பாஜகவின் மோடி தலைமையிலான அரசு ஊழலை ஒழிக்க வந்துள்ளதாக கூறியதற்கு நேரெதிராக கடந்த ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழலை செய்து உலக வரலாற்றிலே ஊழலுக்காக தனியிடம் பிடித்துள்ளதை கடந்த வருட ‘CAG அறிக்கை‘ தெரியப்படுத்தியது. இவர்கள் மீது இன்று வரை பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுக்கள் இருந்தாலும், “ரபேல் போர் விமான ஊழல், நீரவ் மோடி ஊழல், பிட்காயின் ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழல், தேர்தல் பத்திர ஊழல், ஆருத்ரா ஊழல், பி.எம்.கேர்ஸ் ஊழல்,” போன்றவை மட்டும்தான் சற்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் மீதமுள்ள பல்வேறு ஊழல்களை குறித்து (CAG அம்பலப்படுத்தியது உள்ளிட்ட) இதுவரை எந்தவொரு விவாதமும் மக்களிடையே நடைபெறவில்லை.
அதோடு தற்போது கடந்த ஜூன் 2024-ல் தொலைத்தொடர்பு சேவைத் துறைக்கான 5ஜி அலைக்கற்றையின் ஏலம் முடிந்து உள்ளது. ஆனால் இதிலும், கடந்த 2022ம் ஆண்டில் மோடி அரசு தன் நண்பர்களுக்காக சுமார் 5 லட்சம் கோடி மதிப்பிலான 5ஜி ஏலத்தை வெறும் 1.5 லட்சம் கோடிக்கு ஏலம் விட்டு எவ்வாறு முறைகேடு செய்ததோ, அதேபோலவே தற்போதும் செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 26 அன்று 5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ.96,238 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்த ஒன்றிய அரசுக்கு வெறும் ரூ.11,340 கோடி மட்டுமே ஏலத்தில் கிடைத்துள்ளது. இந்த ரூ.11,340 கோடி என்பது அலைக்கற்றை ஏலம் மூலம் ஒன்றிய அரசு திரட்ட திட்டமிட்டிருந்த தொகையில் வெறும் 12% ஆகும்.
2024ம் ஆண்டில் காலாவதியாகும் அலைக்கற்றை மற்றும் 2022ல் நடைபெற்ற முந்தைய ஏலத்தின் விற்கப்படாத அலைக்கற்றை ஆகியவற்றை தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்களின் அலைக்கற்றை தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்த ஆண்டு ஏலத்திற்கு விடப்பட்டன.
இந்த ஏலத்தில் 800 மெகா ஹெர்ட்ஸ் (MHz), 900 MHz, 1,800 MHz, 2,100 MHz, 2,300 MHz, 2,500 MHz, 3,300 MHz, 26 ஜிகாஹெர்ட்ஸ் (GHz) ஆகிய அலைவரிசைகளில் கிடைக்கக்கூடிய அனைத்து அலைக்கற்றைகளும் ஏலம் விடப்பட்டன.
இந்த ஏலத்தில் பங்கேற்க அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 3,000 கோடி ரூபாய் டெபாசிட் செலுத்தியது. அதேபோல பார்தி ஏர்டெல் நிறுவனம் 1,050 கோடி ரூபாயும், வோடபோன் ஐடியா 300 கோடி ரூபாயும் இந்த ஏலத்திற்கு டெபாசிட்டாக செலுத்தியுள்ளன. இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் பெற்றுள்ளது தெரிய வருகிறது.
இப்போதைய 5ஜி ஏலத்தில் அம்பானி நிறுவனத்துடன் பார்தி ஏர்டெல், மற்றும் வோடபோன் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே பங்கெடுத்துள்ளன.
போட்டியாளர்களை ஒழித்துக் கட்டி, பெரும் முதலாளிகள் லாபம் பெறவே இந்த ஏலம் நடத்தப்பட்டுதுள்ளது. இதனால் அரசுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த மூன்று நிறுவனங்களும் தற்போது அலைபேசியின் மாதாந்திர சராசரி கட்டணத்தை உயர்த்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இனி இந்த பெருநிறுவன முதலாளிகள் நிர்ணயிப்பதுதான் விலை. அதை மறுப்பேச்சுக்கு இடமில்லாமல் ஏற்றாக வேண்டிய நிலையில் கட்டாயத்தில் மக்கள் அனைவரையும் அலைபேசிக்கு அடிமைகளாக மாற்றியுள்ளனர் இந்த பெருநிறுவன கொள்ளையர்கள்.
”2022-ல் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரை விலை போயிருக்க வேண்டிய 5ஜி அலைக் கற்றை ஏலம், மிகக்குறைவாக 1.5 லட்சம் கோடி ரூபாய் வரை மட்டுமே ஏலம் போயிருப்பதன் பின்னணியில் மோடியின் நண்பர்களான அதானியும், அம்பானியும் இருந்ததே காரணம்”. அதோடு பொதுத்துறை நிறுவனமான BSNL அதில் ஓரங்கட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் முகேஷ் அப்பானியின் ஜியோ நிறுவனம்தான் முதலிடம் பிடித்தது.
முன்னதாக 30 மெகா ஹெர்ட்ஸ் 2ஜி அலைக் கற்றை ஏலத்தில் நாட்டிற்கு 1.75 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அப்போதைய CAG அறிக்கை கூறிய நிலையில், கடந்த 2022ல் 5ஜி ஏலத்தில், மோடி அரசு வெறும் ரூ.1.5 லட்சம் கோடியை மட்டுமே ஈட்டியது குறிப்பிடத்தக்கது. பத்து 5ஜி அலைவரிசைகளில் 72 GHz அலைக்கற்றை சுமார் 20 வருட ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்டது. அரசு நிர்ணயித்த விலையில் ”இந்த அலைக்கற்றையின் மொத்த மதிப்பு 4.3 லட்சம் கோடி, ஆனால் அரசு பெற்றதோ வெறும் 1.5 லட்சம் கோடி ரூபாய். இதில் சுமார் 2.8 லட்சம் கோடி அரசுக்கு நட்டம்”. அதுபோலவே தற்போதும் ”96,238 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்த ஒன்றிய அரசுக்கு வெறும் ரூ.11,340 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இதிலும் சுமார் 84,898 கோடி அரசுக்கு நட்டம்”. ஆனால் மோடியின் நண்பர்களுக்கோ பண வேட்டை.
2010, நவம்பரில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட ரூ.1.75 லட்சம் கோடி இழப்பை, நாட்டையே உலுக்கிய ஊழல் எனவும், உலகளவில் இந்தியாவை மிகப்பெரிய ஊழல் நாடாக ‘2ஜி’ அடையாளப் படுத்தியது எனவும் 2ஜி ஊழலை பற்றிப் பேசிய ஊடகங்களும், மக்களும், அரசியல்வாதிகளும் இன்று மோடி அரசு அதைவிட ஐந்து மடங்கிற்கும் அதிகமாக ஊழல் செய்துள்ளது என அதே CAG அறிக்கை தெரிவித்தும் வாய்மூடி மெளனமாக இருக்கிறார்கள். அப்போது 2ஜி ஊழலுக்காக வழக்கு தொடர்ந்த பாஜகவின் சுப்பிரமணியசாமி தற்போது பாஜகவின் இந்த மெகா ஊழலுக்கு வழக்கு தொடராதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
2022ல் பாஜக ஆட்சியில் ”5ஜி ஸ்பெக்டரம் ஏலத்தில் அம்பானி, அதானி, மிட்டல் கூட்டாளிகள் எடுத்த ஏலத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு” ஏற்பட்டுதுள்ளது. அதேபோலவே தற்போதும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதைப்பற்றிய எந்தவொரு செய்தியும் பெரிதாக விவாதிக்கப்படவில்லை. மக்களுக்கு தெரியவுமில்லை. மோடி அரசின் இந்த 5ஜி உள்ளிட்ட பல மெகா ஊழல்களை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய ஊடகங்கள் மோடி அரசின் ஊதுகுழலாக மாறிய நிலையில் இந்த செய்திகள் மக்களிடம் சென்றடையவில்லை.
அதானி, அம்பானி போன்ற பனியா கும்பல்களின் வியாபார நலனுக்காக பொதுத்துறை நிறுவனமான BSNLஐ ஒரங்கட்டி 5ஜி அலைக்கற்றை ஏலத்தை பெரும் நட்டத்தில் விற்றுள்ளது மோடி அரசு. இப்படியாக இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து அந்த தனியார் நிறுவனங்கள் மக்களை சுரண்டி கொழுத்து வளர்வதற்கு வழி செய்து வருகின்றது மோடி அரசு. மோடி அரசின் மோசமான இந்த 5ஜி ஊழலால் தற்போது இந்த பெருநிறுவனங்கள் நிர்ணயித்த விலை ஏற்றத்தில் சாதாரண ஏழை எளிய மக்கள்தான் பெரிதளவில் பாதிக்கப்படப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.