
சிங்கள இனவெறியர்கள் 1983, ஜூலை மாதத்தில் தமிழர்கள் மீது நடத்திய படுகொலைகள் குறித்தும், இன்றளவும் இடதுசாரி அரசு எனப்படும் அனுரா திசநாயக ஆட்சியிலும் நீதி கிடைக்காத தமிழர்கள் நிலை குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஜூன் 23, 2025 அன்று சமூக வலைதளத்தில் பதிவு செய்தவை.
கிட்டதட்ட 42 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் இலங்கையின் வீதிகளில், வீடுகளில், பணியிடங்களில் சித்தரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். கருப்பு ஜூலை என அழைக்கப்படும் இனவெறியாட்டத்தில் 5000க்கும் அதிகமான தமிழர்கள் சிங்கள இனவெறியர்களால் அழிக்கப்பட்டனர். இதை இனப்படுகொலை என மதிப்பிட வேண்டுமென சர்வதேச அளவில் அமைப்புகள் விவாதித்தன. இதன் பின்னரே தமிழர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆயுதபோராட்டமே வழிமுறை எனும் தீவிர நிலையை முன்னெடுத்தனர். இந்த அழிப்பிற்கு நீதிகேட்க சர்வதேசமும், இந்திய அரசும் உதவவில்லை. இந்திய பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரிடம் எடுத்துச் சொல்லி இதை இனப்படுகொலை என பேச வைத்தார் அய்யா வைகோ. இது நடந்த சிலமாதங்களில் இந்திரா படுகொலையானார். தமிழர்களை தன் பகடைக்காய் அரசியலுக்கு இந்திராவும் பயன்படுத்தியவர் தான். ஆயினும் இந்திரா காந்தி மரணத்திற்கு பின்னர் தமிழர்களுக்கு எதிரான தீவிர நிலைப்பாடுகளை ராஜீவ்காந்தி அரசு எடுத்தது.
இந்தியாவின் படைகளையும் எதிர்த்து போராட வேண்டிய சூழலை இந்திய பார்ப்பனிய அதிகாரவர்க்கம் உருவாக்கியது. அடிபணிய மறுத்த புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்தது. மீண்டுமொரு கருப்பு ஜூலை நடக்காதவாறு தமிழர்களை போர்க்குணமிக்க அமைப்பாக்கினர் புலிகள்.
புலிகளுக்கு அப்பால், ஈரோஸ் போன்ற இடதுசாரி அமைப்பைத் தவிர பிற பெரிய போராளி அமைப்புகள் இந்திய பார்ப்பனியத்திற்கு கூலி வேலை செய்ய இணங்கின. இந்திய ராணுவத்துடன் இணைந்து சொந்த மக்களான தமிழர்களை வேட்டையாடின.
இன்றளவும் 5000+ தமிழ்ர்களுக்கான நீதி குறித்து எவரும் பேசுவதில்லை. இலங்கையின் இடதுசாரி அரசு என மார்தட்டிக்கொள்ளும் அனுராதிசநாயக அரசும் இந்த கொடுமைகளுக்கெதிரான நடவடிக்கையோ, நாடு தழுவிய மரியாதையோ அளிக்காமல் கடந்து செல்கிறது. அதாவது சிங்கள இனவெறிக்கு ஏதுவாக அமைதி காக்கிறது. ’கருப்பு ஜூலை’ குறித்த கண்டன பதிவைக்கூட சோ-கால்டு கம்யூனிஸ்டுகள் என மார்தட்டும் சிங்கள அனுரா அரசு செய்யவில்லை. ஒன்றுபட்ட இலங்கையை சிங்கள கம்யூனிஸ்டுகள் உருவாக்கினால் பேரினவாதம் காணாமல் போய்விடுமெனும் இந்திய கம்யூனிஸ்டுகளின் கனவுகளை அனுரா சிதைத்துக்கொண்டிருப்பது நடந்துகொண்டிருக்கிறது.
இந்திய பார்ப்பனியத்தின் ஆதிக்க நலனுக்கேற்ப ‘ஒன்றுபட்ட இலங்கை, ஒன்றுபட்ட சிங்கள-தமிழ் பாட்டாளிகள்’ எனும் முழக்கங்கள் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. இலங்கை மீதான சர்வதேச விசாரணை, பேரினவாதிகள் மீதான நடவடிக்கை, பெளத்தவிகாரைகளை கொண்டு ஆக்கிரமிப்பை தடுத்தல், நீதிசார்ந்த அரசியல் என எவற்றையும் முன்நகர்த்தாமல் தமிழர்களை வஞ்சித்து நல்லிணக்கத்தைக் கொண்டு வருவோமென உலகத்தை ஏமாற்றும் சிங்கள தலைவர்களின் பட்டியலில் ‘சோ-கால்டு’ இடதுசாரி அனுரா அரசும் சேர்ந்திருப்பதுதான் கூடுதல் செய்தி.
செம்மணி, கருப்பு ஜூலை, முள்ளிவாய்க்கால் நீதிக்கான போராட்டம் தமிழீழ விடுதலை என்பதைத்தவிர வேறில்லை. இதை மறுப்பவர்கள் சிங்கள பேரினவாதத்தை பாதுகாத்திடும் இந்திய பார்ப்பனியத்தின் எடுபிடிகளே.
தமிழீழத்திற்கான சுயநிர்ணய உரிமைப் போராட்டம் வெல்லட்டும்