
உலகையே உலுக்கும் ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ என்னும் மின்னஞ்சல் ஆவணங்கள் வெளிவந்திருக்கின்றன. குழந்தைகளை பாலியல் சித்திரவதைக்காக கடத்தி, அவர்களை முக்கியப் பிரமுகர்களுக்கு இரையாக்க, சர்வதேச அளவில் பெரிய வலைப்பின்னலை எப்ஸ்டீன் என்னும் பாலியல் குற்றவாளி உருவாக்கியது கண்டறியப்பட்டிருக்கிறது. குழந்தைகளின் உடலைக் கூட கறியாக்கித் தின்றிருக்கிறார்கள் என்னும் மனித சமூகத்தையே குலை நடுங்க வைத்திருக்கும் செய்திகள் எல்லாம் வெளிவருகின்ற இந்த ஆவணத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் X தளத்தின் எலான் மஸ்க் வரையிலான புகைப்படத் தொடர்புகள் இருப்பது அம்பலமாகியுள்ளன. இந்த மின்னஞ்சலில் பிரதமர் மோடியின் பெயரும் இருப்பது இந்தியாவையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) அமெரிக்காவின் நிதி ஆலோசகன் மற்றும் பெரும் பணக்காரனாக இருந்தவன். தன்னுடைய தரகு வேலைக்காக பல பணக்காரர்கள் நிறைந்த சமூக வட்டத்தை உருவாக்கி, சிறு வயது பெண்களை பாலியல் ரீதியான நோக்கில் அவர்களிடம் அனுப்பி இருக்கின்றான். சிறார் பாலியல் கடத்தல் குற்றவாளியாக மட்டுமல்ல, ஆயுத பேர மையத்தின் தலைவனாகவும் இருந்துள்ளான் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இசுரேலின் உளவாளியாக, இசுரேலுக்கும் மேற்குலக நாடுகளுக்குமான தரகனாக இருக்க, நாடுகளின் முக்கியப் பிரமுகர்களை தன்னுடைய தீவிற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள சிறுமிகளை பாலியலாக பேரம் பேசும் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான்.
இவனின் இக்கொடிய செயல் வெளிவந்ததும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அவன் 2019-ல் சிறையில் தற்கொலை செய்து கொண்டான் எனக் கூறப்பட்டது. அது தற்கொலை அல்ல கொலை என்னும் சர்ச்சையும் நீடிக்கிறது. எப்ஸ்டீன் பைல்ஸ் (Epstein Files) என்பது அவனது குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய ஆவணங்கள், மின்னஞ்சல்கள், புகைப்படங்கள், காணொளிகள், சாட்சியங்கள் போன்றவற்றின் தொகுப்புகளாகும். இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ளன.

கடந்த ஜனவரி 30, 2026-ல் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் பக்கங்கள், 2,000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள், 1.8 லட்சம் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆவணங்களில் குறிப்பாக வலதுசாரி, மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள், பெரும் பிரமுகர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதில் பில் கிளிண்டன், டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க், பில் கேட்ஸ், மோடி போன்றவர்களின் பெயர்களும் இருப்பது குறித்தே இப்போது கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக எப்ஸ்டீன் மற்றும் அம்பானி இடையேயான உரையாடல் இன்று பெரும் விவாதப்பொருளாகி இருக்கின்றது. (இந்த உரையாடல்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் நடைபெற்றதாக செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன).
தற்போது வெளியான ஆவணங்களின்படி, இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையே ஒரு இடைத்தரகராக எப்ஸ்டீன் நேரடியாக பங்கு வகித்திருக்கிறான். இதற்குப் பிறகே இசுரேலுக்கு மோடி சென்றது அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டதும், வழக்கத்திற்கு மாறாக இசுரேலிய தலைவர்களுடன் தொடர்பு கொண்டதும், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் உளவுத்துறையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டதும் நிகழ்ந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஜூலை 6, 2017 அன்று, மோடி இசுரேலுக்கு சென்றபோது ஜபர் (‘Jabor Y’) என்ற நபருக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கின்றான் எப்ஸ்டீன். “இந்திய பிரதமர் மோடி ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்… அமெரிக்க ஜனாதிபதியின் நலனுக்காக இஸ்ரேலில் கொண்டாடினார்.” (“Modi took advice. and danced and sang in Israel for the benefit of the US president…”) என்பதுதான் அந்த மின்னஞ்சல். அதே நாளில், அம்பானிக்கு “உங்கள் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது…” என்று குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறான் எப்ஸ்டீன்.

மேலும் அமெரிக்காவிற்கும் பாஜக அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு தொடர்பை உருவாக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்திருக்கிறான் எப்ஸ்டீன். ஜூன் 2014இல், மோடி முதன்முதலில் ஆட்சிக்கு வந்தவுடன் எப்ஸ்டீனின் இல்லத்தில் முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுத் பராக் மற்றும் அமெரிக்காவின் செயலாளர் லாரி சம்மர்ஸ் உடன் மூத்த பி.ஜே.பி தலைவரான ஹார்டீப் சிங் பூரி சந்தித்ததாக வெளியாகும் செய்திகளும் சர்சையைக் கிளப்பி இருக்கின்றன. 2019 தேர்தலில் பாஜக வென்ற பிறகு மோடிக்கும் அமெரிக்க அரசியல் தரகர் ஸ்டீவ் பானனுக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய எப்ஸ்டீன் திட்டமிட்டதும் அப்போது சீனா குறித்து குறிப்பிட்டதும் வெளியாகி இருக்கின்றது.


மார்ச் 16, 2017 அன்று, மோடி அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்த அனில் அம்பானி எப்ஸ்டீனுக்கு ஒரு செய்தியை அனுப்பி இருக்கிறார். “மோடி அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக டிரம்பின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள நபர்களுடன் தொடர்பு கொள்ள ‘தலைமை’ அவரது உதவியைக் கேட்பதாக” அந்த செய்தி இருக்கின்றது. (டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக இருந்த ஸ்டீவ் பானன் ஆகியோரே டிரம்பின் நெருங்கிய வட்டாரம்).
இவ்வாறு பாஜகவுடன் நெருக்கமாக இருந்த அனில் அம்பானி அமெரிக்கா, இசுரேல் போன்ற நாட்டின் செல்வந்தர்களுடன் தொடர்பில் இருந்ததும் வெளியுறவு நடவடிக்கைகளில் தலையிட்டதும் எப்ஸ்டீன் பைல்ஸ் மூலம் வெளி வந்திருக்கிறது. இது மட்டுமல்லாது மே 2012 முதல் மே 2017 வரையான காலகட்டத்தில் பிரான்சின் அதிபராக இருந்த ஃபிராங்கோயிஸ் ஹாலண்டுடன் சந்திப்பு இருப்பதாகக் கூறி முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுட் பராக் உடனான தனது சந்திப்பை ரத்து செய்யுமாறு எப்ஸ்டைனிடம் கேட்டிருக்கிறார் அம்பானி.
இந்தியா-பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் இணைந்து தயாரித்த 36 ரஃபேல் ஜெட் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களுக்குளாகவே அம்பானிக்கும் பிரான்ஸ் அதிபருக்குமான சந்திப்பு திட்டமிடப்பட்டது. ஒப்பந்தத்தின் படி, டசால்ட் நிறுவனம் மொத்த மதிப்பில் 50 சதவிகிதம் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டியிருந்தது. பிப்ரவரி 2017இல், ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் லிமிடெட் (ஆர்ஏஎல்) நிறுவனத்துடன் இணைந்து ரஃபேல் மற்றும் பால்கன் ஜெட் விமானங்களை டசால்ட் தயாரிக்க திட்டமிட்டது. இந்த பின்னனியில்தான் ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு எப்ஸ்டீன் பைல்ஸ்-சில் பல முக்கிய அரசியல்வாதிகள் பெயர் வெளிவந்தது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இன்னும் இது குறித்து நீதித்துறை நடவடிக்கை எடுப்பதற்குள் அவசர அவசரமாக சில ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன. மோடியின் தொடர்பு குறித்த ஒரு சில ஆவணங்கள் வெளிவந்ததுமே, அமெரிக்கா – இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதற்கு, இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக டிரம்ப் குறைத்தார் என்னும் காரணம் சொல்லப்பட்டது. அதே வேளையில் அமெரிக்க தொழில்துறை, வேளாண் பொருட்களுக்கான இறக்குமதி வரி 0% ஆகியிருக்கிறது. இவ்வாறு இது அமெரிக்காவிற்கு லாபம் அளிக்கும் ஒப்பந்தமாகவே இருக்கிறது. இதுவரை விவசாயிகளை பெருமளவில் பாதிக்கும் என்று கூறி அமெரிக்காவின் விவசாய பொருட்களுக்கு அனுமதி மறுத்து வந்த மோடி அரசு, இப்போது 0% இறக்குமதி வரியோடு அமெரிக்க விவசாய பொருட்களை இந்திய சந்தையில் அனுமதித்து இருக்கின்றது. இதனால் விவசாயிகளின் தற்கொலை இன்னும் பெருகும். ஆனால் இத்தகைய விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அமெரிக்க ஒப்பந்தத்தை பாஜகவினர் கொண்டாடி வருகிறார்கள்.

இதற்கு முன்பு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்ய 5% வரி மட்டுமே இருந்தது. ஆனால் பின்னர் அது 50% உயர்த்தி பின் 25% ஆக குறைத்து தற்போது 18%ஆக இருக்கிறது. அதாவது இந்திய பொருட்களுக்கான வரி 5% லிருந்து 18% உயர்ந்து இருக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பொருட்களை இறக்குமதி செய்தால் அதற்கு 0% வரி என்று மாற்றி இருக்கிறார்கள். இப்படி இந்தியாவிற்கு நட்டமும் அமெரிக்காவிற்கு லாபமும் தரக்கூடிய ஒரு ஒப்பந்தத்தைத்தான் சங்கி கும்பல்கள் வெற்றி என்று பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார். அதற்கு பதில் அமெரிக்கா, வெனிசுலாவிடம் கொள்முதல் செய்ய உள்ளார். அதுமட்டுமின்றி எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி உள்பட பல துறைகளில் பிரதமர் மோடி, 500 பில்லியன் டாலருக்கும் (45 லட்சம் கோடி) அதிகமான பொருட்களை அமெரிக்காவில் இருந்து வாங்குவதாக உறுதியளித்துள்ளார்” என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார். டிரம்பின் இந்த முன்னறிவிப்புக்கு பின்னால் மோடியும் பதிலுக்கு நன்றி கூறினார். எந்த நாடும் இந்தியாவை அடிபணிய வைக்க முடியாது என்று கூறிவந்த மோடி, டிரம்பின் அறிவிப்புக்கு உடனே இணங்கியது சந்தேகத்திற்கு இடமளித்தது, மோடி டிரம்ப்பிடம் பயந்தே வர்த்தக ஒப்பந்தத்திற்கு தலையாட்டி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஒரு சிறார் பாலியல் குற்றவாளியின் மின்னஞ்சலில் மோடியின் பெயர் இருப்பதாகக் கூறப்படுவதும், அனில் அம்பானியின் வர்த்தகத்திற்கு மோடி டிரம்பிடம் நடனம் ஆடியதாக மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருப்பதும், அதைத்தொடர்ந்து அமெரிக்கா இந்தியா இடையே நடந்த வர்த்தகமும் என இவற்றுக்கிடையே எழும் சந்தேகங்கள் அனைத்தும் மோடியின் பிம்பம் உடையத் தொடங்கியுள்ளதையே காட்டுகிறது. இந்திய மக்களின் நலன் குசராத்தி பனியா மார்வாடி பெரு நிறுவனங்களின் வணிகத்திற்காக அமெரிக்காவிற்கு அடகு வைக்கப்படுவதையே இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.
எப்ஸ்டீன் பைல்ஸ் ஆவணங்கள் குறித்தும் அமெரிக்க-இந்திய ஒப்பந்தம் குறித்தும் எதிர்க்கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் மிகப்பெரிய அளவில் பேச வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. ஆனால் அதைப் பேசாமல் சிலர் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள். இதை அம்பலப்படுத்த வேண்டிய இந்திய ஊடகங்களோ ஒட்டுமொத்தமாகவே மோடி அரசால் விலைக்கு வாங்கப்பட்டதால் வாய்மூடி இருக்கின்றன. ‘நாட்டின் இறையாண்மை என்பது ஒரு தனி மனிதனின் பலவீனத்திற்காக பலியிடப்படலாமா’ என்று மக்கள் எதிர்க்குரல் எழுப்புவதே இந்த அநீதிக்கான எதிர்வினையாக அமையும்.
பாஜக ஆர்எஸ்எஸ்–இன் போலி தேசபக்தியை அம்பலப்படுத்துவோம். இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் இறையாண்மையை மீட்டெடுப்போம்.