கோல்ட்ரிஃப் – மருத்துவத் துறையில் ஒரு இருண்ட அத்தியாயம்

அக்டோபர் 2025 — இந்தியாவின் மருத்துவத் துறையில் மீண்டும் ஒரு கருப்பு அத்தியாயம். மத்திய பிரதேசத்தின் சின்ட்வாரா மாவட்டத்தில் இருந்து நாக்பூர் (மஹாராஷ்டிரா) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் (அனைவரும் 5 வயதுக்குக் கீழ்) உயிரிழந்தனர். காரணம்? ஒரு சாதாரண இருமல் மருந்து — “Coldrif”. இது வெறும் தற்செயல் அல்ல; கலப்படம், அலட்சியம், முறைகேடு ஆகியவற்றின் கொடூரமான விளைவு.

செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மத்திய பிரதேசத்தின் பராசியாவில் அடுத்தடுத்துப் பல குழந்தைகள் இறந்து கொண்டிருந்தனர். குழந்தைகள் தொடர்ந்து இறக்கவே விசாரணை தொடங்கியது. விசாரணையில், இருமல் மருந்து குடித்த பிறகு சிறுநீரகம் செயலிழந்ததால் குழந்தைகள் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த மருந்தை தயாரித்த நிறுவனம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ். இந்நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் டயெதிலீன் கிளைகோல்  (Diethylene Glycol-DEG) பரிந்துரைக்க பட்ட (0.1%) அளவை விட 48.6 சதவீதம் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. DEG எனும் தொழிற்சாலை ரசாயனம் (ஆன்டிஃப்ரீஸ் பிரேக் ஃப்ளூயிட்) மனித உடலுக்கு விஷம். இதனால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்படையும் என்று கூறப்படுகிறது. இந்த ரசாயனம் அதிகமாக கலக்கப்பட்ட Coldrif மருந்தினால் மத்திய பிரதேசம் மட்டுமல்ல மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசு விசாரணை மேற்கொண்டதில் காஞ்சிபுரத்தை சார்ந்த ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் எனும் நிறுவனம் அவர்களது உற்பத்தியில் தரமற்ற பொருட்களை (தொழில்துறை நச்சு) பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாது அந்த நிறுவனத்தில் தர உத்தரவாதப் பிரிவு எதுவும் இல்லை. மேலும், மருந்து பரிசோதனை, மருந்துகளை மொத்தமாக வெளியீடு அல்லது திரும்பப் பெறுதல் (Batch Release or Recall) போன்ற எந்த நடைமுறையும் வகுக்கப்படவில்லை. மருந்துகள் மிகவும் அசுத்தமான சூழலில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடனே தமிழ்நாடு அரசு இந்நிறுவனத்திரிற்கு சீல் வைத்துவிட்டது மற்றும் அதன் உரிமையாளரை கைதுசெய்துள்ளது. மேலும் உரிமம் வழங்கிய 2 மருந்து ஆய்வாளர்களையும் இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த மருந்துகளை யார் கண்காணித்திருக்க வேண்டும்?

1. மத்திய மருந்து தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) 

   – இது இந்தியாவின் தேசிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பாகும். 

   – புதிய மருந்துகளின் அனுமதி, க்ளினிக்கல் ட்ரயல்கள் மற்றும் இறக்குமதி மருந்துகளின் தரத்தை சரிபார்ப்பது இதன் பொறுப்பு.

2. மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (State FDA) 

   – ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநில FDA மருந்து உற்பத்தி மற்றும் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும். 

   – இது உற்பத்தி நிலையங்களை பரிசோதனை செய்து, உரிய உரிமங்கள் வழங்கி, தரத்தைக் கண்காணிக்க வேண்டும்.

3. இந்திய மருந்து கட்டுப்பாட்டு பொது இயக்குனர் (DCGI) 

   – CDSCO வின் தலைவர் மற்றும் மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோக விதிமுறைகளை வகுப்பவர்.

4. மருந்து நிறுவனத்தின் உள் தரக் கட்டுப்பாடு 

   – ஒவ்வொரு மருந்து நிறுவனமும் தனது உற்பத்தி தரத்தை GMP (Good Manufacturing Practices) படி உறுதி செய்ய வேண்டும்.

இத்தனை தரக் கட்டுப்பாட்டு அலுவலகங்களை மீறி அதிகாரிகளின் அலட்சியத்தால் பிஞ்சுக் குழந்தைகளின் உயிர் பறி போயிருக்கிறது. இந்த ஆண்டு மட்டுமல்ல 2022 ஆண்டிலும் உஸ்பேகிஸ்தான் மற்றும் காம்பியாவில் இந்திய மருந்துகளால் குழந்தைகள் இறந்துள்ளன. அங்கும் குழந்தைகள் குடித்த இருமல் மருந்துகளில் DEG ரசாயனம் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. உஸ்பேகிஸ்தானில் குழந்தைகள் இறந்ததற்கு இந்திய மருந்து நிறுவனமான மரியோன் பையோடெக்(Marion Biotech) தயாரித்த DOK-1 மேக்ஸ் என்ற மருந்தே காரணம். காம்பியாவில் 70 குழந்தைகள் இருமல் மருந்தை குடித்ததால் இறந்ததற்கு புது டெல்லியை சார்ந்த மெய்டன் பார்மசிஐடிக்கல்ஸ்(Maiden Pharmaceuticals Ltd) காரணம்.

 மெய்டன் பார்மசிஐடிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்த மருந்துகள் இதற்கும் முன்னரே சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே 2014இல் வியட்நாம் மெய்டன் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்தது (தடை செய்திருந்தது). அதே போன்று அக்டோபர் 5, 2022 அன்று உலக சுகாதார அமைப்பும் மெய்டன் நிறுவனத்தின் மருந்துகளில் மாசுபாடு இருப்பதாக  உலகளாவிய எச்சரிக்கையை வெளியிட்டது. அப்போதே ஒன்றிய அரசு முறையான விசாரணையும் மருந்துகள் உற்பத்தியில் தரக் கட்டுப்பாடும் செய்திருந்தால் பல மருந்துகளில் கலப்படத்தைத் தடுத்திருக்க முடியும். சர்வதேச சந்தையில் 20% மருந்துகளை விநியோகிக்கும் இந்தியா அன்றே இந்த இழப்புகளுக்கு பொறுப்பேற்றிருந்தால் இன்று இறந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் காலம் கடந்த பின்னரே Coldrif மருந்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

உலகின் மூன்றாவது பெரிய மருந்து ஏற்றுமதி நாடான இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் – குறிப்பாக நிலையான சேர்க்கை மருந்துகள் எனப்படும் Fixed Dose Combination medicines (FDCs) பலவும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கு (CDSCO) ஆய்வுக்கு வருகின்றன. 2025 ஆம் ஆண்டில் மட்டும், CDSCO 35 அங்கீகரிக்கப்படாத FDC மருந்துகளைத் தடை செய்தது. 2024 ஆம் ஆண்டு 156 FDC மருந்துகளைத் தடைசெய்துள்ளது. இவ்வாறு அதிகமான FDC மருந்துகள் தடை செய்யப்பட்டாலும் மருந்துகளில் கலப்படங்கள் தொடர்கின்றன.  இத்தகைய கலப்படங்கள் நிகழ்வதற்குக் காரணம் மருந்து வணிகத்தில் உள்ள சூழ்ச்சிகளா அல்லது சட்டத்தில் உள்ள இடைவெளியா அல்லது தடை செய்யப்பட்ட மருந்துகள் வேறு பெயரில் ஆய்வுக்கு வருகின்றனவா என்பது இன்று விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களாகி இருக்கின்றன.

அண்மையில் மருந்துகளில் மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து குறைநிரப்பிகள் (Health supplements) போன்றவற்றில் செய்யப்படும் கலப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. இதில் போலி ORS குறித்த வழக்கு மிக முக்கியமானது. ORS என்பது காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு (டீஹைடிரேஷன்) போன்ற நிலைகளில் உயிரைக் காக்கக்கூடிய ஒரு முக்கிய பானமாகக் கருதப்படுகின்றது. இது தவறான முறையில் தயாரிக்கப்பட்டால், நோயாளியின் நிலை மேலும் மோசமாகலாம். இந்த ORS பானங்களைப் போலவே அதிக சர்க்கரை அளவு கொண்ட போலி ORS பானங்கள் பல ஆண்டுகளாக விளம்பரப்படுத்தப்பட்டன. வணிக ரீதியாக சந்தைப்படுத்தப்பட்டன. இந்த போலி ORS பாக்கெட்டுகளினால் குழந்தைகள் கடுமையாக நோய்வாய்ப்படுகிறார்கள் என்றும் இதனால் குழந்தைகள் இறக்கும் வாய்ப்பு உள்ளது என்பதையும் அறிந்த குழந்தை மருத்துவரான டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் இதை எதிர்த்து இடைவிடாத சட்ட பிரச்சாரத்தைத் தொடங்கினார். இப்போது, ​​எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு எந்தவொரு தயாரிப்பும் உலக சுகாதார அமைப்பின் (WHO) தரநிலைகளை கடைபிடிக்காவிட்டால், ORS என்ற பெயரைப் பயன்படுத்த முடியாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்தியா போன்ற பெரும் மக்கள்தொகை கொண்ட நாடுகளில், மருந்துகள் தடை விதிக்கப்பட்டாலும் அந்தத் தடையை அமலுக்கு கொண்டுவருவதில் பெரும் சவால்கள் உள்ளன. தடையை மீறிய விற்பனை, கருப்புச்சந்தை விற்பனை என பல சிக்கல்கள் இன்று மருந்துகள் விற்பனையை சுற்றிப் பிணைந்திருகின்றன. மருத்துக் கடைகளில் பெரும்பாலும் தடைசெய்யப்பட்ட FDCகளை அறியாமலேயே விற்கிறார்கள். அரசின் ஆன்லைன் சுற்றறிக்கைகள் 800,000+ மருந்தகங்களைச் சென்றடைவதில்லை. சில நிறுவனங்கள் நீதிமன்றங்கள் வழியாகவும் தடைகளை தகர்த்து விடுகின்றன. மக்களில் பலர் யூடூபில் காணொளி பார்த்து மருத்துவம் பார்க்கும் நிலைக்கே சென்று விடுகின்றனர்.

இத்தகைய சிக்கல்களை களைவது என்பது மக்களின் குறிப்பாக குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற மிகவும் தேவையான ஒன்று. இங்கு பொது சுகாதாரம் என்பது ஒன்றிய அரசு, மாநில அரசு இரண்டும் மிக கவனமாக கையாள வேண்டிய பொறுப்பாகக் கருதப்படுகிறது. எனவே மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து அரசு இயந்திரங்களும் விரைவாக இயங்கி மருத்துக் கலப்படங்களைத் தடுக்க உழைக்க வேண்டும். மக்களின் உயிரோடு விளையாடும் போலி மருந்துகளைத் தடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »