
தூய்மை பணியாளர்கள் ராம்கி என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் பணி செய்ய நிர்ப்பந்தப்பட்டதிற்கு எதிராகவும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு அருகில் கடந்த 12 நாட்களாக போராடி வருகின்றனர். இந்த ‘ராம்கி’ நிறுவனம் செய்த மோசடி மற்றும் அதிகாரிகளின் ஊழல் குறித்து, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது சமூகவலைதளத்தில் ஆகத்து 12, 2025 அன்று பதிவு செய்தது.
‘ராம்கி’ Ramky (Chennai Enviro Solutions) எனும் நிறுவனத்,திற்கு பல மண்டலங்களின் தூய்மைப்பணிகளுக்கான ஒப்பந்தம் கொடுத்திருக்கிறது சென்னை மாநகராட்சி. இந்த நிறுவனம் நீண்டகாலமாக சென்னையில் இப்பணி செய்கிறது. இந்நிறுவனம் ஆந்திராவின் ஜெகன்மோகன்ரெட்டி கட்சியான YSRCPயின் எம்.பியான அல்லா அயோத்தியா ராமிரெட்டி என்பவரின் நிறுவனம். இந்தியாவில் அதிக சொத்து வைத்திருக்கும் MPகளில் இரண்டாம் இடத்தில் இருப்பவர். தேர்தல் கட்சி நன்கொடையாக திரிணாமுல் காங்கிரஸுக்கு பெரும்தொகையை கொடுத்த நிறுவனமும் கூட.
சென்னை மாநகராட்சியில் ‘தனியார்மயப்படுதல்’ என்பது மிக நீண்டகாலமாக திமுக, அதிமுக என இரு கட்சிகளாலும் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கட்சிகள் மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகள் தனியார்மயத்திற்கு ஆதரவாளர்களாகவே இயங்குகிறார்கள். தனியாருடனான அதிகாரிகளின் கூட்டு என்பது அரசியல்வாதிகளை விட மிக ஆழமானது. நிறுவனங்களின் ஒப்பந்தங்களை முடிவு செய்பவர்கள் அதிகாரிகள். இந்த நிறுவனங்கள் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவை அல்லது சொந்தமானவை. அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளை அமைச்சர்கள், ஆட்சியாளர்கள் பிரதிபலிக்கிறார்கள் என்பதே சமீபத்திய அதிமுக-திமுக ஆட்சிகளின் நிலை.
அதிகாரவர்க்கத்தின் பிடியில் ஒட்டுமொத்த நிர்வாகம் இருக்கிறது. தமது லாபத்திற்காக ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் அதிகாரிகளின் முடிவுகளுக்கேற்ப திட்டம் தீட்டுகின்றனர். இதை விரிவாக பார்ப்போம்.
‘ராம்கி’ நிறுவனம் கடந்த முறை அடையார், பெசண்ட்நகர் உள்ளிட்ட 8 பகுதிகளில் (2012-2018ம் ஆண்டு) தூய்மைப்பணிகளை மேற்கொண்ட பொழுது பலவேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மிகமோசமான வகையில் வேலைபார்த்த நிறுவனமாக ‘ராம்கி’ நிறுவனம் பெயர் எடுத்தது.
13 ஜனவரி 2017ம் ஆண்டில் டெக்கான் க்ரானிக்கிள் இதழ் ‘ராம்கி’ நிறுவனம் குறித்து அம்பலப்படுத்தி இருந்தது. பெசண்ட நகர் பகுதியில் குடியானவர் பகுதிகளான மீனவர் கிராமங்களில் 50 சதம் எனுமளவிலும், குறைவான மக்கள் தொகை கொண்ட வசதியானவர்கள் பகுதியில் 90 சதம் எனுமளவில் தூய்மைப்பணியை செய்திருந்தது. 9 குப்பை சேகரிப்பு மையங்களில் 6 மையங்கள் குடியானவர் பகுதியில் இருந்தவை புறக்கணிக்கப்பட்டு குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தன என்கிறது ஊடகம். தெருக்களை கூட்டி சுத்தம் செய்யும் பணியில் பெரும்பான்மையாக வசதியானவர்கள் பகுதியே ‘ராம்கி’யால் தேர்ந்தெடுக்கப்பட்டன.
2016 சட்டத்தின்படி, தூய்மைப்பணி மேற்கொள்ளும் பகுதிகளில் அனைத்து இடங்களும் சமமாகவே பாவிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருப்பதை ‘ராம்கி’ மீறியிருந்ததை டெக்கான் க்ரானிக்கிள் அம்பலப்படுத்தியது.
இதேபோல, ஜூலை 2018ம் ஆண்டில் டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் ‘ராம்கி’ குறித்து மற்றுமொரு செய்தியை வெளியிட்டு ‘ராம்கி’யின் செயல்திறனை அம்பலப்படுத்தியது. 27 நாட்களுக்குள்ளாக பெறப்பட்ட ‘திடக்கழிவு நீக்கம்’ குறித்தான புகார்கள் 12,938 மாநகராட்சிக்கு வந்தன. இதில் 40 சதவீதமான புகார்கள் ‘ராம்கி’ குறித்தானவை. கிட்டதட்ட 15 பகுதிகளில் அச்சமயத்தில் ‘ராம்கி’ நிறுவனம் தூய்மைப்பணிக்கான ஒப்பந்தத்தை பெற்றிருந்தது.
2012 முதல் 2018 வரையிலான 7 ஆண்டுகளில் ‘ராம்கி’ நிறுவனம் ஒப்பந்தம் பெற்ற இடங்களான வேளச்சேரி, திநகர், கோட்டூர்புரம், பெசண்ட்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மோசமான வகையிலேயே ‘ராம்கி’ செயல்பட்டிருந்ததை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ அம்பலப்படுத்தியது. மிகக்குறைவான தொழிலாளர்கள், பயிற்சியற்ற பணியாளர்களைக் கொண்டு கொள்ளைலாபம் பார்த்தது. இதில் விளக்கமாறு உட்பட அனைத்து தூய்மைப்பணிக்கான பொருட்களை தொழிலாளர்களே வாங்கி வரவேண்டுமெனும் மிககொடுமையான சுரண்டலும் இன்றளவும் நடக்கிறது.
சென்னையில் அன்றாடம் 6150டன் கழிவுகள் சேகரம் ஆகிறது. இதில் 1800 டன்கள் மட்டுமே மறுசுழற்சி அல்லது நீக்கம் செய்யப்படுகின்றன. மீதமுள்ளவை கொடுங்கையூர், பெருங்குடியில் சேர்கின்றன. இவ்வகையில் 20 ஆண்டுகளாக தேங்கிய குப்பைகளாக 66 லட்சம் டன் திடக்கழிவுகள் சேர்ந்துள்ளன.
2020 டிசம்பர் மாதத்தில் வடசென்னை பகுதியில் திடக்கழிவு அகற்றும் ஒப்பந்தத்தை சென்னை மாநகராட்சி அறிவித்தது. மணலி, திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர் பகுதிகளில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும் 7 ஆண்டுகால ஒப்பந்தத்தை ‘ராம்கி’ நிறுவனத்துடன் ஏற்பட்டதை திரு. எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தென்சென்னையில் ‘ராம்கி’ நிறுவனம் 2012-2018 ஆண்டுகாலத்தில் முறையாக பணிகளை மேற்கொள்ளாமலும், ஊழல் தனமாக செயல்பட்டும் அம்பலமாகி இருந்தது. மிகக்குறைவான குப்பை தொட்டிகள், கழிவுகளுடன், கான்கிரிட் குப்பைகளையும் சேர்ப்பது போன்ற பணிகளை செய்தது ‘ராம்கி’. இதனால் அதிக எடைகொண்ட கழிவுகளை சேகரித்ததாக கணக்குக்காட்டியது. கழிவுகளின் எடை என்பதையே அடிப்படையாகக் கொண்டே கழிவு பொருட்களை கணக்கிட்டது. 1950 மெட்ரிக் டன் கழிவுகளை அகற்ற 3000 தொட்டிகளுக்கு பதிலாக வெறும் 700 குப்பை தொட்டிகளை மட்டுமே ‘ராம்கி’ பயன்படுத்தியது. குப்பைகளை பிரித்து சேகரிப்பது குறித்து எவ்வித பயிற்சியளிக்காமல் குப்பைகளை சேகரித்ததால் மறுசுழற்சியும் பாதிக்கப்பட்டது. இதை சுட்டிக்காட்டி, ‘ராம்கி நிறுவனம் தொடர்ந்து ஏமாற்றும் நிறுவனம்’ எனும் வகையில் குற்றம் சாட்டியவர் அன்றய மாதவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.சுதர்சனம் அவர்கள். 2020 டிசம்பர் 29ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா தனது கட்டுரையில் இவரது பேட்டியை மேற்கோள் காட்டியது. தனியார் நிறுவனங்கள் ஒரு டன்னுக்கு ரூ3000-5500 வரையில் வருமானமாக அரசிடம் இருந்து பெற்றன. ஆனால் அரசு நிறுவனம் ரூ2600.00 எனுமளவிலேயே ஒரு டன் கழிவுக்கான தொகையை அரசிடம் இருந்து பெற்றதாக இந்த கட்டுரை குறிப்பிட்டது. இன்று இதன் மதிப்பு என்ன என வெளிப்படையாக அறிவிப்புகள் இல்லை.
‘ராம்கி’ நிறுவனம் கோயம்பேடு கழிவுகளை சுத்திகரிப்பு பணிக்கான ஒப்பந்தத்தை 2009ல் பெற்ற நிறுவனம். பலவேறு கழிவு தொடர்பான ஒப்பந்தங்களை திமுக, அதிமுக காலத்தில் இந்நிறுவனம் பெற்றது. திமுக காலத்தில் 2024ல் கொடுங்கையூர் திடக்கழிவு கூடத்தை இடமாற்றம் செய்வது, கழிவுகளை பிரிப்பது ஆகியவற்றிற்காக ரூ217 கோடிக்கு ஒப்பந்தத்தை பெற்றது. அன்றாடம் 3000 டன் கழிவுகள் சேருமிடம் கொடுங்கையூர். மேலும் 66லட்சம் டன் கழிவு தேங்கிய 50 ஆண்டுகால கிடங்கு. 2.5 ஆண்டுகளுக்குள்ளாக இப்பணிகளை செய்துமுடிக்க ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையென்னவென தெரியவில்லை.
தொகுத்து பார்க்கும் பட்சத்தில் 2012 அதிமுக ஜெயலலிதா அம்மையார் ஆட்சிகாலத்தில் தென்சென்னையில் ஆரம்பித்து 2020ல் அதிமுகவின் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சியில் வடசென்னை தூய்மைப்பணி ஒப்பந்தத்தை பெற்று, 2024ல் திமுக திரு.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி காலத்தில் மேலதிக ஒப்பந்தங்களை பெற்ற ‘ராம்கி’ நிறுவனத்தின் செயல்பாட்டின் விளைவுகள் என்ன?
2024ம் ஆண்டில் இந்திய அளவிலான 442 நகரங்களின் தூய்மைக்கான தரவரிசையில் 199 இடத்தையே சென்னை பெற்றுள்ளது. இவை தனியார்மயம் நடந்த பின்னர் கிடைத்த இடம். 10லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் வரிசையில் 38வது இடத்தைப் பெற்றுள்ளதெனில் 13 ஆண்டுகால ‘ராம்கி’ மற்றும் இதர தனியார் கம்பெனிகளின் 20 ஆண்டுகால தனியார்மயத்தின் தரம் என்ன என்பதை குறித்து சென்னை மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது மாநகராட்சியின் பொறுப்பு.
இந்த நிறுவனத்தின் தரமற்ற சேவையை குறித்து அதிகாரிகளின் மேலாண்மை தோல்வியை குறித்து கேள்வி எழுப்பாமல், அதிகாரிகளின் ஆலோசனைகள் அடிப்படையிலும், அரசியல் கட்சிகளின் நலன் அடிப்படையிலும் மீண்டும் மீண்டும் ‘ராம்கி’ உயிர் பெற்றிருக்கிறது.
சமீபத்திய ஒப்பந்தம் ரூ2600+ கோடி எனுமளவில் பெற்றுள்ளது ‘ராம்கி’ நிறுவனம் என்கின்றனர் தொழிற்சங்கங்கள். இதேபோன்ற தொகைகளுக்கான ஒப்பந்தங்களை பிற தனியார் நிறுவனங்களான அர்பேசர், ப்ரீமியர் போன்றவை பெற்றுள்ளன. இந்த நிதியைக் கொண்டு தொழிலாளர் நலன் பேணும்வகையில் சென்னை மாநகராட்சியால் நிர்வாகம் ஏன் செய்யமுடியாமல் போகிறதென திமுக ஆட்சியாளர்கள் கேள்வி எழுப்பாமல் மெளனம் காக்கிறார்கள். அதிகாரிகளின் ஊழல், செயலற்ற தன்மை, திறமையின்மையை கேள்வி எழுப்ப வேண்டிய அதிமுக-திமுக ஆட்சியாளர்கள், அதிகாரவர்க்கத்தோடு துணையாக கைகோர்த்து நிற்கும் அவலத்தையே நாம் தற்போது எதிர்கொள்கிறோம்.
வடசென்னையின் NULM அரசு ஒப்பந்த ஊழியர்கள் 2021ம் ஆண்டு அதிமுக காலத்திலும், பிறபகுதியை சேர்ந்த NULM தொழிலாளர்கள் 2025ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்திலும் பணியிழப்பு, வருவாய் இழப்பு, பணிநிரந்தர இழப்பை சந்தித்துள்ளனர். இதை 2020-21ம் ஆண்டில் மே17 இயக்கம் சுட்டிக்காட்டியது.
சென்னையின் 15 மண்டலங்களில் 10 மண்டலங்கள் அதிமுக காலத்தில் தனியார்மயம் பெற்றன. திமுக ஆட்சியில் 2 மண்டலங்கள் தனியார்மயமாகின்றன, அதிமுக காலத்திய ஒப்பந்தங்களை தொடர்கின்றன. அதிமுக காலத்தில் நடந்த போராட்டங்களைக் கண்டு தூய்மை தொழிலாளர்களின் பணி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக திமுக வாக்குறுதி கொடுத்தது. தனியார்மயத்தால் உண்டான வேலையிழப்பு, சம்பள இழப்பு, பணிநிரந்தம் ஆகியவற்றை மாற்றிடாமல், திமுக ஆட்சியும் தனியார்மயத்தை நோக்கியும், சம்பளக்குறைப்பு-வேலையிழப்பு தொழிலாளர்களை தள்ளுவதால் ஏமாற்றமான நிலையில் 4 ஆண்டுகளில் தீவிரமான போராட்டமாக வடிவம் கொண்டிருக்கிறது. 2021ம் ஆண்டில் திமுக ஆட்சியமைத்த பிறகு அமைதியான முறையில் தமது கோரிக்கைகளை முன்வைத்து அடையாள-காத்திருப்பு-கோரிக்கை போராட்டங்கள் பலவற்றை தொழிலாளர்கள் நடத்திவிட்டனர். அதிமுகவின் கொள்கையை நிலையை திமுக ஆட்சியும் தொடர்வதால் ஏற்பட்ட ஏமாற்றமும், ஆதங்கமும் தொழிலாளர்களை தீவிர போராட்ட நிலைக்கு கொண்டு சேர்த்துள்ளது.
தற்போதும் தூய்மைப்பணியாளர் போராட்டத்தை சமரசமின்றி நடத்தும் இடதுதொழிற்சங்கம், உழைப்பாளர் உரிமை இயக்கம் ஆகியோரின் போராட்டத்திற்கும் துணையாக ஆதரவளிக்கிறது. சிறிதும் கேள்வி கேட்பாரற்ற வகையில் தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது. இதை கேள்வி எழுப்ப வேண்டிய ஊடகங்கள் கேள்வி எழுப்புவதில்லை. கேள்வி எழுப்பும் மே17 இயக்கத்தின் குரலை பல முன்னணி ஊடகங்கள் நிராகரித்துவிடுகின்றன. மே17 இயக்கம் தொடர்ந்து தரவுகள் அடிப்படையில் கேள்வி எழுப்புகிறது.
அதிகாரவர்க்கமும், ஆட்சியாளர்களும் எங்களை எத்தனைக்காலம் நிராகரித்துவிட இயலும்? எங்களது கேள்விகள், குரல்கள் ஒருநாள் வலுப்பெறும், அன்று சமூக நீதியை வென்று காட்டுவோம். எந்த கட்சி ஆட்சியில் இருப்பினும் எதிர்க்கட்சி பணியை மே17 இயக்கம் செய்துவருகிறது.
சென்னை பெருநகர நிர்வாகத்தின் கீழாக நடைபெறும் இந்த முறைகேட்டினை அம்பலப்படுத்தி, தூய்மைப்பணியாளர்கள் எனும் சமூகத்தின் அடித்தட்டில் வைக்கப்பட்ட தொழிலாளர்களை சாதி-வர்க்கரீதியான ஒடுக்குமுறையை தகர்த்தெறிவது நமது இன்றியமையாத தமிழ்த்தேசிய கடமையாக மே17 இயக்கம் கருதுகிறது. இந்திய-பன்னாட்டு பெருமுதலாளிகள் லாபம் கொழிக்க தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் தொடர்ந்து தமிழ் தொழிலாளர்களை வஞ்சித்து வருகின்றனர்.
தனியார்மயம் எனும் சுரண்டல் கொள்கையை முறியடிக்க அனைத்து சனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டும். சமரசமின்றி போராடும் தொழிலாளர் போராட்டத்திற்கு நமது தடையற்ற ஆதரவை வழங்க முன்வருவோம்.
திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்.