பாஜக மற்றும் வலதுசாரி இந்துத்துவாதிகளின் முகமூடியாக, அவர்கள் கூறும் தேசபக்தியின் வெளிப்பாடாக ராணுவமும் பாதுகாப்புத் துறையும் சித்தரிக்கப்படுகிறது. நாம் தமிழின உரிமைகள் குறித்து பேசும்போதெல்லாம் “எல்லையில் ராணுவ வீரர்கள்…” என்று தேசபக்தி பாடம் எடுக்கும் பாஜக, உண்மையில் ராணுவத்திற்கு செய்த இடர்களை (ரபேல் ஊழலைத் தவிர) இங்கு யாரும் பெரிதாக விவாதிக்கவில்லை.
அக்னீபத் திட்டம் மூலம் ராணுவத்தினருக்கு குறுகிய காலத்திற்கு பணி வழங்குவது, மாற்றுத்திறனாளி ராணுவத்தினரின் ஓய்வூதியத்திற்கு வரி விதித்தது, ஒரே பதவி-ஒரே ஓய்வூதியம் திட்டம் என மோடி அரசாங்கம் செயல்படுத்திய பல திட்டங்களால் ராணுவத்தினரையும் போராடும் நிலைக்குத் தள்ளியது பாஜக அரசு.
ராணுவத்தில் பணியின்போது காயமடைந்தால் அவர்களுக்கு ஏற்படும் இயலாமையின் (ஊனத்தின்) சதவீதத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் மூலம் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது. ஆனால் ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிராக நீதிமன்றம் சென்ற அரசு மோடி அரசு. 2014-2017க்கு இடையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 800 வழக்கு மேல்முறையீடுகளை பாஜக அரசு தாக்கல் செய்திருக்கிறது.
ராணுவ வீரர்கள் தங்கள் வருங்காலத்திற்கு ஆதாரமான ஓய்வூதியத்திற்கு போராடும் போதெல்லாம் அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றது பாஜக அரசு. 2014-ல் அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான மனோகர் பாரிக்கர், ‘மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்கள் தங்கள் ஓய்வூதியத்திற்காக மேல்முறையீடு செய்வதை நிறுத்த வேண்டும் என்று அறிவித்தார்‘. அப்போதே பல முன்னாள் ராணுவ வீரர்களும் அவர்களின் அமைப்புகளும் பாஜக அமைச்சரின் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆயினும் 2017வரை மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்கக்கூடாதென்று நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது பாஜக. 2018இல் ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலின்படி ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்குகளை நடத்துவதற்காகவே 48 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது.
பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையில் நடந்த சட்ட மோதல்களுக்கு சான்றாக ஸ்க்ராட்ரான் லீடர் புனித்குமார் பரீக்கின் வழக்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய விமானப்படையில் பணி புரிந்து ஓய்வுபெற்றவர் ஸ்க்ராட்ரான் லீடர் புனித் குமார் பரீக். தனது முதுகுத்தண்டில் காயம் அடைந்து நிரந்தர மாற்றுத்திறனாளியான புனித் குமாரின் ஓய்வூதியத்தியத்திற்கு ஆதரவாக ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் 2017இல் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் கடந்த 2018 இல் பாதுகாப்பு அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. மேலும் பாஜக அரசு தனது சார்பாக வாதிடுவதற்கு சொலிசிட்டர் ஜெனரல் பொறுப்பில் இருக்கும் துஷார் மேத்தாவை அனுப்பியது. முன்கூட்டியே ஓய்வு பெற்றத்தைக் காரணமாக் கூறி அவருக்கு ஊனமுற்றோர் ஓய்வூதியம் கொடுக்கக்கூடாது என்று வாதிட்டது. (வழக்கு விவரம்: https://scroll.in/article/903366/disability-pension-retired-soldiers-feel-betrayed-as-bjp-challenged-800-cases-despite-promise)
இது மட்டுமல்லாது கடந்த செப்டம்பர் 2023இல் ஆயுதப்படை வீரர்களுக்கு ‘மாற்றுத்திறனாளி ஓய்வூதியம்’ வழங்குவதில் புதிய விதிகளை கொண்டு வந்தது மோடி அரசு. இந்த புதிய விதிகளின்படி உடல் பாகங்களை இழந்த ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தைக் கணக்கிடும் முறைகளை மாற்றியது பாஜக அரசு. இதன் மூலமும் ராணுவ வீரக்களுக்கு ஓய்வூதிய முறையில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன.
மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்தைப் பொறுத்தவரை, தன் இயலாமைக்காக(disability) ஒரு சிப்பாய் ரூ5 ஆயிரம் பென்ஷன் பெறும்போது அதே இயலாமைக்காக ஒரு உயர் அதிகாரி ரூ60,000 வரை பென்ஷன் வாங்குகிறார். இத்தகைய சீரற்ற ஓய்வூதியத்தை எதிர்த்துதான் ராணுவத்தினர் ‘One Rank One Pension’ எனும் திட்டத்திற்காக போராடி வருகின்றனர். ஆனால் ‘தேசபக்தி’ எனும் ஒற்றை வார்த்தைக்குள் இத்தனை சிக்கல்களையும் மறைத்து பாஜக சார்பு இந்துத்துவவாதிகள் நாடகமாடுகின்றனர்.
இந்துத்துவவாதிகளின் இந்த ‘தேசபக்தி’ நாடகத்தை அம்பலப்படுத்தி ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் கடந்த ஆண்டுகளில் போராடியுள்ளனர். கடந்த 2015இல் மோடி அரசு அறிவித்த ‘ஒரு பதவி-ஒரே ஓய்வூதியம்’ (OROP) திட்டத்திற்கும் ராணுவத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘விருப்ப ஓய்வு’ பெற்ற ராணுவத்தினர் OROP திட்டம் மூலம் ஓய்வூதியம் பெற இயலாது என்று மோடி அரசாங்கம் கூறியதற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். ஏனெனில் பெரும்பாலான ராணுவத்தினர் 17-18 ஆண்டுகள் பணியாற்றி 40 வயதை எட்டும் போது விருப்ப ஓய்வு பெறுகிறார்கள். (இவ்வாறு விருப்ப ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் குறைந்தது 40% இருக்கும்). விருப்ப ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’ மூலம் பலன் கிடைக்கக் கூடாது என்றே பாஜக அரசு இந்தத் திட்டம் கொண்டு வந்ததாகக் கூறி ஓய்வுபெற்ற ராணுவத்தினர் தில்லி ஜந்தர் மந்தரில் போராடினர்.
இவ்வாறு ஒருபுறம் தேசபக்தி பாடம் எடுத்துக்கொண்டே மறுபுறம் ராணுவத்தினரை தங்கள் அரசியல் லாபத்திற்காக அலைக்கழிக்கும் வேலைகளை தொடர்ந்து செய்தது பாஜக அரசு. அண்மையில் Disabled War Veterans (India) (DIWAVE) என்ற அமைப்பு வைத்துள்ள குற்றச்சாட்டு முக்கியமானது. ‘மாற்றுத்திறனாளி படைவீரர்கள் மற்றும் இறந்துபோன ராணுவத்தினரின் குடும்பங்களுக்கு எதிரான வழக்குகளை பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் திறந்துள்ளது‘ என்று இந்த அமைப்பு கூறி உள்ளதாக கடந்த சனவரியில் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. (https://www.hindustantimes.com/india-news/war-veterans-with-disabilities-ask-for-immediate-revocation-of-mod-orders-101705407242463.html)
சல்லிக்கட்டு பிரச்சினை முதல் மீனவர் பிரச்சினை வரை நாம் குரல் கொடுக்கும் போதெல்லாம் இராணுவத்தை மட்டும் உயர்த்தி பேசி ‘propaganda‘ அரசியலை செய்தது பாஜக. அமரன் போன்ற திரைப்படம் விதைக்கும் அரசியலை தோழர் திருமுருகன் காந்தி விமர்சித்ததற்காக மிகவும் மலினமாக பேசியதோடு சமூக ஊடகங்களில் அவருக்கு உயிர் அச்சுறுத்தலையும் கொடுத்தனர் இந்துத்துவவாதிகள். ஆனால் தொடர்ந்து ராணுவ வீரர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சிக்கல்களைக் கொடுக்கும் பாஜக அரசை நோக்கி இந்த இந்துத்துவ கைக்கூலிகள் கேள்வி எழுப்புவார்களா என்பது ஐயமே.