இந்தியர்களை இன்றும் குறிவைக்கும் ஆங்கிலேயே தேசத்துரோக சட்டம்
ஒவ்வொரு நாடும் தனது வளங்களையும், மூலதனத்தினையும், ஆட்சி பரப்பினையும், மக்களையும் அவர்தம் உரிமை, உடைமைகளையும் பாதுகாக்க சட்டங்கள் இயற்றி, அவற்றை மீறுவோரை தண்டித்து முறைப்படி ஆட்சி செய்து வருகின்றது. ஆனால் ஒரு நாடு மற்றொரு நாட்டால் அடிமைப்படுத்தப்படும் பொழுது அடிமை நாட்டின் வளங்களை, மூலதனத்தை, மக்களை சுரண்டும் வகையில் ஏகாதிபத்திய நாடு சட்டம் இயற்றும். அத்தகைய சுரண்டலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் சட்டப்படி ஒடுக்கப்படுவர். ஏனெனில், இங்கு ஆட்சியும், அதிகாரமும் ஏகாதிபத்திய அரசிற்கு சொந்தமானவை. அத்தகைய தன்மையுடைய ஏகாதிபத்திய ஆங்கிலேய அரசால் கொண்டு வரப்பட்டு, சுதந்திரத்திற்கு பின்பும் இன்றும் இந்நாட்டை ஆள்பவர்களால் சொந்த நாட்டு மக்கள் மீது பயன்படுத்தப்படும் ஒரு கொடிய சட்டம் தான் தேசதுரோக சட்டம்.
17ம் நூற்றாண்டில் வணிகம் செய்வதற்காக பிரிட்டனில் இருந்து நம் நாட்டிற்கு வந்த கிழக்கிந்திய கம்பெனி வணிகம் செய்வதோடு மட்டுமல்லாமல் பிராந்திய அரசுகளோடு இனைந்து செயல்பட்டு வந்த போது 1757-ம் ஆண்டு பிளாசிப் போரில் கிழக்கிந்திய கம்பெனி வென்று வங்காளத்தில் தனது ஆட்சியை நிறுவியது. இதன் தொடர்ச்சியாக கி.பி.1800-களின் தொடக்கத்தில் இந்திய துணைக்கண்டத்தில் இருந்த பல மாகாணங்கள், சிற்றரசுகள், பாளையங்கள் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் அடிமைப்பட்டு இருந்தது. அப்பகுதிகளில் குற்றங்களும் அதற்கான தண்டனைகளும் மாறுபட்டு இருந்தது. அதனை தனது ஆளுமைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முறைபடுத்துவதோடு மட்டுமல்லாமல் தனது நாட்டு சட்டத்தை இங்கு செயல்படுத்த எண்ணிய கிழக்கிந்திய கம்பெனி, அவர்களது சட்டத்தை கொண்டு வருவதற்காக மெக்காலே பிரபு தலைமையிலான முதல் சட்ட ஆணையம் மூலமாக 1837 -1839 ம் ஆண்டு வரைவு இந்திய தண்டனை சட்டத்தினை கொண்டு வந்தது. ராஜதுவேஷம் என்று பெரும்பாலும அழைக்கப்படும் தேசதுரோகம் எனும் குற்றம் அன்றைய இந்திய தண்டனை சட்டத்தில் (வரைவு) 113-வது பிரிவாக கொண்டு வரபட்டாலும், 1857ம் ஆண்டு சிப்பாய் கலகத்தின் தொடர்ச்சியாக கம்பெனி ஆட்சி முடிவுற்று ஆங்கிலேய அரசின் கீழ் வந்த இந்திய துணைக்கண்டத்தில் 1860-ம் ஆண்டு இயற்றபட்ட இந்திய தண்டனை சட்டத்தில் தேசதுரோக குற்றம் இடம்பெறவில்லை. மேலும் அது தவிர்க்கப்பட்டதற்கான காரணங்களும் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை. எனினும், ஆங்கிலேய அரசுக்கு எதிரான கிளர்ச்சியை கருத்தில் கொண்டு நீதிபதி சர் ஜேம்ஸ் ஸ்டீபன் என்பவரால் கி.பி.1870-களில் கொண்டுவரபட்ட திருத்தச் சட்டத்தின் மூலமாக பிரிவு 124A – தேசதுரோக குற்றம் இந்திய தண்டனை சட்டத்தில் இணைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்த பிரிவு கொண்டு வரபட்டதன் நோக்கமே ஆங்கிலேய அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை சட்டத்தின் துணைகொண்டு ஒடுக்குவதாகும்.
இந்தியாவில் தொடரபட்ட முதல் தேசதுரோக குற்ற வழக்கு – பங்கோபாஸி வழக்கு (Bangobasi Case) என்று அறியபட்ட மகாராணி -எதிர்- ஜோஹேந்திர சந்திர போஸ் & சிலர் எனும் வழக்காகும். அன்றைய ஆங்கில அரசு இயற்றிய குழந்தை திருமண வயதிற்கான சம்மத சட்டம் (Age of Consent Act,1891) இந்துக்கள் கலாச்சாரத்திற்கு எதிரானது என பங்கோபாஸி எனும் வங்க நாளிதழில் எழுதபட்ட கட்டுரைக்காக இந்த வழக்கு தொடரப்பட்டது. முதல் வழக்கு மன்னிப்பு எனும் வாதத்தை ஏற்று முடிவுக்கு வந்தது. இக்குற்றப் பிரிவில் கிபி 1898, 1937,1948,1950ம் ஆண்டுகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டது. நம் நாட்டு சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேய அரசினை, அதன் அடக்குமுறையை கேள்வி கேட்பவர்களின் குரல்வளை இந்த சட்டபிரிவின் துணையுடன் நசுக்கபட்டது. ஆங்கிலேயர் நம் நாட்டின் வளத்தை களவாடுதலை எதிர்த்து, நம் வளங்கள் நமக்கே எனும் நோக்கோடு சர்வதேச வணிகம், பொருளாதார முன்னேற்றத்தினை எண்ணி தமிழ் நாட்டில் வ.உ.சிதம்பரம் அவர்களால் துவக்கப்பட்ட சுதேசி போராட்டம் இந்த தேசதுரோக குற்றம் மூலமாகத் தான் ஒடுக்கபட்டது.
ஆங்கில அரசின் பிடியில் இருந்து 1947 ல் சுதந்திரம் பெற்று தனக்கென தனி அரசியலமைப்புச் சட்டம் கொண்டு உருவான இந்திய குடியரசு ஆங்கிலேய அரசால் கி.பி 1860-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தை சிற்சில மாற்றங்களுடன் ஏற்று கொண்டு நடைமுறை படுத்தியது. அதில் ஆங்கில அரசின் அடக்குமுறைக்கு பயன்பட்ட தேசதுரோக குற்ற பிரிவும் தவிர்ப்பின்றி சுதந்திர இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டது.
இந்திய தண்டனை சட்டத்தின் ஆறாவது அத்தியாயத்தில் அரசுக்கு எதிரான குற்றங்கள் எனும் தலைப்பின் கீழ் பிரிவு 124 A – தேசதுரோகம் எனும் குற்றம் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
பிரிவு 124 A –
“எவரேனும் பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளால், அல்லது சைகைகளால், அல்லது பார்க்கக்கூடிய வெளிப்படுத்தலால், அல்லது மற்றபடியாக இந்தியாவில் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்படுத்தினால் அல்லது ஏற்படுத்த முயன்றால் அல்லது அவநம்பிக்கையைத் தூண்டினால் அல்லது தூண்ட முயன்றால் அபராதத்தைக் கூடுதலாகக் கொண்ட ஆயுள் சிறை தண்டனையுடன் அல்லது அபராதத்தைக் கூடுதலாகக் கொண்ட மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை தண்டனையுடன் அல்லது அபாரதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும்.”
விளக்கம் 1:-“அவநம்பிக்கை” என்ற வார்த்தையானது, விசுவாசமின்மை மற்றும் பகைமையின் அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்குகிறது.
விளக்கம் 2:-பகைமை, அவமதிப்பு அல்லது அவநம்பிக்கையத் தூண்டாமல் அல்லது தூண்ட முயற்சிக்காமல், அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் சட்டப்பூர்வ முறைகளால் அவைகளில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு நோக்கத்துடன் கண்டனத்தை வெளிப்படுத்தும் விமர்சனங்கள், இச்சட்டப்பிரிவின்கீழ் ஒரு குற்றமாக அமையாது.
விளக்கம் 3:-பகைமை, அவமதிப்பு அல்லது அவநம்பிக்கையைத் தூண்டாமல் அல்லது தூண்ட முயற்சிக்காமல், அரசாங்கத்தின் நிர்வாக அல்லது பிற செயல்பாட்டின் கண்டனத்தை வெளிப்படுத்தும் விமர்சனங்கள், இச்சட்டப்பிரிவின்கீழ் ஒரு குற்றமாக அமையாது.
சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சியாளர்களது நிறம் மட்டுமே மாறியுள்ளது. எனது சகோதர தொழிலாளர்கள், விவசாயிகளது இரத்தம் வரி எனும் பெயரில் உறிஞ்சப்படுகிறது. செல்வந்தர்கள், முதலாளிகள், நிலபிரபுக்களின் கட்சியாக காங்கிரஸ் உள்ளது என்று அன்றைய இந்திய ஒன்றிய காங்கிரஸ் அரசினையும் அதன் ஆட்சியாளர்களையும் விமர்சித்து மே26, 1953 அன்று பீகார் மாநில பரவுனி எனும் கிராமத்தில் கேதார்நாத் என்பவர் மக்களிடையே பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக தேசதுரோக வழக்கு தொடரப்பட்டு, அவ்வழக்கின் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு மிக முக்கிய தீர்ப்பினை வழங்கியது. அதன்படி, அரசினை நடத்தும் ஆட்சியாளர்களது செயல்பாட்டினை விமர்சிக்கலாம் என்றும், மேலும் அத்தகைய உரையின் நோக்கம் பொதுஅமைதியை குலைத்து கலகம் ஏற்படுத்த கூடியதாக இருத்தல் கூடாது என்றும் கூறியது. அதன்படி ஆட்சியாளர்களது அனுகுமுறை குறித்து கருத்து கூறலாம் ஆனால் சட்டப்படியான அரசினை விமர்சிக்க கூடாது எனும் மிக முக்கியமான தீர்ப்பு பகிரபட்டது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் தான் இன்றும் தேசதுரோக வழக்குகளில் தீர்ப்பளிக்கப்படுகிறது. ஆனாலும் ஆட்சியாளர்கள் தங்களை எதிர்ப்பவர்களை ஒடுக்கும் ஆயுதமாக இந்த தேசதுரோக குற்றத்தினை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 124 A-வானது இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 19 (1) (a) இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு மற்றும் வெளிப்பாட்டின் அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு முதல் தேசதுரோக வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியார்மயம், தாராளமயத்தின் பெயரில் இயற்கை & மனித வளங்கள் சுரண்டப்படும் பொழுது, அதனை பாதுகாக்க குரல் கொடுப்போர் மீது பெரும்பாலும் தேசதுரோக வழக்குகள் தொடரப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 800 க்கும் மேற்பட்ட தேசதுரோக வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்குகளில் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டு சுமார் 3.5 % நபர்கள் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர் என்று தெரியவருகிறது. தமிழ்நாட்டில், கூடங்குளம் அணுமின் உலைக்கு எதிராக போராடியவர்கள் அன்றைய அரசால் தேசதுரோகிகள் என குற்றஞ்சாட்டப்பட்டனர். அரசை எதிர்ப்பவர்கள் தேசதுரோகிகள் மற்றும் ஆன்டி இந்தியன் (Anti Indian) என்று ஆளும் தரப்பினரால் அழைக்கப்படுகிறார்கள் ஆனால் அவர்கள் மீதான அக்குற்றம் பெரும்பாலும் நிரூபிக்கப்படுவதில்லை.
2017-ம் ஆண்டு மே மாதம் தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, வழக்குகளை உடைத்து சிறையை விட்டு வெளியே வந்து தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிலைகளுக்கு மாலை அணிவித்ததற்காகஅவர் மீது 124-A பிரிவின் கீழ் தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டன. பின்னர் அந்த வழக்குகளும் உடைந்தன.
கடந்த 2011-ம் ஆண்டு பாராளுமன்ற மாநிலங்களவையில் திரு.D. ராஜா M.P அவர்கள் தனிநபர் மசோதா மூலமாக தேசதுரோக பிரிவை நீக்க கோரியும் , 2015ம் ஆண்டு திரு. சசி தரூர் M.P அவர்கள் மக்களவையில் தேசதுரோக பிரிவில் மாற்றம் கோரியும் கோரிக்கை வைத்தனர். மேலும் 2018 ம் ஆண்டு இந்திய சட்ட ஆணையம் – தேசதுரோக குற்றம் குறித்து தனது ஆலோசனை அறிக்கை தாக்கல் செய்தது. அதில் ஐரோப்பிய நாடுகளில் தேசதுரோக குற்றம் நீக்கபட்டு விட்டது , அவர்கள் இயற்றிய சட்டத்தின் வழி செயல்படும் நாமும் ஏன் இக்குற்றத்தினை நீக்கம் செய்ய கூடாது என்று அரசிற்கு ஆலோசனை வழங்கியது.
உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத்தை நீக்க சொல்லி பத்திரிகையாளர்களான கிஷோர் சந்திரா மற்றும் கன்ஹையா லால் சுக்லா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் முக்கியமான ஒரு விசயத்தை குறிப்பிடுகிறார்கள்
“சமீப காலங்களில், பல குடிமக்கள் தங்களது நியாயமான அரசியலமைப்பு ரீதியான பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையைப் பயன்படுத்தியதற்காக தேசத்துரோகத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, ஜார்க்கண்டில், பழங்குடியினரின் நிலங்களை வணிக ரீதியாக பயன்படுத்த அனுமதிக்கும் உத்தரவை பிறப்பித்த அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததற்காக ஆயிரகணக்கானபழங்குடியினர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மற்றொரு நிகழ்வில் கர்நாடகாவின் பிதாரில் CAA எதிர்ப்பு போராட்டத்தில் தாயுடன் கலந்து கொண்ட 11 வயது மகள் மீதும் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது ஒரு ஜே.என்.யூ மாணவர் பேசிய உரைக்காக அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஜே.என்.யூ மாணவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதற்காக மும்பையில் 50 க்கும் மேற்பட்டோர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது” என பல காரணங்களை கூறியுள்ளனர். இவற்றை பார்க்கும் பொழுது வளங்களை காக்கும் வ உசியின் போராட்டம் சுதந்திர இந்தியாவில் தொடர்வதையும், அரசு அதனை ஒடுக்கும் முறையும் மாறவில்லை என்றே தோன்றுகிறது.
இவ்வாறு ஒருபுறம் ஆலோசிக்கபட்டு கொண்டு இருந்தாலும் இன்றைய இந்திய ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை குறித்து பேசியதற்காக இரண்டு தெலுங்கு தொலைக்காட்சி நிறுவனங்கள் மீதும், ஒன்றிய அரசின் கொரானா பெருந்தொற்று நடவடிக்கை குறித்து இணையத்தள காணொளியில் விவாதித்த ஊடகவியலாளர் திரு. வினோத் துவா மீதும் தொடரபட்ட தேசதுரோக வழக்கினில் உச்சநீதிமன்றம் கேதார்நாத் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் தேசத்துரோக வழக்குகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறியது. மேலும், இக்குற்றம் இன்றைய சூழலுக்கு ஏற்ப வரையறை செய்யப்பட வேண்டும் என்று 2021-ம் ஆண்டில் கூறியுள்ளது.
நீதிமன்றங்களும், சட்ட ஆணையமும் தேசத்துரோக குற்றத்தினை வரையறை செய்வது குறித்து கூறினாலும், இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் பெரும்பான்மையோர் விடுதலை பெற்ற போதிலும், ஆட்சியாளர்களது அடக்குமுறையை செயல்படுத்துவதற்கு தேசத்துரோக குற்றம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் மீதும், யங் இந்திய இதழின் ஆசிரியர் சங்கர்லால் மீதும் மூன்று ஆட்சேபனைக்குரிய கட்டுரைகளை பிரசுரம் செய்ததற்கு ஆங்கிலேய அரசு அவர்கள் இருவர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது. காந்தி அவர்கள் நீதிமன்றத்தில் நான் இந்த குற்றச்சாட்டை மறுக்கப் போவதில்லை, நான் தேசத்துரோக குற்றம் புரிந்துள்ளேன் என்று கூறினார். மேலும் இந்த நாட்டின் மக்களுக்கு உங்களது அரசும், சட்டமும் நன்மை செய்யக் கூடியது என்றும், எனது செயல்பாடு பொதுநலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் நீங்கள் நம்பினால், எனக்கு கடுமையான தண்டனையை விதிக்க வேண்டும் இல்லையேல், இந்நீதிமன்ற நீதிபதியும், அரசின் அலுவலர்களும் அதிகாரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார்.
அக்கூற்றின அடிப்படையில் காணும் பொழுது, அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளால் நீக்கவும் முடியாமல், வரையறுத்து நிரூபிக்க கூடிய குற்றமாக தண்டனை சட்டத்தில் சேர்க்கவும் இயலாமல் இரட்டை தன்மையோடு இருக்கும் தேசதுரோகம் சட்டம் ஆளும் தரப்புக்கு ஆயுதமாக உள்ளதால் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், மக்களுக்கு எதிராகவும் அரசியலமைப்புக்கு எதிராகவும் இருக்கும் இக்குற்றத்தை இந்திய தண்டனை சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையோர் கருத்தாகும்.