இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிசு ஆட்சியில் பார்ப்பனர்கள் பத்திரிகைகளிலும், அரசு அதிகாரங்களிலும், கல்வி நிலையங்களிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில் படிப்பறிவற்ற, அரசியல் அதிகாரமற்ற திராவிட மக்களின் விடுதலைக்காக, வகுப்புவாரி பிரதிநிதித்துவம், சாதி ஒழிப்பு, திராவிட நாடு விடுதலை, ஆரிய – இந்துத்துவ எதிர்ப்பு, பார்ப்பன பத்திரிக்கை எதிர்ப்பு என திராவிட மக்களின் விடுதலைக் குரலாக, உரிமைகளை வென்றெடுத்தவராக உள்ளார் ‘திராவிட லெனின்‘ என்று போற்றப்படும் டி.எம்.நாயர்.
1908 ஆம் ஆண்டு டி.எம். நாயர் உறுப்பினராக இருந்த ‘லேபர் கமிஷன்’ ஒரு அறிக்கையை அரசுக்கு தந்தது. முதலாளிகளின் கையாட்களும், வெள்ளைக்காரர்களும் நிரம்பிய கமிஷனின் அறிக்கையை ஒத்துக்கொள்ளாத அவர், தனது கருத்துக்களை எழுதி அரசுக்கு தனியாக அனுப்பி வைத்தார். அதில் ‘ஒரு நாளைக்கு 15 மணிநேரம் என்கிற வேலை நேரத்தை அகற்றிட வேண்டும். 12 மணிநேரமே இருக்கவேண்டும், அரை மணிநேரம் ஓய்வு கொடுக்கவேண்டும், வாரத்திற்கு ஒருநாள் விடுமுறை கொடுக்க வேண்டும், சிறுவர்களுக்கு 11 மணிநேரமே வேலை நேரமாக இருக்க வேண்டும், இயந்திரங்களின் மூலம் விபத்துகள் நடக்காதபடி பாதுகாப்பபு தரவேண்டும்’ என அரசுக்கு அனுப்பி வைத்தார். வைசிராயை சந்தித்து விளக்கம் கொடுத்து, தொடர்ந்து நான்கு ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின் இக்கோரிக்கைகள் அடங்கிய மசோதா நிறைவேறியது.
நாயர் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் கிளாட்ஸ்டன் என்ற ஆங்கிலேய அரசியல் அறிஞரின் லிபரலிச கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். பிரெஞ்சு நாட்டின் புரட்சியாளர் ஜியார்ஜியஸ் கிளமென்சோவின் (Georges Clemenceau 1841-1929) ‘ரேடிகல் ரிபப்ளிகன் கட்சியின்’ (Radical Republican Party) தாக்கம் நாயருக்கு இருந்தது. எனவே டாக்டர் சி. நடேசனார், சர்.பி.டி. தியாகராயருடன் இணைந்து உருவாக்கப்பட்ட கட்சிக்கு ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation)‘ என பெயர் வைத்தார். பிரெஞ்சு கட்சி பயன்படுத்திய ‘பிரபுக்கள் அல்லாதார்’ என்ற வார்த்தையே, தமிழ்நாட்டின் பிரபுக்களாக மேலாதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பார்ப்பனர்களை எதிர்க்க ‘பார்ப்பனர் அல்லாதார்’ என்ற வார்த்தையை அடையாளச் சொல்லாக இவர் ஏற்க காரணமாக இருந்தது.
“நீதிக் கட்சியின் நோக்கம் பார்ப்பனரல்லாத மக்களைப் பல வகைகளிலும் மேம்பாடு அடையச் செய்வதே அல்லாமல், பார்ப்பனர்களை வீழ்த்த வேண்டும் என்பதல்ல. எங்களுக்குச் சமூக நீதி வேண்டும். அதனை நிறைவேற்றுதற்குரிய அரசியல் உரிமை வேண்டும். பிரிட்டீசு அரசு அதற்கு ஏற்றபடி சலுகைகளைப் பெருக்கித் தர வேண்டும். நீதிக்கட்சி இந்தியாவிற்குத் தன்னாட்சி உரிமை கோருகிறது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் ஆகியோருக்கு முழு உரிமையும் பாதுகாப்பும் அளிக்கக்கூடியதாக அந்தத் தன்னாட்சி இருக்க வேண்டும். அதுவே எங்கள் குறிக்கோள். இந்தக் குறிக்கோளை இங்கு விளக்கி வருவது போன்றே இங்கிலாந்திலும் கூட்டம் போட்டும், எழுதியும் வருவதற்காகத்தான் நான் ஆண்டுதோறும் தவறாமல் இங்கிலாந்து சென்று வருகிறேன்” என்று கூறினார் டாக்டர் நாயர்.
‘அவர்களின்(பார்ப்பனர்களின்) சுயநல அரசியல் செல்வாக்கையும், தலைமையையும் வளர்த்துக் கொள்வதற்கு, அவர்களுடைய பொய் பித்தலாட்ட இந்து, சுதேசமித்திரன், பிரபஞ்சமித்திரன் போன்ற செய்தித்தாள்கள் பெரிதும் உதவுகின்றன’ என்றவர். ஸ்பார்டாங்க் சாலைக் கூட்டத்தில் பேசுகையில் நமக்கு 3 செய்தித்தாள்கள் போதாது, 300 செய்தித்தாள்கள் வேண்டும் ! புற்றீசல் போல் அவை கிளம்ப வேண்டும் என்றார். பார்ப்பனரல்லாதோரின் கோரிக்கையை முன்னிலைப்படுத்தும் பத்திரிக்கையாக தமிழில் ‘திராவிடன்’, தெலுங்கில் ‘ஆந்திர பிரகாசினி’ மற்றும் ஆங்கிலத்தில் ‘ஜஸ்டிஸ்’ ஏடும் தொடங்கப்பட்டது. இன்று வரை தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் இந்து பத்திரிக்கையை அன்றே தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
ஆதி திராவிட மக்கள் நலனில் அவரின் அக்கறை அலாதியானது. எழும்பூர் ஏரிக்கரை பகுதியில் 1917 – ஆம் ஆண்டுகூட்டம் நடத்துவதென ஆதி திராவிட மக்கள் முடிவு செய்தனர். அப்போது மேல் சாதியினர், இது பிள்ளைகள் விளையாடும் இடமென்று கூறி, கூட்டம் நடத்தக்கூடாது என பல்வேறு வகைகளில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் நாயரிடம் வந்து முறையிட்டனர், நாயர் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து, உங்கள் கூட்டத்தை தொடங்கி நடத்துங்கள் என்று கூறி விட்டு, அவர்களுக்கு பாதுகாப்பாக, கையில் தடியுடனும் முகத்தில் கோபத்துடனும் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டார். கூட்டம் நடந்தது. 1917 -ம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஆதி திராவிடர் மக்கள் நடத்திய கூட்டத்தில் பேசிய நாயரின் உரை வரலாற்று சிறப்புமிக்க உரையானது (ஸ்பார்டாங்க் சாலை கூட்டம்).
பார்ப்பனர் ஆதிக்கம் மிகுந்த காங்கிரஸ், பிரிட்டிசுகாரர்களிடம் சுய ராச்சியத்தை கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் டி.எம்.நாயர் அவர்கள் கூறுகையில், “பாமர மக்களின் கட்சியான நீதிக் கட்சி படிப்பற்ற, வசதியற்ற, அரசை நடத்தி செல்லும் அதிகாரமற்ற மக்களால் 100க்கு 85 பேர்களாக உள்ள பாமர மக்களை முதலில் கல்வி மூலமும், ஏற்றமுற்ற உயர் நிலைக்கு ஆயத்தப்படுத்தி விட்டுப் பின்னர் அவர்கள் கைக்குத் தன்னாட்சி வர வேண்டும் என்று வாதாடுகிறது. ஆனால் இப்பொழுது, காங்கிரஸ் பார்ப்பனர்களால் கோரப்படும் தன்னாட்சியானது, ‘நண்டை சுட்டு அதை நரிக்குக் காவல் வைப்பது போலவும், ஆட்டுக் குட்டியையும் ஓநாயையும் ஒரே பட்டியில் அடைத்து வைப்பது போலவும்‘ ஆன சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்பது என் கருத்து… பார்ப்பனர்கள் 100-க்கு 90 பேர் படித்தவர்களாகவும், பார்ப்பனர் அல்லாதவர்களில் 100-க்கு 90 பேர் படிக்காதவர்களாகவும் இருக்கும் இந்த அவல நிலையில், பார்ப்பனர் மட்டும் கொட்ட மடிக்கத் தன்னாட்சியா?” – எனக் கேட்கிறார்.
டிசம்பர் 17, 1917-இல் ஆங்கிலேய அதிகாரியான மாண்டேகும், இந்திய வைஸ்ராய் செம்ஸ்போர்டும் சென்னை வந்தனர். அவர்களிடம் தென்னிந்திய நல உரிமை சார்பாக “பார்ப்பனரல்லாதார்க்குத் தனி வாக்குரிமையுடன் கூடிய அரசியல் சீரமைப்பு தேவை” என கோரிக்கை வைத்தனர். ஜூலை 8, 1918-இல் மாண்டேகு செம்ஸ்போர்டு வெளியிட்ட கூட்டறிக்கையில் நீதிக் கட்சி கோரிக்கை இடம் பெறவில்லை. வகுப்பு வரி உரிமை வழங்குவதற்கு உரிய ஆய்வினை நடத்திட ‘சவுத்பரோ’ என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. குழுவில் இரண்டு பார்ப்பனர்கள் உட்பட சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சவுத் பரோ குழுவின் மீது நம்பிக்கையற்று வகுப்பு வாரி பிரதிநிதித்துவ உரிமை குறித்து வலியுறுத்த இங்கிலாந்து பாராளுமன்ற ஆதரவை பெற்றிட இங்கிலாந்து செல்ல விரும்பினார். அப்போது அரசியல் தலைவர்களுக்கு அங்கு செல்ல தடை இருந்ததால், மருத்துவ சிகிச்சைக்கு செல்வதாக அனுமதி பெற்றார். மேலும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி கொடுக்கப்பட்டது. இங்கிலாந்தில் தனக்கிருந்த ஆதரவைக் கொண்டு அந்த நிபந்தனையை நீக்கினார்.
1918 அக்டோபர் 2 ஆம் தேதி இங்கிலாந்து பாராளுமன்ற இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் அடங்கிய சிறப்புக் கூட்டத்தில் நாயர் சிறப்பாக உரையாற்றினார். அவரது பேச்சு அங்கு பத்திரிக்கைகள், அதன் பிறகு நடந்த பாராளுமன்ற விவாதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் முன்னுரிமை பெறாமல் அரசியலில் உருவாகும் சீர்திருத்தம் தோல்வியே பெறும் என இந்திய சாதி, மதம் பெயரால் நடக்கும் கொடுமைகளை விரிவாக எடுத்துரைத்தார்.
இங்கிலாந்து நாடாளுமன்றம் அவர் விவாதத்தின் நியாயத் தன்மையை ஏற்றுக் கொண்டது. அங்குள்ள பத்திரிக்கைகள் அவரின் வாதங்களைப் பாராட்டி எழுதின. இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆதரவுடன், 1919 சனவரி 7-இல் டாக்டர் நாயர் வெற்றிச் செய்தியை எடுத்து சென்னை வந்தடைந்த பிறகு, சவுத்பரோ குழு அறிக்கை வெளியிட்டது. அதில் பிராமணர் அல்லாதவர்களுக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.
இதனால், நீதிக்கட்சி மீண்டும் நாயர் தலைமையில் மீண்டும் ஒரு குழுவை இங்கிலாந்துக்கு அனுப்ப தீர்மானித்தது. ஆனால் நாயருக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நாயர், பிராமணரல்லாதோர் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் இங்கிலாந்து பயணமானார். நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவர் லார்டு செல்போர்ன் அவர்களிடம் சூலை 18-ஆம் தேதி நாயரின் சாட்சியத்தைப் பதிவு செய்ய ஏற்பாடாகி இருந்தது.
ஆனால் டாக்டர் நாயர் சூலை 17ஆம் தேதி காலை 5 மணி அளவில் இயற்கை எய்தினார். இவ்வாறு திராவிட மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டக் களத்திலே உயிரைத் துறந்தார். பிராமணர் அல்லாதாருக்கானி தனி வாக்குரிமைக்காகவும், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காகவும் தன்னையே வறுத்திக் கொண்டு போராடிய அந்த தலைவர் இறந்தார்.
டி.எம். நாயரின் உழைப்பைப் போற்றியே பெரியாரும் “டாக்டர் டி.எம்.நாயர் இறக்கவில்லை என்று சொல்லுவேன். அவர் கொள்கைகளும், தொண்டுகளும் இன்னும் இந்நாட்டில் வேலை செய்துகொண்டு வருகின்றன. ஆதலால் அவர் இன்னும் உயிருடனிருக்கிறார். டாக்டர் டி.எம். நாயர் ஒரு புரட்சி வீரர்; அவரை ஒரு ‘திராவிட லெனின்’ என்று சொல்ல வேண்டும்.” – என பெருமைப்படுத்தினார்.
தமிழ்நாடு கண்ட இடஒதுக்கீடு சமூகநீதி என்பது தங்களையே உருக்கிக் கொண்டுப் போராடிய இத்தகைய தலைவர்களின் அர்ப்பணிப்பால் உருவானது. நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது. ஆங்கிலேய அரசிடமும், டெல்லி அரசிடமும் நடத்திய நிர்வாகப் போராட்டங்களாலும், மக்கள் திரள் போராட்டங்களாலும் போராடிய தலைவர்கள் வாங்கித் தந்தது. ஆனால் எந்தப் போராட்டமும் இல்லாமல், தங்கள் பார்ப்பன சித்தாந்தத்திற்கு ஏற்ற கட்சியான பாஜக – வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு உயர்சாதியினருக்கான இடஒதுக்கீடு என 10%-த்தைப் பார்ப்பனீயம் பெற்றுக் கொண்டது. நீதிக்கட்சியில் தொடங்கிய உரிமைப் போராட்டத்தை தமிழர்கள் அறிந்து கொள்ளாமல் நமக்குரிய உரிமைகள் நிலைக்காது. பார்ப்பனியத்தின் வஞ்சக குணத்தின் ஆணி வேர் வரை ஆராய்ந்த தலைவர்களின் கருத்துக்களையும், அவர்களின் அயராத போராட்டங்களையும் அறிவோம். டி.எம். நாயகரின் உழைப்பைப் பயில்வோம்.