வங்கதேசத்தில் ஒரு மாத காலமாக நடந்த மாணவர்களின் போராட்டம், அதன் பிரதமரான ‘ஷேக் அசினா’வை நாட்டை விட்டு தப்பித்து ஓட வைத்திருக்கிறது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து இருக்கிறார். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திற்கு இன்று நடந்திருப்பதைப் போன்று சமீப காலமாக, இந்திய எல்லை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், மாலத்தீவு போன்ற நாடுகளின் உருவாகிய அமைதியின்மை மற்றும் ஆட்சி மாற்றங்கள் இந்தியாவின் ராஜதந்திர உறவுகளை கேள்விக்குள்ளாக்குகிறது.
பாகிஸ்தானிலிருந்து 1971-ம் ஆண்டு வங்க தேசம் தனியாகப் பிரிந்தது. இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வங்கதேசம் பிரிவதற்கு துணை புரிந்தது. வங்கதேசம் பிரிவதற்கு போராடிய ஷேக் முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் அசினா. 1980-ல், தந்தையின் அவாமி லீக் கட்சியின் தலைமை பொறுப்பேற்றார். 1996- 2001 மற்றும் 2009 – 2024 வரையிலாக, சுமார் 30 வருடங்கள் இவரே வங்கதேசத்தின் பிரதமராக இருந்திருக்கிறார்.
வங்கதேசத்தின் மக்கள் தொகை 17 கோடி. இதில் 4 கோடி இளைஞர்களுக்கு மேல் வேலை வாய்ப்பில்லை. இங்கு மொத்தம் 56% அளவிற்கு இடஒதுக்கீடு உள்ளது. இதில் தியாகிகளின் வாரிசுகளுக்கு மட்டும் 30% ஆகும். மற்றவை சிறுபான்மையினர், பெண்கள், உடல் ஊனமுற்றோர் என அனைத்தும் சேர்ந்து 56% வழங்கப்படுகிறது.
வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் அவதிப்படும் சூழலில், தியாகிகளின் வாரிசுகளுக்கு அளவுக்கு அதிகமாக இடம் கொடுக்கப்படுகிறது என்று ஆத்திரமடைந்த மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை செய்து வந்தனர். போராட்டங்களின் அழுத்தம் காரணமாக சில ஆண்டுகள் இடஒதுக்கீடு நிறுத்தி வைப்பதும் நடந்தது. அவ்வாறு 2018 முதல் ரத்து செய்யப்பட்ட சூழலில், ஜூன் 2024 அன்று, இந்த இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைப்பது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால் மாணவர்களின் போராட்டம் ஜூலை, 1 முதல் தீவிரமடைந்தது. போராடும் மாணவர்கள், நாங்கள் எந்த அரசியல் இயக்கம், கட்சி சாராதவர்கள் என்றும், சீர்திருத்தத்திற்கான போராட்டம் என்றே அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் காலவரையின்றி அவை மூடப்பட்டன. அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் அவர்கள், கலகத்தில் ஈடுபட்ட அரசு சார்பான மாணவர் அமைப்புகள் மற்றும் காவல் அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தினாலே, வருவதாக மறுத்து விட்டனர்.
தலைநகர் டாக்காவில், பேரணி, ஊர்வலம், பொதுக்கூட்டம் என அனைத்தும் காவல் துறையால் தடை செய்யப்பட்டது. இணையம் துண்டிக்கப்பட்டது. அரசு கட்டிடங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எரிப்பு, கல்வீச்சு என மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இதனால் 130 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காவலர்களின் துப்பாக்கிச் சூட்டினால், எறிகுண்டுகளால் கொல்லப்பட்டனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நிலைமை எல்லை மீறவே, இராணுவம் வீதிகளில் குவிக்கப்பட்டது. ஊரடங்கை மீறியும் சாலைகளில் இளைஞர்கள் குவிந்தனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் ஜூலை 21-ல் இடஒதுக்கீடை ரத்து செய்தது. அரசு வேலை வாய்ப்புகள் இனி, 93% அளவிற்கு தகுதி அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் என தீர்ப்பளித்தது. மாணவர்களின் போராட்டத்திற்குக் காரணமான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனைக்கு, உச்ச நீதிமன்றம் மூலமாக தீர்வை எட்டிய பின்பு, ஷேக் அசினா பதவி விலக வேண்டும் என்ற போராட்டம் தொடர்ந்தது.
‘சிறையிலுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்க வேண்டும், இதுவரை கொல்லப்பட்ட 131 பேருக்கு நீதி வேண்டும், சில அமைச்சர்கள் பதவி நீங்க வேண்டும்’ என வலியுறுத்தி மீண்டும் மாணவர் தலைமைகள் போராட்டத்தை தொடரப் போவதாக கூறினர்.
இதுவரை வேலை வாய்ப்பின்மைக்காக நடந்த போராட்டங்கள், ஷேக் அசினா பதவி நீங்க வேண்டும் என்பதாக மறு வடிவமெடுத்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 4 அன்று ‘அநீதிகளுக்கு எதிரான மாணவர் இயக்கம்’ நாட்டு மக்களை அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கமாக சேர அறிவித்தது. மக்களை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியது. வங்கி மற்றும் இதர பயன்பாடுகளை நிறுத்தக் கோரியது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், பல்லாயிரக்கணக்கானோர் வங்கதேசத் தலைநகரான டாக்கா வீதிகளில் திரண்டனர். அரசின் ஆதரவாளர்கள், காவலர்கள், போராட்டக்காரர்கள் மோதலில் 13 காவலர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதுவரையில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இராணுவ தளபதி அறிவித்திருக்கிறார். இந்நிலையில் இராணுவ தளபதிகள் பலர், மாணவர் அமைப்புகளுடன் நிற்பதாக மாறினர். அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வாசகங்களை எழுதினர்.
ஷேக் அசினாவும் பதவியை ராஜினாமா செய்து வங்க தேசத்திலிருந்து வெளியேறி விட்டார். அவர் தங்கியிருந்த பிரதமர் இல்லம் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஷேக் அசினா இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கிறார். ராணுவம் இடைக்கால அரசை அமைப்பதாக அந்நாட்டின் இராணுவ தளபதி ‘வாக்கர் உஸ் ஜமான்’ கூறியிருக்கிறார். இதனை அமெரிக்கா வரவேற்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் நிலைபெற செய்யும் வழிகளில் ஒன்றானதாக, வங்கதேசத்தின் போராட்டத்தை சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் வரையறுக்கிறார்கள். இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் சீனா, ரஷ்யாவுடன் நெருக்கமானதால் அங்கு கலகங்களை ஏற்படுத்தி ஆட்சி மாற்றம் கொண்டு வந்ததைப் போலவே வங்கதேசத்திலும் ஏற்படுத்தியிருக்கலாம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். சீனாவின் வர்த்தக, இராணுவ நலனுக்கான பட்டுச்சாலை திட்டத்தில் வங்கதேசத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம், ரஷ்யாவுடன் அணு உலை அமைக்க போடப்பட்ட ஒப்பந்தம் போன்றவை அமெரிக்க சார்புக்கு எதிராக இருப்பதால், மாணவர் போராட்டத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கருதுகின்றனர். மாணவர்கள் முன்னெடுத்த நியாயமான போராட்டம், மடை மாற்றப்பட்டதன் பின்னணிகள் முழுமையாக விசாரிக்கப்பட்டால் ஒழிய இந்த உண்மைகள் வெளிவரப் போவதில்லை.
வங்கதேசத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த நிலையினால், இந்தியாவிற்கு நெருக்கடிகள் உருவாகும் சூழல்கள் முற்றியிருக்கிறது. ஷேக் அசினா ஆட்சியில் சாலை, ரயில் இணைப்புகள், பாதுகாப்பு, எல்லை மேலாண்மை போன்ற பலவற்றிலும் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் வலுவாக இருந்தன. 4000 கோடி அளவிற்கான பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தியாவுடன் சமீபத்தில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தின் ஷேக் அசினா-வின் அவாமி லீக் கட்சிக்கு எதிர் கட்சிகளான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP), ஜமாத்-இ- இஸ்லாமி கட்சியும் இந்தியாவின் நட்பு கட்சியாக இருந்ததில்லை. BNP கட்சியின் ‘கலிதா ஜியா’ இப்போது சிறையில் இருக்கிறார். அவர் இந்திய விரோத நிலைப்பாட்டையே தேர்தலில் பிரச்சாரமாக முன்வைத்தவர். ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவைக் கொண்ட கட்சியாக இருக்கிறது. இதனால் எந்த கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் இந்தியாவிற்கு நெருக்கடியாகவே அமையப் போகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மோசமாகி மக்களின் போராட்டம் எழுந்த போது, இலங்கை அதிபராக இருந்த தமிழினப்படுகொலை குற்றவாளியான ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பி ஓடினார். அதைப் போலவே இன்று வங்கதேசப் பிரதமரான ஷேக் அசினாவும் தப்பித்து வெளியேறி இருக்கிறார். இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, மியான்மர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும், இதே போன்ற நெருக்கடியான சூழல் ஏற்பட்டு ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தெற்காசியாவில் நடக்கும் இத்தகைய அரசியல் மாற்றங்கள், அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை தக்க வைக்கும் காரணங்களால் நடத்தப்படுகிறது என்பதே புவிசார் அரசியல் செயல்பாட்டாளர்களின் குற்றச்சாட்டு. இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள், இந்தியாவின் ராஜதந்திர உறவுகள் தோல்வி அடைவதையே வெளிப்படுத்துகிறது.
இந்தியாவைச் சுற்றியாக அரசியல் நெருக்கடிகள் முற்றியிருக்கும் இந்த நிலையில், தமிழ்நாட்டு பாஜக தலைவரான அண்ணாமலை, வங்கதேசத்திற்கு உருவாகியிருக்கும் இந்த நெருக்கடியால், வங்க தேசத்திலிருந்து, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதி பாதிக்கப்படும். இதனால் திருப்பூருக்கு வாய்ப்பு கிடைக்கும் என அறிக்கை விட்டிருக்கிறார். “ஜவுளித் தொழிலின் முக்கிய மூலப்பொருட்களாக பருத்தி நூல், பஞ்சு, நெசவு எந்திர பாகங்கள் போன்றவற்றை குசராத்தி பனியா மார்வாடி நிறுவனங்களே அதிகமாக கைவசம் வைத்திருப்பதும், இப்பொருட்களில் ஏற்பட்ட விலை உயர்வுகளே திருப்பூர் ஜவுளித் தொழிலில் சரிவைக் கண்டதற்கான காரணமாக இருக்கிறது“.
மேலும் பணமதிப்பிழப்பு, GST வரி விதிப்பு போன்றவையும் திருப்பூர் ஜவுளித் தொழில் நசிவிற்கு காரணமாக இருந்தது. இப்பொருட்களை பதுக்கி வைத்து குசராத்திகளின் லாபம் பெருகியதே ஒழிய, தமிழ்நாட்டிற்கு ஒரு லாபமும் கிடைத்ததில்லை. பனியா மார்வாடி தொழில் வளர்ச்சிக்கான விசுவாசிகளாக செயல்படும் பாஜக கட்சியால்தான் திருப்பூர் தொழில் நாசமானது என்பதை அண்ணாமலை அறியாதவர் போல நடிப்பதையே, அவரின் இந்த அறிக்கை காட்டுகிறது.
தமிழர் பெருங்கடல் என்பது, வல்லாதிக்க நாடுகளின் வர்த்தகம் மற்றும் இராணுவ விரிவாக்கத்திற்கு மிகவும் முக்கியமான இடம். இந்தப் போட்டியில் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாதென்றே, இந்தியாவின் முன்னாள் ஆட்சியாளர்கள், அணிசேராக் கொள்கையை இந்தியாவின் கொள்கை நிலைப்பாடாக வகுத்தனர். இலங்கையை கைப்பிடிக்குள் வைத்திருக்க, தமிழீழ விடுதலைக்குப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு உதவி புரிந்தனர்.
ஆனால் சர்வதேச அரசியலின் புவிசார் முக்கியத்துவத்தைப் பற்றிக் கவலைப்படாத இந்திய ஆட்சியாளர்கள், அணிசேராக் கொள்கையிலிருந்து நழுவினர். இந்தியாவின் பாதுகாப்பு அரணாக இருந்து விடுதலைப் புலிகளை அழித்து, ஈழத் தமிழர்களின் தனி ஈழக் கோரிக்கையை நசுக்கினர். தமிழினப்படுகொலை செய்த இலங்கைக்கு துணை நின்றனர்.
இந்தியப் பார்ப்பனிய அதிகார மட்டத்தின் வழிகாட்டுதலின் பேரில், இந்திய ஆட்சியாளர்கள் உருவாக்கிய வெளியுறவுக் கொள்கையை தமிழர்களுக்கான தனியீழத்தை அழித்தது. தமிழர் கடலில் இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தமிழர்களுக்கான தனிநாடு என்பது இந்திய நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத பார்ப்பனிய இனவெறி, இந்திய பாதுகாப்பு நலன்கள் கேள்விக்குறி ஆனாலும்கூட பரவாயில்லை, தமிழர்களுக்கு தனி நாடு அமைந்து விடக் கூடாது என்பதிலே மட்டும் மூர்க்கமாக இருந்தது.
இப்படிப்பட்ட பார்ப்பனர்கள் வகுக்கும் வெளியுறவுக் கொள்கைகளால், இன்று அண்டை நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு எதிரி நாடுகளாக நிற்கின்றன. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த எந்தக் கேள்வியுமின்றி கடக்கும் மாநிலங்களால், பார்ப்பனீயம் வகுத்த கொள்கையுடன் செயல்படும் இந்தியாவின் வெளியுறவுத் துறையின் தோல்வி மீண்டும் அம்பலமாகி இருக்கிறது. தமிழீழத்திற்கு இழைத்த துரோகத்திற்குரிய பலனை இனிவரும் நாட்களில், அண்டை நாடுகள் அளிக்கப் போகும் நெருக்கடிகளால் இந்தியா அனுபவிக்கப் போகிறது.
வங்கதேச மாணவர்களின் போராட்டத்தின் நோக்கம் சரியானது என்றாலும், போராட்டத்தின் வெற்றிக்கு பிறகு போராட்டக்காரர்கள் சிலரின் செயல்கள் ஏற்புடையதாக இல்லை. பிரதமர் வீட்டை சூறையாடியுள்ளனர். அவரது உள்ளாடைகளை எடுத்து காட்டி முகம் சுழிக்கும் வகையில் நடந்துகொண்டனர். பிற இஸ்லாமிய நாடுகள் போலல்லாமல், வங்கதேசம் மதத்தின் அடிப்படையில் ஒன்றிணையாமல் வங்க மொழியின் அடிப்படையில் ஒன்றிணைந்தது. மொழியே வங்கப் பிரிவினைக்கு அடிப்படையாக அமைந்தது.
தமிழ்நாட்டில் நடந்த மொழிப் போரினைப் போல வங்கத்திலும் மொழிப் போரினை தலைமையேற்று நடத்தியவர் வங்கத்தின் தந்தையான ‘ஷேக் முஜிபுர் ரகுமான்’. பாகிஸ்தானில், உருது மொழியினை மட்டும் தேசத்தின் மொழியாக ஏற்க முடியாது, பெங்காலியும் தேசத்தின் மொழியாக வேண்டும் என்று கிழக்கு பாகிஸ்தானில் கிளர்ச்சி செய்து, இராணுவ ஆட்சியை எதிர்த்து, சிறை சென்றவர். மாணவர் அமைப்புகளைக் கட்டி அரசியல் அதிகாரத்திற்கு களமாடியவர். தொடர்ந்து சிறைவாசம், வீட்டுச்சிறை என பாகிஸ்தான் துன்புறுத்தினாலும் வங்கதேசத்தின் விடுதலைக்கு தூணாக இருந்தவர். இந்தியாவின் தலையீட்டுக்குப் பின்னரே வங்கதேசம் விடுதலையானது. முஜிபுர் ரகுமான் வீட்டுச்சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வங்கதேசத்தின் தந்தையானார். இன்று அவரின் சிலைகள் உடைக்கப்படுகின்றன. வங்க தேசத்திற்காக தன்னையே அர்ப்பணித்த தலைவனின் தியாகத்தை உணராதவர்கள் அவரின் சிலைகளை உடைக்கின்றனர்.
அதேவேளை, அங்குள்ள இந்து கோவில்களை இடிப்பதாகவும், இந்துக்களை தாக்குவதாகவும் சங்கிகள் மிகைப்படுத்தி இங்கு பொய் பிரச்சாரம் செய்கின்றனர். மாணவர் போராட்டத்தில் ஊடுருவிய சிலரின் தகாத செயல்களை, வேண்டுமென்றே அங்குள்ள இஸ்லாமியர்கள், இந்து சிறுபான்மையினரைத் தாக்குவதாக கதைகளைக் கட்டுகின்றனர். ஆனால் அங்குள்ள கோவில்களைப் பாதுகாக்கும் பணிகளை, இந்த போராட்டத்தை முன்னெடுத்த ‘அநீதிக்கெதிரான மாணவர் அமைப்புகள்’ மேற்கொள்கின்றனர் என்பதே உண்மையான செய்தியாக இருக்கிறது.
மேலும் அவர்கள், ‘இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகள் பிரச்சனைகளின் மையமாக இருக்கும் போது, அந்த நாடுகள் ‘உலக அமைதி குறியீடு-ல் (World Peace Index)’, எந்த பிரச்சனையும் இல்லாத இந்தியாவை விட முன்னணியில் எப்படி இருக்க முடியும், எனவே அந்த குறியீடுகள் போலியானவை, இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்க திட்டமிட்டு நடப்பவை’ என்று கூறுகின்றனர். இந்தியா இந்த அமைதிக் குறியீட்டில் 116 வது இடத்தில் இருக்கிறது. இலங்கையும், பங்களாதேசும் நூறு இடங்களுக்குள் இருக்கும் போது, அமைதி நாடான இந்தியாவிற்கு 116-வது இடத்தை எப்படி வழங்க முடியும் என்கின்றனர்.
மோடியின் பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் நடந்த மக்கள் திரள் போராட்டங்கள் ஒன்றிரண்டு அல்ல. பெரும் பட்டியலே இருக்கிறது. டெல்லியில் திரண்ட விவசாயப் போராட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம் எதிர்ப்பு போராட்டங்கள், தமிழர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டங்கள், நீட் எதிர்ப்பு போராட்டம், பாஜக எம்.பியான பிரஜ் பூசனுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் திரண்ட போராட்டம் எனப் பெரும் போராட்டங்கள் ஒருபுறம், பற்றியெரிந்த மணிப்பூர் கலவரம், இஸ்லாமியர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைகள் மறுபுறமென பலவும், இந்தியாவில் அமைதியின்மைக்கு சான்றாக இருக்கும் போது சங்கிகள் இந்த மதிப்பீடை போலியானது என்று எப்படி சொல்ல முடியும்?
வங்க தேசத்தின் வரலாற்றுப் பார்வையுடன் இணைந்து இந்தப் போராட்டத்தைப் பார்க்கத் தவறும் வங்க தேச இளைஞர்கள், மதத்தை முன்னிறுத்தும் வேலையை செய்கிறார்கள். மக்களை மத அடிப்படைவாதத்தை நோக்கி தள்ளுவது மிகவும் ஆபத்தானது.
மாணவர் போராட்ட எழுச்சியின் நோக்கமே சிதையக் கூடியது. மாணவர்களின் எழுச்சியைக் கையகப்படுத்தத் துடிக்கும் மத அடிப்படைவாதக் கட்சிகளையும், அந்நிய சக்திகளின் கைப்பாவைகளாக இருந்து மாணவர்களின் போர்வையில் ஊடுருவி போராட்ட நோக்கத்தை திசைதிருப்புபவர்களையும், களைய வேண்டிய செயல்பாடுகளை இப்போராட்டத்தை ஒருங்கிணைத்த ‘அநீதிக்கெதிரான மாணவர் அமைப்புகள்’ விரைவில் செய்வதே வங்கதேசத்தின் வருங்காலத்திற்கு நன்மையானதாக இருக்க முடியும்.