பட்டியல் சமூகப் பிரிவுகளுக்குள் உள்ள குறிப்பிட்ட சமூகங்களை வகைப்படுத்தி உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என்று கடந்த ஆகஸ்ட் 1, 2024 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம். இதன் மூலம் தமிழ்நாட்டில் பட்டியல் சமூகத்தில் உள்ள அருந்ததியர் சமூக மக்களுக்கு. வழங்கப்பட்ட உள் இடஒதுக்கீடு செல்லும் என்பதை மீண்டும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
19-ஆம் நூற்றாண்டளவில் பட்டியலின சமூகங்களில் உள்ள சில சமூகங்கள் காலனிய ஆட்சி அதிகாரத்துக்கு முன்னேறியது. இதைப் போன்றதொரு வாய்ப்புகள் பெருமளவில் அருந்ததியர் மக்களுக்கு வாய்க்கவில்லை. இதனால் அம்மக்கள் ஒரு சமூகத் திரட்சியாக உருவாக முடியாத சூழல் இருந்தது. அவர்கள் சார்ந்த எந்த தொழிலும் அறிவு வளர்ச்சி ஏற்படக்கூடிய ஒன்றாக இல்லை, இந்த தொழில்களில் எந்த கருவி அறிவும் அல்லது தொழில்நுட்ப அறிவும் கைக்கொள்வதற்கான வாய்ப்பு அமையவில்லை. இதனால் அம்மக்கள் முன்னேற முடியவில்லை. அவர்களின் நிலை உயர்வதற்கு அருந்ததியர் மக்களுக்கு உள் இடஒதுக்கீடு தேவை என்பதை உணர வைக்கிறது இந்த புத்தகம்.
தமிழ்நாட்டில் பட்டியல் சமூகத்தின் இட ஒதுக்கீடு போராட்டமும், அருந்ததியர் இயக்கங்களும் :
சமூகத்தில் உள்ள குழுக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களை அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப உத்தரவாதப்படுத்தும் முறையே விகிதாச்சார பிரதிநிதித்துவம் ஆகும். தமிழ்நாட்டில் 1921-ல் வகுப்புவாரி உரிமையை அரசின் கொள்கையாக ஏற்று, முதல் முதலாக நீதிக்கட்சி வகுப்புரிமை சட்டம் பிறப்பித்தது. 1942-ல் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடப்பங்கீட்டிற்கான முன் வரைவை வைசிராயிடம் சமர்ப்பித்தார். அதன்பின்னர் அச்சமூக மக்களின் இடப்பங்கீட்டின் விழுக்காடு உயர்ந்த விவரங்கள் பற்றி இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.
கல்வி, வேலை மற்றும் பொருளாதாரத்தில் இருக்கும் வாய்ப்புகளை அவரவருக்கு போதுமான அளவு ஒதுக்கீடு (Adequately Reservation) செய்து தருவதை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறிக்கிறது. இந்த நாட்டின் வளங்கள், வளர்ச்சிகள் அனைவருக்கும் சமமாக பங்கிடப்படல் சாத்தியமாக வேண்டுமெனில், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அவசியமாகிறது என்பதையே தந்தை பெரியார் தனது வாதமாக முன் வைத்ததையும், சாதி ஒழியும் வரை வகுப்புவாரி உரிமை அத்தியாவசியமானது என்கிற பெரியாரின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது இப்புத்தகம்.
காலனிய காலத்திலே அருந்ததியர் மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடுக்கு விண்ணப்பித்து, பின்னர் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு கோரிக்கை வைத்தனர். 1920 -ஆம் ஆண்டு முதல் அமைப்பாக ராவ் சாகிப் எல்.சி. குருசாமி அவர்களால் ‘அருந்ததிய மகா சபா’ உருவாக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் ‘அருந்ததியர் நல சங்கம்’ என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அருந்ததியர் மக்களுக்கான பாடசாலைகள் மற்றும் தோல் பணியாளர்களுக்கான (சக்கிலியர்கள்) கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி, அந்த மக்களின் முன்னேற்றத்தை நோக்கிய எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி, அவர்களின் சமூக முன்னேற்றம் குறித்தான சுதந்திரமான பங்களிப்புக்கு உதவியவர் எல்.சி.குருசாமி.
காலனிய சமூகத்தால் ஏற்பட்ட அரைகுறை முதலாளித்துவ சமூக வளர்ச்சியினால் மின்மோட்டார், டிராக்டர் போன்ற நவீனத்துவம் விவசாய நிலங்களில் இருந்து அருந்ததியர் மக்களை அந்நியப்படுத்தியது. 1947 முதல் 1953 வரைவிலான பஞ்சம் அருந்ததியர் வாழ்வை மேலும் சீர்குலைத்தது. பண்ணை அடிமைகளாக நிலப்பரப்புகள் தொடர விரும்பாததால், இதனால் அருந்ததியர் மற்றும் அவர்களின் குழந்தைகள், நில பிரபுக்களுக்கும் அவர்கள் சார்ந்துள்ள ஊருக்கும் ஏவல் பணி செய்யும் மக்களாக மாற்றமடைந்தனர் என்பதை இந்த புத்தகம் விளக்கியுள்ளது.
ஒரு சமூகம் தொழில் சார்ந்தோ, அரசியல் சார்ந்தோ சிறிய அளவிலாவது உருக்கொண்டு, பின்பு அது தன் சமூகத்தை முன்னேற்றும் வேலை திட்டங்களில் ஈடுபடும். தன் மக்கள் தொகையை வலிமையாக மாற்றி தன் உரிமைகளை ஆதிக்க சமூகத்திடம் இருந்து வென்றெடுக்கும். இதன்மூலம் தனக்கான சமூக மூலதனத்தை உருவாக்கி நிலம், கல்வி, தொழில், அரசியல் என தன் தளங்களை விரிவுபடுத்தும். ஆனால் அருந்ததியர் மக்களின் சமூக நிலை நெடுங்காலமாகவே அவ்வாறு ஏன் மாறவில்லை என்பதை அச்சமூக மக்களின் சூழலை இப்புத்தகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
அருந்ததியர் மக்கள் தோல் தொழில்நுட்பத்தை அறிந்த சாதியினராக இருந்தபோதும், அதை சார்ந்த தொடர் அறிவு வளர்ச்சி சாதிய சமூகத்தால் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. உற்பத்தி கருவிகளோ, உற்பத்திக்கான தொழில்நுட்ப வளர்ச்சியோ இல்லாமல் கடைநிலை தொழிலாளர்களாகவே சுரண்டப்பட்டனர். இதனால் முழு வளர்ச்சியடைந்த கைவினைஞர்களாக அல்லது தொழில் வகைப்பட்ட பிரிவினர்களாக மாற இயலாமல் போனதால், தொழில்துறை வளர்ச்சி காலகட்டத்தில் தம்மை இணைத்துக் கொள்ள இயலாதவர்களாக தனிமைப்படுத்தப்பட்டனர். பொருளாதார மூலதனமும் போதிய தொழிற்கல்வியும் கிட்டாத நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் படிக்கட்டில் கடை நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்கள் முன்னேற முடியாததின் வரலாறுகளை விளக்குகிறது இப்புத்தகம்.
‘சாதிய படிநிலை உருவாக்கத்தில் மனுதர்மத்தை போலவே பொருளாதார நிலையும் ஒரு முக்கிய காரணியே’. நிலவுடைமையே ஒரு சாதியின் சமூக அதிகாரத்தை உறுதிப்படுத்தியது. நில உடைமை சமூகத்தில் கடைநிலையாய் நிறுத்தப்பட்டவர்கள் அருந்ததியர்கள் (செக்கிலியர்கள்). நீண்ட கால கட்டத்தில் சமூக அளவில் ஆன வளர்ச்சி நிலையை எட்டுமளவில் உற்பத்தி ஆற்றல்கள், கருவிகளோடு தொடர்புடையவர்களாக அவர்கள் மாறவில்லை என்பதே காலனிய காலத்திலான அவர்களது சமூக பொருளாதார நிலை சுட்டிக் காட்டுகிறது.
நில உடைமையும், தொழிற்சார்ந்த அறிவும் மறுக்கப்பட்டதால் சமூக வளர்ச்சியின் சங்கிலி அருந்ததியர் மக்கள் சமூகத்தில் அறுபட்டு நின்றது. காலம் காலமாக தமிழ் சமூகம் அருந்ததியர் மக்களுக்கு வழங்கிய ஒரே உரிமை இறந்த மாட்டின் மீதான உரிமை மட்டுமே. மாட்டின் தோலை உரிப்பவன், இறைச்சி உண்பவன் என தீண்டாமையை உருவாக்கிய இந்துத்துவ சமூகத்தின் உயர்சாதிகளே, பிற்காலத்தில் தோல் தொழிற்சாலைகளை உருவாக்கியது. அந்த தொழிற்சாலைகளும் அருந்ததிய மக்கள் அடிமட்ட வேலைகள் செய்யும் குழுக்களாகவே மாற்றப்பட்டு தேங்கிய நிலையில் இருப்பதை விளக்கமாக எடுத்துரைக்கிறது இப்புத்தகம்.
சாதிய படிநிலையில் இருக்கும் எல்லா சாதிகளிலும் கடைசி நிலையில் உள்ளவர்கள் அருந்ததியர்களே. “13 ஆம் நூற்றாண்டில் திருவோத்தூர் கல்வெட்டு அந்த வட்டாரத்தின் சமூகங்களை குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் சாதியப்படை நிலைகள் சமூகங்களை வைத்து எண்ணுதலை செய்துள்ளதாக ஆய்வறிஞர் நொபுரு கராசிமா தன் நூலில் குறிப்பிடுகிறார்
பட்டியல் சாதிக்குள்ளாகவே படிநிலையில் கீழே உள்ள அருந்ததியர் போன்ற சாதிகளின் நிலை பின் தங்கிய நிலையிலே இந்தியா முழுவதும் இருந்தது. இதற்கான கோரிக்கை மற்றும் போராட்டங்கள் எழுந்த நிலையில் 1965 ஆம் ஆண்டில் பி.என். லோக்குர் (B.N. Lokur) தலைமையில் லோக்குர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிசன் பற்றியும், இப்போது வந்த தீர்ப்பும் குறித்து புரிந்து கொள்ள உதவும் புத்தகமாக இருக்கிறது.
1984-ஆம் ஆண்டில் தான் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு என்று கோரிக்கை முதன் முதலாக வைக்கப்பட்டது. இதுதொடர்ந்து புகைந்து கொண்டே இருக்கும் கோரிக்கையாகவும் இருந்தது. அருந்ததியர் இயக்கங்கள் குறிப்பாக தலையில் மலம் சுமந்து அகற்றுவதை ஒழிக்க ஆதித்தமிழர் பேரவை நடத்திய போராட்டங்கள், மாநாடுகள், பேரணிகள் ஆகியவை இதில் விரிவாக உள்ளது.
சாதிய இழி படிநிலையில் அருந்ததியர் கீழே யாரும் இல்லாத நிலையில் சாதிய இந்துக்கள் மற்றும் பட்டியல் சாதியினர் என அனைவரின் சமூக புறக்கணிப்பையும் சுமக்கும் நிலையே உள் இட ஒதுக்கீடு கோரிக்கையை உயர்த்திப் பிடிக்க வைத்துள்ளது.
“இட ஒதுக்கீடு கோருவதில் என்ன தேவை மற்றும் காரணம் உள்ளதோ, அதே தேவவையின் காரணமும் உள் இடஒதுக்கீடு கூறுவதிலும் உள்ளது” என்பதே சமூக அரசியல் எதார்த்தம் என்பதை புலப்படுத்துகிறது இப்புத்தகம்.
பட்டியல் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டினை 18 விழுக்காட்டில் இருந்து 21 அல்லது 23 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும் என்று 2021இல் மே 17 இயக்கம் வலியுறுத்தியது. இதனை வலியுறுத்தி சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பும் மே 17 இயக்கம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒன்றிய மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடப்பங்கீடு வழங்குவதே அனைத்து சமூகங்களுக்கும் தீர்வாக அமையும்.
புத்தகம் கிடைக்கும் இடம்:
திசை புத்தக நிலையம்,
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ் அருகில், காமராஜர் அரங்கம் எதிரில்,
அண்ணாசாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600086
தொலைபேசி: 98840 82823
Location: https://goo.gl/maps/fZXqRjz6n1u461fc7