இசுலாமிய வெறுப்பை திட்டமிட்டு பரப்பும் பாஜக

இஸ்லாமியர்கள் தங்கள் நோன்பு நாள் முடிந்து கொண்டாடும் ஈகை பெருநாள் இன்று. மாற்று மதத்தவரையும் நல்லிணக்கத்துடன் வீட்டிற்கு வரவழைத்து மகிழ்ச்சியால் மனம் நிறைந்து கூடி மகிழ்ந்திருக்கும் திருநாள் இது. இஃப்தார் நோன்பினில் இணைந்து தமிழ்நாட்டின் தலைவர்கள் இங்குள்ள இஸ்லாமியர்களை அரவணைக்கும் பண்பாட்டைத் தொடர்கிறார்கள். ஆனால் வட மாநிலங்களில் இஸ்லாமோபோபியா (முஸ்லிம் வெறுப்பு மனநிலை) நோயினை இந்துத்துவ, சங்பரிவாரக் கும்பல்கள் பரப்பி விட்டதனால் இந்த பண்பாடு முற்றிலும் தகர்க்கப்படும் சூழலே நிலவுகிறது.

இஸ்லாமியர்களை ஒவ்வொரு நாளும் அச்சத்தில் தள்ளி, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க முயலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவாரக் கூட்டத்தினால் துயரங்கள் நிறைந்த சூழலில் உள்ளனர். இதனால் வடமாநிலங்களில் உள்ள இஸ்லாமியர்கள் விழா நாட்களின் மகிழ்ச்சியான சூழலை இழந்து வருகிறார்கள். இந்தியாவின் ஜனநாயகம் விரும்பும் ஆற்றல்கள் மட்டுமல்ல, சர்வதேச அறிக்கைகளும் பாஜக அரசின் இஸ்லாமிய வெறுப்புணர்வை அம்பலப்படுத்துகின்றன.

அண்மையில் சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான ஆண்டறிக்கையை யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் (United States Commission on International Religious Freedom) எனப்படும் அமைப்பு வெளியிட்டது. மக்கள் தங்களுக்குப் பிடித்த எந்த வழிபாட்டு உரிமையை பின்பற்றலாம் எனும் அடிப்படை உரிமை எங்கெல்லாம் நசுக்கப்படுகிறதோ அங்கு நடக்கும் சிறுபான்மை விரோத நிகழ்வுகளை தொகுத்து ஒவ்வொரு ஆண்டும் அறிக்கை வெளியிடுகிறது இந்த USCIRF அமைப்பு. மத சுதந்திரம் தொடர்பாக இந்தியாவை ‘கவலைக்குரிய நாடு’ என்று பலமுறை குறிப்பிட்ட USCIRF அமைப்பு, இந்த ஆண்டும் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2024 ஆண்டு முழுவதும் இந்தியாவில் நடைபெற்ற மதக்கலவரங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது USCIRF அமைப்பு. சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டது குறித்தும் மணிப்பூரில் பல மாதங்களாக நடந்த வன்முறை குறித்தும் இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. பழங்குடி ‘குக்கி’ மக்களை திட்டமிட்டுப் படுகொலை செய்து அவர்களின் வீடுகள் அழிக்கப்பட்டத்தையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும் மோடி அரசாங்கத்தின் சிறுபான்மை விரோத நடவடிக்கைகள் இந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன. குடியுரிமைச் சட்டங்கள், பசுகுண்டர்கள் செய்யும் கொலைகள், அயோத்தி தீர்ப்பு மற்றும் காஷ்மீர் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் சிறுபான்மையினருக்கு எதிரான நிலைப்பாட்டை மோடி அரசு எடுத்துள்ளதை அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிட்ட வன்முறை நிகழ்வுகள் அனைத்தும் வட மாநிலங்களில் நிகழ்ந்திருப்பது நாம் கவனிக்க வேண்டிய விடயம். எங்கெல்லாம் இந்துத்துவ வெறியை பாஜக தூண்டியதோ அங்கெல்லாம் மதக் கலவரங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திராவிட கொள்கையும், இடதுசாரி கோட்பாடும் எந்தளவுக்கு மத வெறியைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என்பது இந்த அறிக்கையின் வாயிலாக நமக்குத் தெரிகிறது.

பாஜக மோடி அரசு சிறுபான்மையினர் உரிமைகளில் தலையீடு செய்யும் வகையில் சட்டங்கள் இயற்றுகிறது. இஸ்லாமியர் அல்லாதோரை வக்பு வாரியத்தில் இடம்பெற செய்வது, வக்பு நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் கொடுப்பது எனப் பல்வேறு திருத்தங்கள் கொண்டுள்ள மசோதாவைக் கொண்டுவரத் துடிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இஸ்லாமியர்களைக் குறிவைத்து கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் போன்றே இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் வக்பு வாரிய மசோதாவிற்கும் இசுலாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அவற்றை நடைமுறையாக்க துடிக்கிறார்கள். 

இசுலாமியர்களின் புனித மாதமான இந்த ரமலான் மாதத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஹோலி பண்டிகையும் கொண்டாடப்பட்டது. ஆனால் உத்திர பிரதேசத்தில் ஹோலி அன்று முஸ்லிம்கள் வீட்டிற்குள் இருக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. சம்பல் பகுதியில் ஜும்மா மசூதி உட்பட 10 மசூதிகளை பிளாஸ்டிக் மற்றும் தார்பாலின் கொண்டு மூடி இருக்கின்றனர்.

மேலும் ரம்ஜான் நாளில் பொது பிரார்த்தனை மற்றும் ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு உ.பி போலீசார் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். அமைதியாக சாலைகளில் தொழுகை நடத்தினால் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று யோகியின் காவல்துறை கூறியிருக்கிறது. அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உ.பி அரசு அறிவித்தது பெரும் சர்சையைக் கிளப்பியது. பாபர் மசூதியை இடித்து ராமர் கோயிலை கட்டியும், சுற்றுவட்டார இடங்களை நில அபகரிப்பாளர்களுக்கு கொடுத்து அந்த மக்களை துரத்தவும் செய்ததோடு, குறிப்பிட்ட தூரத்திற்கு இறைச்சி விற்கக்கூடாது என ஆணையிட்டது உ.பி-யின் யோகி அரசு.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் ஒன்றில் நேர்காணலில் யோகி, 100 இந்து குடும்பங்கள் வாழும் பகுதியில் ஒரு முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், 100 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் பகுதியில் 50 இந்துக்களாவது பாதுகாப்பாக இருக்க முடியுமா? என மக்களிடையே நச்சு கருத்துக்களை பரப்புவதில் பேசினார் தொடர்ந்து அவரின் பல உரைகள் இஸ்லாமியர்களை மீது வன்மத்தை விதைக்கும் வகையிலேயே இருக்கின்றது. தலைமைகளின் இவ்வாறான வன்மங்கள் தொண்டர்களின் உளவியலின் கடுமையான மத வெறுப்புணர்வை விதைக்கும் என்பதை யோகி போன்ற பாஜக தலைவர்கள் அறியாதவர்கள் அல்ல. இருப்பினும் இதே நிலையே தொடர்கின்றது.

நேற்றும் இந்துத்துவா கும்பலை சேர்ந்த இருவர் மகாராஷ்டிர கிராமத்தில் உள்ள பள்ளி வாசலில் குண்டு வெடிக்கச் செய்துள்ளனர். தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தீவிரவாத செயலை தூண்டும் இத்தகையவர்கள் இருப்பினும், இதற்கு எதிர்வினை புரியும் இஸ்லாமியர்கள் வீடுகள் மட்டுமே பாஜக அரசினால் இடிக்கப்படுகிறது.

மகாராஷ்டிரா பாஜக அரசும் இந்துத்துவ சக்திகளுக்கு அடைக்கலமாகவும், இஸ்லாமியர்களை அடக்கவுமே செயல்படுகிறது. சமீபத்தில் அவுரங்கசீப் கல்லறையை வைத்து கலவரத்தைத் தூண்டும் வேலையில் இந்துத்துவ அமைப்புகள் தீவிரமாக இறங்கியிருக்க, இவர்களைத் திருப்திபடுத்தும் வகையில் மகாராஷ்டிர அரசு செயல்பட்டது. சாவா திரைப்படம் மூலமாக விதைக்கப்பட்ட இந்த கலவரத்தை விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தள் அமைப்புகளே தூண்டின. ஆனால் பட்னாவிஸ் அரசு உச்சநீதிமன்ற உத்தரவைக் கூட மீறி இசுலாமிய குடும்பத்தினரின் வீடு, கடைகளை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கினார். மேலும் இந்த கலவரத்திற்கு முன்பு, இந்துக்கள் கடையிலே இந்துக்கள் இறைச்சி வாங்க வேண்டும் என ‘மல்கர்’ சான்றிதழும் வழங்கியது.

இந்திய ஒன்றிய மோடி ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிர சட்ட நடவடிக்கை எடுப்பது ஒரு புறம் என்றால் மறுபுறம் இஸ்லாமியர்களை எதிரியாக சித்தரிக்கும் திரைப்படங்களை எடுக்கவும் ஊக்குவிக்கிறார்கள். இந்துக்களின் உளவியலை இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்பும் வண்ணம் காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரிஸ், தி சபர்மதி ரிப்போர்ட், சாவா என இஸ்லாமிய வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான திரைப்படங்கள் மோடியை விளம்பரதாரராகக் கொண்டு வெளிவருகின்றன. பொய்யை அடித்தளமாகக் கொண்டு அதன் மேல் ஒரு கோட்பாட்டினை கட்டியெழுப்பும் வகையில் இத்திரைப்படங்கள் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகின்றன.

பாஜக ஆளும் மாநிலத்தில் வாழும் முஸ்லிம்களின் நிலை இவ்வாறிருக்க, மாநிலக் கட்சிகளை மிரட்டுவதற்கு இந்திய ஒன்றிய அரசு பயன்படுத்தும் அமலாக்கத் துறை (ED), புலனாய்வு முகமை (NIA) போன்ற நிறுவனங்களைக் கொண்டு இஸ்லாமிய அமைப்புகளின் வீடுகளை குறிவைத்து சோதனை செய்வதும் தொடர்கிறது. இஸ்லாமியத் தலைமைகளின் மீது உபா, தேச விரோத சட்டங்கள் சுலபமாக பாய்ச்சப்படுகின்றன. அரசியல் கைதிகளை விசாரணை கைதிகளாக நீண்ட நாள் சிறைவாசத்தில் அடைக்கின்ற பாஜக-வின் போக்கும் நீள்கிறது.  

இஸ்லாமிய சமூகத்தின் கல்வி விகிதங்களும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் இல்லை. உலகின் மூன்றாவது முஸ்லிம் மக்கள் தொகை அதிகமுள்ள துணைக் கண்டம் இந்தியா. கிட்டத்தட்ட 20 கோடி மக்கள் வாழ்கின்றனர். ஏறக்குறைய 15% இருக்கும் முஸ்லிம்கள், அகில இந்திய உயர்கல்வி 2021-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் (AlSHE) 4.64% முஸ்லிம்களே உயர்கல்வி சேரும் நிலை உள்ளது. இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு இந்தியாவில் இல்லை. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற ஒரு சில மாநிலங்களில் ஓபிசி பிரிவில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அறிக்கப்படுகிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களிலும், இந்திய ஒன்றிய பாஜக அரசிலும் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வந்து சிறுபான்மை உதவித் தொகையும் தடை செய்யப்படுகிறது. 1 – 8ம் வகுப்பு வரையிலான சிறுபான்மையினர் உதவித் தொகை நிறுத்தப்பட்டது. ஆராய்ச்சி மாணவர்களுக்கு அளித்து வந்த உதவி தொகை ரத்து செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கல்விக்கான உதவித்தொகை ஒதுக்கீடு பல மடங்கு குறைக்கப்பட்டது. மெளலானா ஆசாத் உதவித் தொகை, பேகம் ஹஸ்ரத் மகால் உதவித் தொகைகள் ரத்து செய்யப்பட்டன.

கல்வியில் மட்டுமல்ல, பாஜக தனது ஆட்சியில் ஒரு முஸ்லிமைக் கூட வேட்பாளராகக் கூட நிறுத்தவில்லை. அமைச்சரவையிலும் சேர்க்கவில்லை. தலைமைப் பதவிகளிலும் இல்லை. மற்ற கட்சிகளில் கூட இன்றைய நிலையில் 24  நாடாளுமன்ற உறுப்பினர்களே மக்களவையில் இருக்கின்றனர்.

இவ்வாறு கல்வியில், சிறுபான்மையினர் உதவித்தொகையில், நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் என எந்த  உரிமையும் கிடைக்காமல் இஸ்லாமியர்கள் வாழும் சூழலில், இஸ்லாமியர்களை எதிரியாக சித்தரித்து தங்களின் ஓட்டு சதவீதத்தை அதிகமாக பெறுவதில் மட்டுமே பாஜக முனைப்பு காட்டுகிறது. அதற்கு உறுதுணையாக ஆர்எஸ்எஸ், சங்பரிவாரக் கும்பல்கள் செயல்படுகின்றன. அரசின் சட்டங்களில் இருந்து மக்களின் உள்ளங்கள் வரை இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வு எங்கெங்கும் தூவப்படுகின்றன. மதச்சார்பின்மையை மழுங்கடித்து இந்து ராச்சியமாக்குவதற்கு இந்துத்துவ பெருமைகள் இஸ்லாமிய வெறுப்புணர்வால் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்றன.

தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களின் மக்களும், அரசுகளுமே இஸ்லாமியர்களுடன் நல்லிணக்கம் பேணும் சக்திகளாக இருக்கின்றனர். தமிழர்கள் தங்களது வழிபாட்டு முறைகளால் இஸ்லாமியர்களுடன் ஒன்றுபட்டே  இருக்கிறார்கள். தர்கா வழிபாட்டிலும், வாழ்வியல் சடங்குகளிலும் பிணைந்தே வாழ்கின்றனர். திருப்பரங்குன்றம் முருகன் மலைக்கு அருகில் உள்ள சிக்கந்தர் தர்காவை இடிக்க இந்துத்துவ சக்திகள் முயற்சிகள் மேற்கொண்ட போதும் தமிழர்கள் அதனை தடுத்து நிறுத்தி தங்களின் ஒற்றுமையை நிரூபித்தனர். ஜனநாயக முற்போக்கு ஆற்றல்களுடன் இஸ்லாமியர்கள் இங்கு இணைந்திருப்பதால் வட மாநிலங்கள் போன்று பாஜக, ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ, சங்பரிவாரக் கும்பல்களினால் கலவரங்களை இங்கே எளிதில் பற்ற வைக்க முடியவில்லை. இந்தப் பிணைப்பு நீடிக்க வேண்டும்.

மக்களிடையே இந்த ஒற்றுமை என்றென்றும் நீடிக்க, தமிழ்நாட்டின் ஜனநாயக, முற்போக்கு ஆற்றல்களின் நட்பு சக்தியாக விளங்கும் இஸ்லாமிய அமைப்புகளின் ஒற்றுமையும் என்றும் தழைக்கட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »