே பதினேழு இயக்கம். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் கருப்பு கொடி காட்டியது மே பதினேழு இயக்கம். அண்மையில் மோடி ராமேஸ்வரம் வந்த போதும் கருப்பு கொடி காட்டினோம். மோடியின் தமிழர் விரோத திட்டங்களை முதன்முதலில் அம்பலப்படுத்தியதும் மே பதினேழு இயக்கம்தான். தமிழ் மொழியை காக்க வேண்டும் என்ற உறுதியோடு, தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்ற உறுதியோடு நிற்கின்றோம். எந்த சமரசமும் இன்றி, அடக்குமுறைக்கு அஞ்சாமல் இயக்கத் தோழர்கள் மக்கள் பணியாற்றுகிறார்கள். நாங்கள் மக்களை நேசிக்கின்றோம், அவர்களுக்காக போராடுகின்றோம்.

இது பெரியார் மண். நாங்கள் மேதகு பிரபாகரன் வழியில் வந்தவர்கள். இன்று (ஏப்ரல் 14) தோழர் தமிழரசன் பிறந்த நாள். வட தமிழ்நாட்டிலே ஏழை, எளிய மக்களுக்காக களம் கண்ட மாவீரர் தோழர் தமிழரசன். தமிழினம் 5000 / 10000 ஆண்டுகள் பழமையான இனமென்றால், இத்தனை ஆண்டுகால நம் உழைப்பு என்னவாகியது? நாம் சொத்து சேர்க்கக் கூடாது என்று மனுதர்மத்திலே எழுதி நடைமுறைப்படுத்தினார்கள். மனுதர்மத்தில் என்ன எழுதப்பட்டதா அதுவே வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் சட்டமாக இருந்தது.
1860 -இல் ஆங்கிலேயர் நிலத்திற்கு வரி வசூலித்தபோது, கோவிலுக்கு கொடுத்த இனாம் நிலத்திற்கு கொடுக்க முடியாது என்று வரிவசூலிப்பாளர்கள் கூறுகிறார்கள். (அரசர்கள் கோவிலுக்கு கொடுத்த நிலத்தின் பயனை பார்ப்பனர் அனுபவிப்பர். நிலத்தை குத்தகைக்கு கொடுத்து பார்ப்பனர் பணம் ஈட்டியிருக்கின்றனர்.) இதுபோல் ஆறு லட்சம் இனாம் பத்திரங்கள் அன்று இருந்திருக்கின்றன. இதன் மூலம் 23 லட்சம் ஏக்கர் நிலம் தமிழ்நாட்டில் பார்பனர்களுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தில் இடைநிலை சாதியினர் கூலி வேலை செய்தனர். கோவில் நகையை கணக்கு கேட்கக் கூடாதென்பதற்காகவே கருவறைக்குள் நமக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இவ்வாறு கோவிலையும் கோவில் நிலத்தையும் பார்ப்பனர் கட்டுப்படுத்தி இருந்தனர்.
பத்மநாபசாமி கோவிலில் மட்டும் ஒட்டுமொத்த இந்தியாவின் பட்ஜட் தொகையை விட இருமடங்கு மதிப்புள்ள நகை இருந்ததாகக் கூறுவர். இதைப்பற்றியெல்லாம் தெரியக்கூடாதென்பதற்காகவே நம்மை கருவறைக்கு வெளியே நிறுத்தி வைத்திருக்கிறார்கள். நிலத்தோடு சேர்த்து மனிதரையும் ஆடு, மாடு போல் விற்றிருக்கிறார்கள். இத்தகைய சூழலில்தான் கோவில்களை அரசாங்கத்துக்கு சொந்தமானதாக நீதிக்கட்சி அறிவிக்கிறது. இந்துசமய அறநிலையத்துறையும் உருவானது. பார்ப்பனர் அல்லாதோருக்கு வேலை கிடைத்தது.

‘பூணூல் அணிந்த பார்ப்பனர் சாமிக்கு அருகில் நிற்கலாம். பிற சாதியினர் தள்ளி நிற்க வேண்டும்’ எனும் அவமானத்தை பக்தியின் பெயரால் மக்கள் பொறுத்து கொள்கிறார்கள். எந்த கடவுள் மறுப்பாளரும் மசூதியை இடிக்கவில்லை, மாறாக ‘கடவுள் இருக்கிறார்’ என்று சொன்னவர்களே மசூதியை இடித்தனர். இதைத்தான் தந்தை பெரியார் “பக்தி வந்தால் புத்தி போய்விடும்” என்று கூறினார். நம் சுயமரியாதைக்கு இழுக்கு நேரக் கூடாது என்றார் பெரியார். படிப்பும் பகுத்தறிவும் வேண்டும் என்றார்.
ஆங்கிலேயருடன் சண்டை போட்டு நிலத்தை மீட்ட இனம் நம் தமிழினம். தீரன் சின்னமலை, மருது பாண்டியர், பொள்ளான் என அனைவரும் சாதி கடந்து போரிட்டனர். ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானுடன் இணைந்து இவர்கள் போரிட்டனர். இந்தப் போரிலே 36 இசுலாமியரை தூக்கிலிட்டனர் வெள்ளையர். இதை கோவை நகரிலே மாநாடு நடத்தி தெரிவித்தோம். ஆனால் இந்த மண்ணுக்காக உயிர்நீத்த இசுலாமியரை தேசவிரோதி என்று பாஜக கூறுகிறது.
கோவை போன்ற அமைதியான ஊரை இன்று இந்துத்துவ அமைப்புகள் கைப்பற்றி, இந்து-இசுலாமிய மதவெறுப்பைத் தூண்டி விடுகின்றன. கலவரத்தைக் காரணம் காட்டி கோவையில் ராணுவம் வந்தது. இன்று கோவையின் பல இடங்களில் மார்வாடிகளின் வணிக நிறுவனங்கள் வந்து விட்டன. தற்போது தங்கநகை வணிகத்தையும் தமிழர்களிடம் இருந்து பறிக்க நினைக்கிறார்கள்….
நம் ஊரைப் பாதுகாக்க, நம் இளைஞர்கள் அமைப்பாய்த் திரளுங்கள். மக்கள் பணியில் எங்களுடன் இணைந்து செயலாற்ற வாருங்கள். அனைவரும் இணைந்து வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று அண்ணலின் பிறந்த நாளில் மே பதினேழு இயக்கம் உரிமையோடு கேட்கிறது” என்று உரையாற்றினார் தோழர் திருமுருகன் காந்தி.
கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் 19/4/2025 அன்று மாலை முகப்பேரில் அண்ணல் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 20/4/2025 அன்று காலை போரூரில் ‘டாக்டர் B.R அம்பேத்கர் பொது நலசங்கம்’ சார்பில் நடத்தப்பட்ட அண்ணலின் பிறந்தநாள் விழாவில் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்றார். அவருடன் மே17 இயக்கத் தோழர்கள் பலர் அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கோடையின் தாகத்தை தணிக்கும் விதமாக பல்வேறு நகரங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. போரூர், ஆம்பூர், வாலாஜாபேட்டை, காட்பாடியில் தண்ணீர் பந்தல் அமைத்து குளிர்ந்த சுத்தமான குடிநீர், நீர்மோர், பழங்களை தோழர்கள் மக்களுடன் பகிர்ந்தனர். மதிமுக மாவட்ட செயலாளர் திரு.கோபாலகிருஷ்ணன், தமுமுக உள்ளிட்ட தோழமை அமைப்பு பொறுப்பாளர்கள் பங்கேற்க பந்தல் அண்ணலின் பிறந்தநாளில் திறக்கப்பட்டன.
இவ்வாறு சமூக நீதி போற்ற, அண்ணல் அம்பேத்கரின் பணிகளைத் தொடர, அவரை சிறப்பிக்கும் நிகழ்வுகள் மே பதினேழு இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டன.